Search This Blog

1.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை-பங்களா தேஷ் - பார்படாஸ்


பங்களா தேஷ்

வங்க அல்லது பங்க என்று அழைக்கப்பட்ட ராஜ்யம்தான் பங்களா தேசம். வங்க நாடு 1556 இல் முகலாயப் பேரரசின் அங்கமாக ஆயிற்று. வங்காளத்தின் கிழக்குப் பகுதியில் இருந்தவர் களில் பெரும்பான்மையோர் இசுலாம் மதத்தைத் தழுவினர். முகலாயர்களின் வீழ்ச்சிக்குப் பின் இப்பகுதி தனிநாடானது. 1608 இல் ராஜ் மனவா எனும் ஊரில் இருந்த தலைநகர் டாக் காவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் 1704 இல் முர்ஷிதாபாத் எனுமிடத்திற்கு மாறியது. இந்தக் காலகட்டத்தில் தான் கிழக்கிந்தியக் கம்பெனியார் கல்த்தாவில் காலூன்றத் தொடங்கினர்.
1947 இல் இந்திய விடுதலை நேரத்தில் இந்தியாவில் இசுலாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகள் பாகிஸ்தான் எனும் தனிநாடாக உருவாக்கப்பட்டன. இன்று வங்கதேசம் எனப்படும் பகுதி அப்போது கிழக்குப் பாகிஸ்தான் என அழைக்கப்பட்டது. இரண்டு பகுதிகளுமே ஒரே மத மக்களைக் கொண்டவைதான் ; இசுலாமிய நாடுகள் தான். ஆனாலும் பேசு மொழியின் அடிப்படையில் வேறு பட்டிருந்தன. மேற்குப் பாகிஸ்தானின் பேசு மொழி உருது என்றால், கிழக்குப் பாகிஸ்தானின் பேச்சு மொழி வங்காள மொழி.

இந்த வேறுபாட்டினால் இரு பகுதிகளுக்கும் இடைவெளி வளர்ந்து கொண்டே போனது. ஷேக் முஜிபுர் ரஹ்மான் என்பவரால் தொடங்கப்பட்ட அவாமி லீக் கட்சி, கிழக்குப் பாகிஸ்தானுக்குச் சுதந்திரம் கேட்டது. 1970 டிசம்பரில் நடந்த தேர்தலில் இக்கட்சி ஏராளமான இடங்களைப் பிடித்தது. 169 இல் 167 இடங்களில் அவாமி லீக் கட்சியே வென்றது. பாகிஸ்தானின் நாடா ளுமன்றத்தில் மொத்த இடங்கள் 313. இதில் மேற்கு பாகிஸ்தானுக்கு 144 இடங்கள் மட்டுமே. அந்த வகையில் அவாமி லீக்கட்சி முழு பாகிஸ்தானிலும் மிகப் பெரிய கட்சியானது. மேற்குப் பாகிஸ்தான் மக்கள் கட்சி சுல்பிகர் அலி புட்டோ தலைமையில் 144 இல் 81 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது.

1971 மார்ச் மாதத்தில் பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் யாஹ்யாகான், பெரும் படையைக் கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பினார். சொந்த நாட்டு மக்களின் மீதே போர்ப்படை தாக்குதல் நடத்தி ஆயிரக் கணக்கில் மாணவர்களையும் மற்றவர்களையும் கொன்று குவித்தது. ஷேக் முஜிபுர் ரஹ்மானைக் கைது செய்து மேற்குப் பாகிஸ்தானுக்குக் கொண்டு சென்றது. அவாமி லீக் கட்சியின் மற்ற தலைவர்கள் கல்கத்தாவில் அடைக்கலம் புகுந்து, சுதந்திர அரசை வெளியில் அமைத்தனர்; கிழக்குப் பாகிஸ்தானின் விடுதலையை அறிவித்தனர். வங்காள தேசம் எனும் பெயரைச் சூட்டினர்.

இந்தச் சூழ்நிலைகளில் சுமார் ஒரு கோடிப் பேர் இந்தியாவுக்கு ஓடி வந்தனர். இவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள். பங்களாதேஷ் மக்கள் இந்தியாவுக்குள் ஓடி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனதால், 3-12-1971 இல் கிழக்குப் பாகிஸ்தான் மீது இந்தியா படையெடுத்தது. 16-12-1971 இல் பாகிஸ்தான் ராணுவம் சரண் அடைந்து தோல்வியை ஒப்புக் கொண்டது. முஜிபுர் ரஷ்மான் விடுதலை செய்யப்பட்டு பங்களாதேஷ் வந்து அதிபர் பொறுப்பை 1972 ஜனவரியில் ஏற்றுக் கொண்டார்.


அதன்பிறகு ராணுவச் சட்டங்கள், ராணுவப் புரட்சிகள், அரசியல் கொலைகள் எனக் கலவரங்களும் குழப்பங்களும் பங்களா தேஷில் தொடர் நிகழ்ச்சிகளாயின. அதிபர் முஜிபுர் ரஹ்மான் கொலை செய்யப்பட்டார். அப்துஸ் சத்தார் என்பவர் பதவி ஏற்றார். ஜெனரல் எர் ஷாத் பதவியைக் கைப்பற்றினார்; 1991 தேர்தலில் தோற்றார். கலீதா ஜியா எனும் பெண் பிரதமரானார். அதிபர் ஜியாவின் துணைவியார் இவர். தளபதி லஞ்ச ஊழல் குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப் பட்டார்.

புதிய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டு நடைமுறைக்கு வந்தது. அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுப் பிரதமரின் அதிகாரங்கள் கூடுதலாக்கப்பட்டன. 1996 இல் நடந்த தேர்தலில், எதிர்க் கட்சிகள் புறக்கணித்ததால், வெற்றி பெற்றாலும் கலீதா ஜியா பதவி விலகினார். இடைக்கால அரசு அமைந்தது. முகமது ஹபிபுர் ரஹ்மான் இடைக்கால அரசின் தலைவரானார்.

பின்னர் ஒரு கூட்டணி அரசு அமைந்தது. அவாமி லீக் கட்சியின் நிறுவனரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா வாசத் என்பவர் ஆட்சித் தலைமையை ஏற்றார். மீண்டும் 2001 இல் தேர்தல் நடந்தபோது, கலீதா ஜியா பிரதமரானார். 2005 இல் இசுலாமிய மதவெறிக் கட்சிகள் மற்றும் துஆக்ஷ எனும் அமைப்புகளே அவை. இவையிரண்டும் எண்ணிறந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கும் பல நூற்றுக் கணக்கான அவ்வமைப்பைச் சேர்ந்தோர் கைது செய்யப் படுவதற்கும் காரணமான அமைப்புகள் அவை. தற்கொலைப் படைத் தாக்குதலிலும் ஈடுபட்டவை.

ஒரு லட்சத்து 44 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பு உள்ள இந்நாட்டில், 14 கோடி 75 லட்சம் பேர் வசிக்கின்றனர். இசுலாமியர்கள் 83 விழுக் காடும் இந்துக்கள் 16 விழுக்காடும் உள்ளனர்.


பார்படாஸ்

ஆவாக் இந்தியர்கள் எனப்படும் மக்கள் பூர்வீகத்தில் வசித்த நாடு. 1627 இல் போர்த் துகீசியர்கள் முதலில் வந்து குடியேறியவர்கள். நிலங்களில் பருத்தி, புகையிலை பயிரிடத் தொடங்கி பிறகு கரும்பு உற்பத்தி செய்தனர். ஆப்ரிக்காவிலிருந்து மக்களை அடிமைகளாகக் கொண்டு வந்து தோட்டங்களில் பயிர்ச் சாகுபடிப் பணிகளுக்குப் பயன்படுத்தினர். நாளடைவில் அவர்கள் 90 விழுக்காடாக மக்கள் எண்ணிக்கையில் வளர்ந்தனர்.
வின்ட்வார்டு தீவுகளுக்குத் தலைநகராக பார்படாஸ் வளர்ந்தது. ஆனாலும் 1885 இல் பிரிட்டனின் தனி குடியேற்றப் பகுதியாக விளங்கியது. இந்நாட்டுக்கு 1966 இல் பிரிட்டன் சுதந்திரம் வழங்கியது.

கரிபியன் தீவுகளைச் சேர்ந்த இந்நாட்டின் பரப்பு 431 சதுர கி.மீ. மக்கள் தொகை 2 லட்சத்து 80 ஆயிரம். கிறித்துவ மதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருக்கின்றனர். நூற்றுக்கு நூறு படித்த மக்கள்.

-------------------------நன்றி:-"விடுதலை" 31-5-2009

2 comments:

அக்னி பார்வை said...

நீங்கள் எழுதி வரும் இந்த தூரபார்வை மிக நல்ல முயற்ச்சி..தொடருங்கள்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர்அக்னி