Search This Blog

18.7.09

மதச்சார்பின்மைக்கு மாசு ஏற்படுத்தலாமா?
அரசு அலுவலகங்கள் வளாகங்களில் எந்தவித மதச் சின்னங்களும் கட்டப்படக் கூடாது என்று மாநில, மத்திய அரசுகளின் ஆணைகள் தெளிவாக இருக்கின்றன.

இதன் நோக்கம் அலுவலகங்கள் பொதுவானவை. அங்கு அரசுப் பணிகளுக்கு இடம் இருக்கவேண்டுமே தவிர, அதற்குச் சம்பந்தமில்லாத தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கோ, செயல்பாடுகளுக்கோ இடம் இருக்கக் கூடாது என்பதுதான்.

மத நம்பிக்கை இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். நம்பிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி பூஜை அறைகளை தங்கள் வீட்டுக்குள் அமைத்துக் கொள்ளலாம். அது ஒரு தனிப்பட்ட பிரச்சினையாகும்.

குளியலறையில் இருக்கும் உரிமை பொது இடத்தில் கிடையாது அல்லவா அதுபோன்றதுதான் இதுவும்.

ஆனால், அரசு ஆணைகளுக்கு விரோதமாகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமாகவும் மதச் சின்னங்கள், கோயில்கள் அரசு அலுவலக வளாகங்களுக்குள் கட்டப்படுவது அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் தலையிடவேண்டிய அவசியம் ஏற்பட்டு வருகிறது.

அரசு ஆணைகளை அரசு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.

சட்டப்படி நடக்கவேண்டிய அதிகாரிகளிடம், நீங்கள் சட்டப்படி நடக்கவில்லை என்று சுட்டிக்காட்டவேண்டிய நிலை உருவாவது விரும்பத்தக்கதும் அல்ல ஆரோக்கியமானதும் அல்ல.

தஞ்சை மருத்துவக் கல்லூரியிலே கோயில் கட்டும் பணி, அதுகுறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளில் மாவட்ட திராவிடர் கழகம் ஈடுபடவேண்டியிருந்தது. இப்பொழுது திருச்சியில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த கோயில் எழுப்பும் வேலை தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் அதில் தலையிட்டுள்ளனர்.

வேறு பல ஊர்களிலும் இந்த நிலை நிகழ்ந்த வண்ணமே உள்ளது. சென்னைப் பெருநகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது கோயில்களுக்கு மட்டும் விதிவிலக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலியே பயிரை மேய்வதுபோல, மாநகராட்சி அதிகாரிகளே அலுவலக வளாகத்தில் கோயில் எழுப்புகின்றனர். எடுத்துக்காட்டு, சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தின் பின்னால் குடிநீர் மற்றும் கழிவு நீர் வெளியேற்றும் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கோயிலைப் பிரம்மாண்டமாக எழுப்பியுள்ளனர்.

இந்தக் கோயில்களை தங்கள் சொந்த பணத்தைக் கொண்டு கட்டுகின்றனரா அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் வசூல் செய்கின்றனரா அப்படி வசூல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டா? அதன் வரவு, செலவு என்ன என்பது அடுத்த கேள்வி.

மருத்துவமனை, பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் இப்படி கோயில்களைக் கட்ட ஆரம்பித்தால், வளர்ச்சி அடையவேண்டிய, விரிவாக்கம் செய்யப்படவேண்டிய அந்தப் பகுதிகள் குறுக்கப்படும் ஒரு நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டாமா?

குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த கோயிலைக் கட்டினால், அடுத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தூண்டப்பட்டு, அவர்களும் தங்களின் வழிபாட்டுச் சின்னத்தை உருவாக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அமைதிப்பூங்காவாக இருக்கிறது. மத நம்பிக்கையாளர்கள், நம்பிக்கையற்றவர்கள் சுமூகமாகப் பழகும் ஒரு நிலையை தந்தை பெரியார் அவர்களும், அவர்கள் கண்ட இயக்கமும் உருவாக்கி வைத்துள்ளது.

இந்தச் சூழலைக் கெடுக்கும் நோக்கம் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு உண்டு. அரசு அலுவலக வளாகங்களில் கோயில் கட்டும் பணியின் பின்னணியில் இவர்கள் இருக்கவே செய்கின்றனர்.

ஏதாவது பிரச்சினையை உருவாக்கி, அதனைக் கலவரமாக மாற்ற முடியாதா என்று நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுள்ள நரிகளுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது.

சென்னையைப் பொறுத்தவரை மேயர் வேலூர் நாராயணன் அவர்களின் காலத்தில் நடைபாதைக் கோயில்கள் இடிக்கப்பட்டு, மக்கள் நடந்து செல்லும் பாதைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன அதனால் பாராட்டவும்பட்டார்.

பல வகைகளிலும் வெகுநேர்த்தியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் வணக்கத்திற்குரிய சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் அவர்கள் இதிலும் கவனம் செலுத்தி, பொதுமக்களுக்குத் தொல்லை தரும் நடைபாதைக் கோயில்களை அப்புறப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தனிச் சுற்றறிக்கைகளை அனுப்பி மதச்சார்பற்ற தன்மையைப் பேண ஆவன செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.


---------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம் 17-7-2009

0 comments: