Search This Blog
30.6.09
அய்.அய்.டி.,களில் ஒடுக்கப்பட்டோரின் அவல நிலை!
இந்திய அரசமைப்புச் சட்டம் அமலாகி 59 ஆண்டுகள் கரைந்த பிறகும்கூட தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் கல்வித் துறையில் பல நிலைகளை எட்ட இன்னும் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் நிலைதான் இருந்து வருகிறது.
இந்நாட்டுக்குரிய பெரும்பான்மை மக்களுக்கு இந்த நிலை என்றால், இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா? பெரும்பான்மையோர்களால் ஆளப்படுவதுதான் ஜனநாயகம் என்கிற கருத்து குருடாக்கப்பட்டு விட்டதே இந்தியத் துணைக் கண்டத்தில். காலம் காலமாக கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தேவை என்ற போராட்டத்தில் ஓரளவு வெற்றி பெற்று முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறையினர் தத்தித் தத்தி மேலே வந்துகொண்டு இருக்கின்றது.
இடை இடையே ஆதிக்க ஜாதியினரின் முரட்டுக் கரங்களில் சிக்கிய அரசும், நிருவாகமும், நீதித்துறையும் சாண் ஏறினால் முழம் சறுக்கச் செய்யும் ஒரு நிலைமையை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படுத்தி வந்துகொண்டிருக்கின்றன.
பூணூலை ஒரு பக்கம் கையில் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டே, இட ஒதுக்கீட்டினால் ஜாதி வளரும் என்றனர். அது எடுபடவில்லை என்றதும், இட ஒதுக்கீட்டினால் தகுதி, திறமை போய்விடும் என்று மூக்கால் அழுதனர்.
அந்தக் கருத்தின் முதுகில் மண்ணைக் காட்டிவிட்டனர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள்.
இப்பொழுது இன்னொரு கட்டமாக இட ஒதுக்கீடு தேவைதான்; அது எல்லாத் துறைகளுக்கும் கூடாது; உயர்நிலைக் கல்வி என்கிற இடங்கள் இட ஒதுக்கீட்டிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கூறி, அதில் இதுவரை அவர்களின் ஆதிக்கக் கைகள் கூரிய நகங்களுடன் நிமிர்ந்து நிற்கின்றன.
நாற்பதுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்கிற மசோதாவை கடந்த நாடாளுமன்றத்தின் கடைசித் தொடரில் மாநிலங்களவையில் அவசர அவசரமாக நிறைவேற்றியும் விட்டனர்.
இவ்வளவுக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று அமைச்சரவையால் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில் இப்படியொரு மசோதா மாநிலங்களவையில் எப்படி நிறைவேற்றப்பட்டது? அதற்குப் பொறுப்பானவர்கள் யார்?
இவ்வாண்டு அய்.அய்.டி.,களில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு எழுதிய 36,117 தாழ்த்தப்பட்டவர்களில் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 967 பேர்கள் மட்டும்தானாம். தாழ்த்தப்பட்டோருக்குரிய 1100 இடங்கள் காலியாகவே இருக்குமாம்.
இட ஒதுக்கீடு மாணவர்கள் அய்.அய்.டி., படிப்புக்குத் தங்களைத் தயார் செய்து கொள்வதற்கு ஓர் ஆண்டு தனியே பயிற்சி வேறு அளிக்கப்படுமாம். இதன் பொருள் மற்ற உயர்ஜாதிக்காரர்களைவிட இவர்கள் ஓராண்டு அதிகமாகப் படிக்கவேண்டும் காலமும், பொருளும் நஷ்டம் இட ஒதுக்கீட்டுக்காரர்களுக்கு.
அய்.அய்.டி.,களில் சேர நுழைவுத் தேர்வு எழுதிய பிற்படுத்தப்பட்டோர் 3 லட்சத்து 95 ஆயிரம் பேர். தேர்ந்தெடுக்கப்பட்டோர் 1930. இதில் 1546 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிலும் 1493 பேர்களுக்கு மட்டுமே அனுமதியாம். 53 பேர்களின் விண்ணப்பங்களில் சில விவரங்கள் இல்லாமையால் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலை. அப்படியானால் இந்த இடங்கள் உயர்ஜாதிக்காரர்களின் வயிற்றில்தான் அறுத்து வைக்கப்படும்.
எதைச் சொல்லியாவது, எதைச் செய்தாவது ஆரிய நரிகள் ஒடுக்கப்பட்ட மக்களை ஆடுகளாகக் கபளீகரம் செய்வதில்தான் குறியாக இருக்கின்றன.
அத்தனை அய்.அய்.டி. இயக்குநர்களும் பார்ப்பனர்கள்தான் என்கிற நிலையில் எந்த அநியாயத்தைச் செய்யத்தான் அவர்கள் தயங்குவார்கள்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (29.6.2009) காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் வினா ஒன்றைக் கிளப்பினார்.
அய்.அய்.டி.,களில் தாழ்த்தப்பட்டோருக்கான 1100 இடங்கள் காலியாக இருப்பதுபற்றிய வினா அது. உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் பொறுப்பான பதிலை அளித்துள்ளார்.
அய்.அய்.டி., அய்.அய்.எம்., போன்ற உயர்கல்விகளில் சேரும் தகுதியும், திறமையும் தமிழக மாணவர்களிடம் உள்ளது. ஆனால், தாழ்வு மனப்பான்மை காரணமாக பலர் இதில் சேரத் தயங்குகின்றனர். எனவே, வருங்காலத்தில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் சேருவதற்கான பயிற்சி அளிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இது வரவேற்கத்தக்க பதிலாகும்.
59 ஆண்டுகளுக்குப் பிறகும் உயர்கல்வி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எட்டாக் கனியாக இருப்பது தடுக்கப்பட்டே தீரவேண்டும்.
தந்தைபெரியார் அவர்களின் மாணவர் கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழ்நாடு இதில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டானதாக இருக்கவேண்டும் அல்லவா!
------------------நன்றி:-"விடுதலை"தலையங்கம் 30-6-2009
Labels:
அரசியல்-சமூகம்-இடஒதுக்கீடு
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பார்ப்பண ஆதிக்கம் அதிகம் இருப்பது சென்னை அய். அய். டி யில் தான். சில ஆண்டுகளுக்கு முன்னால் துணை பேராசிரியர் பதவிக்காக என்னுடைய ஆராய்ச்சி பற்றி உரையாற்றினேன். அதற்கு முன்பே நான் துறை தலைவரை சந்தித்த போது இரண்டு முறை எனது தோள்பட்டையை தடவி பூணூல் இருக்கிறதா என அறிந்து கொண்டார். என்னுடைய உரை பற்றி, நான் பார்ப்பணர் இல்லை என்று தெரியாத பேராசிரியர்கள் ஆதரவு தெரிவித்த போதும், எனக்கு துணை பேராசிரியர் பதவி வழங்கப்படவில்லை. நான் அறிந்த வரையில் மற்ற அய். அய். டி களில் இப்பாகுபாடு குறைவே!
பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பன் அடிவருடிகள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்களோ?
பார்ப்பர்களின் ஆதிக்கம் இன்னும் ஒழிந்த பாடில்லை? அந்த ஆதிக்கத்தை ஒழிக்க உதவாவிட்டாலும் பராவாயில்லை. முட்ட்டுக்கட்டை போடாமல் இருந்தால் போதும் அந்த பார்ப்பன அடிவருடிகள்.
Post a Comment