Search This Blog

21.7.09

இலங்கைத் தமிழருக்கு ஆதரவு: - தந்தைபெரியாரும்-தந்தை செல்வாவும்






தந்தை பெரியார் உடல்நிலை

நல்லவண்ணம் சீராகி வருகிறது (டிரங்க் செய்தி)


தஞ்சை, பிப். 19- சில நாட்களுக்கு முன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் உடல்நலம் வெகுவாக சீராகி இருக்கிறது.

வழக்கம் போன்று உற்சாகமுடன் இருக்கிறார்கள்.

சுற்றுலா வாரியத் தலைவர் திரு.ஆசைத்தம்பி அவர்கள் இன்றுகாலை 10 மணிக்கு தந்தை பெரியார் அவர்களைக் கண்டு உடல்நலம் விசாரித்துச் சென்றார்கள்.

தந்தை பெரியார் அவர்களுடன் திருமதி ஈ.வெ.ரா.மணியம்மையார், திருமதி ரங்கம்மாள் சிதம்பரம், புலவர் க.மா.குப்புசாமி, செயலாளர் இ.இராசகோபால் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.

மிகவும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

- கி.வீரமணி

20.2.1972 மருத்துவமனையிலிருந்து... என்றொரு செய்தி.

மருத்துவமனையிலிருந்து தந்தை பெரியார் திருச்சி திரும்பினார்

திருச்சி, பிப். 20- தஞ்சை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தந்தை பெரியார், உடல்நலமடைந்து நேற்று திருச்சி புத்தூர் மாளிகைக்குத் திரும்பினார்.

தந்தை பெரியாரவர்களுடன் திருவாளர்கள் டாக்டர் பூபதி, தஞ்சை நகர தி.க. தலைவர் கா.மா.குப்புசாமி ஆகியோர் திருச்சி சென்று தஞ்சை திரும்பினார்.

நேற்று மாலை 4-30 மணியளவில் தந்தை பெரியார் தஞ்சையிலிருந்து புறப்பட்டு திருச்சியடைந்தார்.

முன்னதாக முற்பகல் 11 மணியளவில் மேலவைத் தலைவர்சி.பி.சி. தந்தை பெரியாரை பார்த்துப் போனார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் என்.வி.என்.னும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தந்தை பெரியாரின் நலம் விசாரித்தார்.

தந்தை பெரியார் உடல்நலம் அமைச்சர் அன்பழகன், காமராசர் ஆகியோர் சந்தித்து விசாரித்தனர்.

சென்னை, பிப். 22- 20.2.1972 அன்று காலை 10 மணி அளவில் தமிழக மக்கள் உடல்நலத்துறை அமைச்சர் பேராசிரியர் அவர்களை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுச் சென்றார்.

21.2.1972 அன்று காலை 11 மணி அளவில் ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் திரு.கு.காமராசர் எம்.பி. அவர்கள் திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தார். முன்னாள் எம்.பி. திரு.இராமநாதன் செட்டியார், திருச்சி நகரசபைத் தலைவர் டாக்டர் வி.கே.ரெங்கநாதன் எம்பிபிஎஸ், மேலவை உறுப்பினர் திரு.இராஜாராம் நாயுடு, திருச்சி மாவட்ட ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் திரு.சாமிநாதன், கரூர் தொகுதி முன்னாள் சட்ட-மன்ற உறுப்பினர் திரு.டி.எம்.நல்லுசாமி ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம்


ஈழத்தமிழர் தலைவர், இலங்கை தமிழரசு கட்சித் தலைவர், தந்தை செல்வா என்று அழைக்கப்பட்ட, செல்வநாயகம் அவர்கள் தந்தை பெரியார் அவர்களை சென்னை பெரியார் திடலில் - 22.2.1972 காலை 11 மணி அளவில் சந்தித்து உரையாடினார்கள்.

அவருடன் இலங்கை தமிழரசுக் கழகப் பொதுச்செயலாளர் திரு.அமிர்தலிங்கம், அதன் மாதர் அமைப்புச் செயலாளர் திருமதி.மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், முன்னாள் இலங்கை திமுக பொதுச்செயலாளர் திரு.மணவைத்தம்பி ஆகியோர் வணக்கம் தெரிவித்து உரையாற்றினர்.

இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலைகுறித்து விவரமாகக் கேட்டு அறிந்தபின், அவர்களது உரிமைபூர்வமான கோரிக்கைக்குத் தமது இயக்கத்தின் அனுதாபமும், ஆதரவும் எப்போதும் உண்டு என்று தந்தை பெரியார் அவர்கள் தெரிவித்தார்கள். அப்போது நானும் உடன் இருந்தேன். இச்செய்தி 22.2.1972 விடுதலையில் பதிவாகியது.


24.2.1972 வியாழன் மாலை 4 மணிக்கு ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் திட்டமன்ற திட்ட நாள் விழாவில் நான் வளர்ச்சியும், தடைகளும் என்ற பொருளில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினேன்.

கல்லூரி நிறுவனரும் தந்தை பெரியாரின் மிக நெருக்கமான உறவுக்காரருமான திரு. சிக்கய்ய நாயக்கர் அவர்கள் (கல்லூரித் தாளாளரும் அவர்தான்!) தலைமை தாங்கினார்.

தந்தை பெரியார்தான் இக்கல்லூரியின் நிருவாகக்குழுத் தலைவர்; எல்லாமே இவர் பொறுப்பில்தான் நடந்து வந்தது. ஈரோடு அர்பன் வங்கியில் பல ஆண்டுகாலம் இயக்குநர்களின் தலைவராக இருந்து திறம்பட நடத்தியவர் சிக்கய்ய நாயக்கர் அவர்கள். தந்தை பெரியார் அவர்கள் இவரை என்ன மாப்பிள்ளை என்று மிக உரிமையுடன் அழைப்பார்கள். பிற்காலத்தில் அது அரசு எடுத்து நடத்தும் கல்லூரியாகியது!

25.2.1972 வெள்ளி மாலை, திராவிடர் கழகத்தின் சிறந்த செயல் வீரராக திகழ்ந்த தி.ரா.சு.மணியம் அவர்கள் தலைமையில் 40 கால் மண்டபத்தின் முன் நடைபெற்ற பொதுக்-கூட்டத்தில் பேசினேன். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களாக அங்கே இயக்கப் பணியாற்றிய எஸ்.கே.வரதராஜலு, டி.வி.முனியப்பன், எம்.அங்கமுத்து கரூர் பெ.வீரண்ணன் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

தோழர் தி.ரா.சு.மணியம் எங்கும் துணிந்து சென்று எல்லோரிடமும் உரிமை எடுத்துப் பழகும் ஓர் அருமையான தோழர் தொண்டர் ஆவார்!

23.2.1972இல் இதற்கென சென்னை தீவுத்திடல் என்ற (island grounds) பிரச்சினையில் கண்டனநாள் நடத்தும் ஒரு அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில்தான் கலந்துகொண்டேன். (23.2.1972)

திராவிடர் கழகத்தின் சார்பாக கழகத்தின் முடிவை அதுகுறித்து நமது நிலையையும் எடுத்துக் கூறினேன். இதில் சென்னை தீவுத்திடலில் கட்டடம் கட்டக்கூடாது என்றும் டில்லி சர்க்காருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை தீவுத்திடலில் மத்திய அரசின் ராணுவத் துறையினர் எழுப்பிவரும் கட்டிட பிரச்சினை குறித்து, கூட்டத்தின் அமைப்பாளர் நீலநாராயணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்கு தி.மு.கழகத் துணைப்பொதுச் செயலாளர் காஞ்சி மணிமொழியார் தலைமையில் நடைபெற்றது. இதில் தி.க.சார்பில் நானும், டி.எஸ்.கோவிந்தசாமி (சுதந்திரா கட்சி), தேவநாதன் (மாநகராட்சி உறுப்பினர், சுதந்திரா கட்சி), சிலார்மிபன் (மாநகராட்சி உறுப்பினர்- முஸ்லீம் லீக்), பி.என்.எல் அப்துல் ஹபிப் - (முஸ்லீம் லீக்), என்.ஏ.லத்தீப் (எம்.எல்.ஏ-முஸ்லீம் லீக்)

மா.சி.கிருஷ்ணமூர்த்தி - (தமிழரசு கழகம்), அ.செல்வராஜன்- (திமுக), டி.கே.கபாலி - (திமுக), ஆர்.டி.சீதாபதி (திமுக). உள்ளிட்டோர் கலந்துகொண்டோம். கூட்டத்தின் முடிவில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

சென்னை மாநகரத்தின் சுவாசப்பை போன்று பயன்பட்டு வரும் இடம் ஆனபடியாலும், அதில் மத்திய அரசின் ராணுவத் துறையினர் கட்டடங்கள் கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்று நமது தமிழக அரசு மத்திய அரசைக் கேட்டுக் கொண்ட பிறகும், வேறு மாநிலம் இடம் தருகிறோம் என்று உறுதி கூறிய பிறகும் அக்கட்டடங்கள் கட்டும் பணியை மத்திய அரசு மீண்டும் துவக்கி இருப்பதைக் கண்டு இக்கூட்டம் தனது ஆழ்ந் கவலையையும், அதிர்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது என்றும் உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களை 24ந்தேதி சந்திப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. இதர கட்சிப் பிரதிநிதிகளையும், பொது அமைப்புப் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

23.2.1972-இல் காலை 10-மணியளவில் சென்னை மைலாப்பூரில் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நகராட்சி மன்ற உறுப்பினர் டி.கே. கபாலி அவர்களின் தம்பி மோகன்பாப்பா அம்மையார் ஆகியவர்கள் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முதலாவதாக தந்தை பெரியார் அவர்கள் மணமக்களிடையே வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழிகளை கூறச் செய்து மாலைகள் மாற்றிக் கொண்டனர். இதில் நானும், கலந்து-கொண்டேன். தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் இம்மண விழாவில் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், கண்ணப்பன், இராம அரங்கண்ணல், எஸ்.வி.வேலு எம்.சி, செல்வராஜ் எம்.சி., லோகநாதன் எம்.சி., அரிகிருஷ்ணன் எம்.சி., சென்னை மாவட்டத்தின் தி.மு.கழகத் தலைவர் நீலநாராயணன், ம.பொ.சி., டி.கே.கோசல்ராம், மாவட்டத்தின் துணைச் செயலாளர் சீத்தாபதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதில் நானும் உரையாற்றினேன். அதில் சுயமரியாதைத் திருமணத்தை இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் செல்லுபடியாகாது இருந்ததை, அறிஞர் அண்ணா அவர்கள் செல்லுபடியாகச் சட்டம் செய்து தந்தை பெரியார் அவர்களுக்குப் பரிசாக அளித்து மகிழ்ந்தனர் என்பதை விவரமாக எடுத்துக் கூறினேன்.

அடுத்து கல்வியமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் மணமக்களை வாழ்த்-தியும், அறிவுரைகளையும் வழங்கினார்கள்.

அய்யா அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து கூறியும், சிறப்புரையும் ஆற்றினார்கள். இதில் சீர்திருத்தத் திருமணம், மாறுதல் அடையும்போதும் காலஞ்சென்ற அண்ணா அவர்களுக்கு முதன்முதலாக நன்றி தெரிவித்துக் கொண்டு துவங்க வேண்டும் என்பது எனது கருத்தாகும் என்று அய்யா அவர்கள் குறிப்பிட்டார்கள். மேலும், அண்ணா அவர்கள்தான் செல்லுபடியற்றுக் கிடந்த சுயமரியாதைத் திருமணத்தை செல்லுபடியாக்கச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றிக் காட்டினார்கள். அவரின் வழிவந்த திமுக ஆட்சியும் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் வளர்ச்சி அடைய பெரும் உதவியாக இருக்கின்றது என்றும், எனவே இந்த ஆட்சிக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று கூறினார்கள்.

சமுதாயத்துறையில் சுயமரியாதை இயக்கம் பலதுறைகளிலும் மாறுதலுக்குப் பாடுபட்டு வருகின்றது. அந்த முறையில் தான் பெண் அடிமையினை ஒழிக்க ஆணும், பெண்ணும் சமம் என்கிற தன்மையினை நிலைநிறுத்தவும் மூடநம்பிகையினை ஒழிக்கவும் பாடுபட்டு வருகின்றோம். சரிபாதியான பெண்கள் இன்னும் அடிமைகளாகவே முழுஉரிமையற்றவர்களாக இருந்து வருகின்றனர். இந்தக் கொடுமையினை மாற்ற எங்களைத் தவிர எவரும் முன்வரவே இல்லை என்றும், பெண்களைப் பெற்றோர்கள் 20 வயது வரையில் நன்றாகப் படிக்க வைக்கவேண்டும். அவர்களுக்கு அப்புறம்தான் திருமணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். இப்படி செய்தால்தான் அவர்களே தனக்குத்தானே துணைவரை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் என்று மிகவும் கருத்தாழம்மிக்க அறிவுரை மூலம் எடுத்துக்காட்டினார்கள்.

----நினைவுகள் நீளும்.....


------------- கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் "அய்யாவின் அச்சுவட்டில் இரண்டாம் பாகம் 22 -"உண்மை" ஜுலை 1-15 2009

0 comments: