Search This Blog
27.6.09
பெரியார் - இராமசாமி என்ற பெயரை ஏன் மாற்றிக் கொள்ளவில்லை?
இராமசாமி ஏன் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை?
(17.6.1947 அன்று அரூர் தோழர் விநாயகம் அவர்களின் ஆண் குழந்தைக்கு வீரத் திராவிடன் என்று பெய-ரிட்டு தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)
தோழர்களே! தாய்மார்களே! குறிப்பு தெரிவதற்காக குழந்தைகளுக்குப் பெயரிடுவது அவசியந்தான். அது காலத்திற்கேற்பவும், அந்தந்த காலத்திய தத்துவத்திற்கேற்பவும், அந்தந்த காலத்திய உணர்ச்சிக்கேற்பவும், அவரவர்களுடைய கொள்கை அல்லது மதம், லட்சியத்திற்கேற்பவும் இடப்படுவது வழக்கம். ஆரியத் தொடர்பு ஏற்பட்டதிலிருந்து சமீபகாலம் வரை திராவிட மக்களின் பெயர்கள் யாவும் ஆரிய மதத்தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு இடப்பட்டு வந்தன. அதற்குமுன் திராவிடர் பண்பு, லட்சியம் ஆகியவைகளைக் கொண்டதாகவும் இருந்தன. நமது இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, மதத்திலுள்ள கெடுதிகள் - அதனால் இனத்திற்கு ஏற்பட்ட இழிவுகள் விளக்கப்பட்ட பிறகு பண்டைத் தமிழர்களின் பெயர்களையும் அவர்களது வீரத்தின் பண்புப் பெயர்களையும் தம் குழந்தைகளுக்கு இட ஆரம்பித்தார்கள். பலர் தம் பெயர்களை மாற்றிக் கொண்டார்கள். எனக்கு அவ்விதமே மாற்றிக்கொள்ள ஆசையிருந்தாலும் நீண்டநாள் ஆகிவிட்டதால் மாற்றிக்கொள்வதில் உள்ள அசவுகரியங்களை முன்னிட்டுப் பெயரை மாற்ற முடியாவிட்டாலும் கருத்தை மாற்றிவிட்டேன்.
புராண இதிகாசங்களை வெறுப்பவர்கள் இராவணன், இரணியன் என்று (வேறு மொழியாய் இருந்தாலும்) பெயர் வைத்துக் கொள்வதையும், பொதுவுடைமையில் விருப்பமுள்ளவர்கள் ரஷ்யா, ஸ்டாலின், லெனின் என்று பெயர் வைத்துக் கொள்வதையும் மூடநம்பிக்கையை வெறுப்பவர்கள் இங்கர்சால், சாக்ரடீஸ், ரூஸோ, பெர்னாட்ஷா என்று பெயர் வைத்துக் கொள்வதையும் நாம் தற்போது பார்க்கிறோம். அதேபோல் நமது இழிநிலை சமூகத்தில் பிறவியின் காரணமாக ஏற்பட்ட இழிநிலை, திராவிடன் ஒருவன் மகாராஜாவானாலும் கோடீஸ்வரனாயிருந்தாலும், ஸ்ரீலஸ்ரீ பண்டார சன்னிதியானாலும் அவன் நாலாம் ஜாதி, அய்ந்தாம் ஜாதியாகக் கருதப்படுவானேயல்லாது முதல் ஜாதிக்காரனாக முடியாது என்ற இழிநிலை நீக்கப்பட வேண்டும் என்பதை ஞாபகப்படுத்த திராவிடன் என்றும், அதைச் சந்திக்க வீரம் வேண்டும் என்பதைக் குறிக்க வீரத்திராவிடன் என்றும் இக்குழந்தைக்குப் பெயரிடுகிறேன்.
பிறவியினால்நம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழிநிலை நீங்கி உலக மக்களுக்குள் நாமும் சரிசமானமாக வாழ் நாம் பாடுபடுவோம். அதுவே நமது முதல்வேலை. அதை வீரத்தோடு செய்வோம் என்பதைக் குறிப்பிடவும், நம் மக்கள் யாவரும் வீரத்திராவிடர்களாய் வாழ வேண்டுமென்பதைக் குறிப்பிடவும், உங்கள் ஆமோதனையின் பேரில் இக்குழந்தைக்கு வீரத்திராவிடன் என்று பெயரிடுகிறேன். இது வீரத் திராவிடனாகவே திகழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
-------------------தந்தைபெரியார் -"விடுதலை", 18.8.1947
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment