Search This Blog

9.6.09

ஈழத் தமிழர்கள் நான்கு கால் பிராணிகள்போல நடத்தப்படுவதுதான் அரசியல் தீர்வா?



மாநிலங்களவையில் கனிமொழியின் உரை வரவேற்கத்தக்கது
ஈழத் தமிழர்கள் நான்கு கால் பிராணிகள்போல நடத்தப்படுவதுதான் அரசியல் தீர்வா?

உலக நாடுகள் தலையிடவேண்டும்;
அரசும் முன்வரவேண்டும்
தமிழர் தலைவர் அறிக்கை


ஈழத் தமிழர்கள் நிலைகுறித்து மாநிலங்களவையில் கவிஞர் கனிமொழி ஆற்றிய உரையை வரவேற்றும், ஈழத் தமிழர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் செய்யப்படவேண்டிய உதவிகள் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்கள் நேற்று (8.6.2009) உரையாற்றுகையில் இரண்டு முக்கிய செய்திகளைத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நல்வாழ்வுத் திட்டங்களை வரவேற்றுள்ள அவர், மத்திய அரசுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை போன்ற கொள்கை நிலைப்பாட்டினையும் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களை விற்பதா?

பல சமூக நலத் திட்டங்களை நடத்துவதற்கு நிதி ஆதாரமாக, ஏற்கெனவே செம்மையாக இயங்கி லாபம் ஈட்டிவரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்க எண்ணும் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று தெள்ளத்தெளிவாகக் கூறியிருக்கிறார்.

முந்தைய தேசிய ஜன நாயகக் கூட்டணி ஆட்சி பா.ஜ.க. தலைமையில் நடை பெற்றபோது பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே ஒரு தனி அமைச்சகமும் இயங்கியதை காங் கிரஸ் உள்பட பல முற்போக்கு அமைப்புகளும், கட்சிகளும் எதிர்த்துக் கண்டனம் தெரிவித்துள்ளன என்பதை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எளிதில் மறந்துவிடக் கூடாது.

பொதுத்துறை அதுவும் லாபத்தில் நடைபெறும் பல் வேறு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்குத் தாரை வார்ப்பது பண்டித நேரு அவர்கள் வகுத்த கொள்கைக்கே முரண் பாடானது!

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ? என்ற கவிஞரின் கேள்விப் படி, மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்த, இப்படி பொதுத்துறை நிறுவனங்களை விற்பதா?
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்கிறோம் என்று சொன்னால்கூட, நியாயப்படுத்த முடியாவிட்டாலும் புரிந்துகொள்ளவாவது முடியும்; லாபத்தினை தரும் பொன்முட்டையிடும் வாத்தினை இப்படி ஒரே அடியாகக் கொல்லும் முயற்சி தேவையா?

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் - பாரத மிகுமின் நிலையம், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் இலாபத்தினை அள்ளித் தருகின்றன.

அதுபோல, இரயில்வேதுறை, லாலு பிரசாத் அவர்கள் இரயில்வே அமைச்சராக இருந்தபோது, பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலே, பல்லாயிரக்கணக்கான கோடிகளை, ரயில்வே பட்ஜெட்மூலம் பொதுப் பட்ஜெட்டுக்குத் தந்த நிலையில், அதனையும்கூட தனியார் மயமாக்கக் குரல் எழுந்த காலகட்டமும் இருந்தது!

கொள்கை ரீதியாக இது ஏற்கப்பட்டால், அது கூடாரத்திற்குள் ஒட்டகத்தை விட்ட கதைபோல ஆகி விடுவது உறுதி.

முற்போக்குச் சிந்தனை யுள்ளவர்கள் இதனை எதிர்க்கவேண்டும்.

322 மாயை - மயக்கம் கூடாது!

முந்தைய அய்க்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சி யின்போது இருந்த குறைந்த பட்ச வேலைத் திட்டம் (C.M.P.) வரையறை செய்யப்பட்டதன் காரணமாக இவைகளுக்கு ஏற்படவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டது.

இப்போது 322 பேர் ஆதரவு - காங்கிரஸ் தனியாக 206 என்ற நிலையினால் - தனிப்பட்ட முதலாளிகள், ஏகபோகவாதிகளின் சுயநல சுரண்டலுக்கு இடம் அளிக்கும் ஒரு பிற்போக்கு நிலையை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுக்கக் கூடாது!

இப்போது குறைந்தபட்ச செயல் திட்டம் எழுத்து வடிவத்தில் இல்லையென்றாலும்கூட, இப்போதும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) ஆட்சிதான் தொடர்வதால், மற்ற கூட் டணிக் கட்சிகளின் கருத்துகளைப் பெற்று அவர்களுக்கும் மதிப்பளித்து, சென்றால்தான் இவ்வாட்சி நிலையான ஆட்சியாக நீடிக்க இயலும். 322 மாயை- மயக்கம் இருக்கக் கூடாது!
அதுபோலவே ஈழத்தமி ழர்களின் வாழ்வுரிமையைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டுத் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள்வரை அவர்களது அதிருப்திக்கு ஆளாகியுள்ளது மத்திய அரசு.

இதற்குப் பெயர் அரசியல் தீர்வா?

அதனை மாற்றிட முன் வரவேண்டும். அங்குள்ள ஈழத்தமிழர்கள் நாலுகால் ஜீவன்களைப் போல - பட்டினிப் போட்டு, குடிக்கத் தண்ணீர்கூடத் தரப்படாது - போர் முடிந்த பிறகும்கூட சொந்த மண்ணிலே, கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்கள்கூட வீடு திரும்ப முடியாது நிலை என்று சொன்னால் - இன்னும் 2 ஆண்டுகள் அதே நிலை அவர்களுக்கு நீடிக்கும் என்றால் அதற்குப் பெயர் அரசியல் தீர்வா? கொடுமை அல்லவா?

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைக்கூட மதிக்க, சிங்கள ராஜபக்சே அரசு தயாராக இல்லை; வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒருங்கிணைப்பதற்கே சட்டப்பூர்வமாகவே தடையை உருவாக்கிவிட்ட நிலையில் - ஒரு லட்சம் இராணுவ வீரர்களை சேர்க்கப் போவதாக இராணுவத் தளபதி பொன்சேகா கூறியுள்ளதோடு, தமிழர்கள் தாயகம் சிங்களக் குடியேற்றங்களாக மாறிடும் கொடுமைக்கு ஆளாவதைத் தடுக்க உலக நாடுகள் குறிப்பாக இந்திய அரசு முன்வரவேண்டாமா?

போர் முடிந்துவிட்டது; விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று அந்த அரசு சொன்ன பிறகு ஏன் தமிழர்களை ஒட்டுமொத்தமாக போர்க்கைதிகளைவிட மோசமாக நடத்தவேண்டும்?

இதுபற்றி இந்திய அரசு கவலைப்பட்டால் போதாது; காரியத்தில் - இறங்கி இலங்கை அரசினை வற்புறுத்துதல் அவசர அவசியம் அல்லவா?

வரவேற்கத்தக்க கவிஞர் கனிமொழியின் பேச்சு

கவிஞர் கனிமொழி அவர்களின், மாநிலங்களவைப் பேச்சில் இலங்கை வாழ் தமிழர்களின் மறு வாழ்வு, உரிமை வாழ்வுபற்றியும், சேது சமுத்திரத் திட்டம் உடனடியாக நிறைவேற்றப் படவேண்டும் என்பதுபற்றியும், அவல நிலை போக்கப்படவேண்டிய அவசியம் குறித்தும் சிறப்பாகப் பேசியுள்ளது வரவேற்கத்தக்கது!

மனிதநேய அடிப்படையில் அம்மக்களின் வாழ்வுரிமை - பசி, பட்டினி, பாலியல் வன்கொடுமை இவைகளிலிருந்து காப்பாற்றப்பட்டு, தொடரவேண்டும் என்பதை, கட்சி வேறு பாடின்றி அனைத்துத் தமிழர்களும் இடையறாது வற்புறுத்திடவேண்டும்.

தமிழ்நாட்டுத் தமிழர்களும், அமைப்புகளும், தி.மு.க.வும், தமிழக அரசும் இதில் காட்டும் அக்கறையை மத்திய அரசு அலட்சியப்படுத்தக்கூடாது.


---------------"விடுதலை" - 9.6.2009

0 comments: