Search This Blog

20.7.09

இந்துக்களின் கொடிய வழக்கம் -பகுதி -2




மணவினை நிகழும் காலத்தில் ஓதப்பெறும் மந்திரங்களே எமது கூற்றின் எண்மையை உள்ளங்கை நெல்லியென விளக்கிக் காட்டும். ஒன்றுமறியாத, விளையாட்டு விருப்பம் அகலாத பத்து வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுமியர்களுக்கு மணமுடிக்க வேண்டுமெனச் சாஸ்திரங்கள் கூறுகிறதெனக் கூறுபவர்கள் விரிந்த கல்வியும், பரந்த அறிவும், மக்கள் மேம்பாடுறுவதில் பெருங்கவலையும் உடையராயிருந்த நமது முன்னோர்களின் மீது பெரும் பழி சுமத்துபவர்களாவார்கள். இக்கொடிய விதிகள் எல்லாம் பிற்காலத்தவரால் சுயநலம் கருதியும், பொருளாசை கொண்டும் எழுதி வைக்கப்பட்டனவேயாம். இளஞ் சிறுமியர்களுக்கு மணம் செய்யாவிடில் பெற்றோர் எரிவாய் நரகிடை வீழ்வர் என யாரோ சில மானிடப் பதர்கள் கூறியதை வேதவாக்காகக் கொண்டு நம்மவர் அறிவிழந்து, கண்மூடி, வைதிகம், வைதிகம் என்று வாயாற் பிதற்றி கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுப்பது போல் தமதருமைச் செல்வச் சிறுமியர்களை படுகுழியில் தள்ளி, சமூக நாசத்தையும், நாட்டின் அழிவையும் தேடும் பாதகச் செயலைவிடக் கொடுமையான செயல் வேறுண்டோ? இக்கொடுஞ்செயலினும் ஜோகேந்திரன் கொலை கொடிதோ? பால் மணம் மாறாக் குழந்தைப் பருவமுள்ள, கணவன் இன்னானென அறிந்து கொள்ளவும் முடியாத, புருடபாரியர் இயல்பு இத்தன்மைத்து என்றறிந்து கொள்ள இயலாத, காமஞ்சாலா இளமையுடையளாய் கணவனுடன் உடலின்பம் நுகரும் பருவமும், ஆற்றலும் பெற்றிலாத, மக்களைப் பெறுதற்குப் போதிய உடல் உரமும், உறுப்புகளின் வளர்ச்சியும் படைத்திராத நமதருமைப் பெண்மணிகளுக்கு, பொம்மைக் கல்யாணம் செய்வது போன்று மணமுடித்து, மணமகன்பால் விடுத்து வைக்கும் கொடிய வழக்கத்தை நமது நாட்டு மக்கள் கைக்கொண்டிருக்குமட்டும் இத்தகைய கொடிய, கோரமான கொலைகள் நடைபெற்றுத்தான் வருமென்பதை நமது மக்கள் உணரல் வேண்டும். சமயம் அழியும். சமூகம் அழியும் என்ற மூடக் கொள்கைகளினால் கட்டுப்பட்டு மக்கள் அறியாமை என்னும் இருளில் கிடந்துழலும் வரையில் இத்தகைய கொலைகள் நிகழ்ந்துதான் வரும். அந்தோ! இந்திய மக்களே! உமது நிலைக்கு இரங்குகின்றோம். சமய உண்மையை உணரார்கள்; சமூக வாழ்க்கை நிலையை அறியார்கள். மூடக் கொள்கைகளும், மூட நம்பிக்கையும் தான் இவர்கள் கண்ட உண்மைகள், விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவது போல், எல்லாமறிந்திருந்தும் இளஞ்சிறுமியர்களுக்கு மணஞ்செய்து, பின்னர் அவர்களுக்கு நேரும் கதியைக் கண்டு ஏன் அழுகிறீர்கள்? மாய்ம்மாலக் கண்ணீர் விடுகிறார்களென உலகம் உங்களைப் பழித்துரைக்காதா? இளம் வயதில் மண முடிப்பதினால் நேரும் துன்பங்களை நேரில் தாமாகவே அனுபவித்திருந்தும், தாய்மார்கள் இக்கொடிய வழக்கத்தை அறவே ஒழிக்க முன்வராதிருப்பது பெருங் குற்றமாகும். வேலியே பயிரை மேய்ந்தால் வேறு யார் துணை பயிருக்கு! பத்து மாதம் சுமந்து, பெற்று, சீராட்டித் தாலாட்டிப் பொன்னேபோல் போற்றி வளர்த்த பெண் செல்வங்களுக்குத் தாய்மார்களே எமனாக ஏற்பட்டுவிட்டால் அவரைக் காப்பாற்றுபவர் யாவர்?

ஆண்மக்கள்தான் உயர்ந்தவர்கள்; பெண் மக்கள் தாழ்ந்தவர்கள்; ஆண்மக்கள் தான் அறிவு நிறைந்தவர்; பெண்மக்கள் அறிவில்லாதவர் என்ற கீழான எண்ணமும் இக்கொடுஞ்செயல்களுக்கு காரணமாகும். இந்தத் தாழ்ந்த எண்ணம் நம்மவர்களை விட்டு அகலல் வேண்டும்; ஆண்மக்களும், பெண்மக்களும் சரி, நிகர், ஸமானம் என்ற எண்ணம் வளர்தல் வேண்டும். ஆண்மக்களைவிடப் பெண்மக்கள் எவ்வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்லர்; சமூக வாழ்க்கையில், குடும்ப வாழ்க்கையில் ஆண்மக்களுக்கு உள்ள உரிமைகள், பொறுப்பு பெண் மக்களுக்கும் உண்டு என்ற உயரிய, பரந்த, விரிந்த நோக்கம் நம்மவரிடை உதயமாதல் வேண்டும். அன்றே, அப்பொழுதே, அக்கணமே இத்தகைய கோரமான, மனதைப் பிளக்கும் கொடிய கொலைகள் நிகழா வண்ணம் செய்து விடலாம்.

தமிழ்நாட்டுத் தாய்மார்களே! தந்தைகளே!! உங்களுடைய பொறுப்பை உணர்ந்து நடவுங்கள். வங்காளத்தில்தான் இக்கொலையென்று நினையாதீர்கள். நமது கண்முன் நாடோறும் நடைபெறும் கொலைகளும், சித்திரவதைகளும் உங்களுக்குத் தோன்றவில்லையா? இக்கொடிய வழக்கத்தை ஒழிக்க முற்படாவிடில் பல்லாயிரக் கணக்கான இளஞ்சிறுமியர்களின் சாபங்கள் உங்களைச் சூழ்ந்து கொடிய வேதனைக்குள்ளாவீர்கள்! அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும்படை என்பதை உணருங்கள்.

இக்கொடிய வழக்கத்தைத் தொலைக்க அந்நிய ஆங்கில அரசாங்கத்தார் துணை புரியார்கள். நிச்சயம். இஃது அவருக்கு நன்மையையும், வருவாயையும் கொடுக்காதல்லவா? சமயம், சமயம் என்று வறிதே கூக்குரலிட்டு ஏமாற்றித்திரியும் அர்த்தமில் வைதிகர்களாகிய திரு.டி.அரங்காச்சாரியார்கள் போன்ற சட்ட சபை அங்கத்தினர்களின் உதவியை நாடாதீர்கள்! தெய்வத்திருக் கோயில்களில் தேவதாசிகள் இருந்தே ஆக வேண்டுமென்று வாய் கூசாது சட்ட சபையில் கூறும் படிற்றொழுக்கமுடைய அங்கத்தவர்கள் எதிர்பார்த்து ஏமாறாதீர்கள். இது உங்கள் கடமையல்லவா? நீங்களே சீர்திருத்தஞ் செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நமது நாடு சுய ஆட்சி பெற்று நடக்கும் காலையில் இக்கொடிய வழக்கங்கள் புதைக்கப்படும் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்
.

---------------- "குடிஅரசு", தலையங்கம் 7.6.1925

3 comments:

Gokul said...

தமிழோவியா,

நான் உங்கள் பக்கத்தை விரும்பி படிப்பவன், உண்மையில் பெரியார் தமிழ்நாட்டில் செய்த பணி மகத்தானது.

ஆனால், இந்த பால்ய விவாகம், எதனால் வந்தது என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்

1.சராசரி வாழ்நாள் மிகவும் குறைவாக இருந்த காலத்தில், இது நடைமுறைக்கு வந்தது, பஞ்சம், கொடும் தொற்று நோய்கள் இருந்த மத்திய கால கட்டத்தில் இது நடைமுறைக்கு வந்தது, அதை அப்படியே சாத்திரம் என்று ஆக்கிவிட்டனர்.அதாவது நாற்பது வயதிற்குள்ளேயே பத்து பிள்ளைகளை பெற்று பெண்கள் பதினோராவது பிரசவத்தில் மரணத்தினர்.

2. நமது பண்டைய மன்னர்களின் காம வெறி. மன்னர் தமது நாட்டில் எந்த அழகிய பெண்ணையும் விட்டு வைப்பதில்லை, இதில் இந்து மன்னன் என்றும் முஸ்லிம் பாட்ஷா என்றும் வித்தியாசம் இல்லை, கல்யாணம் ஆகாத பெண் என்றால் விட்டு விடாமல் தூக்கி கொண்டு சென்ற காலத்தில் ஏற்பட்ட வழக்கம் இது.பொதுவாக பெரும்பாலும் முஸ்லிம் சுல்தான்களினால் ஆளப்பட்டு வந்த இந்தியாவில் , இந்து அடிமை பெண்களே போர் வீரருக்கு விருந்தானர் , அதனை தவிர்க்கவே பால்ய விவாகம்.

3.படையெடுப்புக்கள் - இடைவிடாத போர்கள் நடந்த காலங்களில், நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பதே இருக்காது, பெண்ணிற்கு பாதுகாப்பு என்பதே கிடைக்காது.மத்திய காலகட்டங்களில் இது போன்றே இந்தியா முழுவதும் இருந்தது. அப்போது இந்த பழக்கம் ஏற்பட்டது. மேலும் போர் செய்வதற்கு பெரும் மனிதக்கூட்டம் தேவை, அதை உற்பத்தி செய்ய பெண்கள் அதிக அளவில் பிள்ளை பெற வேண்டும், எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம்.

19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் சட்டம் ஒழுங்கை வெள்ளையர்கள் கொண்டு வந்தனர் , பஞ்சம் இருந்தாலும் ஓரளவு வியாபாரிகள் நிம்மதியாக வியாபாரம் செய்தனர், புதிய விஞ்ஞான முன்னேற்றங்களால் மக்களின் ஆயுட்காலம் அதிகரித்தது. எனவே பால்ய விவாகம் தேவையில்லாமல் போயிற்று. ஆனால் , கல்வி அறிவு இல்லாத மக்கள் (பார்ப்பனர்களையும் சேர்த்து) இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதனால் அதனை தடுத்தனர். காலப்போக்கில் இந்த வழக்கம் அழிந்தது , பெரியார் இல்லாத வட இந்தியாவிலும் பெரும்பாலும் இன்று இந்த வழக்கம் இல்லை (இன்னும் சில இடங்களில் இருக்கிறது என்பதை நான் அறிவேன்).

எனவே இதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமே இல்லை, இந்த பால்ய விவாகம் ஒரு அரசியல் பிரச்சினை.

தமிழ் ஓவியா said...

//பெரியார் இல்லாத வட இந்தியாவிலும் பெரும்பாலும் இன்று இந்த வழக்கம் இல்லை //

மேயோ எழுதிய "இந்திய மாதா" என்னும் நூலைப் படிக்கவும். தெளிவு பிறக்கும்.

நானும் இது தொடர்பாக சில கட்டுரைகளை பதிவிடுகிறேன்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

தமிழ் ஓவியா said...

//இந்து மதத்திற்கும் சம்பந்தமே இல்லை, இந்த பால்ய விவாகம் ஒரு அரசியல் பிரச்சினை.//

கோகுல் இந்த வரியைப் படித்தபோது மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இது குறித்த பதிவுகளை விரைவில் பதிவு செய்கிரேன்.
இது முழுக்க முழுக்க மதப்பிரச்சினை.

பெரியார் இது குறித்து நிறைய எழுதியுள்ளார்

இந்து மதம் எங்கே போகிறது என்ற நூலில் அக்னிகோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியும் எழுதியுள்ளர் அதையும் பதிவு செய்ய முயற்சி செய்கிரேன்.
நன்றி.