Search This Blog

12.6.09

பார்ப்பனியம் வெற்றி பெற்றுவிடக்கூடாது




ஏராளமான மகளிர் என்னோடு சிறைக்கு
கைதாக வந்த பொழுது சிறையில் இடமில்லை என்று மறுத்து விட்டார்கள்
திருவாரூர் மகளிரைப் பாராட்டி தமிழர் தலைவர் பேச்சு



காவிரி பிரச்சினைக்காக திருவாரூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட மகளிர் கைதாக வந்து விட்டார்கள். அவ்வளவு பேருக்கும் சிறைச்சாலையில் இடம் இல்லை என்று சொன்னால் இயக்கம் எவ்வளவு வலிமையோடு இருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

ராணிப்பேட்டையில் 5.6.2009 அன்று காஞ்சிபுரம் அரக்கோணம் மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

மற்றதற்கு இடஒதுக்கீடு இருக்கிறதோ இல்லையோ நமது கூட்டங்களில், நமது கமிட்டிக் கூட்டங்களில் 50 விழுக்காடு பெண்கள் இருக்க வேண்டும்; தாய்மார்கள் வரவேண்டும்.
நான் தஞ்சை மாவட்டத்தில் ஒரு முறை காவிரிப் பிரச்சினை போராட்டத்திற்கு வந்தபொழுது விவசாய வேலை செய்கிற நம்முடைய தோழியர்கள் மத்தியிலே சொன்னேன். அப்பொழுது எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தார். காவிரிப் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தி சிறைச்சாலைக்குப் போவதற்குத் தயாராக இருந்தோம்.

அப்பொழுது நான் சொன்னனேன். இந்தப் போராட்டத்தில் இந்தப் பகுதியிலிருந்து ஆண்கள் வந்தால் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்.

அதற்குப் பதிலாக பெண்கள் வாருங்கள். சிறைச்சாலைக்குப் போவதற்கு ஆண்கள் எல்லாம் கொஞ்சம் நாள்களுக்கு வீட்டில் இருக்கட்டும். குடும்பத்தை நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பது அப்பொழுதுதான் தெரியும். நீங்கள் எல்லாம் சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள் என்று ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏதோ நாம் சம்பாதிக்கிறோம்; அவர்கள் நிம் மதியாக உட்கார்ந்திருக்கின்றார்கள் என்று நினைக்கின்றார்கள். சமையல் பழக்கம் தானாக வந்துவிடும். பெண்கள் மட்டும் தான் சமைப்பார்கள் என்ற நிலை மாற வேண்டும். பெண்கள் எல்லாம் ஒரு மூன்று மாதம், ஆறு மாதம் என்னோடு சிறைச்சாலையில் இருந்துவிட்டால் அதன் பிறகு நீங்களும் கற்றுக்கொள்வீர்கள் என்று சொன்னோம்.

600 மகளிர்கள் சிறைச்சாலை செல்ல வந்துவிட்டார்கள்

அதே மாதிரி பாருங்கள் நான் வேடிக்கையாக சொல்லிக் கொண்டு வந்தேன்.
திருவாரூரில் அன்றைக்குப் போராட்டம் நடந்தபொழுது திராவிட விவசாய தொழிலாளர்களைச் சார்ந்த நம்முடைய தோழியர்கள் 600 பேர் போராட்டத்திற்கு வந்துவிட்டார்கள்.

காவல்துறை சூப்பிரண்டெண்ட் சொல்கிறார். அய்யோ இவ்வளவு பெண்கள் வந்தால் சிறைச்சாலையில் இடம் கிடையாதுங்க. அதனால் நாங்கள் குறைந்த பட்சம் 60 மகளிர்களை மட்டும் கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்கிறோம். ஆகவே மற்ற பெண்களை எல்லாம் பேருந்தில் ஏற்ற முடியாது.

நாங்கள் சொன்னால் உங்களுடைய இயக்கப் பெண்கள் போக மறுக்கிறார்கள். உங்களுடைய மகளிர் இதையும் சொல்லுகிறார்கள். நாங்கள் சிறைக்குப் போகிறோம் என்று வீட்டில் சொல்லி விட்டு வந்துவிட்டோம். ஊரிலேயும் சொல்லி விட்டு வந்துவிட்டோம். இனிமேல் போனால் அவமானமாக இருக்கும். நாங்கள் எங்களுடைய தலைவரோடயே கைதாகிறோம் என்று சொல்லுகிறார்கள் என்று என்னிடத்திலே சொன்னார்கள். அவர்கள் முடியாது என்று சொல்லி விட்டார்கள். பிறகு நான் சொல்லிப் பார்த்த பிறகு நமது கழக மகளிர் கேட்கவில்லை.

அந்த எஸ்.பி.என்னோடு படித்தவர்

அது மட்டுமல்ல; அந்த எஸ்.பியே என்னுடைய கிளாஸ்மெட் - என்னோடு படித்தவர். அவர் என்னிடம் கேட்டார். நான் எஸ்.பி என்கிற முறையில் உங்களை கேட்கவில்லைங்க. உங்கள் நண்பர் என்ற முறையில் கேட்கிறேன். எனக்கு இந்த உதவியைச் செய்து கொடுங்கள். அது மட்டுமல்ல; இவ்வளவு பேரையும் கைது செய்தால் கொண்டு போவதற்கு பஸ் கிடையாது என்று அவர் கேட்டுக்கொண்டதற் கிணங்க ரொம்ப கஷ்டப்பட்டு கொஞ்சம் பேரை குறைத்தோம்.

பின்னர் கைது செய்யப்பட்ட எங்களை திருச்சி சிறைச்சாலையில் வைத்தார்கள். எதற்காக இதைச் சொல்லுகின்றோம் என்றால் நமது தாய்மார்களுக்குத் தெளிவு ஏற்படுத்தவேண்டும். அவர்கள் நமது கூட்டங்களுக்கு வரவேண்டும். நமது ஏடுகளைப் படிக்க வேண்டும். நமது கொள்கை விளக்கத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பார்ப்பனியம் வெல்லக்கூடாது

அடிக்கடி நமது தோழர்கள் சந்திக்க வேண்டும்.
இவ்வளவு கஷ்டங்களுக்கிடையே நான் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கின்றேன். ஒரு நாள் கூட ஓய்வில்லை. இதற்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்திற்குப் போனேன். தேர்தல் பிரச்சாரத்தில் நமக்கென்ன கவலை என்றால், ஆரிய-திராவிட போராட்டம் என்று வந்தபொழுது பார்ப்பனியம் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்கிற கவலை.
தேர்தலில் நின்றவர்களை விட நமக்கு அதிக கவலை இருந்தது.
இவ்வளவு வெய்யிலில் இவ்வளவு அலைந்து ஏன் பிரச்சாரத்தை மேற்கொண்டோம் என்றால், இயக்கக் குடும்பங்களை நான் சந்திக்க வேண்டும் என்பது ஒன்று.
உங்களை நேரில் சந்திக்கும் பொழுது எனக்கும் உற்சாகம். உங்களுக்கும் உற்சாகம். ஆக இந்த உற்சாகத்தோடு அமைப்பு ரீதியாக நம்முடைய. தோழர்கள் உற்சாகத்தோடு வேலை செய்ய வேண்டும்.

நமது இயக்கத்தை நோக்கி ஏராளமான இளைஞர்கள் வருகிறார்கள். தயவு செய்து மாவட்ட கழக பொறுப்பாளர்கள் ஒன்றியங்களை அமைக்க வேண்டும். ஒன்றியங்கள் கிளைக் கழகங்களை அமைக்க வேண்டும். சும்மா லெட்டர் பேடு அடித்து வைத்துக் கொண்டு இவர் தலைவர், இவர் செயலாளர்; அடுத்த கமிட்டிக் கூட்டம் எப்பொழுது போடுகிறோமோ அப் பொழுது தான்வேலை என்று தோழர்கள் தயவு செய்து எண்ணக் கூடாது. வழங்கப்பட்டது பதவியே அல்ல பொறுப்பு!

நான் இன்றைக்கு ரொம்பத் தெளிவாகச் சொல்லுகின்றேன். உங்களுடைய பணிகள் என்ன என்பதை நாங்கள் 6 மாதங்களுக்கு ஆய்வு செய்வோம். நான் தலைமைக் கழக பொறுப்பாளர்களிடமே கொடுத்திருக்கின்றேன். இந்த இந்த மாவட்டங்கள் உங்களுக்கு நீங்கள் அதைப் பார்த்து சரிப்படுத்த வேண்டும். யார் இயக்கத்தில் பணியாற்றுகிறார்களோ அவர்கள் பொறுப்பில் இருக்கட்டும்.

நமது இயக்கத்தில் மாவட்ட தலைவரோ அல்லது மாவட்ட செயலாளரோ வழங்கப்பட்டது பதவி அல்ல; மாறாக அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பொறுப்புகள்.அரசாங்கத்தில் 30 மாவட்டங்கள் என்று இருக்கிறது. ஆனால் நாங்கள் என்ன நினைக்கின்றோம்? நம்முடைய தலைமைக் கழகம் என்ன நினைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நமது தோழர்கள் அவரவர்களுடைய சொந்த காசை செலவு பண்ணிக்கொண்டிருக்கின்ற இயக்கம் தான் இந்த இயக்கம். மற்ற அரசியல் கட்சிகள் மாதிரி அங்கிருந்து பணம் வரும். இங்கிருந்து பணம் வரும் என்பதல்ல. நமது விருப்பத்திற்கு நாம் செய்கின்றோம். மக்கள் மத்தியிலே செய்கின்றோம்.

தந்தை பெரியார் சொன்னார். சொந்த சோற்றைத் தின்று கொண்டு இயக்கத்தில் இருக்கின்ற தொண்டர்கள் என்னுடைய தொண்டர்களைத் தவிர வேறு இப்படிப்பட்ட அதிசயமான இயக்கம் எங்கும் கிடையாது என்று சொன்னார்.


------------------------தொடரும் ....."விடுதலை" 12-6-2009

0 comments: