Search This Blog

19.7.09

கடவுளைக் கேவலப்படுத்தும் கயவர்கள் யார்? பக்தர்களா? கடவுள் இல்லை என்பவர்களா?


உதைத்தால் கடவுளும் கூட...

அடி உதவுவது போல, அண்ணன் தம்பி உதவமாட்டார்கள். அடியாத மாடு படியாது. ஆணை அடித்து வளர்க்கணும். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். இப்படி எத்தனை, எத்தனையோ பழமொழிகள் தமிழில். தமிழனின் வாழ்க்கை அனுபவங்களைக் கூறும் வகையில் இவை அமைந்துள்ளன எனக்கூடக் கூறலாம்.

ஓடப்பராயிருக்கும், ஏழையப்பர், உதையப்பராகிவிட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிடுவார், உணரப்பா நீ என்றே கூறிவிட்டார் புரட்சிக் கவிஞர்,.

அடித்துத் திருத்த முடியாது, அன்பால் திருத்தலாம் என்பர் மென்மனம் கொண்டோர். எது எப்படி இருப்பினும் அடித்து வேலை வாங்கினால்தான் சரிப்படும் என்பவர்களைத் திருத்தவே முடியாது. அவர்களின் தத்துவம் சரி என்கிற நினைப்பு கூட வந்துவிடுகிறது நமக்கு,. கடவுள் ஒன்றுக்கு ஏற்பட்ட கதையைக் கேட்கும்போது!

நெல்லை, பாளையங்கோட்டையில் இருக்கும் எத்தனையோ கோயில்களில் ராஜகோபாலன் கோயிலும் ஒன்று. வைணவக் கோயில் என்பதை நாம் சொல்லித் தெரிந்து கொள்ளத் தேவையில்லை ஒருபக்கம் ருக்மணி பெண்டாட்டி. மறு பக்கம் சத்யபாமா சகதர்மிணி. இரண்டு பெண்டாட்டிக்கார கடவுள் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் குந்திக் கொண்டுள்ளது. இந்த லட்சணத்தில் இது உற்சவராம்-. தெருத் தெருவாக இதைத் துக்கிக் கொண்டு அலைவர் அய்யங்கார்கள்.

இந்தப் பொம்மையின் மூக்கு உடைந்த காயத் தழும்பு காணப்படுகிறது. செய்தவன் சரியாகத்தான் செய்திருப்பான் - சாமிமலையிலோ நாச்சியார் கோயிலிலோதானே கடவுள்களின் உற்பத்தி ஸ்தானம்! அவர்கள் மூக்கும் முழியுமாகத்தான் செய்திருப்பார்கள். பின் எப்படி காயம், தழும்பு-?

ராஜகோபாலன் கோயிலின் அர்ச்சகர் விஷ்ணுப்பிரியன் என்பவருக்கு எல்லாமே பெண் குழந்தைகளாம். புத்தேள் நரகம் போகாமல் தப்பிப்பதற்காக ஆண் குழந்தை வேண்டும். என்று ஆசைப்பட்டானாம். ராஜகோபாலனிடம் வேண்டிக் கொண்டாராம். அந்த முறை பிறந்ததும் பெண்ணாகவே இருந்து விட்டதாம். கையில் இருந்த அர்ச்சனைத் தட்டாலேயே கடவுள் ராஜகோபாலனைக் சாத்து, சாத்து என்று சாற்றி விட்டானாம். ராஜகோபலன் பொம்மையின் மூக்கு உடைபட்டகாயம் தானாம் அது. வேண்டுதல் பலிக்காமல் போனதற்காகக் கடவுளைப் போட்டு அடித்தான் பக்தன் என்றும் அடிவாங்கிய பிறகு, பிறந்த பெண்ணை ஆணாக மாற்றி விட்டது கடவுள் என்றும் புளுகி வைத்துள்ளார்கள்.


அப்ப, அடி உதவுவது போல எதுவும் உதவாது ஆண்டவனிடம் கூட என்பது கதைமூலம் தெரிகிறது. பக்த கோடிகள் இதனைத் திருவிளையாடல் என்கிறார்கள் என்ன பேர் வைத்தாலும், அடிதானே, உதை தானே! இப்படியெல்லாம் எழுதிக் கடவுளைக் கேவலப்படுத்தும் கயவர்கள் யார்? பக்தர்களா? கடவுள் இல்லை என்பவர்களா?

கல்லினுள் தேரைக்கும் ...

கல்லினுள் தேரைக்கும் படியளக்கிறது பரமசிவம் என்பார்கள் பக்தர்கள். எல்லார்க்கும் படியளக்-கும் பரமன் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் வழிபடப்படுவதில்லை அதனால், அந்த நாடுகளில் உள்ள தரித்திர நாராயணர்களைப் பற்றி எழுதப்போவது இல்லை, இருந்தாலும் மனதுக்குள் ஒரு நெருடல். தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்கிறோமே, இருக்கின்ற 200 நாடுகளைப் பற்றி பரமசிவன் கவலை கொள்ளக் காணோமே என்று யாரும் யோசிப்பதே கிடையாது. புண்ணிய பாரத பூமியைவிட தரித்திரத்தில் மிக மோசமான நிலையில் உள்ள வளரும் நாடுகள் எனும் பட்டம் தாங்கிய நாடுகளின் மோசமான நிலையை யாராவது சிவனிடம் சொல்லி வைக்கலாமே! இந்தியாவில் 25 விழுக்காடுக்கு மேல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் மக்கள் உள்ளனர். 10 விழுக்காட்டுக்குமேல் வேலை கிட்டாதவர்கள் உள்ளனர். இவர்களின் வயிற்றுப் பாடுக்கு ஏதாவது செய்திட வேண்டாமா? இன்னமும் பாராமுகம் ஏன் பரமனுக்கு? தேரையைவிடக் கேவலமா, அரிதான மானிடப் பிறவிகள்?

இதுகிடக்க, கல்லினுள் தேரைக்கும் படியளந்த கதையைப் பார்ப்போமா? தேரைத்தவளை சைகிலேரனா ஆஸ்கட்டடா எனும் இனவகையைச் சேர்ந்தது. இதன் உடலில் உள்ள செல்களின் ஆற்றல் மய்யமான மைடோக் கான்ட்ரியா பகுதி, தனக்குத் தேவையான சக்தியைத் தானாகவே தயாரித்துக் கொள்ளும் தனித் தன்மை வாய்ந்தது. தாவரங்கள் தங்கள் சக்தியைத் தயாரித்துக் கொள்வதைப்போல! தாவரங்கள் எதையும் உண்ணாலேயே வளர்கின்றனவே, அதைப்போல! தவளைகள்தூங்கினாலும் இது செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆற்றலைத் தவளை பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த இனத் தவளைகளுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பான வசதி இது!

தன் உடலுக்குத் தேவையான வெப்பம், தேவைக்கேற்ப வெப்பத்தைக் கூட்டவும் குறைக்கவுமான வசதி போன்றவையும் தேரைக்கு உண்டு.

ஆகவே, தேரை சாப்பிடாமலே வாழக்கூடிய, வளரக்கூடிய, வசதிகள் அதன் உடலில் இயற்கையாகவே உள்ளன. இது தெரியாமல் பக்தர்கள் பரமசிவன், படி, அரிசி, சோறு, குழம்பு என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மாம்பழத்து வண்டு, கல்லினுள் தேரை போன்றே பல இயற்கைச் செயல்களுக்குக் காரணம் இவை எனும் அறிவில்லாத மக்கள் ஆண்டவனைக் காட்டிக் கொண்டிருக்கும் அறியாமையை அறிவியல் தோலுரித்துக் காட்டியுள்ளது.


குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக அறிவியலாளர்கள் தேரை பற்றிய ஆய்வு முடிவை அறிவித்துள்ளனர்.

சானிடரி நாப்கினுக்குப் பதிலாக...

கணவனை உயர்வாகக் கருத வேண்டும் என்பதற்காக ஒரு புராணக்கதையை எழுதி வைத்திருக்கிறார்கள். தன் கணவனை அழைக்காமல் யாகம் செய்தார் தன் தந்தை என்பதற்காக யாகத் தீயில் விழுந்து செத்த தன்மனைவியின் வெந்த உடலைத் தூக்கிக் கொண்டு சிவன் அலைந்தானாம். அவளின் பெண்குறிப் பகுதி பிய்த்துக் கொண்டு தனியே விழுந்ததாம், அசாமில் காமாக்யா எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலின் தாத்பர்யம் அதுதானாம்.

கோயிலின் வழிபடு கடவுள், வெறும் பெண்குறி மட்டுமே! கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அதன் மேல் ஈரம் கசிந்து கொண்டே இருக்கும் வகையில் அதன் கீழே ஊற்று நீர் சுரந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இதை வணங்கிப் போகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை திருவிழாவும் உண்டு. கடந்த ஜுன் மாதம் 25 ஆம்தேதி நடந்தது. எங்கு பார்த்தாலும் சாமியார்கள் கூட்டம். சிவப்புத் துணி, முகம் முழுவதும் சிவப்புக் குங்குமம், ஓடும் நீரெல்லாம் பலி கொடுக்கப்பட்ட விலங்குகளின் ரத்தத்தால் சிவப்பாகிப் போன நிலை.

அம்பாளை வாழ்த்திப் போடப்பட்ட கோஷம் விண்ணைப் பிளந்தது. என்ன கோஷம் தெரியுமா? பிரிதிபி ரஜஷால ஹோய் என்பதே! பூமித்தாய்க்கு மாதவிடாய் வருகிறது டோய் என்பது அதன் பொருள்.


அது என்ன? மாதத்தில் மூன்று நாள்கள் மகளிர்க்கு குருதிக் கசிவு ஏற்படுவது இயற்கை. மரித்துப் போன கருமுட்டைகள் வெளியேற்றப்படும் இயற்கை வழி. காமாக்யா கடவுளச்சி அல்லவா? மாதம் ஒரு முறை என்பதற்குப் பதில் ஆண்டுக் கொரு முறை குருதி ஓட்டம் நடக்குதாம்! ஆகவே கோயிலின் கதவுகளைச் சாத்திவைத்து யாரும் பார்க்காதவாறு செய்கிறார்கள் மூன்று நாள்களுக்கு!

நான்காம் நாள் கதவைத் திறந்து காட்டுகிறார்கள். எல்லாம் கழுவிச் சுத்தமாக்கப்பட்ட கருவறைக் காட்சியைக் காணப் பக்தர்கள் கூட்டமோ, கூட்டம்! இந்த ஆண்டு 7 லட்சம் பேர்களாம்! அசாமின் கும்பமேளா கும்பலாம்! இப்படிப்பட்ட முதல் காட்சியைக் கண்ட பக்தர்கள் நினைத்ததெல்லாம் நடக்குமாம்.

இதற்கெனவே ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் அகோர் சாமியார்கள், எப்போதும் அம்மணமாகவே திரிந்து கொண்டிருக்கும் நாகா சாமியார்கள், கூட்டம் கூட்டமாகப் பாதையெங்கும் டென்ட் களில் தங்கிக் கொண்டு கூடியிருக்கின்றனர். சுடுகாட்டில் நள்ளிரவில் சக்தி வழிபாடு நடத்தும் சாமியார்களின் கூட்டமும் வந்ததாம். (சக்தி வழிபாடு பற்றிக் தெரிந்து கொள்ள "ஞான சூரியன்" படிக்கவும்)

வந்த பக்தர்களுக்குப் பிரசாதம் என்ன தெரியுமா? ரத்தக் கறைபடிந்த சிவப்புத் துணித் துண்டு நூல்திரி! குருதிப் பெருக்கு ஏற்பட்ட யோனிப் பகுதியில் வைக்கப்பட்டு மூன்று நாள்கள் இருந்த சிவப்புத் துணியின் கிழிக்கப்பட்ட பகுதிகள்! குமட்டிக் கொண்டு வருகிறதா? தெய்வீகப் பிரசாதம். குறைகூறக் கூடாது.


இந்த மதமும், பண்டிகைகளும், சடங்காச்சாரங்களும் அடங்கிய இந்துத்வா தான் இந்தியாவுக்குத் தேவை என்கிறார்கள்! சானிடரி நாப்கின் வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற விளம்பரம் தொலைக் காட்சியில் வந்தால், ஆச்சாரம், ஒழுக்கம் கெட்டுப் போச்சு எனும் மடிசார் மாமிகள் இந்த விழாபற்றி என்ன கூறுவார்கள்?

-------------------18-7-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை

1 comments:

Unknown said...

இதற்கான பதிலை உங்கள் அம்மாவிடம் கேட்டு , தெளிவடையலாம் .