Search This Blog
26.6.09
புராணத்தில் விஞ்ஞானமாம்!
கொலைக்குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும், பிணையில் வெளிவந்தாலும் சங்கராச்சாரியார் உத்தமபுத்திரர் போலவும், ஞானம்மிக்க கருத்துகளை திருவாய் மலர்வதுபோலவும் தூக்கிப் பிடிப்பதில் பார்ப்பனர்களுக்கு நிகர் பார்ப்பனர்களே!
காமகோடி என்ற மாத இதழ் சங்கரமடத்தின் ஆசியோடு வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பக்கமும் கொலைக்குற்றப் புகழ் ஜெயேந்திரரின் திருக்கல்யாண குணங்களைப்பற்றிய பிரஸ்தாபம்தான்.
இவர்கள் எந்த அளவு பொது அறிவு உள்ளவர்கள் என்பதற்கு ஜெயேந்திரர் தெரிவித்துள்ள கருத்தே போதுமானது.
புராணங்களை ஆழ்ந்து படித்தால் தற்கால விஞ்ஞானம் எல்லாம் அதில் பொதிந்து கிடப்பதைக் கண்டறிய முடியும் என்று கூறியுள்ளார்.
கொஞ்சம் புத்தியோடு சிந்திப்பவர்கள் யாராக இருந்தாலும் இதனைப் படித்துவிட்டு வாயால் சிரிக்க மாட்டார்கள்.
பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் விழுந்தான் ஒருவன் என்றும், மகாவிஷ்ணு என்னும் ஓர் இந்துக் கடவுள் பன்றி அவதாரம் எடுத்து கடலில் குதித்துப் பூமியை மீட்டான் என்றும், அந்தப் பூமிக்கும் பன்றிக்கும் ஒரு பிள்ளை பிறந்தது என்றும் கூறும் புராணக் கூற்றிலும் என்ன விஞ்ஞானம் இருக்கிறது என்பதை ஜெகத்குரு கூறினால் வரவேற்கலாம்.
பூமி தட்டையா? உருண்டையா? என்பதிலேயே லோகக் குருவுக்குச் சந்தேகம்.
பாற்கடலில் மகாவிஷ்ணு பள்ளி கொண்டாராம். அப்படி ஒரு கடல் இருக்கிறதா? பால் கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், சர்க்கரைக்கடல், புளிக்கடல், மிளகாய்க் கடல் என்று மளிகை சாமான்களுக்கான கடல்கள் எங்கே இருக்கின்றன? அவற்றைக் கண்டுபிடித்துச் சொன்னால் மக்களுக்கு எவ்வளவு சவுகரியமாக இருக்கும்.
சந்திரன் என்பவன் தேவர் குழாமில் ஒருவன் என்றும், அவன் குரு பத்தினியைக் கற்பழித்தான் என்றும் கூறுவதெல்லாம் எவ்வளவு காட்டுமிராண்டிக்காலப் பிதற்றல்!
விநாயகக் கடவுள் ஒரு நாள் சமுத்திர ஸ்நானம் செய்யச் சென்றதாகவும், அப்பொழுது தன் தும்பிக்கையால் கடல்நீர் முழுவதையும் உறிஞ்சிவிட்டதாகவும், அதன்பின் அந்த நீர் முழுவதையும் சிறுநீராகக் கழித்துவிட்டதாகவும், அப்பொழுதிருந்துதான் கடல் நீர் உப்புக் கரிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் கூறும் புராணத்தில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானக் கருவூலங்களுக்குக் கொஞ்சம் பதவுரை, பொழிப்புரை செய்யக்கூடாதா காஞ்சி மாஜி சங்கராச்சாரியார்?
சூரபத்மனுக்கும், சுப்பிரமணியக் கடவுளுக்கும் சண்டை நடந்ததாகவும் (ஹிந்து மதத்தில் கடவுள்கள் எல்லாம் சண்டை கூடப் போடும் கற்பழிக்கும்) அழிக்க அழிக்க அசுரர்கள் வல்லபை என்ற அரக்கர் குலப் பெண்ணின் பிறப்பு உறுப்பிலிருந்து வந்ததாகவும், அதனை சுப்பிரமணியனின் அண்ணனான விநாயகன் தன் தும்பிக்கையால் அடைத்து வீரர்களை வராமல் தடுத்ததாகவும் கந்தபுராணம் கூறுகிறதே _ - இதற்குக் கொஞ்சம் பாஷ்யம் கூறி இதற்குள் குடிகொண்டிருக்கும் அர்த்த புஷ்டிமிக்க அறிவியல் விஷயங்களைக் கொஞ்சம் எடுத்துவிடக் கூடாதா?
கால்நடையாகவும், பல்லக்கிலும் சென்றுகொண்டிருந்த இந்த ஜெகத்குருக்கள் இன்றைக்கு விலை உயர்ந்த கார்கள் மூலமாகவும், விமானம் மூலமாகவும் பயணம் செய்து, நவீன லௌகிக வாழ்க்கையை ருசித்துக்கொண்டு சாங்கோபாங்கமாக வளமாக ஒரு பக்கத்தில் வாழ்ந்துகொண்டு இன்னொரு பக்கத்தில் பழைய புராண அழுக்கு மூட்டைகளை அவிழ்த்துக்கொட்டி மக்களைப் பக்திச் சேற்றில் அழுத்திச் சுரண்டும் கொடுமையை என்ன சொல்ல!
தந்தை பெரியார் இந்தப் பக்தியைத் தோலுரிக்கும் பணியை மேற்கொண்டது எவ்வளவு பெரிய உயர்ந்த அரும்பெரும் தொண்டு என்பதை _ இந்தச் சங்கராச்சாரியார்களின் நடவடிக்கைகள் மூலம் தெரிந்துகொள்ளலாமே!
---------------"விடுதலை"தலையங்கம் 26-6-2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment