Search This Blog

1.6.09

மதமும் ஜாதியும் மக்களை என்ன பாடுபடுத்துகின்றன?


எதற்காக இந்தக் கல்வி?

கேரளா ஒரு விசித்திரமான மாநிலம். படித்தவர் அதிகம். பைத்தியம் பிடித்தவர்களும் கூடுதல். தற்கொலை செய்து கொண்டு மாள்பவர்களும் இங்கேதான் அதிகம்.

எர்ணாகுளம் அருகே உள்ள அலுவாநகரில் இந்தியாவின் மூன்று பெரிய மதங்களைச் சேர்ந்தவர்களும் முகாமிட்டு தத்தம் கடைச் சரக்கின் பெருமைகளைப் போதித்துக் கொண்டு வருகின்றனர்.

தூய ஜோசப் (கிறித்துவ) மடாலயம் கிறித்துவப் பாதிரியார்களை உருவாக்கி வருகிறது. 16 முதல் 22 வரை வயதுள்ள இளைஞர்களைச் சேர்த்து மதக் கல்வி கற்றுத் தருகிறார்களாம்! 400 பேர் படித்து வருகிறார்கள். மொத்தம் 10 ஆண்டுகள் பயிற்சியாம். முடித்தால் பாதிரியாம். மதம் பரப்பும் பணி. கர்த்தருக்கும் ஏசுவுக்கும் ஊழியம் செய்யும் தொண்டு! ஆனால் கற்பவர்களின் மனோநிலை எப்படி என்பதை அந்தோணி எனும் பாதிரியார் கூறுகிறார் - தூய்மையான தொண்டு உள்ளத்தோடு முன்பெல்லாம் வந்தார்கள்; இப்போது வருபவர்கள் உலகச் சுகங்களை எல்லாம் அனுபவிக்கத் துடிக்கிறார்கள் என்கிறார்! இதற்கு யார் காரணம்?

முன் ஏர் செல்வது போல பின் ஏரும் செல்கிறதோ? போப் எத்தகைய ஆடம்பர வாழ்க்கையை எல்லாவிதச் சுகபோக பாக்கியங்களோடும் அனுபவிக்கிறார்! அதைப் பார்க்கும் இளம் பாதிரிக்கு ஆசை வருவதில் என்ன தவறு?

இதே ஊரில், தந்த்ர வித்யாபீடம் ஒன்று இருக்கிறது. செரியாத்து நரசிம்மசாமி கோயிலுக்குப் பக்கத்தில் பெரியாறு நதிக்கரையில் உள்ளது. மேலே எதுவும் அணியாமல் இடையில் மட்டும் வேட்டி கட்டிய மாணவர்கள் சிலபேர் பயின்று வருகின்றனர். இவர்களுக்குச் சொல்லித் தரப்படுவது தந்திர சாஸ்திரம், வேதம், ஜோசியம், சமக்கிருதம், வாஸ்து சாஸ்திரம், புராணங்கள் ஆகியவற்றுடன் இங்கிலீசும்! 16 முதல் 23 வயதுடைய 45 மாணவர்கள் பயில்கின்றனர். இதனைத் தொடங்கியவர் ஆர்.எஸ்.எஸ்.காரரான மதவ்ஜி என்பவர். அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கிறது பார்த்தீர்களா? 1972 இல் வாய்மொழிப்பாடமாகச் சொல்லிக் கொடுத்தவர்கள் இப்போது புத்தகங்கள் அச்சடித்துச் சொல்லிக் கொடுக்கிறாக்ள். இதையே 7 ஆண்டுகளுக்குச் சொல்லித் தருகிறார்கள்.

படித்து முடித்து சமக்கிருத வாத்தியாராகவோ, கோயில் அர்ச்சகராகவோ போகலாம்! நம்பூதிரியும் அந்தோணிப்பாதிரியார் போலவே, தம் மாணவர்களைப் பற்றி நல்லபடியாகக் கூற வில்லை.

பின் எதற்காகச் சொல்லித் தருகிறார்கள்?

மூன்றாம் மதமான முசுலிம்கள் விட்டுவிடுவார்களா? ஆறு ஆண்டுக் காலப் பயிற்சி தருகிறார்கள். 18 முதல் 23 வயது உள்ள மாணவர்கள் 100 பேர் தங்கிப் பயின்று வருகின்றனர். ஆனாலும் 40 பேர் சேர்ந்து படித்த வகுப்பில் வெறும் 11 பேர் மட்டுமே இறுதியில் படிப்பை முடித்தனர் என்றால் எவ்வளவு ஆர்வம் அங்கு படிப்பதற்கு! ஒரு வகுப்பில் 45 பேர் சேர்ந்து தொடங்கி 5 பேர் மட்டுமே முடித்து வெளியேறினர்.

என்றால் - மதக் கல்விக்கு எவ்வளவு மவுசு என்பது புரியவில்லையா?

மதக்கல்வி சோறு போடாது என்பது ஒரு புறம் இருக்க, வேறு வகைகளிலும் கூடப் பயன்படாதது என்பதை நிறையப் பேர் உணர்ந்து விட்டார்கள்.

பெருமதங்கள் எனும் பேய்பிடியா திருக்க வேண்டும்.

-------------------------------------------------------------------------------

பதில் வருமா?

மதமும் ஜாதியும் மக்களை என்ன பாடுபடுத்துகின்றன? இரு மதங்களுக்குள் சண்டை - சிலுவைப் போர் என்றும் ஜிஹாத் என்றும் பார்க்கிறோம். யூத இசுலாமியப் போர்! இந்து முசுலிம் சண்டைகள்.

ஒரு மதத்திற்குள்ளேயே சண்டைகள்! சைவ- வைணவப் போர், கத்தோலிக்க - புரொடஸ்டென்ட் போர், சியா, சன்னி போர், இப்படியே நீண்டு கொண்டே போகும்.

மதத்திற்குள்ளே அடிதடி, நான் உயர்த்தி, நீ தாழ்ச்சி என்ற பேதம்! ஜாதியால், வருவது. புண்ணிய பாரத பூமியில் உள்ள மதங்களுக்கு மட்டும் பிரத்யேகமான சண்டைகள். இந்து, சீக்கிய மதத்தில் உள்ள சண்டைகள்.

இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குப் போனாலும் - பிழைக்கப் போன இடத்திலும் போட்டுக் கொள்ளும் சண்டைகள்- முற்றி, மோதி, கொலை அளவுக்கு வந்துவிட்டது, வியன்னாவில்! தாழ்ந்த ஜாதி குருவும் அவரது உபதேசங்களும் அவற்றால் ஈர்க்கப்படும் நம்பிக்கை வாதிகளும், அதற்குக் கூடும் கூட்டமும், அதனால் ஏற்படும் பெருமையும் அதைச் சகித்துக் கொள்ள முடியாத உயர் ஜாதித் திமிரும் குருவைச் சுடும்அளவுக்குப் போய்விட்டதே, மதங்கள் தேவையா?

நல்வழிப்படுத்த, ஒழுக்கத்தைப் போதிக்க, உயர் எண்ணங்களை வளர்க்க, ஒரு வழிகாட்டல், ஒரு மதம் தேவை என்று உளறும் அரைவேக்காட்டு மதவாதச் சக்திகள் இதற்குக் கூறும் பதில் என்ன?

கூறுகெட்ட மதவெறியர்கள் 6 பேர் செய்த காரியத்தைக் கண்டிப்பதற்கு இங்கே இந்தியாவில் கலவரம், தீ வைப்பு, கொலை, கொள்ளை என்று நடத்தினால் ஒழுக்கம் வளருமா? மதம் வளரலாம், மனிதம் வளருமா?


பதில் வருமா?

------------------30-5-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை

3 comments:

Gokul said...

அற்புதமான கருத்து, இந்து மதம் மட்டுமல்லாமல் இஸ்லாமும் கிருத்துவமும் மனிதர்களை சுரண்டுவதில் முன்னே நிற்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

Unknown said...

மனிதர்களை சுரண்டுவதில் முன்னே நிற்கிறது

திமுகவை விடவா

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோகுல்