Search This Blog

24.7.09

கடவுள் பக்தி இதைத்தான் கற்றுக்கொடுத்ததா?
நிலா நிலா ஓடிவா என்பது அந்தக்காலம் நிலவில் மனிதன் காலடி வைத்தது இந்தக்காலம்
செருநல்லூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை


நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் செருநல்லூரில் 5.7.2009 அன்று அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை வருமாறு:

இந்த கிராமத்திற்கு வருகிற நேரத்திலே எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாலே என்னுடைய நினைவு செல்கிறது. இங்கே நம்முடைய பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, இதே இடத்திற்குத் தந்தை பெரியார் அவர்கள் வந்து அறிவுரையாற்றியிருக்கிறார்கள் இராமு அவர்களுடைய அரிய முயற்சியினாலே. இராமு அவர்கள் நர்த்தன-மங்கலம் என்ற கிராமத்திலே தான் இருந்தார்.

அவர் இயக்கத்தினு-டைய பாடகராக, கலைக்குழுவைச் சார்ந்தவராக அவர்கள் சிறப்பாக தன்னுடைய பணியைச் செய்தவர்கள்.

அந்தக் காலத்தில் கிடைத்த அருஞ்சொத்து

நல்ல குரல்வளம் யாரையும் ஈர்க்கக்கூடிய ஒரு சிறப்பான ஈர்ப்புத் தன்மை, எல்லாவற்-றையும் விட அசைக்க முடியாத கொள்கையின் பிடிப்பு இவைகளை எல்லாம் கொண்ட ஒரு எளிய தோழர். ஒரு சாதாரண ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலே பிறந்து மிகப்பெரிய படிப்பு பட்டங்களை இவைகள் எல்லாம் இல்லை என்று சொன்னாலும் சுயமரியாதைப் பல்கலைக் கழகத்திலே தேர்ந்த ஒருவர் என்ற பெருமைக்குரிய ஒருவராக ராமு அவர்கள் நல்ல பிரச்சாரகராக கலை நிகழ்ச்சி நடத்தக் கூடியவராக இருந்தார். இயக்கத்திற்கு அந்தக் காலத்திலே கிடைத்த அருஞ்சொத்தாகத் திகழ்ந்தார். அவர்களுடைய செல்வங்கள் இன்றைக்கு அதே பணியை செய்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு முழுக் காரணம் இராமு அவர்களுடைய வாழ்க்கைத் துணைவியாக இருக்கின்ற அன்பு சகோதரியார் தனலெட்சுமி அவர்கள் அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். இங்கே பெரியார்செல்வி பேசும் பொழுது சொன்னார்கள். அவர்கள் எவ்வளவு உரிமையோடு, தெளிவோடு இருக்கக் கூடியவர்கள் என்பதைக் காணலாம்.

நம்முடைய இயக்கத்தில் இந்த பகுதியில் இருக்கின்ற பெருமையே அப்படி பிள்ளைகளை ஆளாக்கி அவர்கள் வளர்ந்த பிற்பாடு கூட, பல நேரங்களிலே நம்முடைய பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல, தமிழர்கள் நன்றியுணர்ச்சியோடு நடந்து கொண்டால் அது அதிசயமானது. நன்றி காட்டாதது வழமையானது.

தமிழர்கள் நன்றி உணர்ச்சி காட்டுவதென்பது

நன்றியைப் பற்றி சிந்திக்காதது, இயல்பானது தமிழனைப் பொறுத்தவரையிலே. ஆனால் தமிழர்கள் அந்த நன்றி உணர்ச்சியைக் காட்டுவது என்பது வியக்கத்தக்கது. இயல்பாக ஒன்றாக இருப்பது நம்முடைய நாட்டிலே வியக்கத் தக்க ஒன்றாக இருக்கிறது.

காரணம் என்னவென்று சொன்னால், நம்முடைய நாட்டிலே கடவுள் பக்திக்குக் குறைவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் கோவில் திரும்பிய பக்கமெல்லாம் கும்பாபிஷேகம் இப்படி எல்லா இடத்திலேயும் இருக்கிறது.

தினமும் நடந்து கொண்டிருக்கிறது. தினமும் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. கோயிலுக்கு, திருவிழாவுக்குப் போகிறவர்கள் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதிலும் பஞ்சமில்லை. இருந்தாலும் அந்த நம்பிக்கைக்குப் பஞ்சமில்லாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

கடவுள் பக்தி இதைத்தான் கற்றுக்கொடுத்ததா?

ஆனால், இவ்வளவு இருக்கிற நாட்டில் ஒழுக்கம் இருக்கிறதா? நாணயம் இருக்கிறதா? நன்றி உணர்ச்சி இருக்கிறதா? என்று சொன்னால் கடவுள் பக்தி இவைகளைக் கற்றுத் தரவில்லை. மாறாக தந்தை பெரியார் கொள்கை தான் மனிதனை மனிதனாக ஆக்குவதற்குப் பயன்பட்டிருக்கிறது.

இல்லையானால் நம்முடைய தாய்மார்கள் இப்படிப் படித்தவர்களாக இருக்க முடியுமா? ஒரு எளிய குடும்பத்திலே பிறந்த ஒரு பெண்.

இந்த கொள்கையை ஏற்றவர்கள் வீழ்ந்ததில்லை

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலே செவிலியர் துறையிலே ஓர் ஆசிரியராக வளரக்கூடிய அளவிற்கு வளர்த்திருக்கிறார் என்று சொன்னால் இந்த இயக்கம் தந்தை பெரியார் அவர்களுடைய அருட்கொடை அந்தக் கொள்கையை அவர்கள் ஏற்ற காரணத்தால் அந்தப் பிள்ளைகள் எல்லாம் இன்றைக்கு வளர்ந்திருக்கிறார்கள். இந்தக் கொள்கையை ஏற்றவர்கள் யாரும் வீழ்ந்தது கிடையாது. வீழ்ந்து போக முடியாது. ஏனென்றால் இந்த கொள்கை என்பது ஒரு வாழ்நாள் தத்துவம் கொண்டது. சிறந்த வாழ்வியல் சுயமரியாதை வாழ்வு. தந்தை பெரியார் அவர்களுக்கு எதற்காக இங்கே சிலை? எங்கு பார்த்தாலும் சிலைகளை வைத்தார்கள். இந்தப் பகுதிகள் எல்லாம் ஒரு காலத்திலே புத்தக் கொள்கைகள் பரவிய பகுதிகள் அப்படி ஒரு பகுதிதான் நாகர்கோயில்.

நாகைப்பட்டினம். நாகர்பட்டினம். நாகர்கள் என்றாலும் திராவிடர்கள் புத்தக் கொள்கையை பின்பற்றிய கடவுள் மறுப்பாளர்கள். தமிழ்நாடு முழுக்க புத்தக் கொள்கையை, பகுத்தறிவுக் கொள்கையை பரப்பி பல இடங்களிலே இருந்தவர்கள்.

புத்தமங்கலம் தெரியுமா?

இங்கே கூட பக்கத்திலே புத்தமங்கலம் என்று ஓர் ஊர் இருப்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால் அங்கேயிருந்த ஒரு சிலையை பார்ப்பான் எவ்வளவு பெரிய சூழ்ச்சியை செய்தான் என்பதற்கு அடையாளம். அந்தச் சிலையைப் புரட்டிப் போட்டு விட்டு, இங்கே எச்சில் துப்பிவிட்டுப்போனால் எல்லா காரியங்களும் நல்லவிதமாக நடக்கும் என்று சொல்லிக்கொடுத்து விட்டான். நம்முடைய மக்களின் மூடநம்பிக்கையைப் பயன்படுத்திக்கொண்டான்.

புத்தர் சிலை மீது எச்சில் துப்புகிற அளவுக்கு பார்ப்பனர்கள் செய்து விட்டார்கள். இந்த மாதிரி இந்த இடங்களைச் சுற்றிச் சுற்றி வந்தால் பார்க்கலாம். புத்தக் கோயில்கள் பரவிய இடம்.

வரலாற்றுக்குறிப்பை புரட்டி விட்டார்கள்

அங்கு சிலைகள் எல்லாம் வைத்ததற்குக் காரணமே வரலாற்றுக் குறிப்புகள். அதை அப்படியே நம்முடைய நாட்டில் புரட்டிவிட்டார்கள். அதை எல்லாம் நமக்கு மறுபடியும் எடுத்துச்சொல்லி நமக்குப் பகுத்தறிவை எடுத்துச் சொன்ன ஒரு பகலவன். ஒரு பேராசான் இருக்கிறார் என்றால், அவர்தான் இதோ சிலையாக நின்று கொண்டிருக்கின்றாரே அந்த அறிவுஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

நம்முடைய விழிகள் திறந்த பிற்பாடுதான், கண்மூடி வழக்கம் என்று வள்ளலார் சொன்னார். எங்கு பார்த்தாலும் மூடத்தனம். தொட்டால் மூடநம்பிக்கை இன்னமும் படிப்பறிவுக்கும், பகுத்-தறிவிற்கும் நமது நாட்டிலே சம்பந்தமே இல்லை. நிரம்பப் படித்தவன் எல்லாம் முட்டாளாக இருக்கின்றான்.

இராணுவ டேங்கிற்கு எலுமிச்சம் பழம்

இராணுவ டேங்குகளை நமது ஆவடி தொழிற்சாலையில் உற்பத்தி செய்கின்றனர். அந்த நவீன டாங்குகளை வெளிநாட்டிற்கு நமது நாடு ஏற்றுமதி செய்கிறது. இந்த டேங்கினுடைய வேலை என்னவென்றால் எதிரியைக் காலி செய்ய வேண்டும். அதுதான் டேங்க் படையினுடைய வேலை. நமது நாட்டில் சென்னைக்குப் பக்கத்தில் ஆவடி தொழிற்சாலை இருக்கிறது. அந்த ஆவடியில் எல்லாம் பெரிய பெரிய அதிகாரிகள் இருக்கிறார்கள். அங்கு வந்திருக்கிறவர்கள் எல்லாம் பெரிய அளவுக்குப் படித்தவர்கள்.

டேங்கிற்குக் கீழே எலுமிச்சம் பழம்


அந்த டேங்கை ஏற்றுமதி செய்யும்பொழுது முதல் டேங்கை உருட்டுகின்றார்கள். துவக்க விழா என்ற பெயரில். நாம் இங்கே சிலையைத் திறந்தமாதிரி அங்கே டேங்க் ஏற்றுமதி துவக்கவிழா செய்யும்பொழுது அந்த இராணுவ டேங்க் இரும்பு சங்கிலி பற்சக்கரத்தின் கீழே எலுமிச்சம் பழத்தை வைக்கிறார்கள்.

நம்மாள் புது கார் வாங்கினால் டயருக்கு அடியில் எலுமிச்சை பழத்தை வைக்கிறார்கள். அப்படி என்றால் பிரேக் இல்லாமல் போகலாமா? எலுமிச்சம் பழம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுமா? நம்மக்களுடைய மூடத்தனம். இது சாதாரணம். சாதாரண பாமர மகனுடைய ஒரு எண்ணம்.

அந்த டேங்க்கே கொல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம். எதிரி சரணாகதி அடைய வேண்டும் என்பது தான் முக்கியம்.

அதற்கே எலுமிச்சம் பழம் வைத்தான் என்றால் இவனுடைய அறிவு எவ்வளவு ரிவெர்ஸ் கியரில் இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பின்னோக்கி இருக்கிறது என்பதைத் தெளிவாகப் பார்த்துக்கொள்ளலாம்.

இன்னும் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு நமக்கு வளர்ந்திருந்தால் உலகத்தில் எங்கோ நாம் போயிருப்போம். எத்தனையோ பெண்களுக்கு நமது நாட்டில் இன்னமும் 40 வயது 45 வயதானாலும் திருமணமாகவில்லை.

செவ்வாய் தோஷம் செவ்வாய் கிரகம்

ஏனய்யா திருமணம் ஆகவில்லை என்று கேட்டால், செவ்வாய் தோஷம் என்று சொல்வான். அதனாலே திருமணம் ஆகவில்லை. அதனால்தான் என்னுடைய பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறவனாகப் பார்க்க வேண்டும் என்று சொல்கின்றான். செவ்வாய்க் கோள் செவ்வாய் கிரகம். அந்த செவ்வாய் கிரகத்தில் மீதேன் என்ற வாயுகேஸ் இருக்கிறது. அது காற்றுள்ள பகுதி அது அந்த கோள். அது சிகப்பாக இருக்கும். அங்கு உயிரினம் இருக்கிறது. வாழுகிறது என்பதைக் கண்டு பிடித்திருக்கின்றார்கள். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என்பதையும் கண்டு பிடித்திருக்கின்றான். அடுத்து மனிதன் செவ்வாய் கிரகத்தில்தான் குடியேறப் போகிறான்.

அவ்வளவு கண்டுபிடித்த நாட்டிலே இன்றைக்கு நிலைமை என்ன என்று சொன்னால் அங்கே இருக்கிறவன் முன்னேறிக் கொண்டிருக்கிறான். நம்மாள் செவ்வாய் தோஷம் என்ற மூடநம்பிக்கையைப் பற்றி இங்கே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

இங்கே பெண் திருமணமாகாமல் உட்கார்ந்திருக்கிறது. செவ்வாய் தோஷம் என்கிறான். செவ்வாய் கிரகத்திற்கே போய் மனிதன் இறங்குகிறான். அதே மாதிரி நம்மூரைச் சார்ந்த மயில்சாமி அண்ணாதுரை அவர்களைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.

நிலவில் பாட்டி பாக்கு இடிக்கிறாராம்!

பழங்காலத்தில் நம்முடைய தாய்மார்கள் எல்லாம் குழந்தையை இடுப்பிலே வைத்துக்கொண்டு நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா நிலவில் உட்கார்ந்து கொண்டு ஒரு பாட்டி, பாக்கு இடிக்கிறாள் என்று இப்படி கதை எல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால், இன்றைக்கு நிலா வராது. அதற்குப் பதிலாக நிலவுக்கு நாம்தான் போக வேண்டும் என்று சொல்லி இன்றைக்கு மனிதன் நிலவில் காலடி வைத்துவிட்டான்.

இந்தியாவே விண்வெளிக் கலத்தை அனுப்புகிறது. நாடு இன்றைக்கு இவ்வளவு வளர்ந்திருக்கிறது. ஆனாலும் நம்மாள் என்ன செய்கிறான்? அங்காங்கே ஒரு நட்டுக் கல்லை முட்டுக்கல்லை நிறுத்தி ஒவ்வொரு பஸ்கி, தண்டால், தோப்புக்கரணம் போட்டுக்கொண்டு வருகின்றான்.

அடுத்து மூன்று கிரகங்கள்

அது மட்டுமல்ல சூரியன், சந்திரன், பூமி இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வந்தால் நிழல் ஏற்படும். இதற்குப் பெயர்தான் கிரகணம் என்று பெயர். இதைப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கின்றான். நாம் எட்டாவதில் படிக்கிறோம். பத்தாவதில் படிக்கின்றோம். அறிவியலில் படிக்கின்றோம். விஞ்ஞானம் படிக்கின்றோம். ஆனால் இப்பொழுது என்ன சொல்லுகிறான் தெரியுங்களா? இங்கே அடுத்து மூன்று கிரகணம் வரப்போகிறது. மூன்றும் அடுத்தடுத்து வரப்போகிறது.

எனவே இந்த உலகமே அழியப்போகிறது. நாசமாகப் போகப் போகிறது என்கிறான். இவன் நடுங்கிக்கொண்டிருக்கின்றான்.

மூடத்தனம், முட்டாள்தனம் இவை அத்தனையிலும் இருந்து இவ்வளவிலும் விடுபட வேண்டுமென்றால் அதற்காகத்தான் தந்தை பெரியார் சிலை இங்கே நிறுவப்பட்டிருக்கின்றது. அதைப் பார்த்தாலே நமக்கு ஒரு துணிவு வரும்.

பெரிய பதவியில் இருப்பவருக்கே அறியாமை

மூடத்தனத்தினாலே உன் அறிவை இழக்காதே. தன்னம்பிக்கையைப் பயன்படுத்து என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறோம். இன்றைக்கு நம்மிடம் இருக்கின்ற பெரிய நோயே அறியாமைதான். வேறொன்றுமில்லை.

படித்தாலும் அந்த அறியாமை நோய் போய் விடுவதில்லை. படித்தவனுக்கு ரொம்ப அதிகமான அறியாமையிருக்கிறது. பெரிய பதவியில் இருப்பவனுக்கும் அறியாமை இருக்கிறது.

ஜோசியம் பார்த்துவிட்டுப் போகிறான். நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் ரொம்ப பேர் தேர்தலில் நின்றார்கள்.

இங்கே நான் வந்தபிறகுதான் வீட்டைத் திறந்து வைக்க வேண்டும் என்றார்கள். நேராகப் போனோம் திறந்து வைத்துவிட்டு வீட்டிற்குள்ளே போனோம். யார்? இராமு வீட்டிலே. மற்றவன் எல்லாம் என்ன சொல்லுவான்?

இப்பொழுது புதிதாக ஒன்றைக் கண்டு பிடித்திருக்கின்றார்கள். வாஸ்து சாஸ்திரம் 20 வருடத்திற்கு முன்னாலே வாஸ்து சாஸ்திரம் என்றால் என்னவென்றே தெரியாது.

கழிப்பறையில் ஏது வாஸ்து?

அந்த வாஸ்து சாஸ்திரத்தில் கழிப்பறைக்கே இடம் கிடையாது. மனிதனுக்கு கழிப்பறையே இல்லாத ஒரு வீடு இருந்தால் எப்படியிருக்கும்? நீங்கள் நன்றாக சிந்தித்துப் பாருங்கள். ஆனால் முட்டாள்தனமாக என்ன சொல்லுகின்றான் வாஸ்து சாஸ்திரம் பாருங்கள். சரியாகப் போய்விடும் என்று சொல்லுகின்றான்.

ஒன்றுமில்லையே. நம்முடைய இடத்தில் பார்த்தீர்களேயானால் பூசணிக்காயைத் தொங்கவிட்டு, அதிலே கரும்புள்ளி, செம்புள்ளியைக் குத்திய அந்தப் பூசணிக்காயைப் போட்டு உடைத்து. இதை எல்லாம் செய்வான்.

எந்தக் கடவுளும் காப்பாற்றவில்லையே

சாலையின் நடுவில் பூசணிக்காயை உடைக்கிறான். ஸ்கூட்டரில் போகிறவன் பூசணிக்கா-யினால் வழுக்கி விழுந்து அடிபட்டு ஆள் சாகிறான். இது எவ்வளவு பெரிய மூடத்தனம்? கோவிலுக்குப் போய் அங்கே தரிசித்துவிட்டு வருகிறேன், இங்கே தரிசித்து விட்டு வருகிறேன் என்று போகிறானே.

கடவுள் கருணையே வடிவானவன் என்று சொன்னால், அந்தக் கடவுள் என்ன பண்ணணும்? நம்மைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறான். ஏதோ வண்டியை ஓட்டிக்கொண்டு வரும்பொழுது தூங்கிவிட்டார். நாம் போய் எழுப்பி விடுவோம். சரியான பாதையில் செல்ல ஏற்பாடு செய்வோம் என்று செய்திருக்கிறாரா? கடவுளுக்கு அங்கே சர்வசக்தி இருந்தது என்று சொன்னால் அவன் தாராளமாக இதைச் செய்திருப்பான். அப்படி இல்லையே! கடவுள் தான் இப்பொழுது தீவிரவாதத்திற்குப் பயந்து கொண்டிருக்கின்றானே!

ஏ.கே.47 இல்லாத கோயில் ஏது?

எல்லா கோவில்களிலும் ஏ.கே.47 கொடுத்து அதிரடிப்படையை நிறுத்தியிருக்கிறார்கள். ஏனென்றால் எப்பொழுது தீவிரவாதி வருவானோ? எந்த நேரத்தில் வருவானோ? என்று கடவுளுக்கே அச்சம் எப்பொழுது வெடிகுண்டு வெடிக்குமோ என்று பயப்படுகிறார்கள்.

எல்லாம் அவன் செயல் என்றால் இந்தத் தீவிரவாதிகளினுடைய செயல் எவன் செயல்? நம்மாள் முட்டாள்தனமாக எதை எடுத்தாலும் எல்லாம் அவன் செயல் என்று சொல்லிக்கொண்டு உட்காந்திருந்தால் எந்த வேலை நடக்கும்?

-------------------------தொடரும் ..."விடுதலை" 23-7-2009

5 comments:

Radhakrishnan said...

மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் ஒன்று, இங்கேக் குறிப்பிடப்பட்ட பல விசயங்கள் மனிதர்கள் அறியாமல் இல்லை. எல்லாம் அறிந்தே இருக்கிறார்கள்.

'மது அருந்துவது உடல்நலத்துக்குக் கேடு' எனத் தெரிந்தும் மது அருந்துபவர் மது அருந்துவதை எவரும் நிறுத்துவதில்லை. அதை எதிர்த்து எவரும் பக்கம் பக்கமாக பேசுவதும் இல்லை, எழுதுவதும் இல்லை.

கடவுள் விசயத்தில் விழிப்புணர்வுக்காகச் சொல்லப்படும் விசயங்கள் 'வெறுப்புணர்வை' வளர்த்து வருவதைக் கவனித்தது உண்டா? 'பெரிசா சொல்ல வந்துட்டான் பாரு' என்கிற சொல்லடி பட்டதுண்டா?

கடவுளை எதிர்க்கிறோம் எனச் சொல்லப்படும் விசயங்கள் குறிப்பாக மனிதர்களை எதிர்ப்பதாகவே அமைந்து விடுவதைக் கவனித்தீர்களா? இங்கே மனிதர்களின் மனம்தனை சற்று பாதிப்பு அடையச் செய்கிறது. 'யார் இவன் நமக்குச் சொல்வது' என்கிற மனப்பான்மையே பலரிடம் மிஞ்சுகிறது.

அனைத்தும் மிகவும் இரசிக்கும்படியாக இருந்தது. செவ்வாயில் குடியிருப்பது என்பதெல்லாம் அத்தனை சுலபமில்லை. மீதேன் அதிகமிருந்தால் அதைச் சுவாசித்து வாழ இயற்கைசு சூழலை ஏற்று வாழும் உயிரினம் வந்தால் மட்டுமே முடியும்.

மேலும் பல விசயங்களை நேரடியாகச் சொல்லாமல் அவர்களுக்கு அன்றைய நாளிலே தெரிந்த அறிவினை வைத்துச் சொல்லிவிட்டார்கள், அவ்வளவே. இப்பொழுது விஞ்ஞானம் முன்னேறிவிட்டது அதனால் பல விசயங்கள் நமக்குப் புலப்படுகிறது இல்லையெனில் நாமும் அப்படியேதான் இருந்திருப்போம். மக்களிடம் அறிவியலைக் கொண்டு சேர்க்கும் வழி அறிந்தால் தானாக கடவுள் விலகிக் கொள்வார். ஆனால் என்ன ஒரு பிரச்சினை, உங்களுக்கு எழுத எதுவும் மிஞ்சாது.

மிக்க நன்றி.

Chittoor Murugesan said...

தெரியாம கேக்கறேங்க ..வீரமணி சார் என்னதான் பண்றார் ? நான் படிக்ககூடிய அச்சு ஊடகங்கள்ள அவரை பத்தி ஒன்ன‌த்தயும் காணோமே !

தமிழ் ஓவியா said...

//வீரமணி சார் என்னதான் பண்றார் ? நான் படிக்ககூடிய அச்சு ஊடகங்கள்ள அவரை பத்தி ஒன்ன‌த்தயும் காணோமே !//

எப்பவுமே பகுத்தறிவுச் செய்திகளை இருட்டடிப்பு செய்வது தானே பத்திரிக்கைகளின் வேலை.

Unknown said...

Oviya

just because you are a black shirt dravidian tamil swine should you behave like a mean son of a bitch?Try to think logically you swine.

Kiss said...

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி


அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.

இப்படிக்கு,
http://thamizhovia.blogspot.com/
http://ayyyyya.blogspot.com/
http://tcwebs.blogspot.com/