Search This Blog
16.6.09
பெண்களுக்கான 33 சதவிகித உள் ஒதுக்கீடும் - யதார்த்த நிலையும்!
15.6.2009 நாளிட்ட ஜனசக்தி நாளேட்டில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு! இழுபறி தீருமா? என்ற ஒரு கட்டுரை விரிவாக எழுதப்பட்டுள்ளது.
அந்தக் கட்டுரையில் ஓரிடத்தில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:-
மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி புதிய நாடாளுமன்றம் 33 விழுக்காடு மகளிர் சட்டத்தை உறுதியாக நிறைவேற்றும், 33 சதவிகித இட ஒதுக்கீட்டை காங்கிரசு உறுதியாக ஆதரிக்கிறது. மொத்த இடஒதுக்கீடான 33 சதவிகிதத்தில் தலித் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு மட்டுமே இச்சட்டத்தில் அரசியல் சாசனப்படி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது நியாயமானது என்று கூறியுள்ளார். மேல்தட்டுப் பெண்களே எம்.பி.,யாகவும், எம்.எல்.ஏ.,யாகவும் வர இச்சட்டம் வழிகோலுகிறது என்கிற ஒரு சில எதிர்க்கட்சி களின் கருத்தினை அரசு ஆராய முடிவு செய்துள்ளது என்றும் கருத்துக் கூறியுள்ளார் என்று ஜனசக்தியின் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இது உண்மையாகவிருக்கும் பட்சத்தில் இப்பிரச்சினையில் முன்னேற்றமான ஓர் அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது என்று நம்பலாம். இதன்மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சட்டப்படியாக இந்த 33 சதவிகிதத்தில் இடம் பெறுவார்கள் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டியதுதானே - அதனை அறிவிப்பதில் தாமதமும், தயக்கமும், இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்கத்தானே பயன்படும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க அரசமைப்புச் சாசனத்தில் இடம் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அவ்வாறு அளிக்கப்பட இடம் இல்லையென்றால், அதற்காக அரசமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்தத்தையும் கொண்டு வருவது ஒன்றும் கடினமானதல்லவே! மக்களுக்காகத்தானே சட்டம்? இதற்கு முன்பும்கூட எத்தனையோ திருத்தங்கள் அரசமைப்புச்சாசனத்தில் கொண்டுவரப்பட்டதில்லையா?
1950 ஜனவரி 26 இல் புதிய அரசமைப்புச் சாசனம் அமலாக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு மட்டுமே கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசுத் துறைகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டு வரப்படவில்லையா? அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லையா? அதனை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லையா?
அதே அணுகுமுறை ஏன் இதிலும் பின்பற்றப்படக்கூடாது? பொதுவாக சமூகநீதியில் பிற்படுத்தப்பட்டவர்கள் பிரச்சினை என்று வரும்போது அவர்கள் ஏதோ ஒரு வகையில் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது மட்டும் மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாகக் கணக்குத் திறக்கப்படும்போதே பொருளாதார அளவுகோல் (Creamy Layer) என்ற ஒன்றைக் கொண்டு வந்து திணிக்கவில்லையா? அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஒரு மூலையிலாவது இடஒதுக் கீட்டுக்குப் பொருளாதார அளவுகோல் என்பது ஜாடையாகவாவது கூறப்பட்டதுண்டா?
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு என்று வரும்போது அதிலும் எத்தனை எத்தனைக் குறுக்குசால்கள் ஓட்டப்பட்டன. அதிலும் பல விதிவிலக்குகள் - உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று வரும்போது, மூன்று ஆண்டுகளாகப் பிரித்து ஆண்டுக்கு 9 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்பதெல்லாம் எவ்வளவுப் பெரிய உரிமை மறுப்பு!
இவ்வளவுக்கும் மக்கள்தொகையில் 52 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்டவர்கள். ஜனநாயக முறை என்று எடுத்துக் கொண்டாலும், இந்தப் பெரும்பான்மை மக்களுக்கான உரிமைப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டாமா?
இடதுசாரிகள் இந்தப் பிரச்சினையை யதார்த்தக் கண்ணோட்டத்தோடு அணுகவேண்டாமா? உள்ஒதுக்கீடு கேட்பதில் நியாயம் இல்லையா? அதனை முட்டுக்கட்டை என்று வருணிக்கலாமா?
தமிழ்நாட்டை மறந்து மற்ற மாநிலங்களின் நிலைகளை எண்ணிப் பார்க்கட்டும். உள் ஒதுக்கீடு இல்லையென்றால், மற்ற மாநிலங்களில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோர் பெரும்பாலும் பார்ப்பனர் மற்றும் உயர்தட்டு மக்கள்தானே - இல்லையென்று மறுக்க முடியுமா?
543 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அவையில் 181 பேர்களில் பெரும்பாலோர் ஆதிக்க ஜாதியினர் என்றால், அந்த அவையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைச் சட்டங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புண்டா? மீண்டும் மனுதர்மம் தலை கொழுத்து ஆட்டம் போடாதா?
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்மையிலேயே முட்டுக்கட்டை போடுபவர்கள் யார்? நிதானமாக, யதார்த்தக் கண்ணோட்டத்தோடு சிந்தித்துச் செயல்படட்டும்!
------------------------- "விடுதலை" தலையங்கம் 16-6-2009
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment