Search This Blog

17.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை-பிரான்ஸ்


பிரான்ஸ்

இன்றைய பிரான்ஸ் நாட்டின் பூர்வகுடிகள் செல்ட்கள் அல்லது கவுல்கள் என்று அழைக் கப்பட்ட மக்கள். பொது ஆண்டுக் கணக்குக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர். டிரான்சடல் பைன்கவுல் என்று இந்நாட்டை அன்றைய ரோமானியர்கள் அழைத்தனர். நாட்டை நான்கு பகுதிகளாகப் பிரித்து ரோமானியர் நிருவாகம் செய்தனர்.

757ஆம் ஆண்டிலி ருந்து 987ஆம் ஆண்டு வரை, கரோலிங்கியன் அரச வமிசம் இந்த நாட்டை ஆண்டது. இந்த வமிசத்தின் புகழ் பெற்ற மன்னர் சார்லமான் என்பவர்தான் பின்னாள்களில் ரோமானிய மாமன்னரானார். 843 இல் வெர்டுன் உடன்படிக்கைப்படி நாட்டின் பரப்பு அவரின் மூன்று பேரப்பிள்ளைகளுக்குப் பங்கிட்டுத் தரப்பட்டது. சார்லஸ் என்பாருக்குக் கிடைத்த பாகம் பிரான்சு நாடானது. பிரான்சியா ஆக்சி டென்டாலிஸ் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. கேபட் வமிச மன்னர்களின் கைக்குப் பின்னாள்களில் ஆட்சி மாற்றம் நடந்தது.

1328 முதல் 1589 வரை வாலோஸ் வமிசத்தின் ஆட்சி நடந்தது. 1337 முதல் 1453 வரை நூறாண்டு களுக்கும் மேலாக பிரான் சும் இங்கிலாந்தும் போரிட்டுக் கொண்டிருந்தன. நூறாண்டுப் போர் என இது வரலாற்றில் குறிக்கப்படுகிறது. இந்தப் போரின் விளைவாகப் பிரிட்டன் பிடித்து வைத்திருந்த பகுதிகள் பிரான்சு நாட்டுக்குத் திருப்பித் தரப்பட்டன. இந்த வமிசத்தைத் தொடர்ந்து போர்போன் வமிச ஆட்சி பிரான்சில் நடந்தது. 1589 முதல் 1790 வரை இவர் கள் ஆண்டனர். சிறிது இடைவெளிக்குப் பிறகு 1814 முதல் 1830 வரையும் ஆட்சி செலுத்தினர். அதன் பின்னர் போர் போன் - ஆர்லியன்ஸ் வமி சம் 1830 முதல் 1848 வரை 18 ஆண்டுகள் ஆண்டது.

சூரிய மன்னன் என்று அழைக்கப்பட்ட 14 ஆம் லூயி மன்னன் 1643 முதல் 1715 வரை ஆண்டான். பிரான்சின் வரலாற்றில் மிக சிறந்த ஆட்சிக்கால மாக இது கருதப்படுகிறது. ஹாப்ஸ்பர் மக்களைத் தோற்கடித்து பிரான்சின் கிழக்கு எல்லையை விரிவுபடுத்தினான். 1710 முதல் நான்கு ஆண்டுகள் ஸ்பானிஷ் வாரிசுப் போர் என வருணிக்கப்படும் போரில் சண் டையிட்டான். அதன் பயனாகத் தன் பேரனுக்கு ஸ்பெயின் நாட்டு அரியாசனத்தைப் பெற்றான்.

1789இல் பிரெஞ்சுப் புரட்சி நடந்தது. 1789 ஜூலை 14 ஆம் நாள் பாரிஸ் நகர மக்கள் பிரெஞ்சு நாட்டின் மிகப் பெரும் சிறைச்சாலையா கிய பாஸ்டிலி சிறையை உடைத்துஅங்கே அடைத்து வைக்கப்பட்டு இருந்தவர்களை வெளியே கொண்டு வந்தனர். பிரான்சு மன்ன னின் ஆதிக்கத்தை உடைத்து நொறுக்கும் அடையாளமாக இப் புரட்சி ஏற்பட்டது.

4.8.1789 இல் தேசிய அரசமைப்பு மன்றம் கூடி பிற்போக்குத்தனமான மன்னர் ஆட்சி முறைக்கு முடிவு கட்டியது. ஆகஸ்ட் மாதம் 26 ஆம் நாள் மனிதனுடைய, மக்களுடைய உரிமைகளின் பிரகடனத்தை உலகுக்கு அறிவித்தது. செப்டம்பர் மாதம் 20ஆம் நாள் 1792 ஆம் ஆண்டில் தேசியசபை கூடியது. முடியாட்சிக்கு முடிவு கட்டி குடியாட்சி முறை ஏற்படுத்தப்பட்டது.

19.1.1793இல் கொடுங்கோல் மன்னன் 16 ஆம் லூயி கொல்லப்பட வேண்டும் என்று 380 பிரதிநிதிகளும் விட்டு விடலாம் என்று 310 பிரதி நிதிகளும் வாக்களித்தனர். 21.1.1793 இல் பாரிசு நகரத்தில் 16 ஆம் லூயி கொல்லப்பட்டான். கழுத்தை வெட்டுவதற்காக கூரிய கத்தியுடன் கூடிய வெட்டு எந்திரம் (கில்லட்டின்) இதற்கெனவே வடிவமைக்கப்பட்டு, அதில் தலை துண்டிக்கப்பட்டு கொலைத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவனை விடக் கொடுங் கோன்மையும் ஆணவமும் மிக்க அவனது மனைவி அரசி மேரி ஆன்டாய்னட் அதே ஆண்டு அக்டோபரில் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் மனித நேய மந்திரங்களை உலகுக்கு அளித்த பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தைச் சிலர் பயங்கரமான காலமாகக் கருதி எழுதி வருகிறார்கள். ஆதிக்கம் தகர்ந்து போன காரணத்தினால், ஆதிக்கவாதிகளுக்கு ஆத்திரம் வருவது இயற்கைதான். ஒரு மனிதனுக்கே இந்த உலகம் எனும் உளுத்துப் போன சித்தாந்தம் உடைக் கப்பட்ட நிலையில் - ஊராளும் வாய்ப்பைப் பெற்றவர்கள் குறை கூறுவதும் இயல்புதான்.
5-9-1793 முதல் 27-7-1794 முடிய உள்ள காலத்தைப் பயங்கர ஆட்சிக் காலம் என்று எழுதி வைத்துள்ளனர். புரட்சி நடந்த மக்களாட்சி நிலை பெறாத நிலையில், புரட் சிக்கு எதிரான பூர்ஷ் வாக்களின் எதிர்ப்பும் அவர்கள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் உண்டான உள்நாட்டுப் போர் ஒரு புறம். மன்னராட்சி கவிழ்ந்து மக்களாட்சி மலராத நிலையில், தலைமை இல்லாமல் தவித்த நிலையைச் சாதகம் ஆக்கிப் படையெடுத்த பக்கத்து நாட்டு ஆஸ்திரியாவிடம் நடத்தப்பட்ட வெளி நாட்டுப் போர் ஒரு புறம். அந்த நிலையில் புரட்சி அரசு, கடுமையாக நடந்து கொண்டு ஒடுக்கு முறையைக் கையாளவேண்டி நேரிட்டது - அந்தக் காலத்தின் கட்டாயம்.

புரட்சிக்கு எதிரானவர்கள், மக்களின் ஆட்சிக்கு எதிரானவர்கள் என்ற காரணத்தால் அவர்கள் மீது கடும் அடக்கு முறை கையாளப்பட்டது. பாரிசு நகரம் முழுவதும் இந்த வகையில் கொல்லப்பட்டோர் ஏராளம். மாக்சிமிலன் ரோபஸ்பியர் என்பார் அங்கம்வகித்த மக்கள் பாதுகாப்புக் குழு, பிரெஞ்சு ஆட்சிக்கு அதிகாரக் கட்டுப்பாட்டை விதித்தது. இந்தக் காலத்தில் 3 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. அவர்களில் 17 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. பலர், சிறையிலேயே மாண் டனர்.

ரோபஸ்பியர் வீழ்ந்து, ஆஸ்திரிய நாட்டுடனான பேரில் பிரான்சு வென்று ஆட்சியை நிலை நிறுத்திய புரட்சி அரசு, மெல்ல மெல்லக் கட்டுப் பாடுகளைத் தளர்த்தியது. பொருளாதாரச் சமத்துவம் அமைப்பதைக் கூடத் தளர்த்தியது. இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக ராணுவ இளம் தளபதி ஒருவர் ஆட்சியைக் கைப்பற்றிய நிகழ்வு ஏற்பட்டது. அந்தத் தளபதி நெப்போலியன் போனபார்ட்.

1799 முதல் 1804 வரை அய்ந்தாண்டுகள் முதல் பிரதிநிதியாக இருந்து வந்த நெப்போலியன் 1804 இல் பிரான்சு நாட்டின் பேரரசராக முடிசூட்டிக் கொண்டான். கிறித்துவ மதத்தலைவரான போப் இந்நிகழ்ச்சியை முன் னின்று நடத்தினார். மேலை நாட்டு வரலாற்றில் நெப் போலியனுக்கு சிறப்பான ஓரிடம் அளிக்கப்படு கிறது. சிறந்த போர் நுணுக்கங்கள் அறிந்த தளபதி என்பதோடு குடிமைச் சட்டங்களை வரையறுத்தவராகவும் இவர் கருதப்படுகிறார். இவர் வகுத்த நெப்போலியச் சட்டங்கள் உலக நாடுகள் பல வற்றிலும் பின்பற்றப் படும் அளவுக்குச் சிறந்தவை எனப்படுகிறது.

நெப்போலியன் காலத்தில் அய்ரோப்பாக் கண்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் நாடாக பிரான்சு கருதப்பட்டது. பிரிட்டன் மட்டுமே பிரான்சின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாத நாடாக இருந்தது. பிரிட்டனை வெல்ல வேண்டும் என்கிற தணியாத ஆசை நெப்போலியனுக்கு. அதன் விளைவாக 1805இல் 33 போர்க் கப்பல்களோடு படையெடுப்பு நடத்திய போது 27 போர்க் கப்பல் களைக் கொண்ட பிரிட்டனின் கடற்படைத் தளபதி நெல்சன் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தார். ஸ்பெயின் நாட்டின் டிரபால்கர் முனைக்கு மேற்கே நடந்த இச்சண்டை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நாடு பிடிக்கும் நெப்போலியனின் வெறி அத்துடன் நிற்காமல் 1812இல் ரஷியாவைத் தாக்கத் தூண்டியது. அதுவும் தோல்வியிலும் அழிவிலும் நிறுத்தியது. சண்டை, வீரர்களுக்கு உணவில்லாத பற்றாக்குறை, ரஷிய நாட்டின் கடுங்குளிரில் தாக்குப் பிடிக்க முடியாத நிலை ஆகிய அனைத்தும் சேர்ந்து பிரான்சு நாட்டு வீரர்கள் 5 லட்சம் பேரின் உயிரைக் குடித்தது. அவர் மீதிருந்த நம்பகத் தன்மையை நெப்போலியன் இழக்கக் காரணமாக அவை அமைந்து விட்டன.

1813இல் எதிராளிகள் ஒன்று சேர்ந்து பிரான்சு நாட்டைத் தாக்கினர். 6-4-1814 இல் நெப்போ லியன் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்குத் துரத்தப்பட்டார். ஆனாலும 1815 மார்ச் மாதத்தில் பிரான்சுக்குத் திரும்பி வந்த நெப்போலியன் புதிய படையைத் திரட்டினார். பிரிட்டனுக்கு எதிராகப் போரிட்டார். ஜூன் மாதம் வாடர்லூ எனும் இடத்தில் நடைபெற்ற போரிலும் நெப்போலியன் தோற்கடிக்கப் பட்டார். மீண்டும் போர்பான் வமிசத்தின் ஆட்சி அரியணை ஏறியது. நெப்போலியன் கைதி ஆனார்.செயின்ட் ஹெலினா தீவில் சிறை வைக்கப்பட்டார். அக்டோபர் மாதத்தில் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் ஹெலினா தீவில் தவித்த நெப்போலியன் 5-5-1821 இல் இறந்து போனார்.

1848இல் மீண்டும் குடியரசு மலர்ந்தது. நெப்போலியனின் உறவினர் லூயி நெப்போலியன் என்பார் தலைமையில் குடியாட்சி அமைந்தது. அவரும் 1852இல் முடியாட்சியைப் பிரகடனப் படுத்தித் தன்னை மூன்றாம் நெப்போலியன் என்று அறிவித்து முடி சூடிக்கொண்டார். புதியஅரச வமிசத்தை ஆரம்பித்து வைத்தார். பிரான்சுக்கும் பிரஷ்யா வுக்கும் 1870இல் நடை பெற்ற போரில் பிரான்சு நசுக்கப்பட்ட பின்னர் அவரும் அகற்றப்பட்டு மூன்றாம் முறையாகவும் குடியாட்சி நிறுவப்பட்டது.

முதல் உலகப் போர்க் காலத்தில் பிரான்சின் வட பகுதியில், நிறைய உயிர்ச்சேதம் ஏற்பட்டது. போரின்முடிவில் சுமார் 13 லட்சம் போர் கொல்லப்பட்டனர். அதைப் போல இரு மடங்கு பேர் காயம் பட்டும் ஊனமடைந்தும் போயினர். இவ்வளவுப் பெரிய இழப்பைப் பிரெஞ்சு மக்கள் அனுபவித்த பின்னர் செய்து கொள்ளப்பட்ட வர்செயில் ஒப்பந்தம் அங்கே அமைதியை ஏற்படுத்தியது.

இரண்டாம் உலகப் போரின் போது பிரான்சை ஜெர்மனி கைப்பற்றிக் கொண்டது. பிரான்சின் போர் துணைச் செயலாளராக சார்லஸ்டிகால் பிரான்சுக்கு வெளியே லண்டனில் சுதந்திரப் பிரான்சு நாட்டை ஏற் படுத்தினார். பின்னர் இந்த அரசு அர்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியர் சைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டது. நேச நாட்டுப்படை கள்வட பிரான்சின் நார் மண்டித் துறைமுகம் வாயிலாகத்தான் தாக்குதலைத் தொடுத்தது. 6-6-1944 இல் இந்த எதிர்த் தாக்குதலின் விளைவாக பிரான்சு விடுவிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கும் கால்கோல் நடத்தப்பட்டது. சார்லஸ் டிகால் பிரான்சுக்குத் திரும்பி வந்து இடைக்கால ஆட்சியை பிரான்சில் அமைத்தார்.

1947 வரையிலும் டிகாலின் இடைக்கால ஆட்சி நடந்தது. நான்காம் முறையாக குடியாட்சி ஏற்படுத்தப்பட்டது. நடைபெற்ற தேர்தலில் அதிபராக வெற்றி பெற்ற டிகால் அய்ந்தாம் குடி யாட்சியை அமைத்து 1969 வரை ஆட்சி புரிந்தார்.

பிரான்சின் காலனி நாடான இந்தோ சீனா வின் விடுதலை வேட்கையை பிரான்சு ஏற்க வில்லை. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற உயர்ந்த கொள்கைகளை உலகுக்கு அளித்த பிரான்சு அதையே தன் குடியேற்ற நாட்டுக்கு அளிக்க மறுத்துப் போரில் ஈடுபட்டது. 1954 இல் இறுதியாகப் பிரான்சு தோற்கடிக்கப்பட்டது. வியட்நாம் மக்களின் விடுதலைப் படையை எதிர்த்து கொரில்லாப் போர் முறையில் வெற்றி கண்டார் ஹோசிமின். அந்நாட்டின் நுழைவுப் பாதையில் அறிவிப்புப் பலகை ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதன் வாசகம் இதுதான் - இந்த வழியாக பிரெஞ்சுப் படையினர் 10 லட்சம் பேர் சென்றனர்; ஒருவர் கூடத் திரும்பவில்லை. அதுதான்சுதந்திரப் போர்!

வியட்நாம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிரான்சு பின்னர் 1962 இல் அல்ஜீரியா வுக்கு விடுதலை தந்தது. அதற்கும் முன்பாக 1956 இல் மொராக்கோ, டுனிசியா ஆகிய நாடுகளுக் கும் விடுதலை அளித்தது பிரான்சு. குடியேற்ற நாடுகள் எல்லாவற்றிற்கும் விடுதலை அளித்துப் பழியிலிருந்து விடுதலை பெற்றது பிரான்சு.

அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து அதிபரைத் தேர்ந்தெடுக்கும் குடியரசு ஆட்சி. தேர்தல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். நாடாளுமன் றத்தின் பெரும்பான்மை ஆதரவு பெறுபவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
5 லட்சத்து 47 ஆயி ரத்து 30 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டில் 6 கோடியே 10 லட்சம் மக் கள் வாழ்கின்றனர். இவர்களில் 85 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிக்கர். சுமார் 7 விழுக்காட்டினர் முசுலிம்கள். மீதிப் பேர் யூதர்களும் புரொடஸ்டன்ட் கிறித்துவர்களுமாக உள்ளனர். அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்.

---------------------"விடுதலை" 17-6-2009

0 comments: