Search This Blog

29.7.09

ஜாதி வெறி, மதவெறி, மூடநம்பிக்கைகளை அகற்றி மனித குலம் ஒன்று என்று முழங்குவோம்!




சிம்பதியை விட எம்பதியை மக்களிடத்திலே பிரதிபலியுங்கள்
புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேச்சு


சிம்பதி என்பதைவிட எம்பதி என்பதை மக்களுக்குக் காட்டுங்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்து விளக்கவுரையாற்றினார்.

புதுச்சேரியில் 7.7.2009 அன்று நடைபெற்ற காஸ்மாஸ் ரோட்டரி சங்க நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

அதை எடுக்க வேண்டுமென்று நாங்களே சொன்னோம். பெரியார் பெயரையும் சேர்த்து எடுங்கள் அதைப் பற்றிக் கவலை இல்லை என்று சொன்னோம். அதனால் பெரியாருக்குப் பெயர் குறையாது. அண்ணா அவர்களுக்குப் பெயர் குறையாது.

அதன் பிறகு பார்த்தீர்களேயானால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதிது புதிதாக ஜாதித் தலைவர்களுடைய பெயரைக் கண்டுபிடிக்க ஆரம்பித்து விட்டான்.

வ.உ.சியை ஜாதிக்குள் அடக்கி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவருக்கு இருந்த பெருமை, அவருக்கு இருந்த தியாகம் சாதாரணமல்ல. இந்தியாவிலேயே இப்படிப்பட்ட தியாகம் செய்த ஒருவரைப் பார்க்கவே முடியாது. (கைதட்டல்). கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார். அவரை ஒரு குறிப்பிட்ட ஜாதியினர், நாங்கள். எங்கள் ஜாதியைச் சார்ந்தவர் இவர் என்று சொல்லி, இவரை ஒரு ஜாதி வட்டத்திற்குள்ளே அடைத்து மாலையிடுகிறோம் என்று சொல்லுகின்றார்கள். ஏன் அந்த குமிழுக்குள் அடைக்கிறார்கள்? நல்ல வாய்ப்பாக இதில் தப்பித்தவர் பெரியார் ஒருவர்தான். மீதி யாருமே தப்பிக்கவில்லை. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களையே ஜாதிக்குள் அடைத்தவர்கள் உண்டு. ஜாதி சங்கத்தவர்கள் ஒரு பக்க விளம்பரம்

அதே மாதிரி ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த ஜாதி சங்கத்தைப் போட்டு ஒரு பக்க விளம்-பரமாகக் கொடுத்து அரசாங்கம் எங்களுடைய ஜாதித் தலைவரின் பெயரை மாவட்டத்திற்கு வைத்ததற்காக நன்றி என்று போட்டார்கள். திருவள்ளுவருக்கு மட்டும் நன்றியே வரவில்லை

பெரம்பலூர் மாவட்டத்திற்கு திருவள்ளுவர் மாவட்டம் என்று அரசின் சார்பிலே பெயர் வைத்தார்கள். அதற்கு மட்டும் தான் நன்றியே வரவில்லை. காரணம் என்னவென்றால், திருவள்ளுவர் என்ன ஜாதி என்று முடிவாகவில்லை. ஆக இப்படிப்பட்ட சமுதாயத்திலே ஜாதி நம்மைப் பிரிக்கிறது மதம் நம்மைப் பிரிக்கிறது.


மதக்கோளாறுகள் எவ்வளவு பெரிய தீவிரவாதத்தை இன்றைக்கு உருவாக்கி எங்கு பார்த்தலும் நாம் நடுங்கிக்கொண்டிருக்கக் கூடிய அளவிலே மக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நிலை இருக்கிறது.

இந்த இடத்திலே நீங்கள் யாரும் ஜாதிக்கண்ணோட்டத்தை வைத்துப் பார்ப்பதில்லை. யாரையும் மதக் கண்ணோட்டம் கொண்டும் பார்ப்பதில்லை. யாரையும் கட்சிக் கண்ணோட்டம் கொண்டும் பார்ப்பதில்லை. மனிதக் கண்ணோட்டத்தோடு மட்டும்தான் பார்க்கிறீர்கள் என்று சொன்னால் உங்கள் எல்லை விரிந்த எல்லை, உலகளாவிய எல்லை என்று சொல்லும் பொழுது இந்தத் தத்துவம் தான் நாட்டிற்கு இப்பொழுது தேவை. மக்களுக்கு மட்டுமல்ல, பல தலைவர்களுக்கே தேவை. பல முக்கியமானவர்களுக்கே தேவை.

ரொட்டேரியன் தலைவர் நம்முடைய வீரமணி அவர்களுடைய திருமணத்தை நடத்தி வைத்தவன் நான். அது ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சி. இன்றைக்கு அவரைத் தலைவராக பார்க்கும் பொழுது மெத்த மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே இன்னும் பல பெரிய பொறுப்புகளை அவரும் அவரைச் சார்ந்தவர்களும், நீங்களும் எல்லோரும் சிறப்பாக இருக்க வேண்டும். நல்ல அருமையான இளைஞர்கள் நடுத்தர வயதுடையவர்களுக்கு இப்படித் தொண்டு மனப்பான்மை இருக்கிறதே அதுதான் சிறப்பு.

பணம் சம்பாதிக்க சம்பாதிக்க

பணம் அதிகம் சம்பாதிக்க, சம்பாதிக்க ரத்தக் கொதிப்பு வரலாம், வருமானவரி பயம் வரலாம். ஆனால், அதெல்லாம் இல்லாமல் தொண்டு செய்ய உங்கள் ஆயுள் நீள்வதற்கு, உங்கள் மகிழ்ச்சி பெருகுவதற்கு நீங்கள் மற்றவர்கள் உள்ளத்தில் இடம் பெறுவதற்கு இதைவிட அருமையான முறை இருக்க முடியாது.

எனவே, இந்த ரொட்டேரியன் அமைப்பு வாழ்க! ரொட்டேரியன் அமைப்பு வளர்க! ரொட்டேரியன் காஸ்மாஸ் மட்டு-மல்ல, இந்த தத்துவங்கள் உலகம் முழுவதும் பரவட்டும் என்று சொல்லி, எது உண்மையானது? எது நியாயமானது? எது ஏற்புடைத்து, எது தேவையானது? என்பதை வாழ்நாளிலே நீங்கள் ஒவ்வொருவரும் கடைப்பிடியுங்கள். அப்படிக் கடைப்பிடித்தால் இன்றைக்கு நீங்கள் நம்புகிற பல மூட நம்பிக்கைகள் உங்களைவிட்டு ஓடிப் போகும்.

மூடநம்பிக்கையையும் முறியடியுங்கள்

நோய்களை எதிர்த்து மட்டும் நீங்கள் தொண்டு செய்யாதீர்கள். கொஞ்சம் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து நீங்கள் தெளிவாகப் பணி செய்யுங்கள். அந்தப் பக்கமும் கொஞ்சம் திரும்புங்கள்.

ஏனென்றால், மூன்று கிரகங்கள் சேர்ந்தால் உலகமே அழிந்து போய்விடும் என்று சொல்லி மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு நாட்டில் ஏராளமான பேர் இருக்கிறார்கள். அறிவியல் அறிந்த உங்களுக்குத் தெரியும் கிரகணம் வருவதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனாலும் மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது.

எட்டு கிரகங்கள் ஒன்று சேர்ந்தால்

எட்டு கிரகங்கள் சேர்ந்தால் உலகமே தீர்ந்து விட்டது என்று சொல்லி, இருக்கிற ஆட்டுக்குட்டியையும் சேர்த்து அடித்து சாப்பிட்டார்கள் கிராமத்தில். குடும்பத்தோடு இருந்து நாம் கடைசிவரை முடியப்போகிறோம் என்றெல்லாம் நினைத்தார்கள். ஆனால், உலகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, நீங்கள் நோய்நாடி, நோய் முதல் நாடக்கூடிய மருத்து-வர்களாக அந்த அளவுக்குத் திகழுங்கள். நீங்கள் வறுமை நோயை மட்டும் போக்காதீர்கள்.

அறியாமை நோயைப் போக்குவதற்கு முயற்சி எடுங்கள். ஜாதிக்கொடுமையைப் போக்குவதற்கு முயற்சி எடுங்கள்.

ஜாதியை ஒழிப்பதற்கு முயற்சி

தீண்டாமையை ஒழிப்பதற்கு முயற்சி எடுங்கள். ஏனென்றால், இன்னமும் பல கிராமங்களிலே இரண்டு குவளைகள் தேநீர்க்கடைகளிலே இருக்கிறது. ஒன்று பொதுத் தொகுதி இன்னொன்று ரிசர்வ் தொகுதி. ஆனால், அதே கிராமங்களிலே கள்ளச்சாராயத்தை அவன் குடிக்கும் பொழுது ஜாதிக்குச் ஜாதி கிளாஸ் வைத்து அவன் குடிப்பதில்லை.

ஒரே கிளாசில் தான் இருவரும் குடிக்கிறார்கள். பல நேரங்களில் எங்களுக்குக் கூட சலிப்பு ஏற்படுகிறது. பரவாயில்லை. நம்மால் செய்ய முடியாததை ஒரு கிளாஸ் சாராயம் தற்காலிகமாக செய்கிறதே என்று சொல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது.

மனித நேயத்தை நிலைநாட்டிட ஆகவே ஜாதி வெறி, மதவெறி, மூடநம்பிக்கை, இவைகளை அகற்றி, மனித குலம் ஒன்று என்று சொல்லி, மனித நேயத்தை நிலைநாட்டிடக் கூடிய இந்தப் பணிகள் தொடரட்டும். உங்கள் தொண்டுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.

நீங்கள் வெளிச்சத்தைக் காட்டுகிறீர்கள். அந்த வெளிச்சம் எல்லாப் பகுதிக்கும் பரவட்டும். அதிலே இன்னும் சிறப்பு கிராமங்களை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றீர்கள்.

இந்தக் கிராம மக்களுக்கு வாய்ப்பைக் கொடுத்திருக்கின்றீர்கள். அது தான் சிறப்பானது.

ஏ.பி.ஜே அப்துல்கலாம் பாராட்டுகிறார்

நாங்கள் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பட்ட புரா திட்டத்தை மேநாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் எங்கு சென்றாலும் பாராட்டுவார்கள்.

தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவத்திலே கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பேதமிருக்கக் கூடாது. அப்படி இருப்பது அது ஒரு நவீன வர்ணாஸ்ரம தர்மமம் என்று அவர்கள் சொன்னார்கள். ஆகவே அந்த வகையிலே நீங்கள் கிராமங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

எல்லோரும் சமம்!

அடித்தளத்திலே இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். யார் ஒதுக்கப்பட்டவர்களோ, அவர்களை அணைத்து, நீங்கள் எல்லோரும் சமம் என்று காட்டக் கூடிய அந்த உணர்வைக் காட்டுங்கள்.

நீங்கள் சிம்பதியைக் காட்டுவதைவிட, அதிகமாக எம்பதியைக் காட்டுங்கள் என்று சொல்லி வாய்ப்பளித்தமைக்கு நன்றியைக் கூறி அனைவருக்கும் வாழ்த்தைக் கூறி முடிக்கிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

-------------------"விடுதலை" 29-7-2009

0 comments: