Search This Blog

21.7.09

பால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா? மதப்பிரச்சினையா?


Gokul என்ற நண்பர் ஒருவர் கீழ் வருமறு பின்னூட்டம் இட்டிருந்தார்

தமிழ் ஓவியா,

நான் உங்கள் பக்கத்தை விரும்பி படிப்பவன், உண்மையில் பெரியார் தமிழ்நாட்டில் செய்த பணி மகத்தானது.

ஆனால், இந்த பால்ய விவாகம், எதனால் வந்தது என்பதையும் நாம் யோசிக்க வேண்டும் என்று பல்வேறு காரணங்களைக் கூறி முடிக்கும் போது இப்படி முடித்திருந்தார்.

"இந்து மதத்திற்கும் சம்பந்தமே இல்லை, இந்த பால்ய விவாகம் ஒரு அரசியல் பிரச்சினை."


பால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா? மதப்பிரச்சினையா? என்பதை கோகுல் மட்டுமல்ல மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் முதலில் இந்துமதம் எங்கே போகிறது? என்ற நூலில் அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

*************************************************************************************
பால்ய விவாகம்

வேதம் வகுத்த வரையறைகளை கட்டளைகளாக நெறிமுறைகளாக மாற்றியமைத்துத் தந்த மநுஸ்மிருதியில் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் எப்படி வாழவேண்டும் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்?

முதலில் மநுஸ்மிருதி என்றால் என்ன? மநு என்பவர் வகுத்த ஸ்மிருதிகள் அதாவது தர்ம நெறிகள் மநு ஸ்மிருதி எனப்படும்.

மநு என்பவர் யார்?

ஒரு மநு அல்ல இரண்டு மநு அல்ல கிட்டத்தட்ட பதினெட்டு மநுக்கள் இருக்கிறார்கள் மநு என்னும் பொதுவான பெயருக்கு கடவுளின் கட்டளைப்படி சிருஷ்டியின்போது பூமியை காக்க அவரால் நியமிக்கப்பட்டவர்தான் மநு என்கிறார்கள்.

அதாவது மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று நெறிகளை திட்டமிட்டு வகுக்கத்தான் கடவுளால் மநு அனுப்பப்பட்டார் மநு என்ற சொல்லில் இருந்துதான் மனுஷன் என்ற பதமும் வந்தது என்றொரு மொழிக் குறிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

சரி.. நாம் பார்க்கும்போது மநு யார்?

வேதத்தை எளிமையாக்கி அவர் வகுத்த தர்மசாஸ்திரத்தில் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறார்?

உங்களுக்காக ஒரு காட்சியை கட்டவிழ்த்து விடுகிறேன் மனக்கண்ணால் அதைப் பாருங்கள்.

வீட்டு வாசலில் சின்னப் பெண்குழந்தை எட்டு வயதிருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறாள்.

மரப்பாச்சி (மரப்பாச்சி என்றால் இன்றைய நகர நாகரிகம் வளர்ந்துவிட்ட சூழலில் உங்களுக்குப் புரிகிறதா மரத்தால் செய்யப்பட்ட உருவப் பொம்மைகள்தான்) களை வைத்துக் கொண்டு மழலை மாறாத அந்தக் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில்...

திடீரென அந்தப் பெண் குழந்தையை...

"வாம்மா.. நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது சீக்கிரம் தயாராக வேண்டும் பார்.. எல்லோரும் வந்துவிட்டர்கள்.

இப்போதே குளித்து முடித்து சீவி சிங்காரித்துக் கொண்டால்தானே தாமதம் ஆகாமல் சீக்கிரம் ஆரம்பிக்கலாம் வா. வா...”

என்று அழைக்கிறார்கள் அவளது அம்மாவும் அப்பாவும்.

"இரும்மா. விளையாடிட்டு இருக்கேன்.. இன்னும் கொஞ்ச நேரம் விளையாடறேன்.”

ஆனால் மநுஸ்மிருதியின் விளையாட்டு இங்கேதான் ஆரம்பிக்கிறது.

எட்டுவயது பெண் குழந்தை மரப்பாச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றது இடையில் மநு ஸ்மிருதி விளையாட ஆரம்பித்துவிட்டது என்றேனே. மநு எப்படி விளையாடும்? மரப்பாச்சி வைத்து விளையாடிக் கொண்டிருந்த அந்த பெண்குழந்தையை வைத்துதான் மநு விளையாடியது! என்ன சொல்கிறார் இவர்?.. என்ற கேள்வி எழுகிறதா?

ஆமாம்.. விளையாடிய குழந்தையை சீவி சிங்கரித்து அம்மா கூப்பிடுகிறாளே எதற்கு? தலைவாரி பூச்சூடி உன்னை.. பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை என்ற அர்த்தத்திலா?

கிடையவே கிடையாது அந்த எட்டு வயது சுட்டியை மணமேடைக்கு அழைத்துச் செல்கிறார்கள் எதற்கு? மணப் பெண்ணின் பக்கத்தில் இப்போது சின்னச் சின்னக் குழந்தைகளை யெல்லாம் உட்கார்த்தி வைத்து அழகு பார்க்கிறார்களே.. அதற்காகவா?

முற்றிலும் கிடையாது.. மணப் பெண்ணே அந்த எட்டு வயது சுட்டிதான்.

என்னது.. எட்டு வயதுப் பெண்தான் மணமகளா? குழந்தைக்குக் கல்யாணமா? இதுதான் மநுவின் விளையாட்டு மநுவின் கட்டளைகள் முன் சின்னப் பெண் குழந்தைகள் வெறும் மரப்பாச்சிகள்.

பெண்கள் மீது மநு தொடுத்த முதல் போர் இங்குதான் ஆரம்பிக்கிறது.

வேதம் பெண்களை எவ்வளவு கட்டுப்பாடுகளுக்குள் வைத்திருந்தாலும் அவள் ருதுவான பின்னர்தான் திருமணம் மநுவர்க்கம் என்றெல்லாம் சடங்குகளைப் பின்னியது.

.ஆனால் மநு அப்படியல்ல. எட்டு வயதுக்குள்ளேயே பெண்களை கெட்டியாக பிடித்துக் கொண்டது மநு...ப்படி பெண்களுக்கு பொதுவான பெயர் க்ருஹிணி அதாவது வீட்டுக்காரி வீடுதான் அவள் உலகம்.

வீட்டுக்குள்தான் அவள் இருக்கவேண்டும் நான் முன்பு சொன்னேனே வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள் என்று திருமணம் வரைக்கும் வீட்டு வாசலில் விளையாடலாம்.

அதன்பிறகு கல்யாணமாகி முழு க்ருஹிணி ஆன பின்னர் வீடுதான் அவள் சகலமும் கல்யாணத்தை மநு கன்னிகா தானம் என்கிறது கன்னிகையை தானம் செய்தல் கன்னிகாதானம்.

கன்னிகா என்றால் அதாவது கன்னிகை என்றால்? மநு தர்மப்படி எட்டு வயது பெண்கள் அனைவரும் கன்னிகைகள், பின்.. கன்னிகைகளுக்கு கல்யாணம் பண்ண வேண்டும்.

இன்னொருவன் கையில் பிடித்துக் கொடுக்கவேண்டும் அதாவது அவனிடத்திலே இந்த கன்னிகையை தானம் செய்யவேண்டும் இது கன்னிகாதானம்.

இதைத்தான்...

'அஷ்ட வருஷா பலேத் கன்யா" என்கிறார் ஆதிபுருஷர் மநு.

இதில் இன்னொன்று.. எட்டு வயது தான் கன்னிகைக்குரிய வயது எட்டு வயது கொஞ்சம் தாண்டினாலும் அவள் கன்னிகைப் பருவத்தை கடந்து விடுகிறாள் அதனால்.. அதன் பிறகு அவளுக்கு செய்வது கன்னிகா தானமல்ல அதாவது கல்யாணமல்ல.

அதனால் எட்டு வயதுக்குள் அவளை இன்னொருத்தன் கையில் பிடித்துக் கொடு...

கல்யாணத்தில் இப்போது நிச்சயதார்த்தம் என ஒரு சடங்கு வைக்கிறார்கள் சிலபேர் இதை நிச்சயதாம்பூலம் என்று சொல்கிறார்கள் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டுப் போங்கள் ஆனால்.. இதன் அர்த்தம் என்ன? முன்பு எப்படி நடந்தது’.. என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

கிராமப் புறங்களில் சந்தையிலே ஆட்டையோ, கோழியையோ, மாட்டையோ விற்பதாக வைத்து.. பக்கத்திலே துண்டை கையால் மூடிக் கொண்டு விலை பேசுகிறார்கள் தெரியுமா? இதன் பேர் தான் நிச்சயதார்த்தம்.

இன்னொரு முக்யமான விஷயம் இந்த நிச்சயதார்த்தத்தில் மணப்பெண் மட்டும்தான் கலந்து கொள்வாள் மாப்பிள்ளைக்கு அங்கு வேலையே கிடையாது இது வெறும் லௌகீகச் சடங்கு.. அதாவது மந்த்ரத்துக்கு இடமே இல்லை.

ஆனால்.. இன்று நிச்சயதார்த்தம் என்ற பெயரில் திருமணத்துக்கு சமமான ஒரு சடங்கை create பண்ணிவிட்டார்கள் வாத்யார்களைக் கேட்டால் ' எல்லாம் பெரியவாள் சொன்னது" என்கிறார்கள்.

என்னைக் கேட்டால் இப்போது கல்யாணம் பண்ணி வைக்கும் புரோகிதம் பண்ணி வைக்கும் வாத்தியார்களையெல்லாம் ஒரு சிறைக்குள் போட்டு அதாவது மறைச்சிறை அதுதான் வேதச்சிறை.

அங்கே அவர்களுக்கு.. உண்மையான சடங்கு சம்ப்ரதாயங்களைக் கற்றுத் தரவேண்டும் வேதத்தில்.. ஸ்மிருதிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அர்த்தத்தோடு விளக்கி அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து அதன்பிறகு அவர்களை வெளியே அனுப்பவேண்டும்.

சரி சரி. நான் என்ன சொன்னேன்? எட்டு வயதுக்குள் அவளை இன்னொருத்தன் கையில் பிடித்துக்கொடு.

அப்படியா. 'மநுபிரபோ என்னால் முடியவில்லை என் பெண் குழந்தையை கட்டிக் கொள்ள எந்த பொடிப் பயலும் கிடைக்கவில்லை அவளுக்கும் எட்டு வயது கடந்து விட்டது இப்போது ருதுவாகி விட்டாளே'

இப்படியாக ஒரு ஏழைத் தகப்பன் மநுவிடம் மன்றாடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள் மநுவிடம் வாய்வழியாக மனு போடுகிறான் எனக் கருதிக்கொள்ளுங்கள்.

அவனுக்கும்.. அவனைப் போன்ற அப்பாக்களுக்கும் மநு பதில் தருகிறார்.

"பாணிக்கிரஹாப நிகா மந்த்ராஹா
கன்யா ஸ்வே ப்ரதிக்ஷதஹா
நகன்யாஸீ ”

இது பதில் அல்ல தண்டனை எட்டு வயதுக்குள் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணவில்லை அவள் ருதுவாகித்தான் கல்யாணம் பண்ணி வைக்கிறான். அவன் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?


எட்டுவயதைத் தாண்டி, பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைக்கின்ற அப்பா.. மநுவிடம் போட்ட மனு என்ன ஆனது? இப்போது மந்திரி பிரதானிகளிடம் மக்கள் கொடுத்த மனு எப்படி குப்பைத் தொட்டிக்குப் போகிறதோ அதே மாதிரிதான்.

அதோடு நின்றால் பரவாயில்லை கூடவே நீ ஏனடா உன் பெண்ணுக்கு எட்டு வயது வரை கல்யாணம் செய்யாமல் இருந்தாய் கன்னிகா தர்மத்தை கால்களில் போட்டு மிதித்து விட்டாயே! இது பாவம் என்று உனக்குத் தெரியாதா? இந்த பாவத்துக்கு தண்டனை என்ன என்று உனக்குத் தெரியாதா? என மநு ஸ்மிருதி அந்த அப்பாவி அப்பாக்களை பார்த்து அதட்டுகிறது.

இக்கால அப்பாக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் அக்கால அப்பாக்களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்தத் தண்டனையை அனுபவிப்பதை அவர்களால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அந்த அப்பாக்கள்.

அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை?

'மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா

பிதா பிபதி கோனிதம்...”

இந்த ஸ்மிருதி விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.

அது என்னவென்றால்...

அடே கையாலாகாத அப்பா! உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்கவேண்டும் தவறிவிட்டாய். அவள் இப்போது ருதுவாகி விட்டாள்.

ருதுவான பின் சூன்று வருஷத்துக்குள் நீ அவளுக்கு மணமுடிக்கவில்லையென்றால் அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும் வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?

அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்! இப்படியொரு தண்டனையைப் பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும் அதற்காகத்தான் இந்தத் தண்டனை.

பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன்னதைத் தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல.. இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது.

அடப்பாவிகளா? வறுமையாலோ, ஜாதக தோஷத்தாலோ. பெண்ணின் குறைபாடுகளாலோ கல்யாணம் தாமதமாகி எத்தனை பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள் ருதுவான பிறகு தான் கல்யாணமே பண்ணவேண்டும் என்பது பொதுவான விழிப்புணர்வாளர்களின் கருத்து.

அதையும் தாண்டி மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மநு எத்தனை கடுமை? கொடுமை?...


எரிகின்ற தீயில் எது நல்ல தீ என்பது மாதிரி இந்தத் தண்டனையிலிருந்து தப்பிக்க இன்னொரு பரிகாரத்தையும் அருள்கிறார் மநு அப்படியா? என்ன பரிகாரம்?...

உன் மகள் ருது காலத்தில் அவளது ப்ரம்மஹத்தி தோஷத்தை சாப்பிடவேண்டும் என்று சொன்னேன் இல்லையா? அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டுமானால் அவளுடைய ஒவ்வொரு பஹிஷ்டையின்போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பண்ணிவிடு! இந்த கோ தானம்தான் உனக்கு பரிகாரம் அதாவது மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகின்றதோ, அத்தனை பசுக்களை தானம் பண்ணவேண்டுமாம்! இப்போது புரிகிறதா எங்கு போய் எங்கு வருகிறார் மநு என்று?

அந்த கோ தானம் பண்ணுகிற செலவில் கல்யாணத்தையே நடத்தி விடலாம் என்கிறீர்களா? கொடுமையான தண்டனை, அதிலிருந்து தப்பிக்க 'வரும்படி தருகின்ற பரிகாரம்.------------- இந்துமதம் எங்கே போகிறது? என்ற நூலில் அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார் -பக்கம் 158-165
*******************************************************************************
இப்போது சொல்லுங்கள் கோகுல் இது அரசியல் பிரச்சினையா? மதப்பிரச்சினையா? படிக்கும் போதே ரத்தம் கொதிக்கிறதே!

இப்போதும் கூட பார்ப்பனர்கள் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை!
பெரியார் பிறப்பதற்கு முன் இந்தப் பார்ப்பனர்கள் நம் மக்களை எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தியிருந்திருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள் தோழர்களே!

இனி பால்ய விவாகம் குறித்து பெரியார் அவர்களின் கருத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்.

சிந்தியுங்கள்! தெளியுங்கள்! விழிப்படையுங்கள்! கொடுமைகளை அழித்தொழிக்க அணியமாவோம்.

நன்றி.

3 comments:

aik said...

தமிழ் ஓவியாவுக்கு தெரிந்திருந்தாலும் இன்னொரு முறை சொல்லுவது நல்லதுதான்.

தமிழ்நாட்டில் எந்த இந்துவும் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்ன சொல்கிறார் என்று கேட்டு நட்ப்பதில்லை. ஏன், காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொல்கிறார் என்று கேட்டு நடப்பதில்லை. அவர்களை ஒரு சாதியில் இருக்கும் ஒரு சில சிகாமணிகள் கேட்கிறார்களே தவிர அவர்களும் இவர்கள் சொல்லுவதையெல்லாம் கேட்பதும் இல்லை. ஏனென்றால், அவர்கள் சொல்லுவதை செய்யவில்லை என்றால் சிறையில் போடவேண்டும் என்று சொல்லும் எந்த மன்னனும் இல்லை, இந்துக்களும் கையில் தீவட்டி எடுத்துக்கொண்டு காஞ்சி சங்கராச்சாரி சொல்வதை கேட்காதவனை அடி என்று கிளம்பவில்லை, கிளம்பப்போவதும் இல்லை. ஆகவே வீணாக ரத்தம் கொதிப்பது தேவையில்லை. சரியா? ராமானுஜ் தாத்தாச்சாரியார் சொல்லுவதோ அல்லது காஞ்சி சங்க்ராச்சாரி சொல்லுவதோ ஒருவேளை திராவிட கழகக்குஞ்சுகளுக்கு இனிப்பாக இருக்கலாம். அதனை வைத்து கிறிஸ்துவ இஸ்லாமிய மதமாற்றிகளுக்கு எழுதிக்கொடுக்க பிரயோசனப்படலாம். மற்றபடி எந்த பிரயோசனமும் இல்லை.

இந்துக்களிடம் இப்போது இல்லாத பாலிய விவாகம் பற்றி பேசுவது செத்த பாம்பை அடிப்பது போன்றது. அதில் என்ன வீரம் இருக்கிறது? உயிருடன் இருக்கும் இஸ்லாமிய பாலிய விவாக பாம்பை அடியுங்கள். உங்களது வீரத்தை மெச்சுகிறேன்.

ஆனால் இஸ்லாமியர்கள் இதே பாலிய விவாகத்தில் இப்போதும் என்ன நிலைப்பாடு வைத்திருக்கிறார்கள், அதனை எப்படி தாங்குகிறார்கள் என்பதைபார்க்க லிங்க் கொடுத்தேன். வாய் மூடி மவுனியாக இருக்கிறீர்கள்.

//அனைத்து மதங்களும் ஒழிய வேண்டும் என்பதுதான் பெரியார் தொண்டர்களின் நிலை.
//

அப்ப இஸ்லாம் ஒழிய வேண்டும் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட வேண்டும் என்று சொல்கிறீர்களா?

//இங்கே இஸ்லாமை பற்றி சொல்லியிருப்பதற்கு தமிழினத்தலைவர், பகுத்தறிவு செம்மல் வீரமணியின் கருத்தென்ன?
//

இதனை அவரிடம் சற்று கேட்டுச் சொல்கிறீர்களா?

என்ன சொல்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நபிகள் நாயகம் 6 வயதில் ஆயீஷாவை திருமணம் செய்ததினால், அது எல்லா முஸ்லீம்களுக்கும் ஒரு அழகான எடுத்துக்காட்டு என்று சொல்லுகிறார்கள். அதனால் முஸ்லீம்கள் ஒருவயது சிறுமியை கூட திருமணம் செய்யலாம் என்று பகிரங்கமாக சொல்லுகிறார்கள். இப்போதும்.

குழந்தைகள் திருமணம் காரணமாக முஸ்லீம்கள் தங்கள் திருமணத்தை அரசாங்க பதிவேடுகளில் பதிய முடியாது என்று தமிழ்நாட்டில் இப்போது போர்கொடி தூக்கியிருக்கிறார்கள்

இதில் திராவிட கழகத்தின் நிலைப்பாடு என்ன? இதற்காக போராட்டம் ஆரம்பிக்கப்போகிறீர்களா?

தமிழ் ஓவியா said...

எந்த மதம் செய்திருந்தாலும் அது கண்டிக்கத்தகதுதான். தண்டணைக்கு உரியது தான்.

மதங்களே ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறோம். இதில் இஸ்லாம் என்ன? இந்து என்ன? அனைத்து மதங்களும் ஒழியும் போது இஸ்லாமும் ஒழியும்.பெரியாரின் கருத்தும் இதுதான்.

தமிழ் ஓவியா said...

ஆங்கிலேயன் வெளியேறினாலும் அவன் விட்டுச் சென்ற சில செயல்களை இன்னும் தமிழ் மக்களால் விட முடியாமல் இருக்கிறார்களோ அது போல் பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்ட சில செயல்களை அதாவது சடங்கு ,சம்பிரதாயம்,ஜாதி சாஸ்திரம் போன்றவைகளை ( மூளைக்கு போட்ட விலங்குகள் இவைகள் .கண்ணுக்குத் தெரியாது) கண்மூடி பின்பற்றி வருகிறார்கள். மூளைக்கு போட்ட விலங்கை உடைத்து நொறுக்கிவிட்டால் உண்மையை உணர்த்தி விட்டால் மதவாதிகளின் கதி அதோ கதிதான். எந்த மதவாதியாக இருந்தாலும்.

உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஒழிக்கப் பட வேண்டியதுதான் aik