Search This Blog

26.6.09

உலக நாடுகள் - தூரப்பார்வை - ஈரான்






இன்றைய ஈரான் நாட்டில், பொது ஆண்டுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே, பாரசீக, மெடிய மக்கள் வாழ்ந்து வந்தனர். பாரசீக அரசர் சைரஸ் என்பார், மெடிய வமிச ஆட்சியை அகற்றிவிட்டு பாரசீக அல்லது அஷேமெனித் ஆட்சியை நிறுவினார். பொது ஆண்டுக்கு முன் 331ஆம் ஆண்டில் மகா அலெக்சாண்டர் பாரசீகத்தை வென்றார். அதன் பின் பல வமிசங்களின் ஆட்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் 12ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களின் படையெடுப்பு நடந்தது.

16 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை சபாவித வமிசத்தின் ஆட்சி நடைபெற்றது. இந்தக் காலத்தில்தான் நாட்டில் ஷியா இசுலாமியக் கொள்கை பரவி, பெரும்பான்மை மதம் ஆனது. சபா வித வமிசத்திற்குப் பிறகு கஜார் வமிச ஆட்சி வந்தது. இவர்கள் 1794 முதல் 1925 வரை ஆட்சி செலுத்தினர்.

1921 பிப்ரவரி மாதத்தில் ராணுவத் தளபதி ரேஜாகான் அதிகாரத்தைக் கைப்பற்றினார். ஈரானிய நாடாளுமன்றம் மன்னரைப் பதவியிலிருந்து நீக்கியது. அவர் பல ஆண்டுகளாக சிகிச்சைக்கு என அய்ரோப்பிய நாடுகளில் தங்கி விட்டதால் இந்த நிலை ஏற்பட்டது. அவருக்குப் பதில் ரேஜாகான் மன்னராக நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டார். அவரது வமிசம் பஹ்லவி என்று தன் பெயரை அழைக்குமாறு செய்து கொண்டார். அவரைப் போலவே நாடும் பெயரை மாற்றிக் கொண்டது. பாரசீகம் (பெர்சியா) என்பது மாற்றப்பட்டு ஈரான் ஆனது.

1941இல் இரண்டாம் உலகப் போரின் போது, சோவியத் ஒன்றியமும் பிரிட்டனும் ஈரானைக் கைப்பற்றின. ஈரான் மன்னர் ஜெர்மனி நாட்டின் சார்புள்ளவராகக் காட்சி அளித்த நிலையில் நேச நாடுகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பதவி நீக்கம் செய்யப்பட்ட மன்னருக்குப் பதில் அவரின் மகன் முகமது ரேஜாஷா பஹ்லவி மன்னராக 16.9.1941இல் நியமிக்கப்-பட்டார்.

1960 இல் மன்னர் ஷா, ஈரானை மேலை நாடுகளைப் போல மாற்ற வேண்டும் எனும் நோக்கோடு பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கு வெண்மைப் புரட்சி என்று பெயர் சூட்டினார். எனினும் இந்த நடவடிக்கை களுக்கு மக்களின் எதிர்ப்பு வெடித்தது. 1970 முதல் தொடர்ந்த எதிர்ப்புகள் மதரீதியானவை. நாகரிக நடைமுறைகள் இசுலாமின் கொள்கைகளுக்கு எதிரானவை என்ற வகையில் எழுந்த எதிர்ப்புகளைத் தாக்குப் பிடிக்க முடியாத மன்னர் ஷா, தம் குடும்பத்தினருடன் 1979 ஜனவரியில் ஈரானை விட்டு வெளியேறினார்.

14 ஆண்டுக்காலமாக ஈரானை விட்டு வெளியேறியிருந்த மதத் தலைவர் அயதுல்லா ருஹோல்லா கொமேனி 1979 பிப்ரவரி மாதத்தில் நாடு திரும்பினார். மன்னரின் சீர்திருத்தங்களை எதிர்த்த காரணத்தால் மத அடிப்படைவாதக் கொள்கை கொண்டவர் நாட்டில் இருக்க முடியாத நிலை மன்னரின் வெளியேற்றத்தால் தீர்ந்தது. 1-4-1979இல் இசுலாமியக் குடியரசு நாடு என்ற பெயரில் ஈரான் மதச் சார்பான நாடாக மாறியது. பொது வாக்கெடுப்பு நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மன்னர் ஷாவுக்கு அமெரிக்க அரசின் ஆதரவு அமோகமாக இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்திருந்த ஈரானியர்கள் மதச்சார்பான நாட்டை அமைத்த உடனேயே 4.4.1979இல் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கி அங்கிருந்த 52 அமெரிக்கர்களைச் சிறைப் பிடித்தனர். பதில் நடவடிக்கையாக ஈரான் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது. அரசு ரீதியான உறவுகளைத் துண்டித்துக் கொண்டது. அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த ஈரான் மாணவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றியது. 1980 செப்டம்பர் 22 ஆம் நாள், ஈராக் நாடு ஈரான் மீது தாக்குதல் தொடங்கி-யது. ஈரானிய எண்ணெய்க் கிணறுகள் தொடர்பான பிரச்சினை காரணம் எனப் பட்டது. சண்டை 1988 வரை நடத்து. இடையில் கூறப்பட்ட போர் நிறுத்தப் பேச்சுகளை ஈரான் நிராகரித்து விட்டது. எனினும், கடைசியில், அய்.நா. மன்றம் கூறிய போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஈரான் ஒத்துக் கொண்டது.

1997 மே மாதத்தில் நடைபெற்ற தேர்தலில், முற்போக்காளரான முகம்மது கடாமி என்பவர் வெற்றி பெற்றார். ஆனாலும் பிற்போக்கு வாதிகளின் தூண்டுதலிலும் பின்பலத்திலும் 1999இல் டெஹ்ரான் பல்கலைக் கழக மாணவர்கள் பெருங் கிளர்ச்சி செய்தனர். 2004 இல் நடந்த தேர்தலில் பிற்போக்காளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்.

10 லட்சத்து 64 ஆயி-ரத்து 800 சதுர கி.மீ. பரப்புள்ள நாட்டில் 7 கோடிப் பேர் வாழ்கின்றனர். இவர்களின் ஷியா பிரிவு முசுலிம்கள் 89 விழுக்காடு. சன்னி பிரிவினர் 10 விழுக்காடு. யூத, பாரசீக, கிறித்துவ, பஹாய் மதத்தினர் ஒரு விழுக்காடு இருக்கின்றனர்.

பாரசீக, துருக்கிய, குர்திஷ் மொழிகளையும் அரபி மொழியையும் பேசும் மக்களில் கல்வியறிவு பெற்றோர் 80 விழுக்காடு. இசுலாமிய மதச் சார்பான நாடு ஆனதால் இசுலாமிய ஷரியா விதிமுறைகள் பின் பற்றப்படுகின்றன. நாட்டின் ஆகப் பெரிய தலைவர் அயதுல்லா அலி ஹொசைனி கமேனி என்னும் மதத் தலைவர் 4-6-1989 முதல் இருந்து வருகிறார். ஆட்சித் தலைவர் குடியரசுத் தலைவர் மஹ்முத் அகமதி நஜாத்.

பணவீக்கம் 16 விழுக்காடு உள்ளது. 40 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 12 விழுக்காடு பேர் வேலை கிட்டாதவர்கள். இசுலாமிய சட்டம், வாழ்க்கை முறை இந்நிலையை மாற்றவில்லையே!

-------------------"விடுதலை" 25-6-2009

0 comments: