Search This Blog
13.6.09
"அவதாரங்கள்" பற்றி தந்தை பெரியார்
நம்மில் சமுதாய சீர்திருத்தத்திற்கு யார் பாடுபட்டாலும் அவர்களுக்கு பார்ப்பனர்கள் அளிக்கும் பட்டங்கள் என்னவென்றால் இராட்சதன், அரக்கன், அசுரன் என்கின்றதான பட்டங்களாகும்.
இந்தப் பெயர்களின் தத்துவம் என்னவென்று சிந்தித்துப் பார்த்தால் இன்று இந் நாட்டில் நடந்து வரும் சமுதாயப் (பார்ப்பனர் -- பார்ப்பனரல்லாதார்) போராட்டமானது 1000, 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியாவில் தொடங்கி நடந்து வந்திருக்கிறது என்பதுதான்.
அவதார கற்பனைக் கதைகள்
கடவுள் (விஷ்ணு) அவதாரங்கள் என்கின்ற பார்ப்பன கற்பனைக் கதைகளைப் பார்த்தால், நமது அரசர்கள் அக்காலங்களில் பார்ப்பனர் விஷயங்களில் எப்படி எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், அவற்றைப் பார்ப்பனர்கள் எப்படி எப்படி சமாளித்து இருக்கிறார்கள் என்பதும் விளங்கும். அந்த விஷ்ணு அவதார எண்ணிக்கை 10- - என்றாலும் 10 - க்கும் கதைகள் இல்லை.
அவற்றில் (1) மச்ச; (2) கூர்ம; (3) வராக; (4) நரசிம்ம; (5) வாமன; (6) பரசுராம; (7) ராம; (8) பலராம; (9) கிருஷ்ண என்பவையான 9 அவதாரங்களுக்குத்தான் கதைகள் இருக்கின்றன. 10-வது அவதாரம் இனிமேல் ஏற்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது. அந்த அவதார காலத்தில் இன்ன இன்ன காரியம் நடக்கும்; மக்கள் இப்படி இப்படி நடந்து கொள்ளுவார்கள் என்பதாகக் காணப்படுகிறது.
10 - வது அவதாரப் போராட்டம் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போரே!
அப்படிக் காணப்படுவதற்கு ஏற்ப இன்று காரியங்கள் நடக்கின்றன. அதாவது இன்றைய பார்ப்பனர் -- பார்ப்பனரல்லாதார் போராட்டம்தான், 10 - வது அவதாரப் போராட்டம்! அதுதான் இன்று நடைபெறுகிறது என்பதற்கு, அந்த அவதாரங்களுக்கு எதிரிகளாக இருந்த இராட்சதர்கள் முதலிய பெயர்களை இன்றும் பார்ப்பனர் நமக்குச் சூட்டுவதே ஆதாரமாகும். அதாவது ராஜாஜி நம் தலைவர்களை இராவணன், இரண்யன், சூரபத்மன், ஜாபாலி என்றெல்லாம் சொல்லுவதாகும். சத்தியமூர்த்தியும் பல தடவை சொல்லி இருக்கிறார்.
-------------------- தந்தைபெரியார் 88 ஆம் ஆண்டு பிறந்த நாள் "விடுதலை மலர்" - 1966
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment