Search This Blog

14.7.09

உலக நாடுகள் தூரப்பார்வை -நார்வே-பாகிஸ்தான்

நார்வே

நார்வே நாட்டுப் பகுதியில் மக்கள் குடியேற்றம் பொது ஆண்டுக்கு 9500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என்பது வரலாற்றின் சான்றுகளில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. பொது ஆண்டுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாகப் பல இனத்தவர் குடியேறினர். இவர்கள் வேளாண்மை யையும், கால்நடைப் பராமரிப்புத் தொழிலையும் செய்தவர்கள். நாளடைவில், ஏற்கெனவே இருந்தவர்களை இவர்கள் மெல்ல மெல்ல அப்புறப் படுத்திவிட்டனர். மீன் பிடித்தலையும் வேட்டையாடு தலையும் பழகிய இவர்கள் மேற்குக் கடற்கரைப் பகுதிகளுக்குத் துரத்தப்பட்டுவிட்டனர்.

வைகிங் மற்றும் நோர்ஸ்மென் இனத்தவர்களாகிய நார்வே நாட்டுக்காரர்கள் கடல் போரில் வல்லவர்கள். இவர்கள் அய்ரோப்பியக் கண்டத்துக் குடியேற்ற நாடு (காலனி)களில் 9ஆம் நூற்றாண்டு வரை படையெடுத்தனர். 1015ஆம் ஆண்டில் ஹரெய்ட்சன் ஒலாப் மிமி என்பவர் நார்வே நாடுகள் அனைத்துக்கும் அரசராகி கிறித்துவ மதத்தைத் தழுவும்படி நார்வே மக்களைத் தூண்டினார்.

1442ஆம் ஆண்டிலிருந்து 1814ஆம் ஆண்டு வரை டேனிஷ் மன்னர்கள் நார்வேயை ஆண்டனர். 1814இல் சுவீடன் நாடு ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனாலும் நார்வே நாட்டுக்காரர்களுக்குப் பரவலான தன்னாட்சி உரிமையை வழங்கியது. 1905இல் சுவீடன் நாட்டுடன் அமைதி வழியில் ஓர் ஒப்பந்தத்தை நார்வே நாட்டினர் செய்து கொண்டனர். அதன்படி சுவீடன் நாட்டில் இருந்து நார்வே தனியாகப் பிரிக்கப்பட்டது. டேனிஷ் இளவரசர் நாட்டுக்கு அரசராக அமர்த்தப்பட்டார். நாட்டில் குடிக்கோனாட்சி முறை நடக்கிறது.

அய்ரோப்பாவின் வடபகுதியில் சுவீடன் நாட்டுக்கு மேற்கே வடஅட்லாண்டிக் பெருங்கடல் கரையில் அமைந்துள்ள நார்வே நாட்டின் பரப்பு 3 லட்சத்து 24 ஆயிரத்து 220 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 47 லட்சம். எவாங்கலிகன் லுத்தரன் சபை எனும் கிறித்துவ மதப் பிரிவினர் அதிகம். ஆட்சியினரின் ஆதரவு பெற்ற மதமாகும். புரொடஸ்டன்ட், ரோமன் கத்தோலிக்க மதத்தினரும் உண்டு. மக்களில் நூற்றுக்கு நூற்றுவரும் கல்வியறிவு பெற்றவர்கள்.

மன்னர் நாட்டின் தலைவர். பிரதமர் ஆட்சியின் தலைவர்.

வேலை கிட்டாதோர் 4 விழுக்காடு உள்ளனர்.

பாகிஸ்தான்

சிந்துச் சமவெளி நாகரிகம் வளர்ந்து ஓங்கியது இன்றையப் பாகிஸ்தான் பகுதிகளில்தான். இந்தப் பகுதி கடந்த காலங்களில் ஆரியர்கள், பாரசீகர்கள், கிரேக்கர்கள், அரபியர்கள், துருக்கியர்கள் எனப் பல்வேறு நாட்டின மக்களின் படையெடுப்புக்கு ஆளாக்கப்பட்டு ஆளப்பட்ட பகுதி;.

711ஆம் ஆண்-டில் இசுலாம் நெறி அறிமுகப்படுத்தப்பட்டது. 1526இல் முகலாயப் பேரரசின் பகுதியானது. 1857இல் இந்தப் பகுதியை பிரிட்டிஷார் ஆளும் வாய்ப்பைப் பெற்றனர். இந்தியாவுக்கு விடுதலை அளிக்கப்பட்ட நேரத்தில், இன்றைய வங்காள தேசமும் இணைந்த பகுதி, பாகிஸ்தான் எனப் பெயரிடப்பட்டுப் பிரித்துத் தரப்பட்டது. 14-.8.-1947இல் விடுதலை நாள் கொண்டாடும் பாகிஸ்தான் பிரிட்டிஷ் காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்.

இந்தியாவைப் போலவே, டொமினியன் தகுதி பெற்ற பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக முகம்மது அலி ஜின்னாவும் பிரதமராக லியாகத் அலிகானும் பதவி ஏற்றனர். இப்போதைய பாகிஸ்தான் அப்போது மேற்கு பாகிஸ்தான் எனவும் தற்போதைய வங்காள தேசம் அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் எனவும் வழங்கப்பட்டன.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாடாகஇருந்து பிரிக்கப்பட்டாலும் அவை 1965, 1971 ஆண்டுகளில் கடும் சண்டைகளில் ஈடுபட்டன. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் விளைவாக வங்காள தேசம் உருவானது. வங்காள தேச விடுதலை வீரர்களுக்கு மறைமுகமாவும் நேரடியாகவும் இந்தியா ராணுவ ரீதியாக உதவியதால் வங்கதேசம் உருவாகியது.

இந்தியாவில் உள்ள காஷ்மீரை பாகிஸ்தான் ஒரு பகுதியிலும் இந்தியா மற்றொரு பகுதியிலும் ஆட்சி செய்து வருகின்றன. இது தொடர்பான இரு நாடுகளுக்கிடையேயான தகராறு தொடர்ந்து நீடித்து வருகிறது. அதன் விளைவாக 1999இல் பாகிஸ்தான் இந்தியா மீது போரிட்டது. கார்கில் போர் எனப்படும் அப்போரில் பாகிஸ்தான் இந்தியாவால் தோற்கடிக் கப்பட்டது.

8 லட்சத்து 3 ஆயிரத்து 940 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 17 கோடி ஆகும். 97 விழுக்காடு மக்கள் முசுலிம்கள். இவர்களில் 20 விழுக்காடு ஷியா பிரிவு. 77 விழுக்காடு சன்னி பிரிவு.

நாட்டு மக்களில் 48 விழுக்காடு பஞ்சாபி மொழி பேசுவோர். சிந்தி மொழி 12 விழுக்காடு. சிராய்க்கி எனும் ஒருவகைப் பஞ்சாபி மொழி 10 விழுக்காடு.

புஷ்டு மொழி 8 விழுக்காடு எனப் பலமொழி பேசும் மக்கள். இங்கிலீஷ்தான் ஆட்சி மொழியாகவும் அனைவராலும் விளங்கிக் கொள்ளக் கூடிய மொழியாகவும் உள்ளது. மக்களில் 49 விழுக்காடு மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள். பெண் கல்வி 35 விழுக்காடு மட்டுமே.

இசுலாமியமதச் சார்பான நாடு. இதன் அதிபர் நாட்டின் தலைவர். பிரதமர்ஆட்சியின் தலைவர். ஆறு பகுதிகளைக் கொண்டிருந்தாலும் கூட்டாட்சிக் குடியரசு நாடு எனப்படுகிறது. 32 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டுக்கும் கீழ் வாழ்கின்றனர். 7 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்..

-------------------"விடுதலை" 14-7-2009

0 comments: