Search This Blog

18.7.09

உலக நாடுகள் தூரப்பார்வை -பிலிப்பைன்ஸ் தீவுகள்-போலந்து


பிலிப்பைன்ஸ் தீவுகள்

ஃபெர்டினான்ட் மெகல்லன் என்பாரின் வருகையை ஒட்டி பிலிப்பைன்ஸ் தீவுகளில் ஸ்பெயின் நாட்டின் ஆட்சி அதிகாரம் நிலைபெற்று விட்டது. மெகல்லன் தான் உலகம் உருண்டை என்பதைச் செயல்வழி எண்பித்தவர். செர்வில்லி எனும் துறைமுகத்திலிருந்து கப்பலில் புறப்பட்டு நேராகப் பயணம் செய்து புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து பூமி உருண்டை என்பதை எண்பித்துக் காட்டியவர். 1521 ஆம் ஆண்டில் மெகல்லன் பிலிப்பைன்ஸ் தீவுகளில் கால் ஊன்றினார்.

ஸ்பெயினுக்கும் அமெரிக்காவுக்கும் நடந்த போரின் விளைவாக பிலிப்பைன்ஸ் தீவுகள் அமெரிக்காவின் (காலனி) குடியேற்ற நாடாகியது. அக்காலத்தில் மக்களுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டது. 1946 இல் விடுதலை பெற்றது.

1965 இல் குடியரசுத் தலைவரான பெர்டினான்டு மார்கோஸ் நாட்டின் ராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்திச் சர்வாதிகார ஆட்சியை 1972 முதல் நடத்தினார். 1981 வரை இந்த ஆட்சி நீடித்தது. எனினும் 1986இல் மார்க்கோஸ் ஆட்சி அகற்றப்பட்டது.

சுமார் 3 லட்சம் சதுர கி.மீ. பரப்புள்ள நாடு. பல தீவுகளைக் கொண்ட நாடு. தலைநகரம் மணிலா. மக்கள் தொகை 8 கோடியே 95 லட்சம். மக்களில் 83 விழுக்காடு ரோமன் கத்தோலிக்கர். புரொடஸ்டன்ட் பிரிவினர் 9 விழுக்காடு. முசுலிம் 5 விழுக்காடு. பவுத்தர்களும் மற்றவர்-ளும் 3 விழுக்காடு.

பிலிப்பினோ மொழியும் இங்கிலீசும் பேசப்படுகிறது. 12-6-1898 இல் ஸ்பெயின் நாட்டிடம் இருந்தும் 4-7-1946 இல் அமெரிக்காவிடமிருந்தும் விடுதலை பெற்ற நாடு. குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராகவும் உள்ளார்.

40 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழும் 12 விழுக்காட்டினர் வேலை கிட்டாமலும் உள்ள நாடு. 897 கி.மீ. நீளத்திற்கு மட்டுமே இருப்புப் பாதை வசதி உண்டு.

போலந்து

தற்போதைய போலந்து நாட்டின் வடபகுதியில் 966ஆம் ஆண்டில் மகாபோலந்து எனும் பெயரில் ஒரு நாட்டை பியாஸ்ட் வமிசத்தினர் அமைத்தார்கள். போலந்து நாட்டின் பூர்வ குடிகள் நாட்டின் தென்பகுதியில் சிறிய போலந்து என்ற பெயரில் தங்கள் நாட்டை அழைத்துக் கொண்டனர்.

இவ்விரண்டு பகுதிகளும் 1047ஆம் ஆண்டில் ஒன்றாக்கப்பட்டு முதலாம் கசிமிர் என்பாரின் ஆட்சியின் கீழ் வந்தது.

1386இல் போலந்தும் லிதுவேனியாவும் அரச குடும்-பங்-களின் திருமண உறவின்மூலம் ஒன்றாகின. அய்ரோப்பாவில் மிகவும் வலுமிக்க சக்தியாக இப்புதிய நாடு விளங்கியது. 14ஆம் நூற்றாண்டுக்கும் 16ஆம் நுற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நாடு ரஷியர்களைத் தோற்கடித்தது. துருக்கி ஓட்டோமான் மன்னர்களையும் டூடானிக் வமிசத் தளபதிகளையும் தோற்கடித்து வெற்றி வாகை சூடினர்.

18ஆம் நூற்றாண்டில் இந்நாட்டு மன்னரின் வலுக் குறைந்ததன் விளைவாகப் பெரும் அழிவுகள் ஏற்பட்டன. ரஷியர்கள், ஆஸ்திரியர்கள் மற்றும் பிரஷ்ஷியர்கள் நாட்டை மூன்று முறை துண்டாடினர். அதன் விளைவாக போலந்து நாடு சிதைந்துபோனது. என்றாலும் தங்களின் இழந்த பெருமையை மீட்டெடுக்கப் போலந்துக்காரர்கள் 19ஆம் நூற்றாண்டில் மிகவும் முயற்சித்தனர். முதல் உலகப் போரின் முடிவில், 1918ஆம் ஆண்டில் போலந்துக்காரர்களின் போராட்-டங்களுக்குப் பலன் கிடைத்தது; போலந்து எனும் தனி நாடு உருவானது.

1939இல் போலந்து மீது ஜெர்மனி படையெடுத்தது. இதற்குப் பதிலடியாக இங்கிலாந்து ஜெர்மனி மீது போர் தொடுத்து இரண்டாம் உலகப் போரைத் தொடங்கி வைத்த நிகழ்ச்சியாக போலந்து மீதான தாக்குதல் அமைந்து விட்டது. அந்தச் சமயத்தில் ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் தாக்குதலை சோவியத் ஒன்றிப்பு நடத்தியது. இரண்டாம் உலகப் போரில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு போலந்துதான். கொடுமைக்கான முகாம்களை போலந்து நாட்டின் ஆஸ்ச்விட்ஸ், டிரெப்ளின்கா, மஜ்டெனக் ஆகிய இடங்களில் ஜெர்மனி அமைத்தது. இந்த முகாம்களில் அய்ரோப்பாவிலிருந்து இழுத்துவரப்பட்ட யூதர்கள் அடைக்கப்பட்டு, கொடுமைப்-படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1945இல் வார்சா நகரை சோவியத் பிடித்தது. 1945 மார்ச் மாதத்தில் போலந்து நாட்டிலிருந்து ஜெர்மானியர்கள் முழுவதுமாக விரட்டி யடிக்கப்பட்டனர். போருக்குப் பின் நியமிக்கப்பட்ட போட்ஸ்டாம் மாநாடு போலந்து நாட்டின் எல்லைகளை வரையறுத்துத் தந்தது. 1947இல் போலந்து நாடு பொதுஉடைமை மக்கள் குடியரசு நாடானது.

1980இல் லெக்வலேச்சா என்பவர் தொழிற்சங்கத் தலைவரானார். கம்யூனிஸ்ட் அல்லாத தொழிற்சங்கத்தைப் பொதுஉடைமை நாடுகளில் முதலில் உருவாக்கிய தொழிற்சங்கத் தலைவர் இவரே. இவரே 1990இல் நடந்த தேர்தலில் போலந்து குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்யூனிசப் பாதையிலிருந்து நாட்டைத் திருப்பிவிடும் பல்வேறு காரியங்களை லெக் வலேச்சா செய்தார். கம்யூனிச நாடுகளில் அக்கொள்கை நிலைபெறாமல் போனதற்குப் போலந்தே காரணம் எனக்கூடக் கூறலாம். அந்தக் காலகட்டத்தில் போப்பாக இருந்தவரும் போலந்துக்காரரே.

அய்ரோப்பாவின் மத்தியில் ஜெர்மனி நாட்டுக்குக் கிழக்குப் பகுதியில் அமைந்த இந்நாட்டின் பரப்பளவு 3 லட்சத்து 12 ஆயிரத்து 685 சதுர கி.மீ. ஆகும். இந்நாட்டின் மக்கள்தொகை 3 கோடியே 86 லட்சம் ஆகும். 90 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிகர். கிறித்துவ மதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தோர் சிறுபான்மை அளவினர். எட்டு விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் மட்டுமே மதம் பற்றிக் குறிப்பிடாதவர்கள்.

மக்கள் போலிஷ் மொழி பேசுகின்றனர். 99 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள். 11-_11_1918இல் விடுதலை நாளைக் கொண்டாடும் நாட்டுக்குக் குடியரசுத் தலைவரும் பிரதமரும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்கிறார்கள்.

15 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள். 18 விழுக்காட்டினர் வேலை கிட்டாதவர்கள்.

----------------நன்றி:-"விடுதலை" 17-7-2009

0 comments: