Search This Blog

30.7.09

ஜாதியம், தேசியம், ஆத்மீகம், மூடநம்பிக்கை, பார்ப்பனியம் - பலம் பொருந்திய எதிரிகள்




புதிய போரைத் தொடங்கியது எது?

கண்களை உருட்டியும், தலைகளை ஆட்டியும், மூக்கின் மீது விரலை வைத்தும், முதுமையில் மோகங் கொண்டோர் முறைத்துப் பார்க்குமளவு தீவிரவாதத்தைப் பேசியவன் சுயமரியாதைக்காரனே!


"நாட்டின் அடிமைத்தனத்திற்குக் காரணம் அதோ உள்ள வெள்ளையனும், அவனிடம் உள்ள துப்பாக்கியும் வெடி குண்டும்" என்று தேசபக்தர்கள் கூறியபோது "அதுசரி தேசியத் தோழனே, இதோ பார் உள்நாட்டிலே உன்னை வாட்டி வதைத்துப் பிரித்துக் கெடுக்கும் பார்ப்பனீயமும் அதன் ஆயுதங்களாகிய கிழிந்த பஞ்சாங்கமும், உலர்ந்த தர்ப்பையும்" என்று எடுத்துக் காட்டியதும் சுயமரியாதை இயக்கமே

ஆத்மிகம், தேசியம் இரண்டுமே பார்ப்பனியத்திற்கு இன்று அரணாக விளங்குகின்றன என்ற உண்மையையும், நாட்டுப்பற்றுக் கொண்டு நம்மவர் உழைத்த உழைப்பின் உறுபயன்யாவும் விழலுக்கிறைத்த நீராகியதையும் எடுத்துக்காட்டிப் புதிய போராட்டத்தைத் தொடங்கியதும் சுயமரியாதை இயக்கமேயாகும்.




புராணப் புரட்டை விளக்கியது எது?



திருவாங்கூர் கோயிலைத் திறக்கச் செய்ததும், அச்சமஸ்தானத்தில் தீண்டாதாருக்குத் தெருவில் நடக்கவும் உரிமை இல்லாதிருந்த கோர நிலைமையை மாற்றியதும், நேற்று மதுரை அழகர் கோயில் ஆகிய இடங்களில் ஆதிதிராவிடர் உள்ளே செல்ல முடிந்ததும், இவைகள் இன்று சர்வ சாதாரணமாக விஷயமாக மக்களால் கருதப்படக் கூடிய அளவு மக்கள் மனத்தைத் தீவிரத்தில் பக்குவப்படுத்தியதும் எது?



வேதம், ஆகமம், ஸ்மிருதி என்றால் கேட்டதும் கிடுகிடுவென நடுங்கி எதைச் செய்தால், எந்த வேதப்படி எந்த சாத்திரப்படி குற்றமாகுமோ என மக்கள் பயந்து பதைபதைத்து வாழ்ந்து வந்த நிலை மாறி உலகப் போக்குக்கு ஒத்ததும், அறிவுக்குப் பொருத்தமானதும் பகுத்தறிவுக்கு ஏற்றதுமான காரியங்களே நிகழ வேண்டும். எமக்கு அந்த நாளைய ஆகம வேதஸ்மிருதி புராண ஆபாசங்களைப் பற்றி இலட்சியமில்லை என்று பெரும்பாலோர் கூறும் நிலைமையை உண்டாக்கியது எது?


ஆகம விதிப்படி கோயில்கள் நடத்தப்பட வேண்டுமானால் அங்கு ஆடுவதற்கு என ஒரு கூட்டம் இருக்க வேண்டும்; அக்கூடடம் விபசாரத்தால் பிழைக்க வேண்டும் என்று இருந்த நிலைமை மாறி, தாசி என்ற பேச்சுக்கே இடமின்றி அவர்களை மறையச் செய்து வருவது எது?


சாதி மதத்தைச் சாய்த்தது எது?


அந்த ஸ்மிருதி இப்படிச் சொல்கிறது, இந்த சுருதி அப்படிச் சொல்கிறது என்ற முறையைக் கொண்டே நடந்து வந்த பாலிய விவாகக் கொடுமை மாறி சம்மத வயதுச் சட்டத்தை நாட்டிலே உண்டாக்கி அதன்படி மக்கள் நடக்கும்படி செய்து வைத்தது எது?



ஜாதி பேதமெனும் 'சைத்தான்' மக்களை ஆட்டி அடக்கி ஒடுக்கி இருந்த நிலைமாறி, பார்த்தால் தோஷம், தொட்டால் பாவம் என்ற நிலை மாறி பெரும்பாலோருக்குள் ஒருவருக்கொருவர் பழகவும் உண்ணவுமேயன்றி, பெண் கொடுக்கவும் வாங்கவுமான நிலை ஏற்பட்டதும், அதுவும் சர்வ சாதாரணமானதாக இன்று கருதப்படுவதுமான நிலையைச் செய்தது எது?



அரசாங்க ஆதிக்கம், உத்தியோக வர்க்கம் ஆகியவற்றால் தவிர, மற்றைய பொது வாழ்க்கையிலே, உயர் சாதிக்காரனென்பான், தாழ்ந்த சாதிக்காரன் என்பானுக்குக் கை எடுக்கச் செய்தது எது?



எண்ணற்ற புரட்சியை ஏற்படச் செய்தது எது?



எந்த ஒரு சடங்கும், பார்ப்பனனின்றி முடியாது; பார்ப்பனர் வந்தால் தான் மதிப்பு, கவுரவம் என்று இருந்த நிலை மாறி, இன்று எந்த சடங்குக்கும் பார்ப்பனரை வரவழைப்பதென்பது அவமானம், நமது சுயமரியாதைக்குக் கேடு என்று கருதும்படி நினைக்க வைத்தது எது? இவ்வளவுதானா? தாழ்த்தப்பட்ட இழிகுலமென்று கருதப்பட்ட மக்களை மேயராக்கி மந்திரியாக்கி மகிமையளித்தது எது? இவ்வளவும் இன்னமும் இதுபோன்ற எண்ணற்ற புரட்சிகரமானவைகளையும் நாட்டிலே தோற்றுவித்தது சுயமரியாதை இயக்கமே என்பதை யாரே மறுக்கவல்லார்? மறுப்பவர் யாராவது இருந்தால் இந்த 15-வருஷமாக சு.ம. இயக்கம் செய்து வந்த பிரசாரத்தையும் மாநாடுகளில் செய்த தீர்மானங்களையும் கண்டு தெளியும்படி வேண்டிக் கொள்கிறேன்.


ஜாதியம், தேசியம், ஆத்மீகம், மூடநம்பிக்கை, பார்ப்பனியம் ஆகிய பலப்பல பயங்கரமான பலம் பொருந்திய எதிரிகளுடன் மல்யுத்தம் செய்து, அவைகளைக் கீழே வீழ்த்தியுள்ளன. 1926-29 காலங்களில், சுயமரியாதை இயக்கத்தைக் கண்டு மிரண்டவர்களும் கூட இன்று தமது வாழ்க்கையிலேயே சிறிதாவது சுயமரியாதை மிளிர வேண்டும் என்னும் கருத்துக் கொண்டு காரியங்களை நடத்துகிறார்கள்.


அன்றும் - இன்றும் - நாம்


அன்று நாம் இவ்வளவு அமளியில் ஈடுபட்டிருந்த காலத்தில், நமக்குப் போதிய பணபலமோ, சர்க்கார் உதவியோ, அறிவாளிகள், பண்டிதர்கள், செல்வர்கள், மிராசுதாரர்கள், முக்யஸ்தர்கள் எனப்படுவோரின் உதவியோ இருந்ததில்லை. இவ்வளவு காரியங்களையும் நாம் தனித்து நின்று அரசியலைக் கைப்பற்றாமலே, அடக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டே பெருத்த கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொண்டே நடத்தி இருக்கையில் இன்று சகல தமிழர்களும், பண்டிதர்களும், அறிவாளிகள், பிரமுகர்கள், செல்வர்கள், அரசியல் தலைவர்கள், மதக்காப்பாளர்கன் எனப்படும் பலதிறப்பட்ட தமிழரும் ஒன்றுகூடி இருக்கையில், முன்னம் சாதித்ததை விட அதிகமாக, முன்னைய வெற்றிகளை விட அதிகமான கீர்த்தியுள்ள வெற்றிகளைப் பெற முடியுமன்றோ!


நமக்குள் ஒற்றுமையும், பொறாமையற்ற கூட்டுவாழ்க்கை நடத்தும் திறனும், கட்டுப்பாடும் சுயநலமற்ற தன்மையும், பதவி மீது வேட்கையில்லா நிலையும் ஏற்பட்டு விடுமேயானால் நாம் வெற்றி காண்பது மாத்திரமல்லாமல் இந்திய நாட்டிற்கே ஒரு மாபெரும் புரட்சிக்கு வழிகாட்டியாக ஆகிவிடலாம் என்பது உறுதி.




------------------"குடி அரசு" 16-07-1939 அருப்புக் கோட்டையில் பெரியார் பேருரை

0 comments: