Search This Blog

23.7.09

புனித நீராடல் பற்றி கும்பமேளாவும், நேருவும்!


நேருவும்,புனிதநீராடலும்!

சூரிய கிரகணம் என்பது இயற்கையில் ஏற்படும் நிகழ்வு என்று அறிவியல் கூறுகிறது; பள்ளிப் பாடத் திட்டத்திலும் அப்படித்தான் கூறப்படுகிறது. என்றாலும், மத மூட நம்பிக்கை உண்மையை ஒதுக்கித் தள்ளி மனிதனை முட்டாள்தனம் என்ற ஆழமான குழியில் விழச் செய்கிறது.

அறிவியல் சாதனமான ஏடுகளும், ஊடகங்களும் கிரகப் பயத்தால் மேற்கொள்ளும் மூட நம்பிக்கை செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன வெட்கக்கேடு! வெட்கக்கேடு!!

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் நடத்தப்பட்ட கிரகணம் பற்றிய மூடத்தனத்தை எதிர்த்து நடத்தப்பட்ட சிறப்பு விருந்தின்போது தொலைக்காட்சி செய்தியாளர் வினா ஒன்றை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களிடம் கேட்டார். நீங்கள் பலமாகப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தாலும், இதுபோன்ற மூட நம்பிக்கையும், அதிகம் பரவத்தானே செய்கிறது? என்ற வினாவைத் தொடுத்தார்.

விஞ்ஞான கருவியான ஊடகத்தை உங்களைப் போன்றவர்கள் தவறாகப் பயன்படுத்துவதுதான் இதற்கு முக்கிய காரணம் என்று சொன்னார். அதுதானே உண்மை?


வடக்கே காசியில் கங்கையில் லட்சக்கணக்கானோர் கிரகணத் தோஷத்தைக் கழிக்க புனித ஸ்நானம் செய்தனர் என்றெல்லாம் பெரிய அளவுக்குப் படங்களை வெளியிடுவதன் விளைவு என்ன? மக்களிடத்தில் மூடத்தனம் பரவி வருகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுதானே?

தோஷம் கழிக்கும் நோக்கத்தில் காசியில் குளிக்கச் சென்ற பெண் பக்தர்கள் இருவர் கூட்ட நெரிசலில் பலியானார்கள் என்றும், பலர் காயமுற்றனர் என்றும் அதே ஊடகங்கள்தானே செய்தியை வெளியிடுகின்றன.

நம் நாட்டின் கும்பமேளா, புனித நீராடல் பற்றி கும்பமேளாவும், நேருவும்! என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் (14.2.1954) கட்டுரை ஒன்றினைத் தீட்டினார்.

புனித ஸ்நானம் செய்தீரா? என்று யாரோ ஒருவர் நேருவைக் கேட்டபோது, அவர்

No bodily dip; but other dips; I am very much fond of bathing in Ganga, but I have to behave more of restraint.

அதாவது, உடம்பைக் குளிப்பாட்டவில்லை. வேறு விதமான முழுக்கைப் போட்டேன். கங்கையில் குளிப்பதென்றால், எனக்கு மிகவும் பிரியம். ஆனால், அந்த ஆசையை நான் மிகவும் அடக்கிக் கொண்டேன் என்று நேரு பதில் கூறியிருக்கிறார்
.

நேருவின் இந்தப் பதில், மிகவும் பக்குவமாக வார்த்தைகளை அளந்தும், அறிந்தும் பேசிச் சாமர்த்தியமாக நடந்துகொண்டதாகக் கருதப்படும் என்று அவர் எண்ணுகிறார் போலும்!

நேருவின் இந்தப் பதிலை, வெளிநாட்டவர் படிக்கும்போது, எண்ணமாட்டார்களா, ஏன் இந்த மனுஷன் இப்படிப் பேசினார் என்று.

50 லட்சம் மக்கள் கங்கையில் குளிக்கும்போது, இந்தப் பெரியவர் (நேரு) மட்டும் ஏன் தம்முடைய ஆசையை அடக்கிக் கொண்டார்? என்று ஒரு அமெரிக்கனோ அல்லது அத்யந்த நண்பராக ஒரு காலத்தில் விளங்கிய சியாங்கே ஷேக்கோ தான் ஏன் எண்ணமாட்டார்கள்?

அய்ம்பது லட்சம் மக்கள் செய்யும் ஒரு புனித காரியத்தை, அவர்களின் தலைவர் என்று கூறிக்கொள்ளும் நேரு ஏன் செய்யவில்லை என்று யார்தான் எண்ணாமல் இருக்க முடியும்? ஒருவேளை கங்கை என்றால் என்ன? அதில் குளிப்பதால் கிடைக்கும் பயன் யாது? என்பவற்றை உள்ளபடியே அறிந்த பகுத்தறிவாளர்கள் வேண்டுமானால் அவர் குளிக்காததற்குக் காரணத்தை அறிந்திருக்க முடியும் என்று அறிஞர் அண்ணா அவர்கள் இலாவகமாக எழுதியுள்ளார்.

பக்தி மார்க்கத்தில் புரள்வோர் ஏன் பண்டிதர் கங்கையில் புரண்டு தம்மை புனிதமாக்கிக் கொள்ளவில்லை என்று எண்ணாமல் இருக்க முடியுமா? அதிலும் கங்கையில் குளிப்பதென்றால் ஒரு தனிப் பிரியம் தனக்கிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் பண்டிதர் மூன்று கிரகங்களும் ஒன்றாகச் சேரும் புண்ணிய தினத்தில் புனித ஸ்நானம் செய்யவில்லை என்றால், அது, பக்தி மார்க்கத்தவரால் பலமாக யோசிக்கப்படவேண்டிய ஒன்றுதான் என்று அண்ணா எழுதினாரே, அதனைத்தான் பக்தியின் பெயரால் அசுத்த நீரில் மூழ்கி எழும் பக்தக்கோடிகளைப் பார்த்து நாமும் கேட்க விரும்புகின்றோம். கங்கையின் அசுத்தத்தை எண்ணியே அவர் குளிக்கவில்லை.

நேரு ஒன்றும் தந்தை பெரியாரின் சீடரல்ல தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்தான். ஆனாலும், சிந்திக்கிறார் அந்தச் சிந்தனை நேருவைத் தலைவராகக் கொண்ட மக்களுக்கும் வரவேண்டாமா?

-------------"விடுதலை"தலையங்கம் 23-7-2009

0 comments: