Search This Blog

13.6.09

"பகுத்தறிவு" முன் "கடவுள்" நிற்குமா?




தன்னுடைய உடையில் சிறிதளவு சாணி பட்டு விட்டால் உடனே தண்ணீரினால் கழுவியது போதாது என்று சோப்பினால் தேய்த்து அதன் துர்நாற்றம் போகும் வண்ணம் கசக்குகிறான். ஆனால் சிறிதளவு சாணியை உருண்டை செய்து வைத்து, இதுதான் பிள்ளையார், விழுந்துக் கும்பிடு என்று கூறவும் உடனே கன்னத்தில் அடித்துக் கொண்டு குப்புற விழுகிறான்.தெருவில் போகும்போது யாராவது தாய்மார்கள் குப்பையில் கொட்டும் சாம்பல் காற்றில் பறந்து வந்து மேலே பட்டவுடன், ஆத்திரம் பொங்கிக் கொண்டு, ஒரு பெண் பிள்ளை நம்மேல் குப்பையைக் கொட்டினாள் என்பதற்காக முறைத்துப் பார்த்துப் பேசிவிட்டுச் செல்கிற அதே மனிதன் மேல் அடுத்த வீதியில் காளிதேவியின் உருவம் என்ற பரட்டைத் தலையுடனும், மஞ்சள் துணியுடனும் வேப்பிலைக் கொத்துடனும் ஆடிப்பாடிக் கொண்டிருக்கும் பெண் ஒருவள், ஒருபிடி சாம்பலை எடுத்து முகத்தில் வீசி அடித்தவுடன், "அம்மா தாயே இன்னொரு அடி அடிதாயே; என் பெண் ஜாதி பிள்ளைகளுக்கும் பிரசாதம் கொடு தாயே!" என்று தலையைக் குனிந்து கும்பிடுகிறான்.இவைகளின் மூலம் அவனுடைய பகுத்தறிவை எடை போட முடிகிறது. தன் பகுத்தறிவையே உபயோகிக்கும் இடத்தில் உண்மை விளங்குகிறது. சாணியாகவும், சாம்பலாகவும் தோன்றி அவைகளின் ஆபாசங்கள் தோன்றுகின்றன. ஆனால் பகுத்தறிவற்ற நேரத்தில் பகுத்தறிவை சரியாக உபயோகிக்காத நேரத்தில் சாணி உருண்டை சாமியாகவும், சாம்பல் கடவுளின் பிரசாதமாவும் தோன்றுகிறது.


சாதாரணமாக ஒரு பெண் கடைக்குச் சென்று சிறிய திருகு அணி போன்ற நகை வாங்கினால் அந்தக் கடைக்காரன் படும்பாடு கொஞ்சமல்ல. எத்தனைப் பவுன் எடை? நீடித்து உழைக்குமா? முன்பு இக்கடைக்காரனிடம் வாங்கியது இப்போது எப்படி இருக்கிறது? பவுன் சரியான மாற்று உடையதா? உறுதியான வேலைப்பாடாக இருக்கிறதா? என்று தான் யோசித்துப் பார்ப்பதுமன்றி, அக்கடைக்காரனைக் குறுக்கிட்டுக் கேட்கும் கேள்விகள் அவனைத் திணற வைத்து விடும்.அதைப் போன்றே ஒருவன் ஜவுளிக் கடைக்குச் சென்று துணி வாங்கினால், அத்துணியைப் பற்றி என்ன நம்பர் நூலில் செய்யப்பட்டது? கைத்தறியா, மில் துணியா? சாயம் வெளுக்காமல் இருக்குமா? அடுத்தக் கடையைவிட இந்தக் கடையில் கெஜத்துக்கு எவ்வளவு விலை அதிகம்? கெஜத்துக் கோலில் அளவு குறைவாக இருக்கிறதா? –என்று இவ்வளவும் பார்த்த பிறகு பீஸ் விலை என்னவென்று கேட்டு மொத்தமாக வாங்கினால் சில்லறையில் வாங்குவதைவிட எவ்வளவு நயமாக இருக்கும் என்று இதையும் கணக்குப் பார்த்து கையில் உள்ள தொகையையும் எண்ணிப் பார்த்து இறுதியில் ஒரு கெஜம் துணி கொடு என்று வாங்கிச் சொல்கிறான். இக்காட்சியை சாதாரணமாகக் கடைவீதிகளில் காணலாம்.

ஆனால் இவ்வளவு கேள்வியும், ஆராய்ச்சியும் அங்கே தான் தென்படுகிறதே தவிர வீட்டிற்கு வந்தவுடன் சாணி உருண்டையின் முன்பாகத்தான் விழுந்து கும்பிடுகிறான். கோயிலுக்குள் அடியெடுத்து வைத்தவுடன் நிமிர்ந்திருக்கும் கற்களெல்லாம் சாமியாகக் கருதுகிறான். ஏனெனில் இங்கே பகுத்தறிவுக்கு அவன் கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான். சிறிதளவு பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்தாலும் போதும். அத்தனையும் கருக்கல் என்று தென்பட்டுவிடும்.பாமர மக்கள் தான் இதைப்பற்றி சிந்திப்பதில்லை என்றாலும், படித்தவன், அறிவாளி என்று கூறிக் கொள்பவனும் இதைப் பற்றி சிந்திப்பதே கிடையாது.படித்த அறிவாளி என்பவனும் கடவுள் சொன்னது, ரிஷிகள் சொன்னது, சாஸ்திரத்தில் உள்ளது என்றால் உடனே முட்டாளாகி விடுகிறான். கடவுள் என்ன சொன்னார்? ஏன் சொன்னார்? எப்படிச் சொன்னார்? எதற்காகச் சொன்னார்? என்பதை சிந்திப்பதே கிடையாது.


---------------------தந்தைபெரியார் - "விடுதலை" 30-08-1955

1 comments:

த மி ழ் இ னி யா said...

புத்திவந்தால் பக்தி போய்விடும். பக்திவந்தால் புத்தி போய்விடும் என்று பெரியார் சொலுவார். அது உண்மைதான் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாகியுள்ளது.