Search This Blog
10.6.09
"ஈ.வெ.ராமசாமி "அவர்கள் எப்படி "பெரியார்" ஆனார்? - 6
தாழ்த்தப்படவர்களுக்கு யார் தொந்திரவு கொடுத்தாலும் அந்த தொந்திரவு நமக்கு வந்த தொந்திரவாகத்தான் கருவதுவார் தமிழ் ஓவியா. தமிழ் ஓவியா மட்டுமல்ல ஒவ்வொரு பெரியார் தொண்டரும் அப்படித்தான் நினைப்பார்கள் இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.
தாழ்த்தப்பட்டவர்களுக்க எதிராகவோ? அல்லது மறைமுகமாகவோ எந்தக் காரியத்தை செய்தார் பெரியார்? ஆதாரத்துடன் சான்றுகளுடன் நிருபித்தால் அதை மனமுவந்து ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறோம். அதற்காக எந்த தண்டனைகளையும் ஏற்றுக் கொள்ள பெரியார் தொண்டர்கள் தயாராயிருக்கிறோம்.
தன் வாழ்நாளெல்லாம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக்ககப்பட்ட மக்களின் உரிமைக்காக மூத்திரவாளியைச் சுமந்து கொண்டு உழைத்தவர்களில்; பெரியாரைத் தவிர வேறு எவர்?
“பெரியார் பற்றியும் அவரது சுயமரியாதை இயக்கத்தினைப் பற்றியும் ஈ.வெ.ராமசாமி என்ற சாதாரணமானவரை பெரியார் என்றழைக்க காரணமாக இருந்த பழைய முனிமா என்ன சொல்கிறார் என்பதை தமிழ் ஓவியா முதலில் புரிந்து கொள்ளட்டும் என்கிறார் மா.வேலுசாமி.
பழைய முனிமா என்று அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களை கொச்சைப்படுத்தியிருக்க வேண்டாம் திரு.மா.வேலுசாமி. அன்னை மீனாம்பாள் அவர்களுடன் புதிய “முனிமா”வான மேடம் “முனிமா”வுடன் எப்படி ஒப்பிட்டடார் என்பது தெரியவில்லை. எந்த வழியிலும் எந்தப் புள்ளியிலும் அன்னையாருடன் ஒத்துப்போகாதவர் புதிய முனிமா வான மேடம் முனிமா.
ஈ.வெ.ராமசாமி அவர்கள் எப்படி பெரியார் ஆனார் என்பதையும், முனிமா மற்றும் மா.வேலுச்சாமி குழுவினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் அதன் விபரம் இதோ.
“ஈ.வெ.ராமசாமி அவர்கள் 1938 முதல் பெரியார் என அன்புடன் அழைக்கப்பட்டார் என்பதாக இது காறும் வெளிவந்துள்ள வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ஆயினும் இது குறித்து உண்மை வேறாகும்.
தமிழகத்தில். ஒருவரின் சொந்தப் பெயரின் பின்னால் அவரது சாதிப்பெயரைக் குறிக்கும் பட்டச் சொல் (cast title) இணைக்கபட்டே அழைக்கப்படுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள பழக்கமாகும். இது அப்பெயரை உடையவருக்கு உரிமையாகவும், பிறருக்கு நீங்காக் கடமையாகவும் சாதி வழக்கச் சம்பிரதாயங்களின் படி பெருமை சேர்ப்பதாகவும் இன்று கருதப்பட்டு வருகிறது.
இச்சம்பிராதாயத்தை உடைத்து வழிகாட்ட விரும்பிய ஈ.வெ.ரா. 18.12.1927 “குடிஅரசு” மலர் வரையில் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் எனக் குறிப்பிட்டு வந்ததை மாற்றி 25-12-1927 “குடிஅரசு” மலர் முதல் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி என்று மட்டும் குறிப்பிட்டு ‘நாயக்கர்’ என்பதை நறுக்கிவிட்டார்.
இவ்வாறாக ‘நாயக்கர்’ என்ற பட்டச் சொல்லை அவருடைய பெயருக்குப் பின்னால் இருந்து நீக்கிவிட்ட நிலையில் ‘நாயக்கர்’ என்ற பட்டச் சொல் இல்லாமல் அவரது பெயரைக் குறிப்பிடுவதானது. அவருக்கு உரிய பெருமையைக் குறைத்து விடுமோ என நம் இனப் பெருமக்கள் அஞ்சினர். அங்ஙனம் அஞ்சிய பலருள் ‘நாயக்கர்’ என்ற சொல் இருந்த இடத்தில் ‘பெரியார்’ என்ற சொல்லை முதல் முதலாகச் சேர்த்து “ஈ.வெ.ராமசாமிப் பெரியார்” என அழைத்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு.பி.சிதம்பரம்பிள்ளையே ஆவார். மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் நம் அறிஞர்கள் பலரும் ‘ஈ.வெ.ரா. பெரியார்’ என்றே குறிக்கலாயினர். 20.21.7.1929இல் நடைபெற்ற திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் திருவாளர்கள் எஸ். குமாரசாமி ரெட்டியார், நீதிபதி எம்.கோவிந்தன். டீ.கே. சிதம்பரநாத முதலியார் ஆகியோரும் பெரியார் எனக் குறிக்கலாயினர்.
1930ல் திருச்சி மருத்துவகுல சங்கத்தார் அளித்த உபசாரத்தில் பொpயார் ஈ.வெ.ராமசாமி என்றும் (சென்னை, திராவிடன் 5.9.1930) ; 22.10.1932ல் கொழும்பு நகரில் ஆதிதிராவிட சங்கத்தார் அளித்த வரவேற்பில் பெரியார் இராமசாமி (“குடிஅரசு” 6.11.1932) என்றும் நெஞ்சாரப் போற்றி பெரியார் என அழைக்கலாயினர்.
இவ்வாறாக 1928 முதல் பெரியார் என அன்புடன் அழைக்ப்பட்ட அன்னார், 1938 முதல் பெருவழக்காக அவ்வாறு அழைக்கப்பட்டார்.
12,13 -11 -1938 ல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில் நடைபெற்றது. தமிழ்நாட்டுப் பெண்கள் விடுதலைக்குப் பெரியார் ஆற்றியுள்ள தொண்டுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முதல் தீர்மானமாக அம்மாநாட்டில் நிறைவேற்றினர். ஆத்தீர்மானமாவது.
“இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்த தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும்., தென்னாட்டில் அவருக்கு மேலாகவும் சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவர் அல்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிழும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது. (விடுதலை 16.11.1938)
----------------(வே.ஆனைமுத்து, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் -1
பக்கம் XXXVIII – XXLX)
இப்படி ஈ.வெ.ரா.வை பெரியார் என அழைக்கக் காரணமாயிருந்தவர் அன்னை மீனாம்பாள் சிவராஜ். பெரியார் என்று அழைக்க மனமில்லாமல் எப்போதும் ஈ.வெ.ரா என்றே அழைக்கும் முனிமாவை அன்னையாருடன் ஒப்பிட்டது எவ்வளவு தவறு என்பதை இனி, படிக்கும்போது திரு மா.வேலுச்சாமி உணர்ந்திருப்பார்.
1938ல் நடந்த நிகழ்வைதவறான புரிதலுடன் நடந்த நிகழ்வு என்று அப்போதே முடிவுக்கு வந்ததைப் பெரிதுபடுத்திக் காட்டும் வேலுச்சாமி அவர்களுக்கு 6.11.1990ல் பெரியர் பற்றி அன்னையார் மீனாம்பாள் சிவராஜ் என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என்பது தெரியுமா? இதோ அன்னையார் பேசுகிறார்.
"நான் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களுக்கு தலைமை தாங்கி நடத்தி இருக்கிறேன். பெரியார் அவர்கள் கலந்து கொண்ட திருமணங்களிலும் கலந்து கொண்டு பேசி இருக்கிறேன்.
சென்னை பெரம்பூரில் என் தலைமையிலும், பெரியார் தலைமையிலும் ஒரு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி. ஓரே சேறும் சகதியுமாகிவிட்டது. திருமணம் முடிந்து சாப்பிட்டுப்போகச் சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிடவில்லை. பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துப்போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்க மாட்டார்.
நான், நாராயணி அம்மாள், டாக்டர் தருமாம்பாள் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது , காந்தியாருக்கு ‘மகாத்மா’ என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள் நாம் நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா. அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்க வேண்டும என்று முடிவு செய்தோம். அப்பொழுதுதான் ‘பெரியார்’ என்று அழைப்பது என்று முடிவு செய்து, பிறகு பெண்கள் மாநாடு கூட்டி பெரியார் என்ற பட்டம் கொடுத்தோம் அதை ஒரு முக்கிய நிகழ்ச்சியாக என் வாழ்நாளில் நான் கருதுகின்றேன் .
(நீதிக்கட்சி 75வது ஆண்டு பவளவிழா மலர் பக்கம் 125)
அன்னை மீனாம்பாள் அவர்களின் கருத்தைப் பார்த்தோம் அய்யா சிவராஜ் அவர்கள் இந்நிகழ்வுக்குப் பின் என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என்பதையும் பார்த்து விடுவோம்.
“தோழர் சிவராஜ் பேசுகையில் பிறப்பினால் உயர் தாழ்வு கற்பிக்கப்பட்டு இந்நாட்டு மக்களிடையே இருந்து வந்த அடிமை மனப்பான்மையைக் களைந்தெறிந்தவர் பெரியார் இராமசாமி.
-----------------------(விடுதலை 3.9.1946)
முனிமாவைக் காப்பாற்ற அன்னையாரை துணைக்கழைத்து அவரைக் கொச்சைப்படுத்தியிருக்க வேண்டாம் என்பதே தமிழ் ஓவியாவின் கருத்து. அன்னை மீனாம்பாள் பற்றி இன்றும் நிறைய விபரங்களை தெரிந்து புரிந்து வைத்திருக்கிறார் தமிழ் ஓவியா.
--------------தொடரும் -நன்றி:-"களத்துமேடு" ஜூன் 15 - 2004 பக்கம்:- 12-13
Labels:
பெரியார்-தலித்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
பயனுள்ள தகவல் தமிழ் ஓவியா.
சில காலங்களுக்கு முன்னர் தமிழ் விக்கிபீடியாவில் தந்தை பெரியார் பற்றிய முழுமையான கட்டுரை ஒன்றை உருவாக்க முயன்று சிறு ஆரம்பத்தை செய்திருந்தேன். அவ்வளவு பெரிதாக அக்கட்டுரை வளரவில்லை.
பெரியார் தொடர்பான அந்த விக்கிபீடியாக் கட்டுரையை வளர்த்தெடுக்க உதவ முடியுமா?
விக்கிபீடியா தொடர்பான சந்தேகங்கள் ஏதுமிருப்பின், உதவிகள் தேவைப்படுமானால் தாராளமாக உற்சாகமாக உங்களுடன் என்னால் இணைந்துகொள்ள முடியும்.
பெரியார். விக்கிபீடியா கட்டுரை
சரியான சான்றுகளுடன் பயனுள்ள அரிய கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரை.
பெரியார் பெயர்காரணம் பற்றிய தகவல்கலை அறிந்து கொண்டேன்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மயூரன்.
"பெரியார் தொடர்பான அந்த விக்கிபீடியாக் கட்டுரையை வளர்த்தெடுக்க உதவ முடியுமா?"
நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தங்களுக்கு உதவத் தயார்.
தங்களின் விபரமான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
நன்றி மயூரன்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு
விக்கிபீடியாவில் பெரியார் பற்றிய முழுமையான கலைக்களஞ்சியக்கட்டுரையை உருவாக்குதல்:
1. விக்கிபீடியா, அதன் திறந்த மக்களுடைமைக் கொள்கைகள் தொடர்பான அடிப்படை அறிமுகத்துக்கு இக்கட்டுரையினைப் பார்வையிடுங்கள்.
2. தமிழ் விக்கிபீடியாவில் புதிய பயனர் கணக்கொன்றின்றினை உருவாக்குங்கள்.
3. பெரியார் பற்றிய ஆங்கில விக்கிபீடியா கட்டுரையினைப் பார்வையிடுங்கள்.
4. ஆங்கிலக்கட்டுரையை ஒட்டியோ, மொழி பெயர்த்தோ அல்லது வேண்டியவ்வறை நீக்கி/சேர்த்தோ தமிழ்க் கட்டுரையினை தனியாக உருவாக்குங்கள்.
5. தமிழ் விக்கிபீடியாவில் புகுபதிகை செய்து பெரியார் கட்டுரைக்கு மேலே இருக்கும் "தொகு" என்கிற தொடுப்பை அழுத்துங்கள்.
6. வருகின்ற பெட்டியில் ஏற்கனவே உள்ள கட்டுரைப்பகுதிகளை அழிக்காமல் நீங்கள் உருவாக்கிய தமிழ் கட்டுரையினை paste செய்யுங்கள்.
7. அதன் பின் கட்டுரையை மேலும் இணைப்புக்கள் வழங்கி சீர்திருத்த அங்கே தமிழ் விக்கிபீடியர்கள் முன்வந்து உதவுவார்கள்.
நன்றி.
Post a Comment