Search This Blog

29.1.09

அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறார்களா?



மக்கள் மனிதக் கேடயங்களா? வன்னிக்கு வந்து பாருங்கள்
உலகத் தலைவர்களுக்கு விடுதலைப்புலிகள் அழைப்பு

முல்லைத் தீவு மாவட்டத்தில் அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாக வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாற்றை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

உண்மை நிலை என்ன என்பதை அறிய வன்னிப் பகுதிக்கு நேரில் வந்து பார்வையிடும்படி உலகத் தலைவர்களை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பல இலட்சக்கணக்கான தமிழ் மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று இலங்கை அரசு நடத்தி வரும் பொய் பரப்புரை பற்றி கேட்டபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எங்களின் மக்களுக்காகவே நாங்கள் போராடுகிறோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாங்கள் வைத்திருக்கிறோம் என்பது பொய் பரப்புரையாகும். எங்கள் தமிழ் மக்களை கொல்வதற்கான பொய் பரப்புரையாக இதை சிங்கள அரசு செய்து வருகிறது. வன்னிப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் எங்களுடன் வாழ்வதையே விரும்புகின்றனர். அதனால் தான் கடந்த 2 ஆண்டு களாக எங்களது கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அவர்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர் என்று நடேசன் தெரிவித்தார்.

இதே குற்றச்சாற்றை பல் வேறு மனித உரிமை அமைப்புகளும் முன்வைப்பது பற்றி கேட்டபோது, எங்களது கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை இங்குவந்து பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும். எங்கள் மீது குற்றச்சாற்றுகளை முன் வைக்கும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளுக்கும் நான் வெளிப்படையான அழைப்பு விடுக்கிறேன். எங்கள் மக்கள் மீது சிங்களப் படையினர் கண்மூடித்தனமாக நடத்தும் தாக்குதலை நிறுத்தி விட்டு, எங்கள் பகுதிக்கு வந்து பாருங்கள். அங்கு வந்து மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்றும் நடேசன் கூறினார்.


இலங்கைப்படையினருடனான போரில் விடுதலைப்புலிகள் பெரும் இழப்பை எதிர் கொண்டுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கம் ஏன் அரசியல் தீர்வை பெறக் கூடாது என்று கேட்டபோது, சுதந்திரமான சிறப்பான அரசியல் தீர்வுக்காகவே நாங்கள் போராடுகிறோம். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்தத் தீர்வை பெறுவதற்காகவே நாங்கள் போராடி வருகிறோம் என்று அவர் விடையளித்தார்.

------------------ நன்றி: "விடுதலை" 29-1-2009

0 comments: