Search This Blog

18.6.09

கச்சத்தீவும் - முதல்வரின் கடிதமும்!
இலங்கைத் தீவால் இந்தியாவுக்குத் தொடர் தொல்லைதான் என்பதற்குச் சமீபத்திய எடுத்துக்காட்டு - கச்சத்தீவு பிரச்சினையாகும். கச்சத்தீவில் இராணுவ மய்யத்தையும், கண்காணிப்புக் கோபுரத்தையும் உருவாக்க இலங்கை அரசு முனைந்துள்ளது என்பதுதான் அந்தச் செய்தியாகும்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஈழத் தமிழர் பிரச்சினைமீது அலட்சியம் காட்டிய அதே கதையைத்தான் இதிலும் இந்தியா தொடரப்போகிறதா என்று தெரியவில்லை.

தமிழ்நாடு அரசின் அனுமதிக்குக் காத்திராமலேயே இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குத் தூக்கிக் கொடுத்துவிட்டது (28.6.1974).

நாடாளுமன்றத்தில் தி.மு.க. சார்பில் இரா. செழியன், நாஞ்சில் கி. மனோகரன் ஆகியோர் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் வெளிநடப்பும் செய்தனர்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தேச விரோதமானது, தேசப்பற்று இல்லாதது. உலகில் உள்ள நாகரிகமடைந்த நாடு எதுவும் இத்தகைய மோசமான ஒப்பந்தத்தை செய்துகொண்டதில்லை. இந்த ஒப்பந்தத்தின்மூலம் இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டார நாயகா வெற்றி பெற்றவராயிருக்கிறார். இந்தியப் பிரதமர் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது நம்முடைய ஒருமைப்பாட்டின்மீது விழுந்த பலமான அடியாகும் என்று அனல் கக்கப் பேசினார் தி.மு.க. மக்களவை உறுப்பினரான நாஞ்சில் கி. மனோகரன் (23.7.1974).

ஃபார்வர்ட் பிளாக்கைச் சேர்ந்த பி.கே.எம். தேவர் பெரியகுளம் தொகுதியைச் சேர்ந்த முசுலிம் லீக் உறுப்பினர் முகம்மது ஷெரீப் ஆகியோரும் தங்கள் கட்சியின் சார்பில் எதிர்ப்பைப் பதிவு செய்தனர் - தி.மு.க.வோடு இணைந்து வெளிநடப்பும் செய்தனர்.
இவற்றிற்குப் பதில் அளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுவரண்சிங் என்ன கூறினார்?

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள பாக் நீரிணைப்பில் பன்னாட்டுக் கடல் எல்லையை வரையறுத்துக் கொள்ளவேண்டியது அவசியமாக இருக்கிறது. அதனால்தான் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே நியாயம் அளிக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது இரு நாட்டு மீனவர்களும் அனுபவித்து வருகின்ற மீன் பிடிக்கும் உரிமையும், கோயில்களுக்குப் போகும் புனிதப் பயணமும் எதிர்காலத்திலும் முழுமையாகக் காப்பாற்றப்படும் என்று மாண்புமிகு உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்றாரே - அந்த உறுதிமொழிகள் என்னாயிற்று?

அந்த உறுதிமொழிப்படி தமிழக மீனவர்களுக்கான உரிமைகள் எல்லாம் காற்றில் பறந்துவிட்டனவே. இந்த உறுதிமொழிக்குப் பின்னர் தமிழக மீனவர்கள் முந்நூறு பேர்களுக்குமேல் சிங்களக் கப்பற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனரே - கவலைப்படுவதாகக் கூறியதைத் தவிர இந்திய அரசு உருப்படியாகச் செய்தது என்ன?
அந்த ஒப்பந்தத்தில் கச்சத்தீவை இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், இப்பொழுது அதற்கு மாறாக இராணுவ மய்யமாகப் பயன்படுத்தப்படுவது குறித்துதானே தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கச்சத்தீவுப் பிரச்சினையில் தி.மு.க.வின் நிலை தெளிவாகவே தொடர்கிறது. இன்றைய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

ஒப்பந்தத்தை மீறலாமா என்ற கேள்வியைக் கேட்கும் தகுதியும், தர்மமும் இலங்கை அரசுக்குக் கிடையவே கிடையாது.

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்படவேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளதே - அதனை இலங்கை அரசு கடைபிடித்துவிட்டதா? இந்த நிலையில் ஒப்பந்தங்களைப்பற்றியெல்லாம் இலங்கை பேசவே முடியாது.

1997 ஜூலை 26 இல் திராவிடர் கழகம் இராமேசுவரத்தில் தமிழக மீனவர் பாதுகாப்பு - கச்சத்தீவு மீட்புரிமை மாநாட்டையே நடத்தியது. மீண்டும் கச்சத்தீவு இந்தியாவுக்கு ஒப் படைக்கப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமல்ல, இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் அன்று திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.


கட்சிகளைக் கடந்து எல்லோரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவேண்டிய நேரம் இது.
முதலமைச்சர் கடிதத்தில் உள்ள உயிர்த்துடிப்பை இந்திய அரசு புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.

---------------------"விடுதலை" தலையங்கம் - 18-6-2009

4 comments:

ttpian said...

கடுதாசி,,,கடுதாசி
போன்கடா நீங்களும் உங்கள் அரசியளும்!
உங்கள் அரசியல் வேட்டையில் அழிந்தது யார்?
தமிழ் இனம்!

அறம் செய விரும்பு said...

இதுவரைக்கும் இலங்கை சம்பந்தமாக மைய அரசுக்கு திரு. கருணாநிதி அவர்கள் கடிதம் சாதித்தது என்னவோ?. அதற்குள் எங்கப்பன் குதிர்குள்ள இல்லை அப்படி என்கிறது போல... அய்யா வீரமணி அவர்கள் ... மறுபடியும் மத்திய அரசு திரு.கருணாநிதியின் அவர்கள் கடிதத்தை எங்கே உதாசினப்படுதுமோ எனப் பதிவு செய்கிறார். இதற்கு என்ன அர்த்தம் விளக்கமுடியுமா?.

உரிமைகளைப் போராடிப் பெற்று வரத்தானே நீங்கள் எல்லாம் தலைமைப் பதவியில் இருக்கிறீர்கள்(அதற்காக நீ இருந்துபார் என்று பதிவிட மாட்டீர்கள் என நம்புகிறேன்). ஆனால் தேவையான பதவி பெறமட்டும் காட்டும் அக்கறை தமிழனுக்கு பெற்றுதர சுணக்கம் காட்டுவது புத்திசாலித்தனமா?.
என்னமோ போங்கள் தமிழினம் இருக்கும்வரை நல்ல பிழைப்புதான் எல்லோருக்கும். "நல்லா இருங்கள்".

நாமக்கல் சிபி said...

தமிழ்நாட்டைத் தாண்டிப் போயிட்டா தமிழனுக்கு எங்கயும் மதிப்பு இல்லை!

தமிழனுக்கு என்னிக்கும் அடிமைப் பிழைப்புதான் போல! (இந்தியாவுல உட்பட)

kicha said...

இது தொட‌ர்பான‌ ஒரு சிறு ப‌திவை, கீழுள்ள‌ சுட்டியை அழுத்தி ப‌டிக்க‌ வேண்டுகிறேன்.
http://yaazhumvaazhum.blogspot.com/2009/06/blog-post_18.html