Search This Blog

10.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை- காங்கோ குடியரசு-கோட்டிலவாய்ர்-காஸ்டாரிகா



காங்கோ குடியரசு
(பழைய பிரெஞ்ச் காங்கோ)


காங்கோ ஆற்றுக்கு வட பகுதியில் ஏற்கெனவே இடைப்பட்ட காங்கோ எனவும் பிரெஞ்ச் காங்கோ எனவும் அழைக்கப்பட்ட நாட்டின் பாதுகாப்பை பிரெஞ்ச் நாடு ஏற்றுக்கொள்ளும் உடன்படிக்கையை உள்நாட்டு இனத் தலைவர்களிடம் செய்து கொண்டு பிரெஞ்ச் நாட்டின் பிடிக்குக் கொண்டு வந்தவர் பியர்ரே சவார்கன் எனும் அதிகாரி. படெக்கெ எனும் பூர்வ குடியினருடன் உடன் படிக்கை செய்து கொண்டார்.

1958இல் சுயாட்சி அதிகாரம் அளிக்கப்பட்ட இந்நாடு 1960இல் விடுதலை பெற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. ஃபுல்பர்ட் யோவுலு என்பவர் அதிபரானார்.

விடுதலை பெற்றதிலிருந்து மார்க்சியக் கொள்கைப்படி நடந்த ஆட்சி 1990 இல் எல்லா கம்யூனிஸ்ட் நாடுகளுடனும் சேர்ந்து, முடிவடைந்தது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக் கப்பட்ட ஆட்சி 1992 இல் அமைந்தது.

1997 இல் ஆப்ரிக்க நாடுகளுக்கே உரித்தான உள்நாட்டுப் போர் கிளர்ந்தது. பழைய ஆட்சியின் மார்க்சியக் கொள்கைக்காரரான டெனிஸ் சசாவு நெகுசோ மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். ஆனாலும் நாட்டில் கலவரங்களும் குழப்பங்களும் தான் நிலவுகின்றன.
3 லட்சத்து 42 ஆயிரம் ச.கி.மீ. பரப்பளவு உள்ள நாட்டில் 6 கோடியே 27 லட்சம் பேர் வாழ்கின்றனர்.

மக்களில் பாதிப்பேர் கிறித்துவர்கள். மீதிப் பேர் அனிமிஸ்ட்(Animist)கள். அதாவது மனிதர் களுக்கு ஆத்மா என்ற ஒன்றைக் கற்பிப்பது மதம். மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் மரம், மட்டை, கல், விலங்கு, பறவை என எல்லாவற்றிற்கும் ஆன்மா உண்டு எனக் கூறும் கற்கால மதம்.

இவர்களில் 89 விழுக் காடு கல்வியறிவு பெற்றவர்கள். ஆட்சி மொழியாக பிரெஞ்ச் இருக் கிறது. பலவேறு மொழி பேசும் இன மக்கள் உள்ளனர்.

கோட்டிலவாய்ர்(COTE d’lvoire)

மேற்கு ஆப்ரிகாவின் வட அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில் கானா நாட்டுக்கும் லைபீரியா நாட்டுக்கும் இடையில் உள்ள இந்த நாட்டில் 1842 இல் பாதுகாப்புத் தருகிறோம் என்ற போர்வையில் பிரான்சு நாடு நுழைந்தது. 1893 இல் பிரான்சு நாட்டின் குடியேற்றப் பகுதியாகக் கொண்டு விட்டது.

1960 இல் விடுதலை பெற்றது. ஃபெலிக்ஸ் ஹவுபோ போய்கி என்பார் அதிபரானார். பிரதமர் பதவியும் உண்டு.

3 லட்சத்து 22 ஆயி ரத்து 460 சதுர கி.மீ. பரப்புள்ள நாட்டில் ஒரு கோடியே 77 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். முசுலிம்கள் 35 விழுக்காட்டுக்கும் மேலே உள்ளனர். கிறித்துவர்கள் 25 விழுக்காடு. ஆப்ரிக மதங்களைச் சேர்ந்தவர்கள் 40 விழுக்காட்டினர்.

பிரெஞ்ச் மொழி தான் ஆட்சி மொழி. உள்நாட்டு மொழிகள் 60க்கும் மேல் பேசப்படுகின்றன. 51 விழுக்காடு மக்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்கள்.

காஸ்டாரிகா

மத்திய அமெரிக்காவில் நிகராகுவாவுக்கும் பனாமாவுக்கும் இடையில் கரிபியன் கடல், பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றின் கரைகளில் இருக்கும் இந் நாட்டை 1502இல் கொலம்பஸ் வந்தபோது (செவ்) இந்தியர்கள் நிறையப் பேர் இருந்தனர். ஸ்பெயின் நாடு இந்நாட்டை 1563இல் வென்று பிடித்துக் கொண்டது.

1821 இல் காஸ்டாரிகா சுதந்திரம் பெற்றது. ஆனாலும் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக மெக்சிகன் பேரரசின் ஆதிபத்யத்திற்கு உட்பட்டது. 1848 இல் குடியரசு நாடானது.

51 ஆயிரத்து 100 சதுர கி.மீ. பரப்பு உள்ள இந்நாட்டில் 41 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். நீர் மின்சாரம் தயாரித்தல் தொழிலை மட்டுமே கொண்டுள்ள நாடு. மக்களில் 76 விழுக்காடுக்கு மேல் கத்தோலிக்க கிறித்துவர்கள். கிறித்துவத்தின் ஏராளமான பிரிவுகளைச் சேர்ந்தோர்களாக மற்றவர்கள் உள்ளனர்.

ஸ்பானிஷ் மொழி ஆட்சி மொழி. இங்கிலீசும் வழங்கப்படுகிறது. 96 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். அதிபர் ஆஸ்கர் அரியாஸ் சாஞ்செஸ் 8-5-2006 முதல் ஆட்சி புரி கிறார்.

குரோஷியா 7 ஆம் நூற்றாண்டு காலத்தில் இந்த நாட்டில் குரோட் இனமக்கள் குடியமர்ந்தனர். 925 இல் பைஜான்டின் அரச வமிசத்தைப் போரில் தோற்கடித்து தங்கள் ஆட்சி வமிசத்தைக் கொண்டு அரசை நிறுவினர். 1089இல் உள் நாட்டுப் போர் எழுந்து ஹங்கேரி நாடு வெற்றி கொள்ளும் நிலை 1091 இல் உருவாகிவிட்டது.

1102 ஆம் ஆண்டில் குரோஷியப் பழங்குடியினத் தலைவர்களும் ஹங்கேரியும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஹங்கேரியுடன் குரோஷியா இணைந்து ஹங்கேரி மன்னரின் ஆட்சிக்கு ஆட்பட வேண்டியதாயிற்று.

இரண்டாம் உலகப் போரில் யூகோஸ் லேவியாவை வெற்றி கொண்ட ஜெர்மனி ஒரு பொம்மை அரசை குரோஷியாவில் நிறுவியது. ஆன்டி பாவெலிக் என்பாரின் தலைமையில் அமைந்த பாசிச அரசு, முழுவதும் கத்தோலிக்கக் குரோஷிய மக்களைக் கொண்ட குடியரசை ஏற்படுத்த முயன்றது. அதற்காகப் பல்லாயிரக் கணக்கான செர்ப் இனத்தவரையும் யூதர் களையும் அவர் கொன்று குவித்தார்.

யுகோஸ்லேவிய அதிபராப இருந்த மார்ஷல் டிட்டோ 1980 இல் மறைந்த பிறகு யூகோஸ்லேவ் கூட்டரசு கலகலக்கத் தொடங்கியது. 1990 இல் கம்யூனிஸ்ட் நாடுகள் அழிந்த பிறகு இது கூடுதலாகியது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக குரோஷியாவில் சுதந்திரமான தேர்தல் நடந்தது.

1991 இல் யூகோஸ் லேவியாவிடமிருந்து குரோஷியா பிரிந்து சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. குரோஷியாவின் கிழக்குப் பகுதியில் இருந்த செர்பியர்கள், யூகோஸ்லேவியப் படைகளின் உதவியுடன் குரோட் இனத்தவர்களை வெளியேற்றினர். கிழக்கு குரோஷியாவின் முக்கிய நகரான உகோவர் மூன்று மாத காலம் முற்றுகையிடப்பட்டது. நகரமே அழியும் நிலை உருவாகிறது. 1991இல் செர்பியப் படைகள் அந்நகரைக் கைப்பற்றிய போது குடியிருந்த மக்களை மிகக் கொடூரமாகத் தாக்கினர்.

1992இல் பிராஞ்சோ டுட்ஜ்மன் என்பவர் குரோஷிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அய்.நா. சபை சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி 14ஆயிரம் அய். நா. துருப்புகளைக் கொண்டு குரோஷியாவுக்கும் செர்பியாவுக்கும் எல்லைப் பகுதியைக் காத்து அழிவுகள் தொடர்வதைத் தடுத்தது.

அய்.நா. மேற்பார்வையில், கிழக்கு ஸ்லாவோனியா பகுதி குரோஷியாவுக்கு 1998 இல் கிடைத்து அந்நாட்டுடன் இணைக்கப்பட்டது.

56 ஆயிரத்து 542 ச.கி.மீ. பரப்புள்ள இந் நாட்டில் 45 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 88 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிக்கர்கள். குரோஷிய மொழியுடன் இத்தாலி, ஹங்கேரியன், ஜெர்மன் போன்ற பல மொழிகள் பேசப்படுகின்றன. 99 விழுக்காடு மக்கள் கல்வி யறிவு பெற்றவர்கள்.

நாட்டுக்கு அதிபர் உண்டு. ஆட்சித் தலைவராக பிரதமர் இருக்கிறார்.


------------------"விடுதலை" 9-6-2009

0 comments: