Search This Blog

29.6.09

உலக நாடுகள் - தூரப்பார்வை - ஜமைக்கா-ஜப்பான்




ஜமைக்கா

ஜமைக்கா தீவில் 1494 இல் கொலம்பஸ் வந்திறங்கியபோது அரவாக் இந்தியர்கள் அங்கே வாழ்ந்திருந்தனர். அவர்களை அடிமைப்படுத்தி 1655 ஸ்பெயின் நாட்டவர்கள் ஆட்சி செலுத்தினர். பின்னர் பிரிட்டிஷார் அதனைக் கைப்பற்றித் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகக் கருப்பின மக்களை அடிமைகளாகக் கொண்டு வந்து அடிமை வணிகத்தில் ஈடுபட்டனர். 1807 இல் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் உலகச் சந்தையில் சர்க்கரை விலை பெரும் வீழ்ச்சியை அடைந்தது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நிலை மாற்றம் 1865 இல் ஜமைக்கா தீவில் எழுச்சியையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தியது. 1866 இல் ஜமைக்கா பிரிட்டிஷாரின் குடியேற்ற நாடானது.

1958 இல் மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பை உருவாக்குவதில் ஜமைக்கா முக்கிய பங்காற்றியது. பிறகு நடந்த வாக்கெடுப்பின் முடிவுப்படி 1962 இல் ஜமைக்கா தன் விடுதலையைப் பிரகடனப்படுத்தியது.

கியூபாவுக்குத் தெற்கே அமைந்துள்ள ஜமைக்கா தீவின் பரப்பு 10 ஆயிரத்து 991 சதுர கி.மீ. இதன் மக்கள் தொகை 28 லட்சம் ஆகும். புரொடஸ்டன்ட் கிறித்துவர்கள் 61 விழுக்காடும் ஆவி வழிபாட்டினர் 35 விழுக்காடும் உள்ளனர். இங்கிலீசே ஆட்சி மொழி.

6-8-1962 இல் விடுதலை அடைந்த இத்தீவின் ஆட்சித் தலைவர் பிரிட்டிஷ் அரசியாவார். அவரின் பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல் உள்ளார். 19 விழுக்காடு குடிமக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 11 விழுக்காடுக்கு மேல் வேலை கிட்டாதோர் உள்ளனர்.

************************************************************************************

ஜப்பான்

நான்காம் நூற்றாண்டில்தான் ஒன்றிணைந்த ஜப்பான் நாடு யமாடோ வம்சத்தால் அமைக்கப் பட்டது. அதே காலத்தில் கொரியா வழியாக பவுத்த நெறி ஜப்பானில் பரவத் தொடங்கியது. 1192 இல் மினமோடோ யோரிசோமோ என்பவர் முதல் தளபதி வமிசத்தையும் ஆட்சியையும் உருவாக்கினார். ராணுவத்தின் தலைமைத் தளபதி தனது வமிச ஆட்சியை முதன் முதலில் உருவாக்கியதும் அப்போதுதான்.

1542 இல் போர்த்துகல் நாட்டுக் கப்பல் ஜப்பான் கடற்கரையை அடைந்தபோது அய்ரோப்பிய நாடுகளின் தொடர்பு தொடங்கியது. இதைத் தொடர்ந்து போர்த்துகல் மற்றும் ஏனைய அய்ரோப்பிய நாடுகளிலிருந்து வணிகர்கள் வரத் தொடங்கினர். 1603 முதல் 1867 வரை ஆண்ட டோகுகோவா தளபதி வமிச ஆட்சியாளர்கள், டச்சு நாட்டவர் தவிர வேறு மேலை நாட்டார் யாரும் ஜப்பானில் வணிகம் செய்யக்கூடாது எனத் தடை செய்தார்.

1868 இல் மெய்ஜி பேரரசர் பதவிக்கு வந்ததும் தளபதி வமிச ஆட்சியை ஒழித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டை மேலை நாடுகளைப் போல நவீன மயமாக்கும் பணியில் ஈடுபட்டார். புதிய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டது; நாடாளுமன்ற ஆட்சி முறை அமைக்கப்பட்டது. ராணுவம் அமைக்கப்பட்டது. வலுவுள்ள வாலிபர்கள் வலுக் கட்டாயமாகப் போர்ப்படையில் சேர்க்கப்பட்டனர். ஜப்பானின் எல்லைகளை விஸ்தரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் போர்கள் மூண்டன. 1894 இல் சீனாவுடன் போர் நடந்தது. பிறகு 1904 இல் ரஷ்யாவுடன் போர். இதன் விளைவாக 1910 இல் கொரியாவைத் தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. தற்போது சீனாவில் இருக்கும் மஞ்சூரியாவை 1931 இல் ஜப்பான் சேர்த்துக் கொண்டது.

7-12-1941 இல் அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியது. அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் போர் ஏற்பட்டது. நடந்து கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரில் ஜப்பான்நாடு ஜெர்மனியுடன் சேர்ந்த அச்சு நாடாக இருந்தது. போரின் தாக்குதலினால் ஜப்பான் சரண் அடைந்தது. 1945 ஆகஸ்ட் மாதத்தில் ஜப்பானின் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றின் மீது அமெரிக்கா அணுகுண்டு போட்டு நாசமாக்கியதன் விளைவு ஜப்பானின் சரண்.

1947ல் ஜப்பானில் புதிய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. போர் ஏற்படுத்திய பேரழிவில் இருந்து விடுபட்டுப் புதியதொரு ஜப்பானை உருவாக்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் அமைந்தது. தொடர்ந்த ஆண்டுகள், எத்தகைய மலைப்பூட்டும் வளர்ச்சியை ஜப்பான் அடைந்துள்ளது என்பதை எண்பிக்கின்றன. இன்றைய நிலையில் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ள இரண்டாம் நாடாக ஜப்பான் விளங்குவதே அந்நாட்டின் வளர்ச்சிக்குச் சான்று.

ஆசியாவின் கிழக்கே வடபசிபிக் கடலில் உள்ள தீவுக் கூட்டங்கள் ஜப்பான் நாடு. இதன் பரப்பு 3 லட்சத்து 77 ஆயிரத்து 835 சதுர கி.மீ. பெரும்பாலும் கரடுமுரடான மலைகளும் எரிமலைகளும் நிரம்பிய நாடு. இதன் மக்கள் தொகை 12 கோடியே 75 லட்சம் ஆகும். ஷிண்டோ எனும் பாரம்பர்ய ஜப்பானியக் கொள்கைளையும் பவுத்த நெறியையும் பின்பற்றுவோர் 84 விழுக்காடு உள்ளனர். ஜப்பானிய மொழி பேசும் மக்களில் 99 விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்.

குடிக்கோனாட்சி நடக்கும் இந்நாட்டில் பேரரசர் அகிஹிடோ நாட்டின் தலைவர். ஆட்சித் தலைவராகப் பிரதமர்இருக்கிறார். பேரரசர் ஜிம்மு என்பார் பொதுக்கணக்கு ஆண்டுக்கு 660 ஆண்டுகளுக்கு முன் நிறுவிய அரச வமிசத்தைக் குறிக்கும் வகையில் அதுதான் நாட்டின் விடுதலை நாள் என்கிறார்கள். டயட் என்கிற அவை, கொக்கய் எனும் மற்றொரு அவை ஆகியவை கொண்ட நாடாளு மன்றம். 247 இடங்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் டயட் அவைக்கு நடக்கிறது.480 இடங்களைக் கொண்ட கொக்கய் அவைக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்.

ஜப்பான் நாட்டின் சிறப்பு, அங்கு பணி செய்யும் ரோபோக்கள். உலகில் உள்ள 7 லட்சத்து 20 ஆயிரம் ரோபோக்களில் ஜப்பானில் மட்டுமே 4 லட்சத்துப் பத்தாயிரம் ரோபோக்கள் உள்ளன. அப்படியும் 4 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர் என்பது வேடிக்கையான செய்தி.

--------------------"விடுதலை" 29-6-2009

0 comments: