Search This Blog

10.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை- கியூபா-சைப்ரஸ்


கியூபா

கிறிஸ்டொபர் கொலம்பஸ், இந்தியா என நினைத்துக் கொண்டு அமெரிக்க நாடுகளின் கரையில் கால்வைத்தது போலவே, கியூபாவிலும் கால் பதித்த போது பூர்வ குடிகளான அரவாக் இந்தியர்கள் அங்கு வசித்து வந்தனர். இந்திய நாடு என்ற எண்ணத்தில் இருந்த கொலம்பஸ் இம்மக்களையும் இந்தியர்கள் எனக் குறிப்பிட்டார். உண்மை நாளடைவில் தெரிந்தபோது வித்தியாசம் தெரிவதற்காக சிவப்பிந்தியர்கள் என அவர்கள்அழைக்கப்பட்டனர்.

1492இல் கியூபாவில் அய்ரோப்பிய நாட்டுக்காரர் வந்திறங்கினர்.
1511இல் ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் குடியேறினர். இவர்களுக்குத் தலைவனா டீகோ வெலாஸ் குயிஸ் என்பார் இருந்தார். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இந்நாட்டின் மக்கள் தொகை ஒன்றரை லட்சத்திலிருந்து 13 லட்சமாக உயர்ந்து விட்டது. அடிமைகள் எனக் கருதப்பட்ட மக்கள் தொகைப் பெருக்கம் குறிப்பிடத்தக் வகையில் 1763 முதல் 1860க்குள் உயர்ந்துவிட்டது. 19 ஆம் நூற்றாண்டில் கியூபாவில் சர்க்கரை உற்பத்தி வளர்ச்சி அடைந்து உலக உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு கியூபாவில் எனும் அளவுக்கு உயர்ந்தது.

1868 தொடங்கிப் பத்தாண்டுகள் விடுதலைப் போராட்டம் நடை பெற்றபோது, அரசியல் சூழ்நிலைகளோடு பொருளாதார நிலையும் பாதிக்கப்பட்டது. 1898இல் கவிஞர் ஜோஸ் மார்டி என்பாரால் இரண்டாம் முறையாகவும் விடுதலைக்கான போர் தொடங்கியது. 1898 இல் அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்றின் (அதன் பெயர் மெய்ன்) தளத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் ஹவானா துறைமுகத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதன் விளைவாக ஸ்பெயின் நாட்டின் மீது அமெரிக்கா 1898 ஏப்ரலில் போர் தொடுத்தது. நான்கே மாதங்களில் அமெரிக் காவும் ஸ்பெயினும் ஒப்பந்தம் செய்து கொண்டதால் அமைதி நிலவியது. கியூபாவை ஸ்பெயின் விட்டுப் பிரிந்தது.

1902இல் கியூபா விடுதலை பெற்றது. தாமஸ் எஸ்ட்ரடா பைமா என்பார் அதிபரானார். ஆனாலும் அமெரிக்கா 1901இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி கியூபாவின் மீதான சர்வதேச பொருளாதார, உள் நாட்டுப்பிரச்சினைகளைக் கண்காணிக்கும் உரிமையை அமெரிக்கா ஏற்படுத்திக் கொண்டு விட்டது. அதை விடவும் மோசமாக, கியூபாவின் குவான்டாமோ பகுதியில் கடற்படைத் தளம் ஒன்றினை அமைத்துக் கொள்ளும் உரிமையையும் அது பெற்று விட்டது.

பொம்மை அதிபர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்த பிறகு 1940 இல் பெல்ஜென்சியோ பாடி ஸ்டோ அதிபரானார். இவரைப் பதவியிலிருந்து தூக்கி எறிய ஃபிடல் காஸ்ட்ரோ போராடி னார். தோல்வி அடைந்தார். மீண்டும் 1956 இல் போராட்டம், புரட்சி எனத் தொடங்கி கொரில்லா யுத்தத்தில் ஈடுபட்டார். எர்னஸ்டோ சே குவாரா இந்தப் போரில் பெரிதும் துணையாக இருந்து ஃபிடலுடன் சேர்ந்து போரிட்டார். அந்தப் புரட்சிப் போரின் வெற்றியின் விளைவாக 1-1-1959 இல் பாடிஸ்டா கியூபாவை விட்டு ஓடினார்.

மறு ஆண்டே, 1960 இல் கியூபா அரசு தன் நாட்டில் இருந்த அமெரிக்க முதலாளிகளுக்குச் சொந்தமான வணிக நிலையங்களை நாட்டுடைமை ஆக்கியது. இதன் காரணமாக கியூபா நாட்டுடனான அரசியல் உறவுகளை அமெரிக்கா துண்டித்துக் கொண்டு விட்டது. இருந்தாலும் கியூபா நாட்டிலிருந்து வெளியேறி வசித்து வந்த முதலாளித்துவ ஆதர வாளர்களைத் தூண்டி விட்டு கியூபா அரசுக்கு எதிராகப் போராடத் தூண்டியது. பன்றிக் கடல் பகுதியிலிருந்து தாக்குதல் தொடுக்க உதவியது. அத்துடன் வணிகத் தடை விதித்து கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றிடப் பல வகைகளிலும் அமெரிக்கா முயற்சித்தது. முதலாளித்துவ சக்திகளின் இத்தகைய முயற்சிகளெல்லாம் அவர்கள் விரும்பிய பலனைத் தரவில்லை. மாறாக கியூபா நாட்டை சோவியத் யூனியனின் பக்கம் செல்லத் தூண்டி விட்டது. இறுதியில் கியூபாவை கம்யூனிஸ்ட் நாடு எனப் பிரகடனம் செய்யும் நிலைக்கு ஃபிடல் காஸ்ட்ரோவை வைத்தது.

1962இல் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. அணு ஆயுதப் போர்மூளும் நிலைக்குச் சென்றது. இதற்குக் காரணம்- கியூபாவில் சோவியத் நாடு அணு ஆயுதங்களைக் கொண்டு வந்து குவித்து வைத்திருந்ததுதான். அன்றைய சோவியத் பிரதமர் குருஷ்சாவின் பணியாத தன்மை அமெரிக்காவை மிரள வைத்தது. தன் நடவடிக்கைகளை நிறுத்தச் செய்தது.

கம்யூனிஸ்ட் நாடுகள் சிதறுண்டு போய்விட்ட நிலையிலும் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் நாடு என அறிவித்து நிலை பெற்றிருக்கும் நாடாக கியூபா விளங்குகிறது. 40 ஆண்டுகள் அதிபராகஇருந்து வரலாறு படைத்த ஃபிடல் காஸ்ட்ரோ தற்போது பொறுப்பில் இருந்து விலகியதால் அவரின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ அதிபராக உள்ளார்.

கரிபியன் கடலுக்கும் வட அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள தீவு நாடான கியூபா ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 860 ச.கி.மீ. பரப்புள்ளது. ஒரு கோடியே 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். காஸ்ட்ரோ அதிபராக வருவதற்கு முன்பு மக்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவியிருந்தனர். மக்களின் மொழி ஸ்பானிஷ் ஆகும். 97 விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றவர்.

சைப்ரஸ்

சைப்ரஸ், கிரேக்க, பீனிஷிய நாடுகளின் குடியேற்ற நாடாக இருந்தது. 1571இல் இத்தீவு துருக்கி யர்களின் பிடிக்குச் சென்றதால் துருக்கியர்களின் குடியேற்ற நாடாகியது. முதல் உலகப் போரின் போது, இங்கிலாந்து தன் நாட்டுடன்இணைத்து 1925 இல் தன்னுடைய காலனி நாடாக அறிவித்துக் கொண்டது. பின்னர் 1960இல் சைப்ரஸ் தீவுக்கு விடுதலை அளித்தது.
ஆர்ச்பிஷப் மக்காரியாஸ் அதிபராக இருந்து வந்த நிலையில் 1974 இல் கிரீஸ் நாட்டின் உதவி யால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு ராணுவப் புரட்சியால் அதிபர் மக்காரியாஸ் அகற்றப்பட்டார். 5 நாள்களில் துருக்கி நாடு தன்படைகளை சைப்ரசுக்கு அனுப்பியது. சைப்ரசில் வாழும் துருக்கியர்களைப் பாதுகாத்திட அனுப்பியது எனக் கூறியது.ஆனால் இந்தப் படையெடுப்பின் விளைவாக சைப்ரஸ் நாடு இரண்டாகப் பிரிந்தது.

வடபகுதி துருக்கிய சைப்ரஸ் எனவும் தென்பகுதி கிரேக்க சைப்ரஸ் எனவும் பிரிக்கப்பட்டது. இதற்கிடையே கிரேக்க ராணுவப் புரட்சி தோல்வி அடைந்ததன் விளைவாக கிரேக்க ராணுவ ஆட்சியும் கலைந்தது. 1974 டிசம்பரில் பிஷப் மக்காரியஸ் பதவி ஏற்க மீண்டும் வந்தார். துருக்கிய சைப்ரஸ் பகுதிக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கினார். ஆனால் நாட்டைத் துண்டாடவோ மக்களைப் பிரித்து அனுப்பவோ மறுத்துவிட்டார்.

சைப்ரஸ் அய்ரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக முடிவு செய்து, இரண்டு பகுதிகளிலும் பொது வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. ஒன்று பட்ட சைப்ரஸ் நாடாக அய்ரோப்பிய ஒன்றியத் தில் நுழைய வாக்கெடுப்பு உதவவில்லை. கிரேக்கப் பகுதி ஏற்று வாக்களித்தாலும், துருக்கிப் பகுதி ஒப்பவில்லை. எனவே 1-5-2004 இல் கிரேக்கப் பகுதி மட்டுமே அய்ரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கிறது.

மத்திய தரைக் கடல் பகுதியில் துருக்கிக்குத் தெற்கே அமைந்துள்ள இந்நாட்டின் மொத்தப் பரப்பு 9 ஆயிரத்து 250 சதுர கி.மீ. ஆகும். இதில் துருக்கி சைப்ரஸ் 3 ஆயிரத்து 355 சதுர கி.மீ. ஆகும். சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கிரேக்க, துருக்கிய, இங்கிலீஷ் மொழி பேசுகின்றனர். 98 விழுக்காட்டினர் எழுத்தறிவு பெற்றவர்கள். 78 விழுக்காடு மக்கள் கிரேக்கப் பழமைவாதக் கிறித்துவ மதம் சார்ந்த வர்கள். 18 விழுக்காடு இசுலாமிய மார்க்கம் சார்ந்த
வர்கள்.

----------------------"விடுதலை" 10-6-2009

0 comments: