Search This Blog

16.7.09

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிங்கள தளபதியை தூதராக நியமிக்கலாமா?


ஜெர்மனியில் கொந்தளிப்பு!

ஜெர்மனியில் இலங்கை அரசின் தூதராக இலங்கை அரசின் இராணுவத் தளபதி ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டதற்கு, ஜெர்மனியில் வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். பிராங்பர்ட் மற்றும் பெர்லினில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் உள்ளனர்.

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலையில் முக்கிய பங்கு வகித்த ஒருவருக்குப் பதவி உயர்வுபோல ஜெர்மனிக்குத் தூதராக நியமிக்கப்பட்டது என்பது மனிதாபிமான முறையில் எதிர்க்கப்படவேண்டியதும், கண்டிக்கப்படவேண்டியதுமேயாகும்.

தடை செய்யப்பட்ட ஆயுதங்களையெல்லாம் பயன்படுத்தி ஒரு இனத்தையே அழித்திருக்கிறார்கள். சீனா தயாரித்த இராணுவ ஆயுதங்களுக்கான ஒத்திகைகளை பரிட்சார்த்தமாக நடத்தியுள்ளனர்.

அதிபர் ராஜபக்சேயின் உடன் பிறப்பும், இராணுவ அமைச்சருமான கோத்தபய ராஜபக்சே மிக வெளிப்படையாகவே கூறினாரே, ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டுகளை விமானம்மூலம் ஆறாயிரம் முறை வீசியிருக்கிறோம் என்று ஒரு சாதனை போலக் கூறவில்லையா?

இலங்கையில் வன்னிப் பகுதியில் கடைசி ஒரு வாரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் கணக்கை அறுதியிட முடியாத அளவுக்கு பெரும் எண்ணிக்கையில் அது நிகழ்ந்திருக்கிறது என்பதை உலகம் உணர்ந்துவிட்டதே! அய்.நா. மீதும், அய்.நாவின் செயலாளர் பான் கீ மூன் மீதும் குற்றச்சாற்று எழுந்து நிற்கிறது. ஏதோ சமாதானம் சொல்ல முயற்சிக்கிறார்களே தவிர, நியாயப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

அய்.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் ஆசியாவிலிருந்து ஆறு நாடுகள் போட்டியிட்டன (2008).

வாக்கெடுப்பில் கடைசி இடமே இலங்கைக்குக் கிடைத்தது தோல்வியடைந்தது. 2006 முதல் அதன் உறுப்பினராகயிருந்த இலங்கையை அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் வெளியேற்றியது.

இலங்கை அரசின் கண்மூடித்தனமான செயல்பாட்டை மிகச் சரியாக உணர்ந்திருந்தார் அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார். நாடாளுமன்றத்திலேயே இலங்கையில் நடைபெறுவது இன அழிப்பே (Genocide) என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறினாரே (16.8.1983). அந்தக் கண்ணோட்டம் இல்லாமல் போனது ஏன்? இன்னும் சொல்லப்போனால், 1983 இல் நடந்ததைவிட பல மடங்குக் கொடூரத் தாக்குதல் இப்பொழுது நடத்தப்பட்டுள்ளதே!

போர்தான் முடிந்துவிட்டதே அதற்குப் பிறகும்கூட அப்பாவித் தமிழ் மக்கள் மூன்று லட்சம் பேர்களை முள்வேலி முகாமுக்குள் முடக்கி ஒரு வேளை உணவுக்கும், ஒரு தம்ளர் குடிநீருக்கும், நோய் வாய்ப்பட்டவர்களுக்கு ஒரு மாத்திரைக்குமாக ஏங்கும் நிலை என்றால், இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல! இதனைக் கேட்க உலகில் நாதியில்லையா என்ற வேதனைதானே நெஞ்சை அடைக்கிறது.

வியன்னாவில் ஒரு சீக்கியக் குரு கொல்லப்பட்டார் என்றவுடன் பஞ்சாப் பற்றி எரிகிறதே! ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்டனர் என்றதும் இங்குள்ள தேசிய வாதிகளின் அங்கமெல்லாம் பதறுகிறதே!

தமிழர்கள் பிரச்சினை என்றால் மட்டும் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய்விடுவது ஏன்? பாமர மக்கள் மத்தியில்கூட இந்த உணர்வு மேலோங்கி நிற்கிறதே.

ஜெயின் கமிஷன்முன் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் என்ன கூறினார்?

“The South Indian Tamils and the Srilanka Tamils share a history of cultural heritage of more than two thousand years” என்றாரே, தென்னிந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் இடையேயான பண்பாட்டு உறவு மரபு என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்று கூறினாரே, அந்த வரலாற்று உண்மையும், உணர்வும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?

கொஞ்சம்கூடத் தயக்கம் இல்லாமல் இலங்கை என்பது சிங்கள நாடுதான் என்று அந்நாட்டு இராணுவத் தளபதி பொன்சேகா கூறவில்லையா?

இந்த நிலையில், இராணுவத்தைச் சேர்ந்த சிங்கள தளபதி ஒருவர் தூதராக நியமிக்கப்படுகிறார் என்றால், அங்குள்ள தமிழர்கள் கொந்தளித்து எழ மாட்டார்களா?

அது ஏதோ ஜெர்மனியில் வாழும் தமிழர்களின் உணர்வுகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் உணர்வுகளின் பிரதிபலிப்புதான் மனிதநேயர்களின் சிந்தனைச் சிதறல்தான்.

இலங்கைக்கு இந்தியத் தூதராக தமிழர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகிறதே இந்த நேரத்தில் அந்த உணர்வையும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய அரசுக்கு நினைவூட்டுவது நமது கடமையாகும்.


----------------நன்றி:-"விடுதலை" தலையங்கம் 16-7-2009

0 comments: