Search This Blog

22.7.09

பால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா? மதப்பிரச்சினையா? - 3Gokul என்ற நண்பர் ஒருவர் கீழ் வருமறு பின்னூட்டம் இட்டிருந்தார்

தமிழ் ஓவியா,

நான் உங்கள் பக்கத்தை விரும்பி படிப்பவன், உண்மையில் பெரியார் தமிழ்நாட்டில் செய்த பணி மகத்தானது.

ஆனால், இந்த பால்ய விவாகம், எதனால் வந்தது என்பதையும் நாம் யோசிக்க வேண்டும் என்று பல்வேறு காரணங்களைக் கூறி முடிக்கும் போது இப்படி முடித்திருந்தார்.

"இந்து மதத்திற்கும் சம்பந்தமே இல்லை, இந்த பால்ய விவாகம் ஒரு அரசியல் பிரச்சினை."


பால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா? மதப்பிரச்சினையா? என்பதை கோகுல் மட்டுமல்ல மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் முதலில் இந்துமதம் எங்கே போகிறது? என்ற நூலில் அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய கருத்தை பதிவு செய்திருந்தேன்.பெரியாரின் கருத்தை ஏற்கனவே பதிவு செய்திருந்தேன். இப்போது இது குறித்த பெரியாரின் இன்னுமொரு கருத்தை பதிவு செய்துள்ளேன். ஊன்றிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறென்.

நன்றி

*******************************************************************************விதவா விவாகம்


பழுத்த ஞானமும் நீடிய அனுபவமும் கொண்ட அறிஞர் திரிசிரபுரம் திருவாளர் சி.பி. ராஜகோபால் நாயுடு அவர்கள் தாம் ஆக்கிய "விதவா விவாக விளக்கம்" என்னும் புத்தக அச்சுப்பிரதியை அனுப்பி எனது அபிப்பிராயத்தை எழுதுமாறு எழுதியிருந்தார்.

விதவா விவாகத்தைப்பற்றி நான் தீவிரக் கருத்துக் கொண்டவனேயாகிலும் போதிய அமயமும் அவகாசமும் வாய்த்திலாமையான், அஃதினை ஊன்றிப் படித்து விரைவினில் எனது கருத்தினை வெளியிட இயலாது போயிற்று. பிறகு அப்புத்தகம் முடிவு பெற்றுப் புத்தக ருபமாய் கிடைக்கப் பெற்றேன். அஃதினை அமைதியுடன் படித்து எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை எழுத முற்பட்டேன்.

இந்திய நாட்டின் ஆளுகை உரிமை இந்திய மக்களுக்கே கிடைக்க வேண்டுமென அரசியல் சீர்திருத்தக்காரர்களும், இந்திய மக்களுக்குள்ளிருக்கும் வகுப்புப்பிரிவினையும், சாதிவேற்றுமையும் தொலைய வேண்டுமென்பதாகச் சமூக சீர்திருத்தக்காரர்களும் போராடுகிறார்களேயன்றி பெண் மக்கள் ஒரு பகுதியார் அழிந்து வருவதைப் பராமுகமாகவே பார்த்து வருகின்றனர்.

சிருஷ்டிகர்த்தா மக்கட்படைப்பிலடங்கிய ஆண் பெண்களை ஏற்றத் தாழ்வுடன் படைக்கவில்லை என்பதை அறிவுடைய உலகம் ஏற்கும். அங்க அமைபபிலன்றி அறிவின் பெருக்கத்திலோ, வீரத்தின் மாண்பிலோ ஆண் பெண்களுக்கு ஏற்றத் தாழ்வான வித்தியாசம் காண இயலுமோ? இயலவே இயலாது. ஆடவரிலும் சரி, பெண்டிரிலும் சரி. முறையே அறிவாளிகளும், ஆண்மை உடையோரும், அறிவிலிகளும், பேடிகளும் உள்ளனர். இவ்வாறிருக்க, திமிர் பிடித்த இந்த ஆண் உலகம் சாந்தகுல பூஷணமான பெண்ணுலகத்தைத் தாழ்த்தி, அடிமைப்படுத்தி வருதல் முறையும் தர்மமுமான செயலாகாது.

இந்துமத ஆண் உலகம் தங்களது பெண்ணுலகத்தின் மாட்டுப் பூண்டொழுகும் கொடுமைச் செயல்கள் பலவற்றில் இங்கு நாம் விதவைகளைப் பற்றி மட்டும் கவனிக்க வேண்டியுள்ளது.


உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கீழவனாயினும் தன் மனைவியார் இறந்து விட்டவுடன் மறுமணம் புரிய முயலுகிறான். அதுவும் வனப்பு மிகுந்த எழில் பொருந்திய இளஞ் சகோதரிகளையே தன் மணத்திற்குத் தேர்ந்தெடுக்கிறான். ஆயின் ஒரு பெண் மகள் தன் கொழுநனை இழந்துவிட்டால் அவள் உலக இன்பத்தையே சுவைத்தறியாதவளாயிருப்பினும் தன் ஆயுட்காலம் முற்றும் அந்தோ தன் இயற்கைக் கட்புலனை இறுக மூட மனம் நொந்து வருந்தி மடிய நிபந்தனை ஏற்பட்டு விடுகிறது. என்னே! அநியாயம்!

இந்து சகோதரர்கள் இவ்வாறு தங்கள் சமூகம் அநியாயமாய் அழிந்து வருவதைப் பார்த்துக் கொண்டு வருவது பெரும் பாவகரமான செயலாகும்.

முன்னாளில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவியும் உடன்கட்டை ஏறுதல் வழக்கமாயிருந்தது. இக்கொடிய வழக்கத்தை அக்காலத்தில் ஆங்கிலோ இந்திய வியாபாரக் கூட்டத்தில் தலைவராயிருந்த வாரன் ஹேஸ்டிங்ஸீம், சுவாமி தயானந்த சரஸ்வதி போன்ற இந்திய நாட்டு அறிவாளிகளும் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியால் நிறுத்தப்பட்டுவிட்டது. உடன் கட்டை ஏறுதலை நிறுத்துவதற்காகப் போராடிய அக்காலத்திலும் ஆச்சாரமே அழிந்து போவதாகவும், மதமே கெட்டுப் போவதாகவும் பெருங்கிளர்ச்சி ஏற்பட்டது. ஆனால் நாளடைவில் அக்கூக்குரலும் அடங்கி 'சகமனம்' என்னும் உடன்கட்டை ஏறுதலான கொலை வழக்கமும் அறவே மறைந்தது.


இதுபோன்று நம் நாட்டில் விதவைகள் மறுமணம் செய்து கொள்ளலாகாதென்னும் வழக்கமிருப்பது பாராபட்சம் நிரம்பிய கொடுமையான செயலாகும். தன் மனைவியை இழந்த கணவன் மறுமணம் செய்து கொள்ளலாமென்றும், தன் கணவனை இழந்த மகப்பேறு பெறாத இளமங்கை மறுமணம் செய்து கொள்ளலாகாதென்றும் கூறுவது நடுநிலைமை கொண்ட அறச்செயலாகாது.


விதவைகள் மறுமணம் செய்து கொள்ளும் வழக்கம் கற்புக்குப் பங்கம் விளைவிப்பது ஆகும் எனக்கூறினால் அது பொருந்தாது. விதவைகளை மறுமணம் செய்விக்காதிருந்தலினாலேயே அவர்கள் கற்பழிந்து மாய்கின்றனர். காமச் சுவை கருதும் இளம் கைம்பெண்கள் படிற்றொழுக்கத்தில் வீழ்ந்து அதனால் கருப்பந்தரித்து இரண்டோர் திங்களுள் சிசுஹத்தி தோஷத்திற்கு உள்ளாகின்றார்கள். இப்பாவம் யாரைச் சாரும்? விதவைகள் மறுமணம் செய்து கொள்ளல் ஆகாதென்று கட்டாயப்படுத்தி வரும் பெற்றோர்களையே சாரும். மறுமணம் விரும்பாத பெண்களைத் தவிர்த்து ஏனைய கைம் பெண்களுக்கு மறுமணம் செய்வித்தலே நன்று.

விதவைகளின் கல்யாணத்தைப் பற்றி இவ்வாறு எழுதும் நான், எழுத்தளவோடும் சொல்லளவோடும் ஆதரிக்கின்றேனோ, அன்றிச் செய்கையாலும் ஆதரித்துள்ளேனோ என்ற அய்யம் அன்பர்களுக்குத் தோன்றலாம். இதன் பொருட்டேனும் எனது கருத்தைப் பிரதிபலிக்கும் செய்கையைக் கூற விரும்புகிறேன்.

நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன். என் வகுப்பின் பெண் மக்கள் முக்காட்டுடன் "கோஷாவாக" இருக்க வேண்டியவர்கள் எனவும், விதவா விவாகத்தை அனுமதிக்கப்படாத வகுப்பினரெனவும் வழங்கப்படுவார்கள். நான் பிறந்த குடும்பமோ அளவுக்கு மிஞ்சிய ஆசாரத்தையும் வைணவ சம்பிரதாயத்தையும் கடுமையாய் ஆதரிக்கும் குடும்பம். இப்படி இருந்த போதிலும் என்னுடைய 7-ஆவது வயதிலிருந்தே மக்களில் உயர்வுத் தாழ்வு கற்பித்தலையும் ஒருவர் தொட்டதை மற்றொருவர் சாப்பிடலாகாதெனச் சொல்வதையும் நான் பரிகாசம் செய்து வந்ததோடு யாரையும் தொடுவதற்கும், எவர் தொட்டதையும் சாப்பிடுவதற்கும் நான் சிறிதம் பின் வாங்கியதே கிடையாது.

என்னை இளம் வயதிலிருக்கும் போதிலிருந்தே எங்கள் வீட்டு அடுப்பங்கரைக்குள் செல்ல அனுமதிப்பதில்லை. நான் தொட்ட சொம்பை என் தகப்பனார் தவிர மற்றையோர் கழுவாமல் உபயோகப்படுத்த மாட்டார்கள். எங்கள் குடும்ப ஆசார அனுஷ்டானங்களைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்கள் என்னைப் பார்த்து சாந்தியடைந்து விடுவார்கள். நாயக்கருக்கு அவர்கள் ஆச்சாரத்திற்கு ஏற்றார் போல் தான் ஒரு பிள்ளையென்றாலும் பிள்ளை நவமணியாய்ப் பிறந்திருக்கிறது! என்று சொல்லுவார்கள். என்னுடைய 16- ஆவது வயதிலேயே பெண் மக்களைத் தனித்த முறையில் பழக்குவதும் அவர்களுக்கெனச் சில கட்டுத் திட்டங்களை ஏற்பாடு செய்வதையும் ஆண் மக்களின் அகம்பாவம் என்று நினைத்து வந்தேன்.


இவ்வாறாக என் தங்கை இளம் வயதிலேயே ஒரு பெண் குழந்தையையும் ஒரு ஆண் குழந்தையையும் விடுத்து விண்ணுற்றாள். அவற்றுள் அம்மாயி என்று அழைக்கப்பெறும் அப்பெண் குழந்தைக்கு அதன் 10 ஆவது வயதில் சிறந்த செல்வாக்கோடு ஒரு செல்லக் கலியாணம் செய்து வைத்தோம். கலியாணம் செய்த 60 ஆம் நாள் அப்பெண்ணின் கணவன் என்னும் 13 வயதுள்ள சிறு பையன் பகல் 2 மணிகக்கு "விஷபேதி"யால் 'விண்ணுற்றான்'. அவன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்டதும், அப்பெண் குழந்தை என்னிடம் ஓடிவந்து, "மாமா! எனக்கு கலியாணம் செய்து வை என்று நான் உன்னிடம் கேட்டேனா? இப்படி என் தலையில் கல்லைப் போட்டாயே என்று ஓ வென்று அலறிய சத்தத்தோடு என் காலடியில் அதன் மண்டையில் காயமுண்டாகும்படி திடீரென்று விழுந்தது. துக்கம் விசாரிப்பதற்காக அங்கு வந்திருந்த ஆண் பெண் உள்படச் சுமார் 600, 700 பேர்கள் அக்குழந்தையையும், என்னையும் பார்த்த வண்ணமாய்க் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வடித்தனர். எனக்கும் அடக்கவொன்னா அழுகை வந்துவிட்டது. ஆனால் கீழே கிடந்த அந்தக் குழந்தையை நான் கையைப் பிடித்துத் தூக்கும் போதே, மறுபடியும் அதற்குக் கலியாணம் செய்துவிடுவது என்கின்ற உறுதியுடன் தூக்கினேன்.

பிறகு அந்தப் பெண் பக்குவமடைந்த ஒரு வருடத்திற்குப் பின் அதற்குக் கலியாணம் செய்ய நானும், எனது மைத்துனரும் முயற்சி செய்தோம். இச்செய்தி எனது பெற்றோருக்கும் மற்றோருக்கும் எட்டவே அவர்கள் இதைத் தங்கள் வகுப்புக்கு ஒரு பெரிய ஆபத்து வந்து விட்டதுபோலக் கருதி பெரிதும் கவலைக்குள்ளானவர்களாகி நாங்கள் பார்த்து வைத்திருந்த இரண்டொரு மாப்பிள்ளைகளையும் கலைத்தார்கள். முடிவில் எனது மைத்துனரின் இரண்டாம்தாரம் மைத்துனரைப் பிடித்துச் சரி செய்து எவரும் அறியாவண்ணம் பெண்ணையும், மாப்பிள்ளையையும் சிதம்பரத்திற்கு அழைத்துச் சென்று அங்கு கோயிலில் கல்யாணம் செய்வித்து ஊருக்கு கூட்டி வந்தனர். ஆனால் நான் சிதம்பரத்திற்குப் போகாமல் ஊரிலியே இருக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் அவர்கள் போயுள்ள செய்தியைச் சுற்றத்தார் அறிந்தால் ஏதாவது மாப்பிள்ளையைத் தடை செய்து விடுவார்களோ என்கிற பயத்தால் நான் ஊருலிருந்தால் கலியாணத்திற்காக வெளியூறுக்குப் போயிருக்கிறார்களெனச் சந்தேகமிருக்காது என்கிற எண்ணங்கொண்டேயாகும். இக்கலியாணத்தின் பலனாக இரண்டு மூன்று வருட காலம் பந்துக்களுக்குள் வேற்றுமையும், பிளவும் ஏற்பட்டு ஜாதிக் கட்டுப்பாடு இருந்து பிறகு அனைத்தும் சரிப்பட்டுப்போயின.

பெண்ணும் மாப்பிள்ளையும் ஒத்து வாழ்ந்து ஓர் ஆண் மகவைப் பெற்றனர். ஆனால் துரதிருஷ்டவசமாகக் கொஞ்ச நாளையில் அந்த இரண்டாவது புருஷனும் இறந்து விட்டான். இப்பொழுது தாயும் மகனுமே சேமமாயிருக்கிறார்கள். இன்னமும் எனது வகுப்பில் 13 வயதுக்குக் கீழ்ப்பட்ட விதவைக் குழந்தைகள் சிலர் இருக்கின்றனர். பாவம் அக்குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் தீண்டாதார் போல் கருதி நடத்துவதைத் தினமும் பார்க்கப் பாவமாயிருக்கிறது.

எவ்வளவோ இடருக்குள் அகப்பட்டு அக்கலியாணத்தை முடித்து வைத்தோம். ஆனால் கடைசியில் அந்த இரண்டாவது கணவனும் மரிக்கவே விதவா விவாக விஷயத்தில் தீவிரமாகத் தலையிட வேண்டுமென எனக்கிருந்த கருத்துக்குப் பெரிய முட்டுக்கட்டை போட்டது போலாயிற்று.

விதவைகளின் விஷயம் நினைவிற்கு வரும் போதும், நேரில் காணநேரும் போதும் உலக இயற்கை எளியாரை வலியார் அடக்கி ஆண்டு இம்சிப்பதல்லாமல் வேறல்ல என்றே முடிவு செய்வேன். நமது இந்து சமூகம் எந்தக் காலத்தில் எவருடைய ஆதிக்கத்தில் கட்டப்பட்டதோ அன்று மதமில்லாமல், முறையில்லாமலிருந்து இயற்கையாகவே ஏதாவது கட்டுப்பாடுகள் ஏற்பட்டு அவற்றை வலியவர்கள் தங்கள் தங்கள் சுயநலத்திற்குத்தக்கப்படி திருத்திக் கொண்டார்களோ என நினைக்கும்படி இருந்தாலும் பொதுவாய் விதவைத் தன்மை நிலைத்திருக்கும் காரணத்தினாலேயே இந்து மதமும், இந்து சமூகமும் ஒரு காலத்தில் அடியோடு அழிந்து போனாலும் போகுமென்பதே எனது முடிவான கருத்து.


அரசியல் என்றும் சமூகவியல் என்றும் ஜனாச்சார சீர்திருத்தவியல் என்றும் பெண் மக்கள் முன்னேற்றமென்றும் சொல்லிக் கொண்டிருக்கும் மக்களில் பெரும்பான்மையோர் இவற்றைத் தங்களது வாழ்விற்கும் கீர்த்திக்கும் சுயநலத்திற்கும் பயன்படுத்திக் கொள்வோராக இருக்கிறார்களே தவிர, உண்மையில் அக்கருத்தைக் கொண்டு உழைப்பவர்கள் அரிதாகி விட்டனர் என்று சொல்லவதை மன்னிக்க வேண்டுகிறேன்.

அன்றியும் இவ்விதத் துறைகளிலும் சீர்திருத்தங்கள் இருந்தாலும் பாடுபடுபவர்களாய்க் காணப்படுவோர்களில் பெரும்பாலோர் தாங்கள் செய்வது சரியென்ற தீர்மானம் தங்களுக்கேயில்லாமல் உலகமொப்புக்குச் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். பெண் மக்கள் முன்னேற்றத்தைப் பற்றி பேசுவோர் தங்கள் வீட்டுப் பெண்களைப் படுதாவுக்குள் வைத்துக் கொண்டும், விதவா விவாகத்தைப் பற்றி பேசுவோர் தங்கள் குடும்பங்களிலுள்ள விதவைகளைக் காவல் போட்டு விதவைத் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறர்களே தவிர, உண்மையில் ஒரு சிறிதும் தாங்கள் நடவடிக்கையில் காட்டுவதில்லை.


இதன் காரணம் என்னவெனப் பார்க்கும் போது பெண் மக்கள் என்று நினைக்கும் போதே அவர்கள் அடிமை நமக்கடங்கினவர்கள் என்கிற உணர்ச்சி ஏற்படுகிறது என்றே நினைக்கிறோம். இதனாலேயே அவர்களை விலங்குகளைப் போல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பது என்கிற விஷயத்தை நினைக்கும் போது செய்யக்கூடாத ஒரு பெரிய குற்றமான செய்கையைச் செய்ய நினைக்கிறது போலவே தோன்றுகிறது. அதனால் மனித சமூகத்தில் சரிபகுதியான எண்ணிக்கைக்குப் பிறவியிலேயே சுதந்திரம் இல்லை என்பதுதானே இதன் பொருள்? ஆடவருக்குப் பெண்டிரைவிடச் சிறிது வலிமை அதிகமாக ஏற்பட்ட குற்றந்தானே. இம்மாதிரி ஒரு சரி சமமான சமூகத்தைச் சுதந்திரமில்லாமல் அடிமைப்படுத்தும் கொடுமையை அனுஷ்டிக்க வேண்டியதாயிற்று? இந்தத் தத்துவமே வரிசைக் கிரமமாக மேலோங்கி எளியோரை வலியோரால் அடிமையாகச் செய்கிறது.


உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையிலையே சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடம்.


உலகிலேயே மிகப் பெரிய சீர்திருத்தக்காரரான மகாத்மா காந்தியடிகள் இந்து விதவைகளைப் பற்றி அனேக சந்தர்ப்பங்களில் பேசியும், எழுதியும் வந்திருக்கிறார். அவற்றுள் சென்ற ஆண்டு நவஜீவன் பத்திரிக்கையில் மகாத்மா எழுதியிருக்கும் விஷயத்தைக் கவனித்தால் விதவைகளில் விடுதலை சம்பந்தமாய் மகாத்மா எவ்வளவு தூரம் உழைக்கிறார் என்பது புலனாகும். அக் கட்டுரையின் ஒரு சில பாகமாவது :


"பால்ய விதவைகளைக் கட்டாயப்படுத்தி வைத்திருப்பது போன்ற இயற்கைக்கு விரோதமான பொருள் உலகில் வேறொன்றுமில்லை என்பது திடமான நம்பிக்கை. விதவைத் தன்மை என்பது எவ்விதத்திலும் ஒரு தர்மமாகாது. பலாத்தாரத்தினால் நடத்தும் கைம்மை வாழ்வு பாவமானது. பதினைந்து வயதுள்ள ஒரு பால்ய விதவை தானாகவே விதவை வாழ்வைக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லுவது அவ்விதம் கூறுபவரின் கொடூர சுபாவத்தையும், அறியாமையையுமே அது விளக்குகிறது"

என்று எழுதிவிட்டு விதவைகள் மறுமணம் செய்து கொள்ள வேண்டுமென்பதற்காகத் தன் உள்ளன்போடும் ஆவேசக் கிளர்ச்சியோடும் மகாத்மா கூறிய மணி வாசகங்களில் சிலவற்றைக் காண்போம்.


"அமைதியுடன் தங்களுடைய உண்மையான கருத்தைத் தங்களின் பெற்றோர் அல்லது போஷகர்களான ஸ்திரீ புருஷர்களிடம் தைரியமாய்ச் சொல்லிவிட வேண்டும். அவர்கள் அதைக் கவனிக்காவிட்டால் தாங்களே ஓரு யோக்கியமான புருஷன் கிடைத்தால் விவாகம் செய்து கொள்ளட்டும். விதவைகளின் போஷகர்கள் இதைச் சரிவரக் கவனியாவிடின் பின்னால் பச்சாதாபப்படுவார்கள். ஏனெனில் நான் ஒவ்வோரிடத்திலும் துராசாரத்தையே பார்த்துக் கொண்டு வருகிறேன். விதவைகளைப் பலாத்காரமாய்த் தடுத்து விதவைத் தன்மையை அனுஷ்டிக்கச் செய்தால் விதவைகளுக்காவது குடும்பத்திற்காவது அல்லது விதவா தர்மத்திற்காவது மேன்மை உண்டாகவே மாட்டாது. இம்மூன்று தத்தவங்களும் நசிந்து வருவதை என் கண்களினாலேயே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பால்ய விதவைகளே! நீங்களும் உங்களைப் பலவந்தப்படுத்தி விதவைகளாக வைத்திருக்கும் ஸ்திரீ புருஷ வர்க்கங்களும் இதையறிவீர்களாக"

இவ்வாறாக 1921- ஆம் வருஷத்திய ஜனசங்கியைப்படி இந்துக் கைம்பெண்ணின் தொகையினை நோக்குகையில் அய்யகோ என் நெஞ்சம் துடிக்கின்றது.

1- வயதுள்ள விதவைகள் ........ 597
5- முதல் 2- வயதுள்ள விதவைகள்....... 494
2- முதல் 3- வயதுள்ள விதவைகள்....... 1,257
3- முதல் 4- வயதுள்ள விதவைகள்....... 2,837
4- முதல் 5- வயதுள்ள விதவைகள்....... 6,707
ஆகமொத்தம்......... 11,892

5- முதல் 10- வயதுள்ள விதவைகள்........ 85,037
10- முதல் 15- வயதுள்ள விதவைகள்........ 2,32,147
15- முதல் 20- வயதுள்ள விதவைகள்........ 3,96,172
20- முதல் 25- வயதுள்ள விதவைகள்......... 7,42,820
25- முதல் 30- வயதுள்ள விதவைகள்......... 11,63,720
ஆக மொத்த விதவைகள்........ 26,31,788.அல்லாமலும், இத்தகைய விதவைத் தன்மையானது பிரஜா உற்பத்திக்குப் பேரிடராயிருக்கிறது. இந்து மதத்திலிருந்து எவரேனும் இரண்டொருவர் பிற மதத்திற்கு மாற்றப்பட்டால் இந்துமக்கள் தங்கட்குப் பெரும் துன்பம் நேரிட்டு விட்டதாகக் கருதி பரிதாபப்படுகின்றார்கள். இதன் காரணம், நமது மதத்தினரில் இருவர் குறைந்து விட்டதால் இந்து சமூகத்திற்குக் கஷ்டமும், நஷ்டமும் ஏற்பட்டு விட்டது என்பதனாலேயன்றோ? அந்த இந்த இரண்டு நபருக்காக இவ்வளவு துக்கமும், துயரமும் ஏற்படுமானால் தற்காலம் நமது இந்திய நாட்டிலுள்ள இருபத்தாறு லட்சத்து முப்போத்தோராயிரத்து எழுநூற்று எண்பத்தெட்டு விதவைகள் கல்யாணம் செய்துக்கொண்டு இல்லற வாழ்க்கை நடத்துவதாயிருந்தால் எத்தனை குழந்தைகள் பெறக்கூடும்?


சராசரி மொத்தத்தில் மூன்றில் இருமடங்குப் பெண்கள் 2 வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம் பெறுவதாக வைத்துக் கொண்டாலும், தடவை ஒன்றுக்கு 87,726 குழந்தைகள் வீதம் வருடம் பத்துக்கு 4,38,631 பிரஜா உற்பத்தியை நாம் தடுத்துக் கொண்டு வருகின்றோம். இது இரண்டொருவர் மதம் மாறுவதால் நஷ்டம் வந்துவிட்டதாகக் கருதுவோருக்குப் புலப்படுவதில்லை. பால் மணம் மாறாத 5 வயதிற்குட்பட்ட இளங்குழந்தைகள் மட்டிலும் 11,892 பேர்கள் இருக்கிறார்களென்பதையும், தன் பிறவிப்பயனையே நாடுதற்கில்லாது, இன்பந்துய்த்தற்கில்லாது அடக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 வயதிற்குட்பட்ட கைம்பெண்கள் 2,32,147 பேர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கேட்க என் குலை நடுங்குகிறது. இத்தகைய படுமோசமான விதவைத் தன்மையை எந்த நாகரிக உலகம் ஏற்கும்?


விதவைகளின் கொடுமையை நீக்க ஒரு நூறு வருடங்களாக இராஜாராம் மோகன்ராய், ஈஸ்வரசந்திர வித்தியாசாகரர், கோலாம்புர் மகாராஜா, சுரேந்திரநாத் பானர்ஜி முதலிய அறிஞர்கள் பாடுபட்டுழைத்தனர். இப்போதும் இத்தகைய சீர்திருத்தத்துறையில் பாஞ்சாலத் தலைவர்கள் பலர் இறங்கி உழைத்து வருகின்றனர்.------------------தந்தைபெரியார் - "குடிஅரசு" 22-08-1926

*************************************************************************************

இப்போது சொல்லுங்கள் கோகுல் இது அரசியல் பிரச்சினையா? மதப்பிரச்சினையா? படிக்கும் போதே ரத்தம் கொதிக்கிறதே!

இப்போதும் கூட பார்ப்பனர்கள் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை!
பெரியார் பிறப்பதற்கு முன் இந்தப் பார்ப்பனர்கள் நம் மக்களை எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தியிருந்திருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள் தோழர்களே!

பால்ய விவாகம் குறித்து பெரியார் அவர்களின் கருத்து உங்களுக்கு தெளிவை ஏபடுத்தியிருக்கும் என நம்புகிறேன்

சிந்தியுங்கள்! தெளியுங்கள்! விழிப்படையுங்கள்! கொடுமைகளை அழித்தொழிக்க அணியமாவோம்.

நன்றி.

3 comments:

Gokul said...

தமிழோவியா,

முதலில் எனக்கு பின்னூட்டதிற்கு நீங்கள் இவ்வளவு தகவல் செறிந்த பதிவிட்டதற்கு மிகவும் நன்றி.

உண்மையாக சொல்லுகிறேன் , நீங்கள் சொன்ன தகவல்களை என்னால் மறுக்கவே முடியவில்லை, ஆனால் எனது கருத்திலும் சிறிது நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது, அதாவது இது முழுக்க முழுக்க மதப்பிரச்சினை என்றாலும் இந்த பழக்க வழக்கங்களுக்கு ஒரு வித வரலாற்று அரசியலும் இருக்கிறது , அது அரசு, அரசமைந்த முறை, சட்ட ஒழுங்கு , சமூக அடுக்குகள், பொருளாதாரம் எல்லாம் கலந்த கலவை.

இவை எல்லாம் கலந்து இருந்தாலும், முன்பு நான் சொன்ன //"இந்து மதத்திற்கும் சம்பந்தமே இல்லை, இந்த பால்ய விவாகம் ஒரு அரசியல் பிரச்சினை."// என்பது தவறுதான் , மதமும் சம்பந்த பட்டு இருக்கிறது. இவை எல்லாம் கடந்த ஒரு சமுதாயத்தை இன்று பார்க்கும்போது ஒரு நிம்மதி பெருமூச்சு எழுவதும் , இதற்காக உழைத்த சீர்திருத்தவாதிகளை (முக்கியமாக பெரியார்) நினைக்கும்போது , நாம் அவர்களுக்கு முழு நன்றி செலுத்துகிறோமா என்று சந்தேகமாக இருக்கிறது.

ஒரு பின்னூட்டத்தில் திரு.ஐக் சொன்னது போல , இந்து சமுதாயத்தில் இருந்த இந்த குறைகளை செப்பனிட்டது போல இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய சமுதாய குறைகளையும் செப்பனிட திராவிடக் கழகம் முயற்சிக்க வேண்டும் , இதில் எந்த வித பயமும் இருக்க கூடாது, ஏனெனில் இதனை தி.காவினால்தான் செய்ய முடியும் (வோட்டு அரசியல் பயமில்லாமல்), முக்கியமாக Female Genital Mutilation எனப்படும் கொடிய பழக்கம் இந்தியாவில் உள்ள சில முஸ்லிம் சமுதாயத்திலும் இருப்பதாக படித்தேன், அதனை தி.க எதிர்க்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

//ஒரு பின்னூட்டத்தில் திரு.ஐக் சொன்னது போல , இந்து சமுதாயத்தில் இருந்த இந்த குறைகளை செப்பனிட்டது போல இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய சமுதாய குறைகளையும் செப்பனிட திராவிடக் கழகம் முயற்சிக்க வேண்டும் , இதில் எந்த வித பயமும் இருக்க கூடாது, ஏனெனில் இதனை தி.காவினால்தான் செய்ய முடியும் (வோட்டு அரசியல் பயமில்லாமல்), முக்கியமாக Female Genital Mutilation எனப்படும் கொடிய பழக்கம் இந்தியாவில் உள்ள சில முஸ்லிம் சமுதாயத்திலும் இருப்பதாக படித்தேன், அதனை தி.க எதிர்க்க வேண்டும்.//

எந்த மத மூடநம்பிக்கைகளையும் அதனை தி.க. எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஷாபானு வழகில் தி.க.வின் நிலைப்பாடு பற்றியெல்லாம் வாய்ப்பு இருப்பின் தேடிப் படிக்கவும் கோகுல்.

எதற்ககவும் பயந்ததில்லை கோகுல். கண்டிப்பாக அட்டூழியங்கள் ஒழிய தி.க. உதவும்

மிக்க நன்றி கோகுல்.

-------------தொடர்வோம்

நம்பி said...

//5- முதல் 2- வயதுள்ள விதவைகள்....... 494 //

அன்பின் தமிழ் ஒவியா...

பதிவில் இந்த குறிப்பு தவறாக இருக்கலாம் என நினைக்கிறேன், எழுத்துப்பிழையாகவும் இருக்கலாம்.

..1 முதல் 2 வயதுள்ள விதவைகள் என்று இருந்திருக்கும்.

இல்லை புத்தகத்திலேயே இது அச்சுப்பிழையாக இருந்திருக்கலாம். பிழை என்றால் திருத்துமாறு வேண்டுகிறேன்.

இந்த பின்னூட்டத்தை வெளியிடவேண்டாம். தகவலுக்காக மட்டுமே...