Search This Blog

29.7.09

சிறப்பு யாகம், பூஜையால் மழை பெய்யுமா? மேட்டூர் அணை நிரம்புமா?

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துவிட்டது. இதனையடுத்து, 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆடிப்பெருக்கை முன்னிட்டும், டெல்டா பகுதி விவசாயிகளின் பாசன வசதிக்காகவும் அணையைத் திறந்து தண்ணீர் விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பக்தர்கள் சிலர் மேட்டூர் அணை நிரம்பவேண்டும் என்ற வேண்டுதலுடன் சிறப்பு யாகமும், பூஜையும் நடத்தி இருக்கிறார்கள்.

யாகத்தால் பூஜையால் மழை பெய்யுமா? ஆற்றிலே வெள்ளம் பெருக்கெடுக்குமா? மேட்டூர் அணை நிரம்புமா?

கர்நாடக மாநிலத்தில் கனத்த மழை பெய்து, அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிந்தால் கர்நாடகம் அந்த அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும். அப்படித் தண்ணீர் திறந்துவிட்டால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் உயரும்; டெல்டா விவசாயிகளுக்குப் பாசனத்திற்குத் தண்ணீரும் கிடைக்கும் மற்றபடி,

யாகத்தாலும் பூஜையாலுமே மேட்டூர் அணையை தண்ணீரால் நிரப்பிவிட முடியும்; காவிரியில் வெள்ளத்தைப் பெருக்கெடுத்து ஓடச் செய்துவிடமுடியும் என்றால் -

காவிரிப் பிரச்சினை என்று ஒன்று ஏது? கர்நாடக அரசோடு நமக்கு வாதாடல் - வழக்காடல் எல்லாம் எது? ஒன்றுமிருக்காதே!

இதுவெல்லாம் சிறப்பு யாகம், பூஜை நடத்திய பக்தர்களுக்குத் தெரியாதா? தெரியும்! என்றாலும் யாகத்தால், பூஜையால் மழை பெய்யும் அணை நிரம்பும் என்று ஓர் ஆவலாதிதான்; வேறென்ன?

இவர்கள் பரவாயில்லை என்பது போல, மழை பெய்யவேண்டும் என்று வேண்டி, பிகாரில் - ஒரு கிராமத்தில் கன்னிப் பெண்களை நிர்வாணமாக வயல்களில் ஏர் உழச் செய்திருக்கிறார்கள்! அப்படிச் செய்வதால் மட்டும் மழை பெய்துவிடுமா? அதுவும் ஓர் ஆவலாதிதான்!

-------------------------நன்றி: முரசொலி, 28.7.2009

0 comments: