Search This Blog

28.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - சியர்ரா லியோன்ஸ்-சிங்கப்பூர்


சியர்ரா லியோன்ஸ்

இப்பகுதிக்கு முதலில் வந்த அய்ரோப்பியர்களான போர்த்துகீசியர்கள் வைத்த பெயர் லியோன்ஸ் என்பது. 1787இல் அடிமைகளாக இருந்தவர்களுக்கான மறு வாழ்வுக்கான திட்டத்தைச் செயல் படுத்த இந்நாட்டைப் பிரிட்டிஷார் தேர்வு செய்தனர். 1808இல் பிரிட்டனின் குடியேற்ற நாடாக ஆயிற்று.

1961இல் நாட்டுக்கு, விடுதலை தரப்பட்டது. 1971இல் குடியரசு நாடானது. 1978இல் புதிய அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு ஒரு கட்சி ஆட்சி முறை ஏற்பட்டது.

ஆப்ரிகாவின் மேற்குப் பகுதியில் வட அட்லான்டிக் பெருங்கடலின் கரையில் கினியாவுக்கும் லைபீரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள நாடு. பரப்பளவு 71 ஆயிரத்து 740 சதுர.கி.மீ. மக்கள் தொகை 60 லட்சம். இசுலாமியர் 60 விழுக்காடு. கிறித்துவர் 10 விழுக்காடு. மீதிப் பேர் பழங்கால நம்பிக்கைகளைக் கொண்டிருப்போர்.

இங்கிலீஷ் ஆட்சி மொழி 30 விழுக்காடு மக்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர். குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவரும் கூட. 68 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பழைய பெயர் புலுவோசுங் என்பதாகும். மூன்றாம் நூற்றாண்டின் சீன நூல்களில் இப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது. தீபகற்ப முனையில் உள்ள தீவு என இதற்குப் பொருள். அமைப்பின்படி பொருத்தமான காரணப் பெயர்தான். சுமித்ரா நாட்டின் சிறீவிஜய வமிச அரசின் அவுட் போஸ்ட் ஆக சிங்கப்பூர் 14ஆம் நூற்றாண்டு வரை திகழ்ந்தது. 15ஆம் நூற்றாண்டில் ஜாவா, சயாம் நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து கடைசியாக மலாக்கா நாட்டைச் சேர்ந்ததாக ஆனது. அடுத்த இருநூறாண்டு களில் போர்த்துகீசியர்களும் டச்சுக்காரர்களும் மாறி மாறி ஆண்டனர்.

1819இல் பிரிட்டிஷார் கைப்பற்றினர். இரண்டாம் உலகப் போரின் போது 1942 முதல் 1945 வரை ஜப்பான் சிங்கப்பூரைப் பிடித்துக்கொண்டது. போரின் முடிவுக்குப் பிறகு 1946இல் மீண்டும் பிரிட்டனின் ஆட்சிக்கு வந்தது. 1963இல் மலேசிய நாட்டரசில் சிங்கப்பூர் அங்கமாகியது. இதில் மலேயா, சபா மற்றும் சரவாக் மாநிலங்களும் அங்கம் வகித்தன. 1965இல் மலேசிய கூட்டரசிலிருந்து பிரிந்து தனி நாடாகியது.

692.7 சதுர கி.மீ. பரப்புள்ள இத்தீவின் மக்கள் தொகை 45 லட்சம். சீனப் பவுத்தர்கள், மலாய் முசுலிம்கள், இந்து, கிறித்துவ, சீக்கிய எனும் பல்வேறு மதத்தவர்களும் வாழும் நாடு. 93 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். சீனம், மலாய், தமிழ், இங்கிலீஷ் ஆகிய நான்கு ஆட்சி மொழிகள். மலாய் தேசிய மொழி.

9.-8.-1965இல் விடுதலை நாள் கொண்டாடப் படுகிறது. குடியரசுத் தலைவர் அதிபர். பிரதமர் ஆட்சித் தலைவர். அங்கும் கூட 3 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாமல் உள்ளனர்.


----------------"விடுதலை" 28-7-2009

0 comments: