Search This Blog

7.8.09

பெரியார் செய்த சமூகப் புரட்சி சாதாரணமல்ல!




பிற்படுத்தப்பட்ட சமுதாய முதல் உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதியாக சதாசிவம் அவர்கள்
வரக்கூடிய வாய்ப்புண்டு
குருவரெட்டியூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு


பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி சதாசிவம் உச்சநீதிமன்ற முதல் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த தலைமை நீதிபதியாக வருவார் என்று குருவரெட்டியூர் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

குருவரெட்டியூரில் 18.7.2009 அன்று நடை-பெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

அந்த காலத்தில் நம்மாள்கள் இப்படி இருந்தார்கள்.

அளவறிந்து ஆசைப்படு

நீதிபதி வேணுகோபால் அவர்களை ஒரு கூட்டத்தில் பாராட்டினோம். அந்தக் கூட்டத்தில் அவர் சொன்னார்: நான் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பி வரும்பொழுது என் தந்தையார் இருந்த நீதிமன்றத்தை வாசலில் இருந்து எட்டிப் பார்ப்பேன்.

பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தால் நம்முடைய சிந்தனை எப்படி வந்தது என்று சொன்னால், நான் என் தந்தையார் பங்கா இழுப்பதை பார்த்து இந்த வேலை நமக்கு என்றைக்காவது கிடைக்காதா என்று பார்த்தேன் என்று சொன்னார். எந்த வேலை? நீதிபதி வேலை அல்ல. அப்பா பங்கா இழுத்தார் பாருங்கள். அந்த வேலை நமக்குக் கிடைக்காதா என்று எண்ணினார்.

நமது மனதை எப்படி ஆக்கிவிட்டார்கள் என்றால் எதற்கும் அளவறிந்து ஆசைப்படு; உன் தகுதிக்கு மேல் ஆசைப்படாதே என்று சொல்லி வைத்து விட்டார்கள். அதனால் நம்மாள் பியூன், ரயில்வே கேட்கீப்பர், மூட்டை தூக்குகிறவர், படிப்பறிவு இல்லாதவர் எல்லாம் சிந்திக்கவே மாட்டார்கள். சிந்திக்கவிடாமல் ஆக்கிவிட்டார்கள்.

தந்தை பெரியார் உழைத்த உழைப்பால்தான் இந்த நிலைமை மாறியது. அதனால் நம்மாள் ஆசைப்படுவதில் கூட அளவறிந்து ஆசைப்பட வேண்டும் என்று ஆக்கப்பட்டார்கள். இன்றைக்கு அந்த சமுதாய நிலை எப்படி புரட்டிப் போடப்பட்டது என்று சொன்னால் உச்சநீதிமன்றத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உயர் பதவிக்கு வந்தார்கள். இன்றைக்கு நாட்டை நடத்துவதே உச்சநீதிமன்றம்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எல்லாம் இரண்டாம் பட்சம்.

தெரு கோணலாக இருக்கிறதாக வழக்கு?

இப்பொழுது எதற்கெடுத்தாலும் வழக்கு வழக்கு என்று சொல்கிறார்கள். குருவரெட்டியூரில் தெரு கோணலாக இருக்கிறதா? உடனே இதைப் பற்றி ஒரு பொது நல வழக்கு போடுகிறார்கள். அதுவும் நீதிபதிகள் முன்னாலே வருகிறது. நீதிபதிகள் அரசாங்கத்திடம் கேள்வி கேட்கிறார்கள்.

ஆகவே நடைமுறையில் பார்த்தீர்களேயானால் நீதியரசர்கள்தான் இந்த நாட்டையே நடத்துகிறார்கள். மக்களாலே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நடத்துவது இரண்டாம் பட்சம்.

ஜஸ்டிஸ் சதாசிவம்

கடைசியாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு. இதற்கு மேல்மாற்ற முடியாது என்று சொல்லுகின்-றார்கள். இன்றைக்கு உச்சநீதிமன்றம்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிற கடைசி இடம். உயர்நீதிமன்றம் அதற்கு முன்கட்டம். இந்த இரண்டு இடத்திலும் நம்மாள்கள் நுழைய முடியாத இடமாக இருந்தது. முழுக்க, முழுக்க அக்கிரகாரமாகவே இருந்தது.

இன்றைக்கு என்ன சூழ்நிலை? உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்லுகின்றேன். உங்கள் ஊருக்குப் பக்கத்திலேயே, இதே அம்மாப்பேட்டை யூனியனைச் சார்ந்த ஜஸ்டிஸ் சதாசிவம் அவர்கள் உச்சநீதிமன்றத்திலே அமர்ந்திருக்ககின்றார்கள். அவர் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்.

நீதிமன்றத்தின் 60 ஆண்டுகால வரலாற்றில்

இந்தியாவினுடைய உச்சநீதிமன்ற வரலாறு ஒரு 50 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாறு_60 ஆண்டுகால வரலாறு. இந்த 60 ஆண்டுகால வரலாற்றில் இரண்டே, இரண்டு பிற்படுத்தப்பட்ட நீதிபதிகள்தான் உச்சநீதிமன்றத்திற்கு வந்திருக்கிறார்கள்.

முதலில் பிற்படுத்தப்பட்ட-வராக வந்தவர். ஜஸ்டிஸ் ரத்னவேல்பாண்டியன் அதற்கடுத்து பிற்படுத்தப்பட்டவர்களே இல்லை. நாங்கள் இந்த கோரிக்கையை முன் வைத்து வெய்யிலில் கத்திக்கொண்டேயிருந்தோம்.

இன்றைக்கு உச்சநீதிமன்றத்திற்கு ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக வந்திருக்கின்றார். அவர் கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்து அதன் பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகச் சென்றவர்.

அவர் கொடுத்த இரண்டு தீர்ப்புகள் இருக்கிறதே

இந்தப் பகுதியைச் சார்ந்த நீதிபதி சதாசிவம் அவர்களை ஒரு பள்ளிக்கூட ஆண்டுவிழவிற்குக் கூப்பிட்டிருக்கின்றார்கள்; நான் படித்தேன். அய்யம்பேட்டையில் பேசியிருக்கிறார். நான் பத்திரிகையில் படித்தேன். அவர் பேசினார். நான் இரண்டு மைல் தூரம் நடந்து சென்று படித்தேன். நீதிபதி சதாசிவம் அவர்கள் மக்களைப் பார்த்து தீர்ப்பு எழுதியவர். சட்டம் என்ன சொல்லுகிறது என்று பார்த்து தீர்ப்பு எழுதியவரல்லர்.

அவர் கொடுத்த இரண்டு தீர்ப்புகளை எங்களுடைய விடுதலையில் வாழ்வியல் சிந்தனை-யில் எழுதியிருக்கின்றேன். அவருக்கே ரொம்ப ஆச்சரியம். அப்படிப்பட்டவர் இன்றைக்குப் படிப்படியாக வந்தவர். நீதிபதி சதாசிவம் அவர்கள் சட்டப்படிப்பு படித்து, பிறகு வக்கீலாகி உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்து பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாக வந்தவர்.

பெரியார் பிறந்திருக்காவிட்டால் இந்த வாய்ப்புக் கதவுகள் திறந்திருக்குமா? நம்மவர்களுக்கு தகுதியிலோ திறமையிலோ குறைச்சல் கிடையாது. எல்லோருக்கும் தகுதி இருக்கிறது. திறமை இருக்கிறது. ஆனால் கதவு திறந்தால்தானே திறமையைக் காட்ட முடியும் இவன் கதவை மூடி வைத்துவிட்டானே.

நாளைக்கு இவரே பிற்படுத்தப்பட்ட சமுதாய முதல் நீதிபதி

கோயில் கருவறைக்குள் வரக்கூடாது என்று எப்படி ஆக்கி வைத்திருக்கின்றானோ, அதே போல ஆக்கி வைத்திருக்கின்றார்களே. திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்ததனாலே இன்றைக்கு இந்தப் பகுதியைச் சார்ந்த ஜஸ்டிஸ் சதாசிவம் அவர்கள் உச்சநீதிமன்றத்திலே தலைமை நீதிபதிக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிறார் என்றால் இதை விட வேறு பெருமை என்ன வேண்டும்? பெரியார் செய்த சமூகப் புரட்சியிலே இவைகள் எல்லாம் மிக முக்கியமானவைகள்.

நடைமுறை உதாரணங்களையே உங்களுக்குச் சொல்லலாம். இன்னும் கொஞ்ச நாள் ஆனால் அடுத்த தலைமை நீதிபதியாக வரக்கூடிய வாய்ப்பு உண்டு. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த முதல் தலைமை நீதிபதியாக வரக்கூடிய வாய்ப்பு நீதியரசர் சதாசிவம் அவர்களுக்கு இருக்கிறது என்று சொல்லும் பொழுது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி.

எங்களுக்குத் தனிப்பட்ட முறையிலே அதனால் என்ன லாபம்? நம்முடைய மக்களுக்கு ஆற்றல் இல்லை. அறிவு இல்லை, திறமை இல்லை என்று சொன்னானே. இன்றைக்கு அத்தனையும் வந்தாகிவிட்டதே. ஆகவே தந்தை பெரியார் செய்த சமூகப் புரட்சி. சாதாரணமல்ல. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் பாபு ஜெகஜீவன்ராம். அவர் உத்தரப்பிரதேசத்திற்குப் போனார். உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மறைந்த சம்பூர்ணானந்த் அவர்களுடைய சிலையைத் திறக்க முடியவில்லை.

இராணுவ அமைச்சர் ஜெகஜீவன்ராம்

அவர் சிலைக்கு அருகில் நின்று கூட சிலையைத் திறக்கவில்லை. மின்சார பொத்தானை அழுத்தி சிலையைத் திறந்தது தான் தாமதம்.

உயர்ஜாதிக்கார பார்ப்பனர்கள் ஜெகஜீவன்ராம் அந்த சிலையைத் திறந்ததால் சிலை தீட்டுப்பட்டு விட்டது என்று சொல்லி பத்து குடம் கங்கை நீரை அந்த சிலை மீது ஊற்றினார்கள்.

ஜெகஜீவன்ராமே திரும்பிப்போ

பாபு ஜெகஜீவன்ராம் இந்தியாவினுடைய இராணுவ அமைச்சர். இவர் ஸ்பெசல் ஃபிளைட்டில் இராணுவ விமானத்தில் போய் இறங்குகிறார். இவர் ஒன்றும் அங்கு பேசவில்லை. பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுக்கு எதிராக ஆணவமாக ஒலி முழக்கங்களை காசி பெனாரஸ் பல்கலைக் கழகத்தில் படித்த பட்டமேற்படிப்பு படித்த உயர்ஜாதி பார்ப்பன மாணவர்கள் முழங்கினர்.

தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரரான ஜெகஜீவன்ராமே திரும்பிப்போ! நீ சிலை திறக்காதே. நீ சிலை திறந்தால் அந்த சிலை தீட்டாகிவிடும். ஆகவே சிலையைத் திறக்காதே திரும்பிப்போ என்று வடநாட்டு மாணவர்கள் முழங்கினர். காரணம் பெரியார் அங்கு பிறக்கவில்லை.

சென்னையில் கதறினார் ஜெகஜீவன்ராம்

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெகஜீவன்ராம் நேராக சென்னைக்கு வந்தார். அதையே பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது சொன்னார். நான் தமிழ்நாட்டு மண்ணில் நிற்கும்பொழுது கவுரவமாக நிற்கின்றேன்.

அதைப் பெருமையாக நினைக்கின்றேன். காரணம், இது பெரியார் பிறந்த மண். சென்னை மயிலாப்பூர் பொதுக் கூட்டத்தில்தான் ஜாதிக்கொடுமையைச்-சொல்லி ஜெகஜீவன்ராம் கதறினார்.

பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் சம்பூர்ணானந்த் சிலையைத் திறந்து விட்டு இவர் விமானத்தில் ஏறியவுடனே பத்து குடம் தண்ணீரைக் கொண்டு வந்து அந்த சிலை மீது ஊற்றினார்கள். ஊற்றியவர்கள் பாமரமக்கள் அல்லர், படித்த மாணவர்கள். ஏனென்றால் கங்கா ஜலத்தை ஊற்றினால்தான் தீட்டு போகும் என்று ஊற்றினார்கள்.

இன்றைக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு செய்த பெருமை கலைஞர் ஆட்சியை சாரும். இந்தியாவிற்கே முன்னுதாரணமாகச் செய்தார் முதல் முறையாக. சிலையைத் திறக்க ராணுவ அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவர்களுக்கு உரிமை இல்லை. ஆனால் அவருடைய மகள் இந்திய நாடாளுமன்றத்தினுடைய சபாநாயகராக அமர்ந்திருக்கின்றார்.

சமுதாய மாற்றம் எப்படி நடந்தது?

இந்தச் சமுதாய மாற்றம் எப்படி நடந்தது. சும்மா அவர்கள் சொன்னார்கள், இவர்கள் சொன்னார்கள் என்பது மேலெழுந்த வாரியான புறத்தோற்றம். ஆனால் அடித்தளமானது சமுதாய மாற்றம். அந்தச் சிந்தனை மாற்றம் என்பது அதுதான்.

இங்கே கருப்பண்ணன் பேசும்பொழுது சொன்னார் பாருங்கள். தந்தை பெரியார் சொன்னதை சிந்தித்துப்பார். அவன் எப்படி கீழ் ஜாதி? இவன் எப்படி மேல் ஜாதி? இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? அறிவிலா? ஆற்றலிலா? திறமையிலா? எதில் என்று கேட்டார் பாருங்கள். அப்படி சிந்திக்க வைத்ததனுடைய விளைவுதான், இன்றைக்கு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? சாதாரண மாற்றமல்ல.

சிலை செதுக்குவது நம்மாள்

பெரிய அளவுக்கு மாற்றங்கள் வந்திருக்கின்றன. எனவே தந்தை பெரியார் அவர்களுடைய பணி என்பதிருக்கின்றதே சமுதாய மாற்றத்தைக் கொண்டது. சமுதாயப் புரட்சியைக் கொண்டது.

கோயில் கட்டுவது நாம்; இடம் கொடுப்பது நாம்; சிலை அடிப்பது நாம்; அதற்கு மானியம் விடுவது நாம். எல்லாம் செய்த பிறகு செட்டியார்வாள் நகருங்கோ, முதலியார்வாள் நகருங்கோ, நாடார்வாள் நகருங்கோ, கவுண்டர்வாள் நகருங்கோ என்று இப்படி சொல்லி-விட்டு, ஒரு பயல் சின்ன மணியைத் தூக்கி அடித்துக்கொண்டே கோயில் கருவறைக்குள் வந்து விடுகின்றான்.

------------------- தொடரும்... "விடுதலை" 6-8-2009

0 comments: