Search This Blog

12.6.09

இந்துமத அடிப்படையில் ஒரு அரசு விழாவின் தொடக்கம் நடைபெறலாமா?




(அரசு விழாவில் இந்து மத பூஜை
மெட்ரோ ரயில் திட்டத்தில் நடந்த கூத்து

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை உயர் ரயில் பாதை அமைக்கும் பணியின் தொடக்க விழா நேற்று நடந்தது. கட்டுமானப் பணிகளை இந்து மதாச்சாரப்படி பூமி பூஜை என்பதைப் பார்ப்பனப் புரோகிதர்கள் செய்து தொடங்கி வைத்தனர். மதச்சார்பின்மையும், இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 51-ஏ-இன்படிக்கான அறிவியல் மனப்பான்மையையும் வளர்ப்பதில் அரசு அதிகாரிகள் காட்டும் அக்கறையும் இதன்மூலம் விளங்குகிறது(!).)



பூமி பூஜையா?

சென்னை - மெட்ரோரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை உயர் ரயில் பாதை அமைக்கும் பணியின் தொடக்க விழா கடந்த புதனன்று (10 ஆம் தேதி) நடைபெற்றது. இந்து மதச் சடங்குகளுடன் பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது. ஏடுகளில் படத்துடன் செய்திகள் விரிவாக வெளிவந்துள்ளன.

சிறந்த திட்டம்தான் - சென்னை மாநகரம் போக்குவரத்து நெரிசலில் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது.

மக்கள் பெருக்கம் ஒரு பக்கம் - வாகனங்களின் பெருக்கம் இன்னொரு பக்கம்; இந்த நிலையில் மெட்ரோரயில் திட்டம் என்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

அதெல்லாம் சரிதான். இந்தத் திட்டத்தின் தொடக்க விழா என்பது இந்துமத ஆச்சாரப்படி நடத்தப்பட்டது சட்டப்படி சரியானதுதானா?

எந்தமதச் சடங்குகளும் இடம்பெறக்கூடாது என்பது தான் மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தின் நிலைப்பாடு. அப்படி இருக்கும்போது இந்து மதச்சடங்குகளின் அடிப்படையில் புரோகிதப் பார்ப்பனர்களை அழைத்து நடத்தப்பட்டது எப்படி?


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே இந்தியா என்பது மதச்சார்பற்ற (செக்குலர்) நாடு என்று எடுத்த எடுப்பிலேயே சுவர் எழுத்தாக முகத்தில் அடித்ததுபோல வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது - இந்த நிலையில் இந்துமத அடிப்படையில் ஒரு அரசு விழாவின் தொடக்கம் நடைபெறலாமா?

இது ஒரு பக்கம் இருக்க - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ பிரிவு என்ன சொல்கிறது? அடிப்படைக் கடமைகள் என்ற பகுதியில் உட்பிரிவு (எச்) விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம், ஆராய்வு, ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பது அடிப்படைக் கடமையாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பார்ப்பனரை அழைத்து சடங்குகளை ஒரு அரசு விழாவில் அனுமதிப்பது விஞ்ஞான மனப்பான்மைக்கு ஏற்றதுதானா?

ரயிலைக் கண்டுபிடித்தது மந்திரங்களா? சாஸ்திரங்களா? இதற்கு முன்பேகூட அரசு விழாக்கள் பூமி பூஜையோடு நடந்தனவே - அவற்றால் காதொடிந்த ஊசி முனை அளவுக்காவது பலன் ஏற்பட்டது உண்டா?

இப்படி பூமி பூஜை போடுவதன் மூலம் விபத்துகள் வராமல் தடுக்கப்படும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? ஆண்டு ஒன்றுக்கு எத்தனை இரயில் விபத்துகள் நடக்கின்றன - அவை எல்லாம் பார்ப்பனரை அழைத்து பூமி பூஜை நடத்தப்பட்டவைதானே?
அப்படி நடத்தப்பட்டதால் இப்பொழுதும் நடத்தப்படுகிறது என்பது சமாதானம் ஆகாது!

அறிவியல் கண்டுபிடித்தது மின்சாரம் - ஆன்மிகம் கண்டுபிடித்தது பிரசாதம் என்று தமிழ்நாட்டின் சுவர் எழுத்துக்களில் எல்லாம் கருஞ்சட்டை தோழர்கள் எழுதி வைப்பதுண்டு.
படித்தவர்களே இப்படி மூடத்தனமான கொள்கையில் ஈடுபடலாமா? அதிகாரிகள் தம் சொந்த வீட்டில் நடக்கும் கல்யாணம், கருமாதி இத்தியாதி இத்தியாதி சங்கதிகளில் தங்கள் மூடத்தனத்தை தம் சொந்த செலவில் அரங்கேற்றிக் கொள்ளட்டும் - படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லை என்று காட்டிக் கொள்ளட்டும்.
ஆனால், ஒரு அரசு விழாவில், அரசு செலவில் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக செயல்படலாமா?

சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் - சட்டம் மீறப் படவே கூடாது - ஆனால், மத விவகாரங்களில் மட்டும் விதிவிலக்கு என்று புதிதாக அரசு அதிகாரிகள் தனியே சட்டம் ஒன்றே எழுதி வைத்துள்ளனரா?

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பிறந்த தமிழ்நாட்டில் இருக்கிற அதிகாரிகளுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வேண்டாமா?

அரசு அலுவலகங்களில் இந்து மதத்தவர்கள் மட்டும்தான் பணிபுரிகிறார்களா? மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள், மதங்களில் நம்பிக்கை இல்லாதவர்களின் நிலை என்ன?
பொதுமக்களின் வரிப்பணத்தில்தானே திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. அந்தப் பொதுமக்கள் என்றால், பார்ப்பனிய இந்த மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் தானா?
தேவையில்லாத மத மாச்சரியங்களை உண்டு பண்ணும் இத்தகைய அதிகாரிகள்மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கவேண்டியது அவசியமாகும்
. வேலியே பயிரை மேய்வதை எந்த காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்கக் கூடாது - கூடவே கூடாது!


---------------------"விடுதலை"தலையங்கம் 12-6-2009

1 comments:

மணிப்பக்கம் said...

உண்மையில் காங்கிரஸ் காரர்கள், திமுக காரர்களை விட பாஜக எவ்வளவோ தேவலாம்! அகிம்சைவாதிகளான காங்கிரஸ் பழிக்குபழி என்று தமிழர்கள் மேல் பேயாட்டம் ஆடிமுடித்து தேர்தலில் அதற்கு தமிழக மக்களின் அங்கீகாரத்தையும் பெற்று விட்டது! வாழ்த்துக்கள் கருணாநிதி, சோனியா!