Search This Blog

15.7.09

கதர்ச்சட்டைக்குள் கறுப்புச் சட்டை - காரணம் பெரியார்,காரியம் காமராசர்


காமராசர் பிறந்த நாளில்...
கவனத்துக்குரியவை!


இன்று கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் (1903). தி.மு.க ஆட்சியில் காமராசரின் பிறந்த நாளை கல்விப் புரட்சி நாளாகக் கொண்டாடுவது மிகவும் பொருத்தமானதாகும். அவரை மதிப்பது இந்த வகையில்தான் மிகச் சரியானதுமாகும்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதான் இந்து மதத்தின் மனுதர்மமாகும்.

இராமாயணத்தில் சம்புகனை இராமன் வெட்டிக் கொன்றதும், மகாபாரதத்தில் ஏகலைவனின் கட்டை விரலை துரோணாச்சாரியார் காணிக்கையாகப் பெற்றுக்கொண்டதும் எல்லாம் இந்த அடிப்படையில்தான்.

உடம்பெல்லாம் மூளை என்று பார்ப்பனர்களால் வருணிக்கப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் தமிழ்நாட்டுக்கு (சென்னை மாநிலத்துக்கு) இருமுறை முதலமைச்சராக வந்துள்ளார். அந்த இரண்டு முறையும்கூட மறக்காமல், திட்டமிட்ட வகையில் ஒரு காரியத்தைச் செய்தார் என்பதைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். 1938லும் கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார்; 1952லும் 6000 பள்ளிகளை மூடினார்.

காமராசர் என்ற மாமனிதர் இந்த இடத்தில்தான் உயர்ந்து நிற்கிறார். எந்தக் காரணத்திற்காக கல்வியில் பார்ப்பனர்கள் கை வைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட காரணத்தால், தந்தை பெரியார் என்ற மாபெரும் சக்தியின் துணை கொண்டு நாடெல்லாம் கல்வி வெள்ளம் கரைபுரண்டு ஓடச் செய்தார்.

இலவசக் கல்வி, இலவச சீருடை, இலவசப் புத்தகங்கள், மதிய உணவு என்று கல்விக் கண்களைக் கடைகோடி மனிதருக்கும் திறந்துவிடும் ஒரு அரும்பெரும் செயலைச் செய்தார்.

கல்விக் கண்ணைத் திறந்த காமராசர், பச்சைத் தமிழர் காமராசர், கர்ம வீரர் காமராசர் என்ற முழக்கத்தை நாடெங்கும் கறுஞ்சட்டைச் சேனை முழங்கிட அதுவே அனைத்துச் சமூகத்தின் பரப்பிலும் எதிரொலித்தது.

கதர்ச்சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று காமராசர் பற்றி கல்கிகள் கார்ட்டூன்கள் போட்டன. ஆச்சாரியாரோ காமராசரைக் கருப்புக் காக்கை என்று பார்ப்பனர்களுக்கு அடையாளம் காட்டினார். அந்தக் கருப்புக் காக்கையைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்று கூட சென்னைக் கடற்கரையில் முழக்கமிட்டார். (டில்லியிலே பட்டப் பகலிலே பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் நிர்வாண சாமியார்களும், சங்கராச்சாரியார்களும், ஜனசங்கத்தினரும் காமராசரை தீ வைத்துக் கொல்ல முயற்சித்தனர் என்பதை இந்த இடத்தில் நினைவூட்டிக் கொள்ளவேண்டும்)

கல்விக் கோட்டைக்கு அன்று காமராசர் போட்ட அஸ்திவாரத்தின் பலன்தான் இவ்வாண்டு மருத்துவக் கல்லூரியில் முற்படுத்தப்பட்டவர்களுக்கு திறந்த போட்டியில் வெறும் 54 இடங்களே என்கிற நிலை!

திறந்த போட்டிக்கான மொத்த இடங்கள் 460; இதில் பிற்படுத்தப்பட்டோர் 300; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72; தாழ்த்தப்பட்டோர் 18; முசுலிம் 16; முன்னேறியோர் 54. அதேபோல, மருத்துவக் கல்லூரியில் சேர தகுதி மதிப்பெண்கள் (கட் ஆஃப் மார்க்) 200 க்கு 200 பெற்ற 8 பேர்களில் பிற்படுத்தப்பட்டோர் 7, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒருவர்.

இந்தப் புரட்சி நிகழ்ந்தது எப்படி? காரணம் தந்தை பெரியார்- காரியம் கல்வி வள்ளல் காமராசர் அன்றோ!

அதே நேரத்தில் மத்தியில் சமூகநீதியின் இன்றைய நிலை என்ன? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 60 ஆண்டு சுதந்திரத்தில் இன்னும் கல்வியில் இட ஒதுக்கீடு கிடையாது. மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் சட்டப்படியான இட ஒதுக்கீடு அவர்களுக்கு உண்டென்றாலும் அதனை அமல்படுத்துவதில் ஆயிரம் ஆயிரம் முட்டுக்கட்டைகள்.

52 சதவிகித மக்களுக்கு வெறும் 27 சதவிகித இட ஒதுக்கீடு, அதுவும் ஆண்டுக்கு 9 சதவிகிதம் என்று மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்கிற பரிதாப நிலை.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியும் இன்னொருபுறம்.

கடந்த மத்திய ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் 2008 டிசம்பரில் அவசர அவசரமாக மாநிலங்களவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. விவாதங்கள் கிடையாது இரண்டே நிமிடங்களில் அது நிறைவேற்றப்பட்டது. 47 கல்வி நிறுவனங்கள் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதிலிருந்து விதிவிலக்கு என்பது எத்தகைய சமூக அநீதி! உயர்ஜாதிக்காரர்களின் சூழ்ச்சி! தாழ்த்தப்பட்டவர்களுக்கே இந்த நிலைமை என்றால், பிற்படுத்தப்பட்டவர்களைப் பற்றிக் கேட்கவாவேண்டும்?

சமூகநீதியின் முதுகில் குத்தும் கீழறுப்பு வேலைகள் இன்னும் நடந்துகொண்டுதானிருக்கின்றன. கல்வி வள்ளல் காமராசரின் பிறந்த நாளில் இதுகுறித்து உரத்த சிந்தனை தேவைப்படுகிறது. தனியார்த் துறைகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு என்பது மிக மிக முக்கியமாக வலியுறுத்தப்பட்டு செயல்படுத்தப்படவேண்டும். அந்த நிலைதான் காமராசர் பிறந்த நாளில் அவருக்குக் காட்டும் மரியாதையும், பற்றுதலும் ஆகும்.

உரத்துச் சிந்திப்போம்!

செயல்படுத்துவோம்!!

--------------------நன்றி:- "விடுதலை" 15-7-2009

0 comments: