Search This Blog

13.6.09

கோவணத்தோடு ஆண்டியாகப் போன முருகனுக்குத் தங்கத்தாலான தேர் எதற்கு?-குன்றக்குடி அடிகளார்


45 கோடி ரூபாயில் வைரக்கிரீடமா?


திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு கருநாடக மாநில அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி என்பவர் 45 கோடி ரூபாய் மதிப்பில் வைரக்கிரீடத்தை வழங்கியுள்ளார். 20 கிலோ எடையுள்ள இந்தக் கிரீடத்தில் 4000 கேரட் எடையில் 70 ஆயிரம் வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளனவாம். ஒன்பது மாதங்களாக இதனை விற்பன்னர்கள் தயாரித்துள்ளனராம்.
உலகத்தில் பல மதங்கள் இருக்கின்றன. பல கடவுள்கள் இருக்கின்றன. ஆனாலும், இந்த இந்து மதக் கோயில்களில் காணும் இந்த அநியாயம், அக்கிரமம் வேறு மதக் கோயில்களில் கிடையாது.

கடவுள் சர்வசக்தி உள்ளவர் என்றும், கல்லினுள் தேரைக்கும் அவர்தான் படி அளக்கிறார் என்றும், அவர் பற்றற்றவர் என்றும், உருவமற்ற அரூபி என்றும், தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றும் ஒரு பக்கத்தில் பிரச்சாரம் செய்துகொண்டு, கோயில் கட்டி, அய்ம்பொன்னால் உருவச் சிலைகளைச் செதுக்கி வைத்து, ஆறுகால பூஜைகள் நடத்தி, ஆண்டின் பல நாள்கள் திருவிழா நடத்தி, கடவுளுக்கு வருடம்தோறும் கல்யாணம் நடத்தி வைக்கும் கூத்தை எல்லாம் பார்க்கும்பொழுது வடலூர் வள்ளலார் அவர்கள் சொன்னாரே, பிள்ளை விளையாட்டு என்று - அந்தப் பொன்னான வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.
இந்தியாவில் 77 விழுக்காடு மக்கள் இன்னும் நாள் ஒன்றுக்கு வெறும் இருபது ரூபாய் கூலி வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் கடவுள் என்னும் குத்துக்கல்லுக்கு 45 கோடி ரூபாயில் வைரக்கிரீடம் என்றால், இதைவிட பொறுப்பற்ற நாடு வேறு எங்கே யாவது உண்டா?


காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மூன்றரை கிலோவில் தங்கத்தாலான பூணூலை இதே திருப்பதி வெங்கடாசலபதிக்கு அணிவித்தார் சில ஆண்டுகளுக்குமுன். கடவுளைக் கவனிப்பதில்கூட வருணஜாதி உணர்வுகள்!

மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தான் மிக அழகாக ஒரு கேள்வியை எழுப்பினார்.
கோவணத்தோடு ஆண்டியாகப் போன முருகனுக்குத் தங்கத்தாலான தேர் எதற்கு என்ற வினாவை எழுப்பினார்; அவர் ஒன்றும் நாத்திகர் அன்று; ஆத்திகர்தான்! அவர் எழுப்பிய வினாவுக்கு இதுவரை யார்தான் பதில் கூறியிருக்கிறார்கள்.


கடவுள்தான் எல்லாம் வல்லவராயிற்றே - ஏன் இந்தக் காணிக்கைகள் என்று கேட்டால், அதற்கொரு தலப் புராணத்தைக் கொட்டி அளக்கிறார்கள்.

திருப்பதி ஏழுமலையான் தனது கல்யாணச் செலவுக்கு குபேரனிடம் கடன் வாங்கினாராம். அந்தக் கடனை அடைக்கத்தான் பக்தர்கள் ஏழுமலையானுக்குக் காணிக்கைகளைக் கொட்டுகிறார்களாம்.

இது அறிவுக்குப் பொருந்தக்கூடியதுதானா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். வாங்கிய கடனை உழைத்துச் சம்பாதித்துத் திருப்பி அடைப்பதுதானே நாணயம் - ஒழுங்குமுறை! மாறாக பக்தர்கள் போடுகிற பிச்சையின் மூலம் கடனை அடைக்கிறார் - தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கும் கோவிந்தன் என்றால், இதனைக் கேட்டு வாயால் சிரிக்க முடியுமா?


குபேரனிடம் வாங்கிய கடனுக்கு வட்டி உண்டா? இதுவரை முதல், வட்டி இவைகளுக்கு எவ்வளவுத் தொகையை திருப்பிச் செலுத்தியிருக்கிறார் - இன்னும் கடன் பாக்கி எவ்வளவு இருக்கிறது? இதுபற்றிய கணக்கு யாரிடம் இருக்கிறது? எப்படி தெரிந்து கொள்வது?
இதுவரை ஏழுமலையான் கோயில் தங்கத்தின் இருப்பு 11 டன்னாம். நியாயமாக இது இந்தியாவின் ரிசர்வ் வங்கியில் இருந்தால் பண வீக்கமாவது குறையும்.

வெளிநாட்டுக்காரர்கள் (கஜினி முகம்மது போன்றவர்கள்) இந்தியாமீது படையெடுத்து வந்ததற்கே இந்துக் கோயில்களில் குவிந்து கிடக்கும் இந்தத் தங்கத்திற்காகவும், வைரத்திற்காகவும்தான்.

அவர்கள் படையெடுத்து அள்ளிச் சென்றபோது இந்தக் கடவுள்களால் என்ன செய்ய முடிந்தது?
என்றைக்கு எப்படி அடித்து வைத்தார்களோ, அதே நிலையில் இருக்கிறது - அந்தக் குழவிக் கல் அல்லது குத்துக்கல்.

இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க புத்தி வேலை செய்யவேண்டுமே! பக்தி வந்தால்தான் புத்தி போய்விடுகிறதே - அந்தோ பரிதாபம்!

------------------"விடுதலை"தலையங்கம் 13-6-2009

3 comments:

கோவி.கண்ணன் said...

//வெளிநாட்டுக்காரர்கள் (கஜினி முகம்மது போன்றவர்கள்) இந்தியாமீது படையெடுத்து வந்ததற்கே இந்துக் கோயில்களில் குவிந்து கிடக்கும் இந்தத் தங்கத்திற்காகவும், வைரத்திற்காகவும்தான்.

அவர்கள் படையெடுத்து அள்ளிச் சென்றபோது இந்தக் கடவுள்களால் என்ன செய்ய முடிந்தது?
//

நல்ல தெளிவான அருமையான கேள்விகள். பாராட்டுகள் தமிழ் ஓவியா !

Gokul said...

அருமையான கேள்விகள்,

ஆனால் இதில் மூடநம்பிக்கையை தாண்டி எனக்கு தோன்றுவது என்னவென்றால் , 45 கோடி காணிக்கை என்றால் , அவரது வேண்டுதல் என்னவாக இருந்து இருக்கும், அவர் அந்த வேண்டுதல் மூலம் அடைந்த லாபம் என்னவாக இருந்திருக்கும்? அந்த லாபம் சட்டத்திற்குட்பட்ட லாபம்தானா , அது அந்த அமைச்சருக்கும், திருப்பதி கடவுளுக்கும்தான் வெளிச்சம்.

வருமான வரி , இது போல திருப்பதி கோவிலுக்கு பெரும் நன்கொடை கொடுப்பவர்கள் மீது கண் வைத்தாலே போதும்! ஆனால் கொடுத்தவர் அமைச்சர் , யாரை நொந்துகொள்ள?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோவி.கண்ணன்.

@

கோகுல்