Search This Blog

27.6.09

நில்லுங்கள், பாருங்கள், கவனியுங்கள் ‘Stop, look, and see’




நில்லுங்கள், பாருங்கள், கவனியுங்கள்!

விழியற்றவராக இருந்தும் பிரபலமானவர் - சாதனையாளர் ஹெலன் கெல்லர். அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய துன்பமயமான கேடு என்று எதைக் கருதுகிறீர்கள்? என்ற கேள்வி.

அதற்கு பளிச் சென்று சிறிதும் தாமதியாமல் அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?
விழிகள் இருந்தும் சரியாகப் பார்க்கத் தவறியவரது செயல்தான்!


இதில் ஆழமான புரிதல் உணர்வுடன் இதனை நாம் ஆராய வேண்டும்.

விழியற்றவர்களைப் பார்த்து நாம் பரிதாபப் படுகிறோம்; பச்சாதாபம் கொள்கிறோம். ஆனால் விழியுள்ளவர்கள் பலர் விழிகள் இருந்தும் சரியான பார்வையற்றவர்களாக வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நடந்து கொள்பவர்கள் பற்றி பலர் அனுதாப்படுவதில்லையே, ஏன்?

விழியில்லாதவர்கள் பலர், வழிகளில் கவனமாக நடக்கிறார்கள்; ஆனால் விழியுள்ள பலரோ வழி தடுமாறி நடந்து பழியைச் சுமப்பவர்களாக ஆகிறார்கள்!

நாம் பிறருக்கு உபதேசங்கள் செய்யும் முன்பு, நாம் நமக்கே அதைச் செய்து கொள்ள வேண்டியவர்கள் என்பதை மறந்துவிடுகிறோம்.

நம்மில் மிகப் பெரும்பாலோர் சரியான கவனத்துடன் கவனித்து நடக்கத் தவறியதால்தான் வாழ்வில் பல துன்பங்களை, துயரங்களைச் சந்தித்துத் துவண்டு, தோல்விகளைச் சுமக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

எனவே மேலே உள்ள தலைப்புக் கூட சிலருக்கு, - மேலெழுந்தவாரியாகப் படிப்பவர்களுக்குப் புரியாது.

நில்லுங்கள், பாருங்கள், கவனியுங்கள் ‘Stop, look, and see’ என்ற தலைப்பில் ரீடர்ஸ் டைஜஸ்ட் வாழ்வியல் பற்றி எழுதிய சுவையான பயன்தரும் நூலில் படித்த தலைப்பு.

குற்றாலம் பயிற்சி முகாமின்போது, எனது நீண்டநாள் கழகத் தோழர், ஓய்வுபெற்ற ஆசிரியர் கோம்பை தங்கமுத்து அவர்கள் அன்புடன் அந்நூலை எனக்கு அளித்து மகிழ்ந்தார். பழைய நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து, வாங்கிப் பத்திரப்படுத்தி, எனக்கு அளித்து மகிழும் பல நண்பர்களில் அவரும் ஒருவர்!

நில்லுங்கள், பாருங்கள், கவனியுங்கள் என்றுதான் அந்த ஆங்கிலத் தலைப்பை தமிழ் மொழியாக்கம் செய்ய முடிந்தது!

கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு யோசித்துப் பாருங்கள். நாம் நடந்து செல்லும்போதோ, அல்லது காரில் பயணிக்கும் போதோ, நாம் கடந்து செல்பவைகளைப் பார்த்தே செல்லுகிறோம். ஆனால் சிலவற்றை மட்டுமே நாம் கவனித்து மனதில் இருத்துகிறோம்.
இரண்டுக்கும் பலமான வேறுபாடு என்பதை ஆழமாகச் சிந்தித்தால்தான் அது புரியும்!

பார்ப்பது வேறு; கவனிப்பது வேறு. எதை மனதில் நிலைநிறுத்தும் அளவுக்குக் கவனிக்கிறோமோ அதுவே சரியான பார்வையாகும்! ஆங்கிலத்தில் இப்படி நுணுகிப் பார்ப்பதை வீஸீவீரீலீ என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகிறார்கள்!
அகராதிகளில் இதற்கு ஆழ்ந்த அறிவு நுண்ணறிவு என்றே குறிப்பிடுகின்றனர்.
பார்த்தல், கவனித்தல், நுண்ணறிவுடன் ஆராய்தல் இப்படி எத்தனையோ கட்டங்கள் நமது மூளைக்கு வேலை தரும் வாய்ப்புகளாகின்றன. நம் வளர்ச்சிக்கு அது மிகவும் உதவிடக்கூடும்.

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், லண்டன் மாநகரத்தில் குண்டு மாரி பொழிந்த போது கூட, துணிச்சலுடன், லண்டன் அதைத் தாங்கும் என்று கூறி, மற்றவர்கள் நம்பிக்கை இழந்த நேரத்தில் கூட துணிவுடன் பிரிட்டிஷ் படைகளை நடத்தக் கட்டளை இட்டு, இரண்டு விரல்களால் வெற்றி நமதே என்று தெம்பூட்டிய மாவீரர்!
மரணத்தைக் கூட எளிதில் ஏற்காது பல நாள் கோமா நிலையில் கூட அதனை எதிர்த்துப் போரிட்ட மாவீரர் அவர்!

அவர் ஜெர்மனிய ஹிட்லரின் படைகளைத் தோற்கடிக்க, மரத்தில் பொம்மைகளை இராணுவ வீரர்களைப் போலச் செய்து வைத்து, திறந்த வெளிகளில் அணிவகுத்து நிற்கச் செய்தார். மேலே வானிலிருந்து எதிரிகளின் வேவு விமானங்கள் ஒளிப் படங்கள் எடுத்துச் சென்று மிரளட்டும் என்று செய்து வெற்றியை ஈட்டியவர்!

அவர் ஆணைப்படி, கப்பல் துறைமுகங்களில் மரங்களால் ஆன பொய் போலிக் கப்பல்கள் பிரிட்டிஷ் கப்பல் தளத்தில் ஸ்கேப்பா ஃப்ளோ என்னும் இடத்தில், பொய் விமானங்களையும் அடுக்கடுக்காக நிறுத்தி வைக்கச் செய்தார். அதன்படி செய்தார்கள் இராணுவ அதிகாரிகள்!
இவர் வந்து சுற்றிப் பார்த்தார். மற்றவர்கள் திகைக்கும்படி கூர்ந்து கவனித்து, ஒரு திருத்தம் சொன்னார்: கடலில் உள்ளவை போலியான கப்பல்கள், விமானங்கள் என்று எதிரிகள் தெரிந்து கொள்ளக் கூடாது; அதைச் செய்ய ஒரு விஷயத்தைக் கோட்டை விட்டு விட்டீர்கள். கடற்பறவைகள் நிறைய இது போன்ற இடங்களைச் சுற்றி, தீனி கிடைக்கும் என்பதற்காக பறந்து கொண்டிருந்தால்தான் அது இயற்கையானது போல் எதிரிகளுக்குத் தெரியும்; இல்லையேல் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆகவே அந்த சீ கல்ஸ் பறவைகளை வட்டமடிக்கச் செய்ய அவைகளுக்கு உணவுகளைத் தொடர்ந்து தண்ணீரில் போட்டுக் கொண்டேயிருங்கள். அப்போதுதான் எதிரி விமானங்கள் இவைகள் டம்மிகள் என்று கவனிக்கத் தவறுவார்கள் என்றாராம்.

என்னே கூரிய கவனம் மிக்க பார்வை!


எனவே, வாழ்க்கையில் நின்று, நிதானித்து, வெறும் பார்வையோடு நில்லாமல், கவனித்து, உற்று நோக்கிக் காரியமாற்றும்போது வெற்றி வீதியில் உலா வருவீர்கள். நாமும் முழுமையடைந்த பார்வை உள்ளவர்களாகிப் பெருமைப்பட்டுக் கொள்ள இயலும்

--------------------நன்றி:- கி. வீரமணி அவர்கள் எழுதிவரும் "வாழ்வியல் சிந்தனைகள்" பகுதியிலிருந்து-"விடுதலை" 26-6-2009

0 comments: