Search This Blog

25.7.09

தேர்த்திருவிழா, பண்டிகை, இவை ஏன் கொண்டாடக்கூடாது?


அண்ணாவின் பகுத்தறிவு

(திராவிட நாடு இதழில், வாசகர்களின் முக்கிய வினாக்களுக்கு அண்ணா அளித்த அரிய விடைகள் இங்கே தரப்படுகின்றன.)

கேள்வி
: தேர்த்திருவிழா, பண்டிகை, இவை ஏன் கொண்டாடக்கூடாது?

பதில்
: ஏன் கொண்டாட வேண்டும்? பக்திக்காகவா? ஆம் என்றால் அதற்கு வழிபாடும், தியானமும் போதுமே. ஒழுக்கத்துக்காகவா? ஒழுக்கம் இவைகளால் கெடுகிறதேயொழிய வளருவதில்லையே. தேர்த்திருவிழா பண்டிகையாகியவைகள், காட்டுமிராண்டிக் காலத்திலே மக்களின் மனதிலே புத்தறிவு தோன்றாத முன்பு இருந்த வந்த நம்பிக்கைகளின் பேரால் உள்ளவை. இந்த நம்பிக்கைகள், இன்று இல்லை. கூடாது, அறிஞர்கள் ஒதுக்கியும் விட்டனர். இந்நிலையில் மீண்டும் மீண்டும் அந்தத் தேர்த்திருவிழாக்கள் பண்டிகைகள் ஆகியவற்றைக் கொண்டாடுவதால் அந்தப் பழைய நம்பிக்கைகளை தலை தூக்க விடுகிறோம். இது கூடாது என்பதற்ககவே அவை கூடாது என்கிறோம். மேலும் ஏழ்மை மிகுந்து அவசியமாகச் செய்யப்பட வேண்டிய பல காரியங்களுக்குப் பணம் இல்லை என்று திண்டாடும் நமது நாட்டில் பணத்தை வாரி இறைத்துப் பாழாக்குவது சரியல்ல. ஆகவே தான் இவை கூடாது என்கிறோம்.

கேள்வி
: ஏடுகளில் காணப்படும் கலாச்சார வரலாற்றின் அடிப்படையை ஆதாரமாகக் கொண்டு ஆரியர் _ திராவிடர் என்று பேசுகிறீரே, இன இலக்கணங்கள் இன்று மாறுபட்டுள்ளன என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்?

பதில்: மறுக்கவில்லை நண்பரே! மறுத்ததுமில்லை. இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை. ஆனால், இவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்திருந்தும் கூட ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை பாவனை ஆகியவைகளை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியும் உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம். இந்தப் போக்கைக் கொண்டுதான் ஆரியர், திராவிடர் என்று கூறுகிறோம். வாழ்க்கை முறை மனப்பான்மை இவைகளையே முக்கியமாக கவனிக்கிறோம். ஜப்பான் நாட்டவனொருவன் மக்கள் பிறவியில் பேதம் கிடையாது என்று கூறி அத்தகைய பேதம் இருக்கும் முறைகளை மறுப்பானானால் அவனையும் திராவிடன் என்று நான் கொள்வேன் என்று பெரியார் சென்ற கிழமை குமரிமுனையருகே நாகர் கோயிலில் கூறி இருக்கிறார் என்பதை நண்பருக்குக் கவனப்படுத்துகிறேன். சுருக்கமாகவும் சூட்சமத்தைக் காட்டும் முறையிலும் கூறுவதானால் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிப்பவர் ஆரியர். வர்ணாஸ்ரம தர்மம் கூடாது சமத்துவமே நிலவவேண்டும் என்பவர்கள் திராவிடர் சுயதர்மம் கோருவோர் ஆரியர். சமதர்மம் கோருவோர் திராவிடர். திராவிடர் ஒரு குறிச்சொல். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை இலட்சியத்தைக் காட்டவே அதனை உபயோகிக்கிறோம். பழைய ஏடுகளிலே இருந்து இதற்கான ஆதாரங்கள் காட்டும் போது நாம் அந்த நாள் கலாச்சாரம் அவ்வளவையும் ஆதரிக்கிறோம் என்பதல்ல பொருள். ஆரியர் திராவிடர் என்று. தனித்தனி இனமாக இருந்த வரலாற்று உண்மையைக் காட்டவே அந்த ஏடுகளைப் பயன்படுத்துகிறோமேயன்றி அந்த ஏடுகளிலே உள்ளபடி, நாடு மீண்டும் ஆக வேண்டும் என்பதற்கல்ல. அந்த நாள் வாளும், வேலும், ஈட்டியும், சூலமும், பறையும், பரசலும் இன்றும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்பதல்ல, நமது நோக்கம். ஒரு காலத்தில் ஜாதியும் அதையொட்டிய பேத முறைகளும் வர்ணாஸ்ரமமும் அதை வளர்த்துப் பலன் பெற்ற கூட்டமும் இல்லாமல், மக்கள் அனைவரும் சமம், என்ற பெரு நோக்குடன் வாழ்ந்து வந்தனர். இந்தப் பகுதியிலே இருந்து வந்த பெரும்பாலான மக்கள் அவர்கள் திராவிடர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கொண்டிருந்த அந்தக் கொள்கை இன்று நமக்கு வேண்டும் என்று கூறுகிறோம். இதிலே பரிகசிக்கவோ அருவருக்கவோ காரணமில்லையே!

-----------------------அண்ணா- "திராவிட நாடு", 16.11.1947

1 comments:

Kiss said...

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி


அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.

இப்படிக்கு,
http://thamizhovia.blogspot.com/
http://ayyyyya.blogspot.com/
http://tcwebs.blogspot.com/