Search This Blog

11.6.09

ராஜபக்சேவை ஆதரிக்கிறவர்கள் தமிழினத்திற்கு எதிரிகள்




ராஜபக்சேவை ஆதரிக்கிறவர்கள்
தமிழினத்திற்கு எதிரிகள் என்று சொல்லக்கூடிய துணிவு நமக்கு உண்டு
கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு


ராஜபக்சேவை ஆதரிக்கிறவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் எதிரிகள் என்று சொல்லக்கூடிய துணிவு நமக்கு உண்டு என்று கூறி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரை யாற்றினார்.

ராணிப்பேட்டையில் 5.6.2009 அன்று காஞ்சிபுரம் அரக்கோணம் மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

அவமானம் என்று கருதாதீர்

ஆக பத்துப் பேரை அணுகி ஒன்பது பேர் சந்தா கொடுக்கவில்லை. ஒருவர் மட்டும்தான் கொடுத்தார் என்று வெட்கப்படாதீர்கள்; கூச்சப்படாதீர்கள்; அவமானம் என்று நினைக்காதீர்கள்.
மான அவமானம் தனி வாழ்க்கையில் பார்க்கலாம். பொது வாழ்க்கையில் மான அவமானம் கிடையாது. குடிசெய்வார்க்கில்லை பருவம் மடி செய்து மானம் கருதக் கெடும் இதுதான்அய்யா அவர்களுக்குப் பிடித்த குறள். ஆகவே அந்தக் குறள்படி நாம் நடக்க வேண்டும்.

பத்துப் பேரிடம் கேட்டு ஒருத்தர்தான் கொடுத்தார். ஒன்பது பேர் கொடுக்கவில்லை என்றால் நட்டமா என்றால் இல்லை. இதைத் தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பத்து பேரிடமும் விடுதலை பற்றிய செய்தி போய் சேர்ந்திருக்கிறது பாருங்கள். அதுதான் பிரச்சார லாபம். நன்கொடை கேட்பது பற்றி நம்முடைய தோழர்கள் சொல்லுவார்கள்.
சில பேர் சும்மா இருக்க மாட்டார்கள். கேட்பார்கள், ஏனய்யா பெரியாரிடம் இல்லாத பணமா? ஏன் எங்களை வந்து கேட்கிறீர்கள். அவர்தான் கோடி, கோடியாக வைத்துவிட்டுப் போயிருக்கிறாரே என்று கேட்பார்கள்.

பெரியார் நிறுவனங்கள் நம்மாள்களுக்கு இப்பொழுது தான் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இவர்களே போய் வம்புக்குப் போக முடியாது.

ஏங்க உங்களுக்குத் தெரியாதா? பெரியாருடைய அமைப்பு சார்பாக எத்தனையோ கல்லூரிகள் நடக்கின்றன. நமக்கு ஒரு பிரச்சினை - வாய்ப்பு

பல்கலைக் கழகம் இருக்கிறது; கல்லூரிகள் இருக்கின்றன; எவ்வளவு அமைப்புகள் இருக்கின்றன? இதெல்லாம் தெரியுமா? என்று ஒரு பத்து நிமிடம் அவர்களிடம் பிரச்சாரம் செய்யக் கூடிய வாய்ப்பே உங்களுக்குக் கிட்டும். அவர் ஒரு கேள்வி கேட்க, நீங்கள் பல தகவல்களைச் சொல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், இதைவிட நல்ல திண்ணைப் பிரச்சாரத்திற்கு வேறு வாய்ப்பு கிடையவே கிடையாது.

நான் கேட்கிறேன், குறைந்த பட்சம் நாம் பத்தாயிரம் பேர் இருப்போமா? இல்லையா? நிச்சயமாக இருப்போம். நம்மாள்கள் ஓரளவுக்குத் தகுதி உள்ளவர்கள்தான். மற்றவர்கள் மாதிரி நம்மாள்கள் ஆடம்பரமாக காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

கையை விட பெரிய மோதிரம் அரசியல் கட்சிக்காரர்களைப் பார்த்தீர்களேயானால் அய்ந்து விரல்களில் மோதிரம். கையைவிட பெரிய மோதிரம் அல்லது மோதிரம் போடுவதற்கே கையில் இடமிருக்காது என்று இப்படி எல்லாம் இருப்பார்கள். ஆனால் நம்மாள்கள் ரொம்ப சிக்கனமாக இருப்பார்கள். பெரியாருடைய வாழ்க்கை முறையே எளிமை சிக்கனம் தான்.

ஒருவருக்கு இரண்டு நண்பர், அல்லது இரண்டு உறவினர்கள் இருப்பார்கள். நமக்கு இரண்டு நண்பர்கள் கூடவா இருக்க மாட்டார்கள்? ஒரு ஆண்டு விடுதலை சந்தா ஆயிரம் ரூபாய் என்பது ஒரு சாதாரண விசயம் இன்றைய காலகட்டத்திலே. அதே மாதிரி இரண்டு உற வினர். அவர்களுக்கு நாம் சந்தா வாங்கி அனுப்பலாம். அல்லது மற்றவர்களுக்குச் செய்ய லாம். அல்லது நமது வீடுகளில் விசேஷம் நடந்தால் கூட விடுதலை சந்தா கட்டி அனுப் பலாம். அவர்களுக்கு யார் அனுப்பியது என்று கூட தெரியாமல் செய்யலாம். கோவிலுக்குச் செல்லுகிறவர்கள். அவர்கள் பெயரில் ஒரு அர்ச்சனை பண்ணுங்கள் என்று சொல்லுகிற மாதிரி செய்யலாம்.

கோவிலில் இன்னொருவருக்கு அர்ச்சனை


இவன் கோவிலுக்குப் போகிறானோ இல்லையோ ஆனால் அவன் பெயருக்கு இவன் அர்ச்சனை பண்ணுகிறான். என் பெயருக்கு ஒரு அர்ச்சனை பண்ணுங்கள், அம்மா பெயருக்கு ஒரு அர்ச்சனை பண்ணுங்கள் என்று மூடத்தனமாகச் செய்கின்றான்.

ஆனால் நாம் என்ன செய்யலாம்? எங்களுடைய சொந்தக்காரர் இங்கே இருக்கின்றார்; இந்த முகவரிக்கு ஒரு விடுதலை அனுப்புங்கள் என்று சொல்லக் கூடிய அளவுக்கு வந்தால் ஒவ்வொரு தோழரும் முயற்சித்தால் நான்கு சந்தாக்களை வாங்கினால், நாற்பதாயிரம் சந்தாக்கள் விடுதலை ஆபிசுக்கு சுலபமாக வந்து விட்டதே. இது ரொம்ப சுலபமான ஃபார்முலா. முதலில் நமது தோழர்களுக்கு மனது வரவேண்டும். நாளைக்கு காலையில் இதை, முடித்துவிடலாம் என்று. ஒன்றும் பெரிய விசயமே அல்ல.

இதற்கு பத்துநாள் தேவை. இருபது நாள் தேவை என்பதல்ல.

நாம் முயற்சி எடுத்தால்......

இங்கே உட்கார்ந்திருக்கிறவர்கள் முடிவு பண்ணிக்கொண்டு, எனக்கு ஒரு இரண்டு பேர் உறவினர்கள் யார், இரண்டு பேர் நண்பர்கள் யார் என்பதை போகும் பொழுதே முடிவு பண்ணிக்கொள்ள வேண்டும்.

நீங்கள் நான்கு பேரை தேர்ந்தெடுங்கள் இரண்டு பேர் இல்லை என்று சொல்லுங்கள். இரண்டு பேர் தருகிறேன் என்று சொல்லட்டும்.

அது மாதிரி நிலைமையில் நாம் எண்ணிப் பார்த்தால் நாம் முயற்சி எடுத்தால்
நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது; வேறு எவராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பது அதுதான் அதற்குப் பொருள்.

விடுதலைக்கு இது பவள விழா ஆண்டு. விடுதலையின் உருவம் மாற்றப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். பக்கங்கள் கூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் விலை கூட்டப்பட வில்லை. காகித விலையும் அதிகமாகியிருக்கிறது. இன்னும் அதிகமான அளவுக்கு, மற்ற பத்திரிகைகள் வரக் கூடிய அளவிற்கு நிருவாகத்தில் மாறுதல்கள் செய்யக்கூடிய அளவிற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

ஆகவே விடுதலை தான் கொள்கைப் பத்திரிகை. தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மாவட்டத் திலும் சந்தா கொடுப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

விடுதலை மக்களுடைய ஏடு

விடுதலை என்பது தனிப்பட்டவர்களுடைய ஏடு அல்ல. தனிப்பட்ட முதலாளிகளினுடைய ஏடு அல்ல. இது மக்களுடைய ஏடு. மக்கள் கொள்கையைப் பரப்பக்கூடிய ஏடு. அறிவியல் மனப்பான்மையை எடுத்துச் சொல்லக் கூடிய ஏடு. ஆகவே அதைச் செய்வதே நமது பிரச்சாரத்தின் ஒரு பகுதி.

கூர்மைப்படுத்தப்பட்ட ஓர் ஆயுதப்பகுதி. ஆகவே நமது போர்வாள் விடுதலை என்பது கருத் துப்போர்வாள். எனவே அந்த விடுதலையைப் பரப்ப வேண்டும்.

விடுதலை பவள விழா வாய்ப்பு என்பது ஒரு பக்கம். அடுத்தது நண்பர்களே தேர்தல் முடிந்தது. தேர்தல் பிரச்சாரம் முடிந்தது.

மத்தியில் மதசார்பற்ற அரசு அமைந்திருக்கிறது. நிம்மதியாக ஆளக் கூடிய நிலை ஏற்பட்டி ருக்கிறது.

தி.க,- தி.மு.க இரட்டைக் குழல் துப்பாக்கி

திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக என்றைக்கும் இருக்கக் கூடிய ஒரு கொள்கை ரீதியான ஓர் உறவு, தெளிவு நமக்கு இருக்கிறது. இப்பொழுது நாம் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு அது போல மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு ஆகியவைகளை நாம் முன்னாலே நிறுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டும்.

சமூகநீதிக்காகப் பாடுபட வேண்டும். அதே நேரத்தில் மனித உரிமைகள் எங்கு மீறப் பட்டாலும் அதைத் தடுப்பதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

ராஜபக்சேவை ஆதரிப்பவர்கள் தமிழர்களுக்கு எதிரிகள்

ஈழத்திலே பிரச்சினைகள் எல்லாம் முடிந்து போய்விட்டது என்று தவறாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். அநீதியான ஒரு ஆட்சி, இனப்படு கொலை நடக்கக்கூடிய ஓர் ஆட்சி, ராஜபக்சேவினுடைய ஆட்சி நடக்கின்றது. அந்த ராஜபக்சேவினுடைய ஆட்சியை ஆதரிக்கிறவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் தமிழர்களுக்கு எதிரிகள் என்று பிரகடனப்படுத் தக்கூடிய துணிவு திராவிடர் கழகத்திற்கு உண்டு.

அதனால் தான் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் என்ற ஒன்றையும் நாம் அமைத்திருக்கின்றோம். அதையும் நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். அதற்குரிய விடு தலையில் வரக்கூடிய அளவுக்கு செய்திகள் வேறு எதிலும் இருக்காது. ஆக தமிழின உணர்வு என்று சொன்னாலும் சரி, பகுத்தறிவு என்று சொன்னாலும் சரி, பெண்ணடிமை ஒழிப்பு என்று சொன்னாலும் சரி எல்லாவற்றிற்கும் முன்னுரிமை கொடுக்கக் கூடியது நம்முடைய ஏடு. நமது தோழர்கள் குறைந்த பட்சம் அதை, பக்கம் பக்கமாக வரிக்கு வரி படித்தார்களேயானால் அவர்களுக்கு முதலில் நல்ல அளவுக்குப் பக்குவம் ஆகும்.

நமது கூட்டங்களில் 50 விழுக்காடு


மற்றவர்களிடம் வாதம் பண்ண முடியும். தாய்மார்களோ,தோழர்களோ வீட்டுக்குப் பத்திரிகை வந்தது என்று சொன்னால் அவர்களைப் படித்துக்காட்டச் சொல்ல வேண்டும். சில இடங் களில் பார்த்தீர்களேயானால் நாம் - ஆண்கள் மட்டும் கூட்டத்திற்கு வருகிறோம். இங்கே மகளிர் வந்திருக்கிறீர்கள் ரொம்ப பாராட்ட வேண்டிய நிகழ்ச்சி.

--------------தொடரும் ..."விடுதலை" 11-6-2009

0 comments: