Search This Blog

19.7.09

சூரியகிரகண மூடநம்பிக்கையை முறியடிப்போம்!
சூரியகிரகணத்தால் சுனாமி வரும் என்பது பொய்
தமிழ்நாடுஅறிவியல்இயக்கம்அறிவிப்பு


ஜூலை 22 ஆம் தேதி நிகழவிருக்கிற சூரிய கிரகணத்தினால், இயற்கை சீற்றம், சுனாமி வரும் என்று சொல்வது பொய் என்று, தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகளும், விஞ்ஞானிகளும் தெரிவித்தனர். இந்த மாதம் 22ஆம் தேதி (புதன்கிழமை) சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. கிரகண கதிர்வீச்சின் பாதிப்பினால் பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை சீற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்து மத ஜோதிடர்கள் கூறி வருகின்றனர். அறிவியல் ரீதியில் சூரிய கிரகணத்தினால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது பற்றி, தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் சி.ராமலிங்கம், கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி, விவேகானந்தா கல்லூரி இயற்பியல் துறை தலைவர் முருகன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த மாதம் 22ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் ஆகும். எனவே இது அரிதான நிகழ்வாகும். அடுத்து 2132ஆம் ஆண்டில் தான் இதுபோன்று நிகழவிருக்கிறது. 22ஆம் தேதி சென்னையில் அதிகாலை 5.29 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி 7.18 மணிக்கு கிரகணம் முடிகிறது. இருந்தபோதிலும், காலை 10.42 மணிக்கு பசிபிக்கடலில் சூரிய கிரகணம் முழுமையாக முடிகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் பார்த்த முழு சூரிய கிரகண நிகழ்வுகளில் இது மூன்றாவது சூரிய கிரகணம் ஆகும். 22ஆம் தேதி நிகழவிருக்கிற சூரிய கிரகணம் முதலில் சூரத்தில் தொடங்குகிறது.மேற்கு இந்தியாவில் சூரத், வதோதராவில் இருந்து இந்தூர், போபால், வாரணாசி, பாட்னா வழியாக கிழக்கு இந்தியா வரை முழு சூரிய கிரகண பாதை அமைகிறது. சூரிய கிரகணத்தின் போது, ஒளிமறைப்பு நேரம் காலை 5.29மணியில் இருந்து 7.18 மணிவரையில் இருந்தாலும், சென்னையில் 62.7 சதவிகிதம் மட்டுமே சூரியனை சந்திரன் மறைக்கும். எனவே இது பகுதி சூரிய கிரகணமே ஆகும். பாட்னாவில் முழு சூரிய கிரகணம் 7 நிமிடம் நீடிக்கும். அந்த சமயத்தில் இரவு போல் இருக்கும். எனவே, சூரிய கிரகணம் குறித்தும் சூரியனின் ஒளிக்கதிர்வீச்சு உள்ளிட்ட அறிவியல் பூர்வ ஆராய்ச்சிக்காக வானியல் ஆராய்ச்சியாளர்கள் பாட்னாவில் முகாமிட உள்ளனர். சென்னையில் இருந்து கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி தலைமையிலான குழு செல்கிறது.

முழு சூரிய கிரகண நிகழ்வின்போது பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல அரிய உண்மைகள் தெரியவந்துள்ளன.

1868ஆம் ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி அன்று நடந்த கிரகணத்தின்போது ஜென்சன் என்ற விஞ்ஞானி இந்தியாவில் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து சூரிய வளி மண்டலத்தில் ஹீலியம் என்ற வாயு இருப்பதைக்கண்டறிந்தார். 1919ஆம் ஆண்டு ஏற்பட்ட முழு சூரிய கிரகணத்தின் போதுதான், ஒளியும்கூட வளைந்து செல்லும் என்ற அய்ன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் நிரூபிக்கப்பட்டது. அந்த வரிசையில் 22ஆம் தேதி நிகழவிருக்கிற சூரிய கிரகணம் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள சூரிய வினாக்களுக்கு விடை தேடி, பாட்னா நகருக்கு விஞ்ஞானிகள் படைஎடுக்க உள்ளனர். பார்த்தால் நமது கண்கள் பெரிதும் பாதிக்கப்படும். சூரிய ஒளி நம் விழித்திரையில் குவிந்து எரிந்து புண்ணாகிவிடும். இதனால் கண் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முழுசூரிய கிரகணத்தின்போது திடீரென இருள் நிலவும். அந்த சமயத்தில் நாம் சூரியனைப்பார்க்கும்போது நமது பார்வை மூன்று மடங்கு பெரிதாகி இருளைப்பார்க்கும். இதனால் கண்ணுக்குள் சூரிய ஒளி பத்துமடங்கு அதிகம் பாய்வதற்கு வழிவகுக்கும். இந்த சூழலில் முழு சூரிய கிரகணம் முடிந்து திடீரென ஒளி வெளிவருவதைப் பார்க்க நேரிட்டால் பத்து மடங்கு சூரிய ஒளி நமது கண்ணுக்குள் பாய்ந்து கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும். எனவே, சூரியனை வெறும் கண்ணால் நேரடியாகப்பார்க்-கக்கூடாது. தண்ணீரில் பிரதிபலிக்கும் சூரியனையும் பார்க்கக்கூடாது. டெலஸ்கோப், பைனாகுலர் மூலமும் பார்க்கக்கூடாது. ஊசித்துளை கேமரா மூலம் சூரிய ஒளியை உள்ளே செலுத்தி திரையில் பார்க்கலாம். அல்லது சூரிய கிரகணத்தின்போது சூரியனைப்பார்ப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளிவடி கட்டி கண்ணாடிகளுடன் பார்க்கலாம். அதுவும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பார்க்க வேண்டும். அலுமினிய பேப்பரால் தயாரிக்கப்பட்ட இந்த கண்ணாடிகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வணிக நோக்கமின்றி தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டு உள்ளது. சூரிய கிரகணத்தினால் சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகள் வரும் என்று சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர். இது வெறும் புரளிதான். உலகில் தினமும் எங்காவது ஒரு இடத்தில் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றம் இருந்துவருகிறது. கர்ப்பிணிப்பெண்கள் வெளியே வரக்கூடாது என்று சொல்வதும், சூரிய கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது என்பதும் மூட நம்பிக்கைதான். சூரிய கிரகணத்தன்று சாதாரண நாள்களைப்போல் பாவிக்கலாம். அந்த சமயத்தில் சாப்பிடலாம். இதற்காக, சென்னை மெரீனா காந்தி சிலை அருகிலும், திருவான்மியூர் கடற்கரையிலும் நாங்கள் டீ, பிஸ்கெட்டுடன் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்து உள்ளோம்.

சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் இது போன்று ஏற்பாடு செய்து உள்ளோம்.

இவ்வாறு சி.ராமலிங்கம், பேராசிரியர் முருகன், விஞ்ஞானி பார்த்தசாரதி ஆகியோர் கூறினார்கள்.

-------------------"விடுதலை" 19-7-2009

0 comments: