Search This Blog
28.6.09
ஆதித்திராவிடர்கள் கீழ்த்தரமான பிரச்சாரங்களுக்கு செவி சாய்க்க மாட்டார்கள் -பெரியார்
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு தடையாக இருக்கும் பார்ப்பனிய மேலாமையை ஒழிக்க பாடுபடும் பெரியாரைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் நாம்(பார்ப்பனர்கள்) சொன்னால் பெரியாரின் செல்வாக்கு மேலும் உயர்ந்து விடும் என்பதால் எந்த மக்களுக்காக பெரியார் பாடுபட்டாரோ அந்த மக்களில் ஒரு சிலரைப் பிடித்து பெரியார் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சொல்வது என்பது பார்ப்பனர்கள் கடைபிடிக்கும் வழக்கமான அணுகுமுறையாகும். பெரியார் மறைவுக்கு பின் தான் என்றில்லை. பெரியார் உயிரோடு இருந்த போதும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது. இது குறித்து பெரியார் தரும் விளக்கத்தைப் பார்ப்போம். (வெங்கடேசன் போன்றவர்களுக்கென்றே சொல்லப்பட்டது போல் இருக்கிறது என்று நீங்கள் (வாசகர்கள்) நினைத்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.). இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறியதற்கு யார் காரணம் என்பதையும் பெரியார் விளக்கியுள்ளார்.ஊன்றிப்படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.
"என் மீதோ, எனது இயக்கத்தைப் பற்றியோ எந்தவிதக் குறையும் கண்டுபிடிக்க முடியாததன் காரணமாக அவர்களின் வண்டவாளங்கள் வெளியாகின்றதே என்ற ஆத்திரத்தினால் ஏதேதோ பொய்ப் பித்தலாட்டமான பிரச்சாரங்களை எல்லாம் கிளப்பி விட்டு இருக்கின்றனர்.
எல்லா சாதி மக்களிலும் சில புல்லுருவிகள் 4- அணா கொடுத்தால் சொன்னபடி எல்லாம் ஆடும் எச்சக்கலை ஆட்கள் இருப்பது போல ஆதித்திராவிடர்களிலேயே சில எச்சக்கலை ஆசாமிகளைப் பிடித்து தவறாக நோட்டீஸ்கள் போட்டு உள்ளார்கள். இது கண்டு அந்த ஆதித்திராவிட மக்களும் நம்பி விட மாட்டார்கள். இப்படிப்பட்ட பித்தலாட்டப் பிரச்சாரங்களை எல்லாம் கண்டு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. கழகத் தோழர்கள் எல்லோரும் கூறினார்களே, அதுவே போதும்.
திராவிடர் கழகமானது இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆற்றிய தொண்டு இன்றைய இளைஞர்களுக்கு என்ன தெரியப் போகின்றது? 50-ஆண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை எவ்வாறு இருந்தது? இன்றைய நிலை எப்படி உயர்ந்து உள்ளது? என்று ஒப்பிட்டுப் பார்க்கும் வயதானவர்களுக்குத்தான் தெரியும். இன்றைய இளைஞர்கள் - இன்றைய நிலை போலத்தான் அன்றைக்கும் இருந்ததாக எண்ணிக் கொண்டு இருப்பார்கள். நான் பள்ளியில் படிக்கும்போது வண்ணார், நாவிதர் வீட்டுப் பிள்ளைகள் கூட, தனியாகத் தாழ்வாரத்தில் அமர்ந்துதான் படிக்க வேண்டும். அவர்களுக்கே இப்படி என்றால் ஆதித்திராவிடர்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டும்?
வீதியில் நடக்க முடியாதவர்களாக, நல்ல உடை உடுத்தவோ, உணவு உண்ணவோ முடியாதவர்களாக கல்வி, உத்தியோகம் பெறக் கூடாதவர்களாக இருந்த நிலையானது இன்றைக்கு மாறி அவர்களும் மனிதத் தன்மையுடன் நடத்தும்படியான நிலை யாரால் ஏற்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள்.
எனவே, ஆதித்திராவிடர் மக்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமான பிரச்சாரங்களுக்கு எல்லாம் செவி சாய்க்க மாட்டார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
------------------“விடுதலை” 18-12-1961.
ஆக பெரியார் கூறியது போல் ஒரு சில தாழ்த்தப்பட்ட தோழர்கள் பார்ப்பனர்களுக்கு அடிவருடியாகி அவ்வப்போது இது போன்ற குற்றச் சாட்டுகளை சொல்லி மக்களை திசை திருப்ப முயல்கின்றனர். ஆனால் பெரியாரின் உண்மை உழைப்பால் முன்னுக்கு வந்த எத்தையோ ஒடுக்கப்பட்ட தோழர்கள் அந்தக் குற்றச் சாட்டுக்களை மறுத்து பெரியாரைப் போற்றி வருகின்றனர் என்பது தான் உண்மை.
---------------------தொடரும்
Labels:
பெரியார்-தலித்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment