Search This Blog

13.7.09

தீண்டாமை ஒழிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா?


தமிழனுடைய நலத்தை மனதில் வைத்துக் கொண்டு, துணிந்து காரியம் செய்கிறவருக்கு நன்றியுள்ள தமிழன் ஆதரவு தர வேண்டாமா? அதை விட்டு விட்டு எதிர்த்து ஒழிப்பதில் முன்னால் போய் நிற்கிறவனை என்னவென்று சொல்வது?

எனவே இதை எல்லாம் எடுத்துச் சொல்லுவதற்கு இந்த நாட்டில் எங்களைத் தவிர வேறு ஓர் ஆள் இல்லை. இந்த சங்கதிகளை அதாவது "ஜாதி ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டும். கடவுள், புராணம், சாஸ்திரம் ஒழிய வேண்டும். இவைகளுக்கு எல்லாம் மூலமாக இருக்கிற பார்ப்பான் ஒழிய வேண்டும் என்று காங்கிரஸ்காரன் சொல்லுவானா? அல்லது இந்தக் கண்ணீர்த் துளிகள்தான் சொல்லுவானா? வேறு எந்த ஆள் சொல்லுவான்? எவராலும் சொல்ல முடியாததை நாங்கள்தான் தலையில் போட்டுக் கொண்டு பாடுபட்டு வருகின்றோம்.


ஜாதி இந்த நாட்டில் இருக்கிறதென்றால் அது ஒன்றும் தனியாக இல்லை. கடவுள் பெயரால் சாஸ்திரத்தின் பெயரால், சட்டத்தின் பெயரால் இருக்கிறது. இந்தச் ஜாதி என்றென்றும் நிலைத்து இருக்க வேண்டும் என்ற கருத்தில் தான் சட்டம் செய்யப்பட்டிருக்கின்றது. கோவில், குளம், மடம் எல்லாம் பக்தியால் ஏற்பட்டதல்ல. இந்தப் பார்ப்பானை வளர்ப்பதற்கும், நம் மக்களிடையே மூட நம்பிக்கையை உண்டாக்குவதற்கும் ஏற்படுத்தப்பட்டவை. ஒவ்வொரு கடவுளுக்கும் ஜாதியிருக்கிறது. ஜாதியை நிலைநிறுத்த ஏற்படுத்தப்பட்டவை தான் இந்த கடவுள்கள் எல்லாம்.
ஜாதி ஒழிய வேண்டும் என்று நாம் தான் கிளர்ச்சி செய்தோம். அதன் பிறகு காமராசரும் - நேருவும் சொல்கிறார்கள். இவர்களைத் தவிர இந்த நாட்டின் எந்தப் பார்ப்பனர் ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னார்கள்?


ஜாதி ஒழித்தால் மதம் ஒழியும்; மதம் ஒழித்தால் சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஒழியும். இவை ஒழிந்தால் கடவுள் ஒழியும். கடவுள் ஒழிந்தால்தான் அவனுக்கு இங்கு வேலை இல்லையே. இதனால் தான் பார்ப்பான் சம்மதிக்கமாட்டான். இவை இருக்க வேண்டும் என்பதற்கு என்னனென்ன தில்லுமுல்லுகள் செய்ய வேண்டுமோ அவற்றை சமயம் பார்த்துச் செய்து கொண்டும், மற்றவர்களைத் தூண்டிவிட்டுக் கொண்டும் இருப்பான்.

இன்னும் சிலர் தீண்டாமை ஒழிந்தால் ஜாதி ஒழிந்து விடும். ஆகவே தீண்டாமை ஒழிப்பில் சர்க்காரே முன் நிற்கும் போது ஜாதியைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்கின்றார்கள். இது சரியான பேச்சு இல்லை. ஜாதி ஒருவர்க்கொருவர் தொட்டுப் பழகுவதால் ஒழியாது. இப்படி தொட்டுப் பழகுவதால் ஜாதிபேதம் இல்லை என்ற பொருளே தவிர ஜாதிப் பிரிவு இல்லை என்று சொல்ல முடியமா? தெளிவாகவே சொல்லுகின்றேன்.


தீண்டாமை வேறு – ஜாதி வேறு – பேதம் வேறு. தீண்டாமை ஒழிய கோயிலுக்குப் போ என்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டப்படாதவன் கோவிலின் உள்ளே சாமி இருக்கிற இடத்திற்கு எவன் போக விடுகிறான்? சூத்திரன் தொட்டால் சாமி செத்துப்போகும். பார்ப்பான் தொட்டால் சாமி சாகாது என்றால் என்ன காரணம்? நாட்டில் தீண்டாமை ஒழிப்பு என்ற போலி வார்த்தையால் மக்களின் கண்களைத் துடைக்கப்படுகிறதே தவிர, வேறு உண்மை எண்ணம் இல்லை. மேலும் தீண்டப்படாதவன் என்பவர்களோடு உட்கார்ந்து சாப்பிடுவதாலோ, அவர்கள் வீட்டுக்கு இவர்கள் போய் நலம் விசாரிப்பதாலோ, திருமணக் காலத்தில் கலந்து கொள்வதாலோ ஜாதி ஒழிந்து விடுமா? ஜாதிபேதம் தானே ஒழியும். ஆகவே தான் சொல்கிறேன்.இந்தச் ஜாதி ஒழிய வேண்டுமானால் பார்ப்பான் ஒழிய வேண்டுமென்று!



ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்கு இந்த நாட்டில் ஒருவரும் தோன்றவில்லை! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சித்தார்த்தர் என்ற புத்தியடைந்தவர் தோன்றினார். அந்த ஒரு மனிதர் தான் இருக்கிறாரே தவிர வேறு ஒருவரும் இல்லையே! ஜாதி என்பது ஒன்று இல்லை என்று அவர் ஒருவர் தான் சொன்னார். இதைச் சொன்னதற்காக அவரை ஒழித்துக்கட்டிவிட்டார்களே.

இந்தக் கடவுள்களும், அவதாரங்களும், சாஸ்திரம் - இராமாயணம், பாரதம் எல்லாம் புத்தருக்குப் பிறகு முந்நூறு ஆண்டுகள் கழித்து ஏற்பட்டவை. முதலில் ஏற்பட்டது பாரதம். இரண்டாவது ஏற்பட்டது இராமாயணம் அதை அப்படியே புரட்டிவிட்டார்கள். தரும சாஸ்திரம் என்று சொல்கிறதெல்லாம் புத்தருக்குப் பிறகு ஏற்பட்டவைதான். இதை எல்லாம் நன்றாக உணர்ந்தே கூறுகிறேன். நீங்களும் நன்றாக சிந்திக்க வேண்டும். சிந்திக்கக் கூடாது என்று சொல்வது வேதங்கள். அதன்படியே நடக்க வேண்டும் என்று கூறுகிறவன் பார்ப்பான். அவனைக் காப்பாற்றி வளர்ப்பது கடவுள். கடவுளைப் பிடித்து நிறுத்தி வைப்பது ஜாதி. இதைத்தான் அழித்து ஒழிக்க வேண்டுமென்கிறேன். இதில் என்ன தப்பு?

----------- 30.07.1962- அன்று ஈரோட்டில் தந்தைபெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை" 05.08.1962, 09.08.1962.

0 comments: