Search This Blog
6.8.09
உலக நாடுகள் -தூரப்பார்வை - தாய்லாந்து-டோங்கா
தாய்லாந்து
மோன் மற்றும் கமர் வமிச ராஜ்யங்களின் ஒரு பகுதியாக 9ஆம் நூற்றாண்டிலிருந்து விளங்கிய பகுதி தாய்லாந்து. தாய் மொழி பேசிய மக்கள் சீனாவில் இருந்து இந்தப் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தனர். 13ஆம் நூற்றாண்டில் இரண்டு அரச பரம்பரைகள் உருவாகின. 1220இல் சுகேரத்தை வமிசமும் 1296இல் சாங்மாய் வமிசமும் உருவாகின. 1767இல் இந்த வமிச ஆட்சியை பர்மாக்காரர்கள் அழித்துவிட்டனர். 1782இல் சாக்ரி வமிசம் ஆட்சிக்கு வந்து பாங்காக் நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு அரசின் எல்லைகளை விரிவாக்கினர். மலாய், லாவோஸ், கம்போடியா பகுதிகள் இவரது ஆளுகையில் வந்தன. 1856இல் நாட்டின் பெயர் சயாம் என்றழைக்கப் பட்டது.
தென்கிழக்காசியப் பகுதிகளில் மேலை நாட்டினர் தம் ஆதிக்கத்தைப் பரவ விட்டபோதிலும் சயாம் தனித்தே இருந்தது. 1932இல் நாட்டில் குடிக் கோனாட்சி முறை புகுத்தப்பட்டது. ராணுவப் புரட்சி இதற்குக் காரணமாக இருந்தது. 1939இல் மீண்டும் தாய்லாந்து எனும் பெயர் வைக்கப்பட்டது.
பர்மாவுக்குத் தென் கிழக்கே அந்தமான் கடலிலும் தாய்லாந்து வளைகுடாக் கடலின் கரையிலும் இடைப்பட்டு அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பளவு 5 லட்சத்து 14 ஆயிரம் சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 6 கோடியே 47 லட்சம். மக்களில் 95 விழுக்காட்டினர் பவுத்த மதத்தினர். முசுலிம்கள் 4 விழுக்காடு. இந்துக்கள் கூட மிகக் குறைந்த அளவில் உள்ளனர்.
தாய் மொழி ஆட்சி மொழி. இங்கிலீஷ் பேச்சு மொழி. 93 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள். மன்னர் நாட்டின் தலைவர். பிரதமர் ஆட்சியின் தலைவர். தாராளப் பொருளாதார முறை உள்ள நாடு. ஆனாலும் 10 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். ஒரு விழுக்காடு மக்களுக்கு வேலை கிட்டாத நிலையும் உண்டு.
தாய் கலாச்சாரத்தையும் இயற்கை அழகையும் அழகிய கடற்கரையையும் பவழப் பாறைகளையும் கண்டு களிக்க உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலாத் தொழில் முக்கிய வருமானம் தருகிறது. தாய் உணவும் கூட சிறப்பானது.
டோங்கா
பாலினீசியர்கள்தான் டோங்கோவில் குடியேறி வசிக்கத் தொடங்கிய மக்கள். 1616இல் ஆலந்து நாட்டினர் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்த முயன்றனர். 1773இல் இங்கு வந்த காப்டன் ஜேம்ஸ் குக்கைத் தொடர்ந்து பிரிட்டிஷாரும் வந்தனர்.
டவுபாஹு டுபோ என்பவர் தற்போதைய அரசை 1831இல் நிறுவி முதலாம் ஜார்ஜ் என்ற பெயரில் ஆளத் தொடங்கினார். அவரின் பெயரன் இரண்டாம் ஜார்ஜ் பிரிட்டிஷாருடன் நட்புணர்வு ஒப்பந்தம் புரிந்து பிரிட்டிஷ் பாதுகாப்பில் நாடு இருக்குமாறு செய்தார். 1959இல் மீண்டும் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப் பட்டது. என்றாலும் 1970இல் டோங்காவுக்கு விடுதலை கிடைத்தது.
தென்பசிபிக் பெருங்கடலில் ஓசியானியா பகுதியில் உள்ள தீவுக் கூட்டங்களில் அமைந்துள்ள டோங்கா நாட்டின் பரப்பளவு 748 சதுர கி.மீ. மக்கள் தொகை ஒரு லட்சத்து 15 ஆயிரம். மக்கள் பேசும் மொழி டோங்கன். இங்கிலீசு மொழியும் பேசுகின்றனர். 99 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர். எல்லாரும் கிறித்துவ மதத்தினர்.
பரம்பரைக் குடிக்கோனாட்சி நடைபெறும் நாட்டின் தலைவராக மன்னரும் ஆட்சித் தலைவராகப் பிரதமரும் உள்ளனர். மக்களில் 13 விழுக்காடு வேலை கிட்டாதோர். நாட்டில் இருப்புப் பாதை கிடையாது.
-------------------"விடுதலை" 5-8-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment