Search This Blog

29.7.09

ஜாதி சாகிறது -மனிதன் பிழைக்கிறான் எப்படி?


தாய் தந்தையரிடத்திலே நன்றி பாசம் காட்டக்கூடிய உணர்ச்சி பிள்ளைகளிடம் உண்டா?
சமூக அவல நிலையைப் படம் பிடித்து தமிழர் தலைவர் விளக்கம்


தாய், தந்தையரிடத்திலே நன்றி காட்டக் கூடிய பாச உணர்ச்சி இன்றைக்குக் குடும்பங்களிலே உண்டா? என்ற கேள்வியை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுப்பினார்.

புதுச்சேரியில் 7.7.2009 அன்று நடைபெற்ற காஸ்மாஸ் ரோட்டரி சங்க நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நாம் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அந்தப் பணம் நமக்காக மட்டுமல்ல; பணத்தை நமக்கு மட்டுமே வைத்திருந்தால் என்ன ஆகும்? கவலைதானிருக்கும். தன்பெண்டு, தன்பிள்ளை, என்று ஒரு குறுகிய வட்டத்திலே நிற்கக் கூடாது. தொல்லுலக மக்கள் எல்லாம் நம்மக்கள் என்று சொல்லி எங்கே சங்கடப்படுகிறார்களோ அவர்களுடைய துயரத்தைப் போக்க வேண்டும்.

நான் அடிக்கடி இது போன்ற அமைப்புகளில் பேசும்பொழுது ஒரு கருத்தை வலியுறுத்து-வதுண்டு. உங்களிலே மிகப் பெரும்பாலோர் அறிவீர்கள். நாம் ஒருவரைப் பார்த்து இரங்குவது என்பது வேறு. ஆனால் அவர்களுடைய நிலையிலேயே நம்மை ஆளாக்கிக் கொள்வது, தக்கவைத்துக்கொள்வது என்பது வேறு.

சிம்பதி- எம்பதி

உதவி செய்வதிலே கூட இந்த இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. சிம்பதி என்று சொல்லும்பொழுது அதற்கு என்ன பொருள்? நாம் அவரைப் பார்த்து பரிதாபப்படுகிறோம் என்று அர்த்தம், அதற்குப் பெயர் சிம்பதி.

ஆனால், அதைவிட சிறந்த சொல் ஒன்று உண்டு. ஆங்கிலத்திலே எம்பதி என்ற சொல். சிம்பதி என்ற சொல்லுக்கும் எம்பதி என்ற சொல்லுக்கும் என்ன வேறுபாடு என்றால், சிம்பதி என்பது வெறும் இரங்குதல். பரிதாபப்படுதல் அய்யோ அவர் இப்படி இருக்கிறாரே என்று நினைப்பது, அது ஓரளவு தான். ஆனால், எம்பதி என்ற சொல் இருக்கிறதே துன்பப்பட்டவர் இடத்தில் அவராகவே மாறி, அவரிடத்தில் இருந்து நம்மை வைத்துப் பார்ப்பது.

தன்நோய்போல் போற்றாக்கடை

அறிவினால் ஆகுவதுண்டோ பிரிதின் நோய் தன்நோய் போல் போற்றாக்கடை

என்று வள்ளுவர் சொன்னார். நாம் அந்த இடத்திலே இருந்தால் நமக்கு அப்படி ஏற்பட்டி-ருந்தால், என்ன ஆகியிருக்கும்? ஆகவே நாம் உதவ வேண்டாமா? என்று நினைக்கின்ற பொழுது தான் அவன் உயர்ந்த மனிதனாகிறான். சிறந்த மனிதனாகிறான். எப்பொழுதும் மற்றவர்களாலே மதிக்கக் கூடிய மனிதன் ஆகின்றான்.

அதைத்தான் உங்களிடத்திலே வலியுறுத்திடக் கடமைப் பட்டிருக்கின்றோம். ஒரே ஒரு கருத்தை உங்களுக்கு வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

எதை வைத்து மனிதனை அளக்க வேண்டும்?

மனிதர்கள் எதை வைத்து அளக்கப்பட வேண்டும் என்று சொன்னால், பணத்தால் அல்ல; அல்லது பட்டத்தால் அல்ல; அல்லது அவர்களுடைய பெருமைகளால் அல்ல. அவர்களுடைய தொண்டினால் மனிதர்கள் அளக்கப்பட வேண்டும். தெண்டினால் அவர்கள் எவ்வளவு உயர்ந்திருக்கிறார்களோ, அந்த அளவிற்குத் தான் அவர்கள் சிறந்த மனிதர்கள். மாமனிதர்களாக இருக்க முடியும்.

புகழ்வேட்டை என்பது வரக்கூடாது. புகழ்தானே இவரை அடையாளம் கண்டு வரவேண்டுமே தவிர, புகழை நோக்கி நாம் போகக் கூடாது. அந்த வகையிலே ஒரு கருத்து மனிதனுக்கும், மிருகத்திற்கும் இருக்கின்ற வேறுபாடு என்ன? என்பதை சொல்லுகிற நேரத்தில் தத்துவரீதியாக ஒரு கருத்தை தந்தை பெரியார் அவர்கள் சொல்லுகின்றார்.

மனித குலம் பெற்ற பயன் என்ன?

மாமனிதர்கள் நிறைந்திருக்கின்ற மன்றம் இந்த மன்றம். எல்லோருக்கும் பகுத்தறிவு இருக்கிறது. ஆறாவது அறிவு இருக்கிறது. வளர்ச்சி மனிதனுக்கு ஓங்கிக்கொண்டேயிருக்கிறது.

நேற்றைய விஞ்ஞானம் இன்றைக்குப் பழையதாகப் போய்விட்டது. இன்றைக்கு மின்னணுவியல் யுகம். எனவே தான் இதை எல்லாம் நினைத்துப் பார்க்கிற பொழுது இந்த வளர்ச்சியினாலே மனித குலம் பெற்ற பயன் என்ன? முன்னேற்றம் என்ன? ஆக்கரீதியான பயன் என்ன? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனித சுபாவம் என்னவென்று பார்த்தால், ஜீவன்களுக்கு இல்லாத சுபாவமுள்ளவனாக இருக்கின்றான்.

நாய்க்கு நன்றி உண்டு

நாய்க்காகிலும் நன்றி விசுவாசமென்பது மிகவும் உண்டு. நன்றியைக் கொஞ்சம் கூட மறக்காமல் நாய்தன் எஜமானனிடம் விசுவாசத்துடன் இருக்கும் தன் எஜமானன் தன்னை விட்டு வெளியே சென்று விட்டு வந்த பிறகும் தன் நன்றியின் அறிகுறியாக எட்டித்தாவி வாலை ஆட்டிக் கொண்டு துள்ளிக்குதித்து, மேலே விழுந்து விளையாடுவதற்கு முயற்சிக்கும். மனிதனோ நாயைப் போல நன்றி விசுவாசம் உடையவன் அல்லன்.

நன்றி காட்டுவது என்பது அரிதிலும் அரிது. அதிலும் பிள்ளைகளை நாம் இப்பொழுது நிறைய படிக்க வைக்கின்றோம். ஒரு சிறிய உதாரணம் உங்களுக்குச் சொல்லுகின்றேன். ஒருவர் பெரிய வீடு கட்டினார். வீடு திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ்களை எல்லாம் கொடுத்தார். பெரிய உத்தியோகத்தில் இருக்கிறவர். தன்னுடைய நண்பர்கள் எல்லாம் வந்தார்கள். வீட்டிற்குப் பெயரோ அன்னை இல்லம்.....!

அவருடைய வீட்டிற்கே அன்னை இல்லம் என்று பெயர் வைத்திருந்தார். எல்லோரும் அந்த அழைப்பிதழைப் பார்த்து அவருடைய புதுமனை விழாவிற்கு வந்திருந்தார்கள்.

அந்த இல்லத்துக்காரர் வந்திருந்த முக்கிய பிரமுகர்களுக்கு ஒவ்வொரு அறையாகக் காட்டினார். வீடு சிறப்பாகக் கட்டப்பட்டிருக்கிறது என்று பாராட்டினார்கள். அதிலே ஒருவர் கேட்டார். அன்னை இல்லம் என்று நீங்கள் பெயர் வைத்திருக்கின்றீர்களே, இவ்வளவு பெரிய பாசத்தை தாய் மீது நீங்கள் வைத்திருக்கின்றீர்கள். அதனால் தான் அன்னை இல்லம் என்றே பெயர் சூட்டியிருக்கின்றீர்கள்.

தாயாரோ முதியோர் இல்லத்தில்

ஆகவே, உங்களுடைய தாயாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டபொழுது,அந்த புதிய இல்லத்துக்காரர், அவர் முதியோர் இல்லத்தில் இருக்கிறார் என்று பதில் சொன்னார்.

இது கற்பனை அல்ல. வாழ்க்கை ஒரு பக்கம் உயர்ந்திருக்கிறது. சம்பளங்கள் கை நிறைய கிடைக்கிறது. பணம் இருக்கிறது. ஆனால் தன்னுடைய தாயிடத்திலே, பெற்றோரிடத்திலே நன்றி காட்டக் கூடிய பாச உணர்ச்சி பல குடும்பங்களிலே இருக்கிறதா? என்று பார்க்கின்ற நேரத்திலே நீங்கள் எத்தனையோ உதவிகளை செய்கிறீர்கள். இடையிடையே அதை நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

ஏனென்றால் நோய்களிலே பெரிய நோய் அறியாமை மற்றும் இது போன்ற சிக்கல்களான நிலைகள்தாம். ஆகவே அதைச் சொல்லுகிறார்கள்.

நாயை அடித்தாலும் உதைத்தாலும்

நாயைத் தன் எஜமானன் எவ்வளவு அடித்தாலும், உதைத்தாலும் அதே நாய் தன்னுடைய எஜமானனிடம் அன்பு காட்டுவதைக் காணலாம். சோறு போடாவிட்டாலும், நாய் விசுவாசம் காட்டும். ஆனால், மனிதன் அப்படி அல்லன். மனிதனுடைய இயல்பு தன்மை என்ன? அதைப் பார்க்கும் பொழுதுதான் உங்களுடைய தொண்டின் சிறப்புத் தெரிகிறது.

திட சித்தத்தோடு உறுதி எடுத்துக்கொண்டு

இவ்வளவு பேர் சேர்ந்து அற்புதமான ஒரு புதிய சமுதாயத்தை இதற்கு விதிவிலக்கான சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாம் திட சித்தத்தோடு உறுதி எடுத்துக்கொண்டு நாம் தொண்டாற்ற வேண்டும்.

அதிலே சொல்லுகின்றார். மனிதன் அப்படி அல்ல. என்ன நன்மை அடைந்தாலும் ஒரு தீமை நேர்ந்துவிட்டாலும் முன்பு அடைந்த நன்மைகளை மறந்து தீமையை மட்டும் எடுத்துக்கொள்வான்.

நாம் எத்தனை நண்பர்களைப் பார்க்கின்றோம். எத்தனையோ உதவிகளைத் தொடர்ந்து செய்திருப்பீர்கள். ஒரே ஒரு உதவியை நீங்கள் மறுத்தீர்கள் என்று சொன்னவுடனே பல உதவிகள் செய்தது அவருக்கு நினைவுக்கு வராது. எட்டாவது உதவியை நீங்கள் செய்யவில்லையே அதை மட்டும் தான் சொல்லிச் சொல்லிக் காட்டக் கூடிய, சுட்டிக்காட்டக் கூடிய உணர்வோடு இருப்பார்கள்.

துரோகம் என்பது இயல்பு

எனவே, மனிதனுக்கு சகலமும் சுய நலம். வியாபாரமுறை. மனிதனுக்கு துரோகம் என்பது இயல்பு என்ற நிலையிலே இப்படி இருக்கிறார்கள். ஆனால் பூமிக்கு மேல் மைல் கணக்கில் தூரத்தில் பறக்கும் பருந்து பூமியில் கிடக்கும் சிறிய வஸ்துகளை அது கண்டுபிடித்து விடுகிறது.

கரும்பை பயிர் செய்ய யானைக்குத் தெரியாது

நம்முடைய கண் பருந்தின் கண்களைவிட பெரிது நம் கண் உருவத்தில் பெரிதே தவிர, பறவைக்குள்ள கண்ணின் சக்தியைவிட அதிகம் சக்தி கொண்டதில்லை.

பருந்தின் கண்களுக்கு தனி சக்தி இல்லை. மனிதன் கரும்பை உற்பத்தி செய்கிறான். ஆனால் யானைக்குக் கரும்பைத் தின்பதற்குத் தான் தெரியும். கரும்பை பயிர் செய்யத் தெரியாது.

எவ்வளவு அழகான கருத்து என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள். மனிதன் பிறருக்குத் தொண்டு செய்து வாழ்வதையே குறியாகக் கொண்டுள்ளான். ஆனால் இந்தக் குறிக்கோள் மற்ற ஜீவனுக்கு இல்லை. எனவே தொண்டு செய்து அதன் விளைவாக மனிதன் புகழ் ஈட்டுவதிலே அவனுக்குத் தனி சிறப்பாகும். தொண்டின் மூலமாக கிடைக்கின்ற பெருமை தான்

இது தான் அவர்களுடைய கருத்து எனவே அந்தத் தொண்டின் மூலமாகக் கிடைக்கின்ற பெருமையிருக்கிறதே, அது தான் நிலையான பெருமை.

இங்கே விழிக்கொடை அளித்தவர்கள் பற்றிச் சொன்னார்கள். ஒன்று, விழிக்கொடை கொடுத்ததாலே உங்களுக்கு மனநிறைவு ஏற்படுகின்றது. இரண்டாவது, யாருக்கு விழிக்கொடை கொடுத்தீர்களோ அதன் மூலம் அவர் இறக்கவில்லை. மாறாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற உணர்வு இருக்கிறதே அது தான் முக்கியம். செத்தவர்களைப் பிழைக்க வைக்க முடியும் நம்மாலே. எப்படி முடியும்? நம்முடைய தொண்டறத்தாலே, நம்முடைய ஆற்றலாலே, நம்முடைய பரந்து விரிந்த மனத்தாலே. இதே நகரிலே எங்களுடைய இயக்கத்தைச் சார்ந்த கண்ணாடிக் கடை வைத்திருக்கின்ற தோழருடைய தந்தையார் உடல் முழுவதும் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கினார். இன்றைக்கும் எத்தனையோ பேர் உடல்தானம் செய்து வைக்கின்றார்கள். விழிக்கொடை, அதே போல சிறுநீரகம், உறுப்புக்கொடை அத்தனையும் தருகிறார்கள்.

ஜாதி செத்து விடுகிறதல்லவா?

இதில் மகிழ்ச்சி என்னவென்றால், மனித நேயம் தழைக்கிறது. மற்றவர்களை நாம் வாழ வைக்கிறோம் என்பது மட்டு-மல்ல; அதே நேரத்திலே ஜாதி என்ற கொடுமையிருக்கிறதே அதுவும் செத்துவிடுகிறது. இவர்கள் வாழ்கிறார்கள். ஏனென்றால், இந்த ஜாதிக்காரன் கண் இந்த ஜாதிக்குத் தான் பொருந்தும் என்பது கிடையாது.

இன்ன ஜாதியினர் ரத்தம்_அதாவது செட்டியார் ரத்தம் செட்டியாருக்கு, முதலியார் ரத்தம் முதலியாருக்கு, அய்யங்கார் ரத்தம் அய்யங்காருக்கு என்று கிடையாது.

அதற்கு மாறாக, எந்த குரூப் பொருந்துமோ அந்த குரூப்புக்குக் கொண்டு போய் வைக்கிறார்கள். அடிபட்ட ஒருவர் மருத்துவமனையிலே இருக்கிறார். அவருக்கு உடனடியாக ரத்தம் கொடுக்க வேண்டும். என்னங்க அவரைத் தொட்டாலே குளிக்க வேண்டும் என்று சொல்கின்றீர்கள்.

ஓர் ஆதி திராவிடர் ரத்தம்

ஓர் ஆதிதிராவிட தோழர்தான் ரத்தம் கொடுக்க வந்திருக்கிறார். உங்களுடைய ரத்த குரூப்பும், அவருடைய ரத்த குரூப்பும் தான் பொருத்தமாக இருக்கிறது. அவருடைய ரத்தத்தை உங்களுடைய அனுமதி இல்லாமல் ஏற்றக் கூடாது என்பதற்காக காத்திருக்கிறோம் என்று சொன்னால் இல்லிங்க நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் செத்தாலும் சாகிறேன் என்று யாராவது சொல்லுவார்களா?

கையைப் பிடித்துக்கொண்டு, இப்பொழுது யாருங்க அதை எல்லாம் பார்க்கிறார்கள். நான் பெரியார் கட்சியில் சேர்ந்து ரொம்ப நாள் ஆச்சே. சீக்கிரம் அந்த ஆளைப் பிடியுங்கள் என்று தான் கேட்பார்கள்.

ஜாதி சாகிறது மனிதன் பிழைக்கிறான்

காரணம் என்ன? அப்பொழுது ஜாதி செத்து விடுகிறது; மனிதன் பிழைக்கிறான். ஏன் இதைச் சொல்லுகிறேன்? நம்முடைய நாட்டில் தியாகம் செய்த தலைவர்களையே ஜாதிச் சட்டிக்குள் அடைத்துவிட்டார்கள்.

அதுவும் அரசியல் எவ்வளவு ரொம்ப மோசமாகப் போய்விட்டது.

--------------------தொடரும் ...."விடுதலை" 28-7-2009

2 comments:

Unknown said...

Oviya,

just because you are a black shirt wearing dravidian ramil swine should you behave like a mean son of a bitch.Explain this bastard.

தமிழ் ஓவியா said...
This comment has been removed by the author.