Search This Blog

10.6.09

பெண்களுக்கு உள் ஒதுக்கீட்டுடன் கூடிய இட ஒதுக்கீடு ஏன் வெண்டும்?


ஜூன் 15 இல் ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் மக்களவைக்கான 15 ஆவது தேர்தல் நடந்து முடிந்தது. அமைச்சரவையும் பதவி ஏற்றுக்கொண்டு விட்டது. மொத்தம் 543 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அவை அனுபவசாலிகளும், நடுத்தர வயதினரும், இளையோர்களும் அடங்கிய அவையாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகின்றது.

543 பேர்கள் கொண்ட ஒரு அவையில் - மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியினரான பெண்களின் எண்ணிக்கை வெறும் 59 என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.
இதுவரை பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இதுதான் அதிகபட்சமாம்! இது வெட்கக்கேட்டுக்குப் பொட்டு வைத்தது போன்றதாகும்.


இதற்கு ஒட்டுமொத்தமான சமுதாயமே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினாலும், கட்சிகளைக் கடந்த ஆண்களின் ஆதிக்க நிலைப்பாடே அடிப்படைக் காரணமாகும். இதற்கும் அடிப்படை ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக சமூகத்தில் ஊறிய மனுதர்மச் சிந்தனையு மாகும்.

1996 ஆம் ஆண்டு முதல் இதற்கான சட்டம் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் தான் உள்ளது.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்கள் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் நூறு நாள்களுக்குள் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

எதற்கும் காலவரையறை இருந்தால்தான் சாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகுந்து நிற்கும். நூறு நாள்கள் கடந்தும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லையென்றால் மக்களைச் சந்திப்பதற்கு எந்த அரசியல்வாதிக்கும் துணிவு வராது.

இதுவரை இந்தச் சட்டம் நிறைவேற்றப்படாததற்கு ஒருமித்த கருத்து எட்டபடாததுதான் காரணம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டு வந்துள்ளது.

இதுவரை நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் எல்லாம் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதற்குப் பிறகுதான் நிறைவேற்றப்பட்டதா? இல்லையே! அப்படி இருக்கும்பொழுது இதற்கு மட்டும் அத்தகைய காரணத்தைக் கூறுவானேன்? தட்டிக் கழிப்பதற்கான தந்திரம்தான் இதற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது என்பதை ஆண்களைவிட பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்தச் சட்டத்தை நிறைவேற்றும்போது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் உள் ஒதுக்கீடுக்கு வகை செய்யப்படவேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.


சமூகநீதியில் ஆர்வம் கொண்ட பல அரசியல் கட்சிகள்கூட இதனுடைய முக்கியத்துவத்தை உணராதது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் இந்தச் சட்டத்தின்மூலம் 181 பெண்கள் உறுப்பினர்களாக வரக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. இதில் சமூகநீதிக் கண்ணோட்டத்தில் உள் ஒதுக்கீடுக்கு வகை செய்யப்படாவிட்டால் பெரும்பாலும் பார்ப்பனர்கள், உயர்ஜாதி மேல்தட்டு மக்கள்தான் இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வார்கள்.

543 உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் உயர் ஜாதிக்காரர்களாக இருக்கும் மக்களவையை ஒரு கணம் கற்பனை செய்து பார்க்கட்டும்; அதில் உள்ள ஆபத்தின் ஆழம் எத்தகையது என்பது விளங்கும்.

இந்த உயர்ஜாதி பெண்கள் மட்டுமல்ல; பல கட்சிகளின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்படும் உயர்ஜாதி ஆண்களின் கணக்கையும் கூட்டினால், பெரும்பாலான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களை ஆள்வோர் சிறுபான்மை எண்ணிக்கையில் உள்ள உயர்ஜாதியினர் தான் என்ற நிலை அல்லவா ஏற்படும். இது எவ்வளவுப் பெரிய ஆபத்தான போக்கு?

ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியலில், ஆட்சியில் தலை தூக்கி நிற்கும் ஒரு காலகட்டத்தில் அதன் ஆணிவேரை வெட்டும் சதிதான் - உள்ஒதுக்கீடு இல்லாத பெண்களின் ஒதுக்கீடாகும் (33 சதவிகிதம்).

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னை செய்தியாளர்கள் கூட்டத்தில் (6.6.2009) கூறியதுபோல, வாசல் வழியாக உள்ளே நுழைய முடியாத உயர்ஜாதியினர் கொல்லைப்புற வழியாக உள்ளே நுழையும் ஆபத்தினை உணரவேண்டும்.

உண்மையான மக்கள் நாயகம் என்பது - பெரும் பான்மை மக்களின் கைகளில் அதிகாரம் இருக்கவேண்டும் என்பதுதானே? உள் ஒதுக்கீட்டுடன் கூடிய இட ஒதுக்கீடு அமல்படுத்தினால்தான் உண்மையான ஜனநாயகத்திற்கு உத்தரவாதம் கிடைக்க முடியும்.
இதனை வலியுறுத்தும் வகையில்தான் வரும் ஜூன் 15 ஆம் தேதியன்று, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை ஆகிய முக்கிய நகரங்களில் திராவிடர் கழக மகளிரணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. கட்சிகளைக் கடந்து மகளிர் ஆர்த்தெழட்டும்; ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு அரங்கேறட்டும் - வாரீர்! வாரீர்!!


-----------------------"விடுதலை" தலையங்கம் 9-6-2009

4 comments:

காமராஜ் said...

கிச்சுக்கிச்சு மூட்டாத, சொரிந்து பதிவெழுதாத, டாஸ்மாக் கவிதையில்லாத தேட
ஒரு சில பிளாக்குகள் தான் மிஞ்சுகிறது உங்களது பிளாக்கும் சேர்த்து.
வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

எல்லா இடங்களிலும் துருத்திக்கொண்டு நிற்கிற மேலாதிக்கமும்
ஆணாதிக்கமும் சேர்த்தே நசுக்கப்படவேண்டியது அதற்கான குரல்
இன்னும் உக்கிரத்தோடு ஒலிக்கட்டும்.

Anonymous said...

நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி காமராஜ்.
விழிப்புணர்வூட்டும் வகையில் குறிப்பாக பெரியார் கொள்கைகளை பரப்பும் வகையில் தான் தமிழ் ஓவியா வலைப் பூ செயல்படும்.

நன்றி தோழர் காமராஜ்