Search This Blog

26.6.09

உலக நாடுகள் - தூரப்பார்வை - ஈராக்ஈராக்

மெசபடோமியா என அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட நாடுதான் இன்றைய ஈராக். நதிகளின் நடுவிலான நாடு எனும் பொருள் அமைந்த சொல் மெசபடோமியா என்பது. அதற்கேற்பவே நாடு டைக்ரிஸ், ஈபரேட்ஸ் நதிகளுக்கிடையில் அமைந்து இருந்தது. பூவுலகில் மனித சமுதாயத்தில் மலர்ந்த முதல் நாகரிகமே இந்தப் பகுதியில் எழுந்ததுதான். பொது ஆண்டுக்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதி பாபிலோனியர் அசிரியர் சாம்ராஜ்யங்கள் அமைந்த பகுதியாகும்.

பொது ஆண்டுக்கு 538 ஆண்டுகளுக்கு முன்பு பாரசீக மாமன்னன் சைரஸ் மெசபடோமியாவை வென்றார். அதன் பிறகு மகா அலெக்சான்டர் இந்நாட்டை 331ஆம் ஆண்டில் வென்றார்.
பொது ஆண்டுக்குப் பின் 637 ஆண்டுக் கால வாக்கில் அராபியர்கள் இந்நாட்டை வெற்றி கொண்டு தங்கள் தலைநகரை பாக்தாத் நகரில் வைத்து ஆண்டனர்.

1258ஆம் ஆண்டில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட மங்கோலியர்கள் ஆட்சி செலுத்தினர். 16, 17, 18ஆம் நூற்றாண்டுகளில் நாடு துருக்கி பாரசீக ஆதிக்கப் போர்களிலும் சிக்கிக் கொண்டிருந்தது. 1638ஆம் ஆண்டில் ஏற்பட்ட துருக்கியின் அதிகாரத்தின் விளைவாக ஈராக்கில் துருக்கியின் ஆட்சி 1831 வரை நீடித்தது.

முதல் உலகப் போரின்போது மெசபடோமியா வின் பெரும் பகுதி பிரிட்டனின் வசம் வந்தது. இதை ஆளும் உரிமையை 1920 இல் பிரிட்டன் பெற்றது. நாட்டின் பெயரை ஈராக் என மாற்றி பய்சல் எனும் அரசரின் தலைமையின் கீழ் ராஜ்யத்தை அங்கீகரித்தது. மெக்கா நகரின் காவலராக (ஷெரிப்) இருந்தவரின் மகனை மன்னராக்கினார்கள். ஈராக்கின் முதல் மன்னர் எனும் பெருமையை 1921 ஆகஸ்ட் மாதத்தில் அவர் அடைந்தார்.

1932 அக்டோபர் 3ஆம் நாள் ஈராக் விடுதலை பெற்றது. இருப்பினும் இரண்டாம் உலகப் போரின் போது நாட்டை பிரிட்டன் மீண்டும் கைப்பற்றியது. 14-7-1958 இல் ராணுவப் புரட்சி ஏற்பட்டு, இங்கிலாந்து மன்னராட்சி தூக்கி எறியப்பட்டது. நாடு குடியரசு என அறிவிக்கப்பட்டது. அப்துல் கரீம் காசிம் என்பார் பிரதமரானார்.

1972 இல் ஈராக்கும் சோவியத் ஒன்றியமும் 15 ஆண்டுகளுக்கான நட்புணர்வுக்கும் கூட்டுறவுக்குமான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. அந்த ஆண்டில் ஈராக்கில் இருந்த எல்லா எண்ணெய் நிறுவனங்களையும் அரசு நாட்டுடைமையாக்கியது. 1979 இல் சதாம் உசேன் புதிய அதிபரானார்.

ஈரான் நாடு ஈராக்-கின்எல்லையோர நகரங்களின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் 4-9-1980 முதல் ஈரான் - ஈராக் போர் தொடங்கியது. ஈரானிய எண்ணெய் வயல்களுக்குச் சொந்தம் கொண்டாடிய ஈராக் படையெடுப்பை ஈரான் மீது நிகழ்த்தியது. 1988 ஆகஸ்டில் இரு நாடுகளுக்கிடையே போர் நிறுத்தம் ஏற்பட அய்.நா. மன்றம் உதவியது.

2.8.1990இல் குவைத் மீது ஈராக் படையெடுத்தது. இதை அய்.நா. கண்டித்தது. குவைத் நாட்டிலிருந்து ஈராக் படைகள் முழுவதும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமென்று அய்.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது. 6.8.1990இல் பொருளாதாரத் தடைகள் ஈராக் மீது விதிக்கப்பட்டன. ஆனால் 8.8.1990இல் குவைத்தை ஈராக்குடன் இணைத்துக் கொண்டு விட்டதாக ஈராக் அறிவித்தது.

அய்.நா. பாதுகாப்பு அவையின் தீர்மானங்களை அமல் செய்திட, குவைத்தை ஆதரிக்கும் அனைத்து நாடுகளும் உதவிட வேண்டுமென பாதுகாப்பு அவை கேட்டுக் கொண்டது. 1991 ஜனவரி 16இல் வளைகுடாப் போர் தொடங்கியது. குவைத் ஆதரவு நாடுகளின் கூட்டுப் படை ஈராக் மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டன. 24-2-1991 இல் தரை வழித் தாக்குதல் தொடங்கியது. பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் குவைத்தை விடுவித்தது. மார்ச் 3ஆம் நாள் போர் நிறுத்தத்தற்கு ஈராக் ஒப்புக் கொண்டது.

15.10.1995இல் நடை-பெற்ற பொது வாக்கெடுப்பின் முடிவுகளின்படி சதாம் உசேன் மேலும் 7 ஆண்டுகளுக்கு அதிபராக நீடிக்கும் நிலை உண்டானது. 31.8.1996இல் போரில்லாப் பகுதியான வடபகுதியைத் தாக்கி குர்திஷ் நகரமான இர்பில் நகரைப் பிடித்துக் கொண்டது.

1998 டிசம்பரில் அமெரிக்காவும் பிரிட்டனும் ஈராக்கின் அணு ஆயுதங்களை அழிக்கிறோம் எனக் கூறிக் கொண்டு ஈராக் மீது தாக்குதலைத் தொடங்கின. பல உலக நாடுகளின் ஒப்புதலும் ஆதரவும் இல்லாத நிலையிலும், மேற்கண்ட இரு நாடுகளும் ஈராக்கின் விண்வழிவலுவைத் தகர்ப்பதற்கான தாக்குதலை நடத்தின.

ஈராக் நாட்டின் மிகப் பயங்கரமான அச்சுறுத்தல் இருப்பதாக வருணித்து அதனை எதிர்த்து உலக நாடுகள் போரிடவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், உலக நாடுகள் மன்றத்தின் பொதுச் சபையில் பேசினார். ஈராக்கிடம் இருக்கும் ஆயுதங்கள் என்று ஒரு பட்டியலை பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் வெளியிட்டார். 17-3-2003 இல் அரசு ரீதியான முயற்சிகள் ஈராக்கிடம் தீர்ந்து போய்விட்டன என உலக நாடுகள் மன்றத்திற்கான பிரிட்டனின் பிரதிநிதி கூறிவிட்டார்.

சதாம் உசேனும் அவரது மகன்களும் அவர்களின் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் உத்தரவிட்டார். 48 மணி நேர அவகாசம் தந்து இறுதி எச்சரிக்கை விடுத்தார். இல்லையென்றால் போரைச் சந்திக்கட்டும் என்று கூறினார். 20.3.2003இல் அமெரிக்க ஏவுகணைகள் ஈராக் தலைநகர் பாக்தாதைத் தாக்கின. அமெரிக்க, பிரிட்டன் படைகள் ஈராக் நாட்டின் தென்பகுதி வழியாக நாட்டின் உள்ளே நுழைந்தன. 9.4.2003இல் பாக்தாத் நகரின் மய்யப் பகுதிக்குள் நுழைந்துவிட்டன. அமெரிக்கப் படைகள் குர்திஷ் கலகப் படைகளுடன் கைகோத்து வடபுல நகரங்களான கிர்குக், மோசுல் ஆகியவற்றைப் பிடித்துக் கொண்டன.

2003 அக்டோபரில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை உலக நாடுகள்மன்றம் ஏற்றுக் கொண்டது. ஈராக்கில் அமெரிக்க நிருவாகத்தை அங்கீகரித்தது. 14.12.2003இல் சதாம் உசேன் பிடிபட்டார். அவர் மீது வழக்கு போட்டு, அவருக்குக் கைவிலங்கிட்டு, விசாரணை நடந்தது. அமெரிக்காவின் புஷ்தான் கிரிமினல் குற்றவாளி என்றே அவர் உறுதிபடக் கூறினார். அவரைக் கொல்லுமாறு அமெரிக்க அரசால் அமைக்கப்பட்ட வழக்கு மன்ற அதிகாரிகள் தீர்ப்பு வழங்கினர்.

30.1.2005இல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தி 275 தேசிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. 15.12.2005இல் பிரதிநிதிகள் அவைக்கான 275 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை நடத்திடவும் அரசமைப்புச் சட்டத்திற்கான இறுதி ஒப்புதல் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டது. அமெரிக்க பிரிட்டன் ஆதரவுதாரர்களின் இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது.

4 லட்சத்து 37 ஆயி-ரத்து 72 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டில் 2 கோடியே 68 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 60 முதல் 65 விழுக்காட்டினர் ஷியா முசுலிம்கள். 32 முதல் 37 விழுக்காட்டினர் சன்னி முசுலிம்கள். இவர்களில் எழுதப்படிக்கத் தெரிந்தோர் 40 விழுக்காடுதான்.

--------------------"விடுதலை" 26-6-2009

0 comments: