Search This Blog

24.1.09

பழனி தைப்பூச விழாவில் கொடியேற்றத்தைக் கண்டு தரிசித்தால் செல்வம் பெருகுமா?


பழனி"யப்பன்"!

"பழனி தைப்பூச விழாவில் கொடியேற்றத்தைக் கண்டு தரிசித்தால் செல்வம் பெருகும்."

- அப்படியா? பழனியில் பல்லாண்டுகாலமாக வாழும் பல் லாயிரக்கணக்கான மக்கள் ஒரு முறையல்ல; இருமுறையல்ல; பலமுறை கொடியேற்றத்தைக் கண்டு மனமுருகித் தரிசித்த துண்டே, அத்தனை ஆயிரம் பேர்களும் வறுமைக்கோட்டுக்கும் மேலே கோட்டைக் கட்டி ஆளுகிறார்களோ!

பழனிக்கு வந்து முடி காணிக்கை கொடுத்து மொட்டையாண்டியாகச் செல்பவர்களுக்கு நோய்கள் பஞ்சாகப் பறந்து போய்விடும்.

- அப்படியா? பழனியில் மருத்துவமனைகளை அரசு கட்டி மருத்துவர்களை நியமனம் செய்வதெல்லாம் வீண் வேலை மட்டு மல்ல - பழனி முருகனின் சக்தியைக் கேலி செய்யும் நாத்திக செயல்தானே! மருத்துவமனையை இழுத்து மூடுக என்று பக்தர்கள் மறியல் போராட்டம் நடத்துவார்களா என்று தெரியவில்லை.

****************************

பழனி தைப்பூச விழாவைக் காண தேவர்களும், முனிவர்களும் பழனிக்கு வருகிறார்களாம் - அசுரர்களை அழிப்பார்கள்.

- பலே, பலே! அசுரர்கள் யார்? சுராபானம் குடிக்க மறுக்கும் புருசோத்தமர்கள்தான் அசுரர்கள். அவர்களை தைப்பூசத்தன்று பழனிக்கு வரும் தேவர்கள் அழித்து விடுவார்களாம். அதனால் என்ன செய்யவேண்டும்? எல்லோரும் குடித்து சுரர்களாக மாறிடல் வேண்டும். காரணம் குடிக்காதவர்களைக் கண்டால் தேவர்களுக்குப் பிடிக்காதே!

விவசாயத் தொழிலில் லாபம் கொழிக்க இளநீர் காவடி, தானியக்காவடி, கரும்புக்காவடி, சுரைக்காய் காவடி எடுத்து வர வேண்டும்.

ஏற்கெனவே விவசாயத்தில் கடன்பட்டு வறுமைக்காவடி எடுப்பவர்கள் இதற்கு வேறு செலவு செய்து காவடி எடுத்து வந்தால் அவர்கள் காவடி எடுக்கவேண்டியதுதான்!

********************************

தைப்பூசக் கொடியேற்றத்தின்போது முருகபெருமான் அளவில்லாத சக்திகளை ஒருங்கே பெற்றுத்திகழ்வார்.

- அப்படியென்றால் மற்ற நேரங்களில் எல்லாம் முருக பெருமான் வெற்று வெட்டுதானோ! சுத்த தகர டப்பாதானோ!


*************************************

முருகபெருமானுக்கு வெற்றிச் சின்னங்கள் வேல், மயில், சேவல்களாகும்.

அது சரி, எதிரி ஏ.கே. 47 துப்பாக்கியை தூக்கினால் இந்தச் சின்னங்கள் எல்லாம் சின்னா பின்னம் ஆகிவிடாதா?


இதில் குறிப்பிடப்படும் அய்தீகங்கள் எல்லாம் தைப்பூச திருவிழாபற்றி மதுரை மணி ஏடு (17.1.2009) அவிழ்த்துக் கொட்டியவை. அவற்றை மய்யமாகக் கொண்டுதான் விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இவ்வளவுத் தகவல்களையும் உண்மை என்பதுபோல் எழுதி விட்டு, கடைசியாக என்பர் என்று கூறி கம்பியை நீட்டும் மோசடியைப் பக்தர்கள் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் என்னவாம்!

---------------- மயிலாடன் அவர்கள் 24-1-2009 "விடுதலை" நாலிதழில் எழுதிய பதிலடி

5 comments:

Unknown said...

பெரியார் தமிழர்களை பார்பனர்கள் ஆத்கத்தில் இருந்து விடுவித்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதை விட மேலாக பெரியார் பேரை கூறிக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி வரும் கும்பல் இருப்பதும் உண்மை. பெரியார் சிலையை கோவில்களின் முன் நிறுவுவதும், அதை எதிர்க்கும் மக்களை தாறுமாறாக பேசுவதும் தான் இப்போது பெரியாரை தமிழர்களுக்கு நினைவுபடுத்த நமது கொள்கை வீரர்களான பெரியார் பக்தர்கள் செய்யும் சேவை. கடவுள் இல்லை என்று தானே பெரியார் கூறினார், இந்துக் கடவுள்கள் மட்டும் தான் இல்லை என்றா கூறினார்? பழனி போன்ற கோவில்களில் நடக்கும் சடங்குகளை பற்றி இவ்வளவு அற்புதமாக கமெண்ட் அடிக்கும் நமது பெரியார் பக்தர்கள் சர்ச்சுகளிலும் மசூதிகளிலும் நடக்கும் சடங்குகளை பற்றியும் ஏதாவது கூறட்டுமே? கடவுள் இல்லை என்ற வாசகத்தோடு பெரியார் சிலை ஒன்றை ஏதாவது ஒரு சர்ச் முன்னாலோ அல்லது மசூதி முன்னாலோ நிறுவட்டும். பெரியார் பேரை சொலிக்கொண்டு மக்களை இன்னும் மூளை சலவை செய்து கொண்டு இருக்கும்பெரியார் தாசர்களே, உங்கள் வீட்டில் இருந்து கொண்டு இந்த மாதிரி அறிவு பொக்கிஷங்களை அவிழ்த்து விடுவது சுலபம், வீதிக்கு வந்து மற்ற மதங்களையும் கொஞ்சம் விமர்சித்து தான் பாருங்களேன். பெரியார் வேட்டி சட்டை அணிந்து அமர்ந்திருக்கிறார், கடவுள் சிலைகள் தான் அம்மணமாக நிற்கின்றன என்று தத்துவ முத்தை உதிர்த்த கலைஞர் பக்தர்களும் மேற் கூறிய செயலை செய்யலாம். இப்படிக்கு பார்பனன் அல்லாத இந்துத் தமிழன்.

தமிழ் ஓவியா said...

//பழனி போன்ற கோவில்களில் நடக்கும் சடங்குகளை பற்றி இவ்வளவு அற்புதமாக கமெண்ட் அடிக்கும் நமது பெரியார் பக்தர்கள் சர்ச்சுகளிலும் மசூதிகளிலும் நடக்கும் சடங்குகளை பற்றியும் ஏதாவது கூறட்டுமே?//

இதே வலைப் பதிவில் கிறித்து ,இஸ்லாம் மதங்களைப் பற்றி விமர்சித்து பெரியார் உட்பட பலர் எழுதிய கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து அவைகளைப் படியுங்கள்.

//உங்கள் வீட்டில் இருந்து கொண்டு இந்த மாதிரி அறிவு பொக்கிஷங்களை அவிழ்த்து விடுவது சுலபம், வீதிக்கு வந்து மற்ற மதங்களையும் கொஞ்சம் விமர்சித்து தான் பாருங்களேன்.//

ஒவ்வொரு நாளும் பொதுக்கூட்டங்களில் அனைத்து மதப் பித்தலாட்டங்களையும் விமர்சித்து பேசி, மதங்களின் மாய்மாலங்களை அம்பலப்படுத்தி வருவது பெரியார் தொண்டர்கள் மட்டுமே.ஏனென்றால் உண்மையைச் சொல்லுவதில் எங்கும் எப்போதும் தயார்.இதில் சமரசம் என்பதே பெரியார் தொண்டர்களிடம் கிடையாது.

இது குறித்து சு.ப. வீ. அவர்களின் கருத்தை இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை பதிவு செய்கிறேன். அது இதோ:

"‘இன இழிவைப் போக்க இஸ்லாமே நன்மருந்து’ என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, என்னை இஸ்லாம் மதத்தைத் தழுவுமாறு அன்போடு அழைப்பு விடுத்துள்ளீர்கள். உங்கள் அழைப்புக்கும், நீங்கள் என்னிடம் காட்டும் அன்புக்கும் நன்றி. எனினும் நான் என் நிலையை இம்மாமன்றத்தில் தெளிவாக்கி விட வேண்டும் என்று கருதுகின்றேன்.

மதம் அல்லது மார்க்கம் எதுவானாலும், அது கடவுளை நம்புவது ஆகும். கடவுள் நம்பிக்கையோடு, இம்மண்ணில் வாழும் வாழ்க்கை நெறியை வகைப்படுத்துவதே சமயம் என்று கூறுவர். ஏக இறை வணக்கம் என்பதும்; பல்தெய்வ வழிபாடு என்பதும் இஸ்லாம், இந்து மதங்களுக்கிடையேயான பெரும் வேறுபாடுகளில் ஒன்று என்பதை நான் அறிவேன்.

என்னைப் பொறுத்தளவு, நான் அறவே கடவுள் நம்பிக்கை இல்லாதவன். அதனால் ‘எம்மதமும் சம்மதமில்லை’ என்ற நிலைப்பாட்டைக் கொண்டவன். ‘நான் இந்து’ என்பது கூட இந்திய அரசமைப்புச் சட்டம் என் மீது ஏற்றி வைத்திருக்கும் இழிவுதான்; நான் மதமற்றவன் என்பதே உண்மை. எனவே, இஸ்லாம் உட்பட எந்த ஒரு மதத்தையும் தழுவுவதில் எனக்கு உடன்பாடில்லை. சட்டப்படியும் மதமற்றவனாக என்னை அறிவித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம். சட்டம் அதற்கு இடந்தரவில்லையெனினும், அதனை நோக்கியே என் முயற்சிகள் அமையும்.

ஜனநாயக, சமூக நீதிப் போராட்டங்களில் எப்போதும் நான் உங்கள் தோழனாய் இருப்பேன். ஆனால் வாழ்நாள் முழுவதும், எந்த மதத்தையும் சாராமல், பெரியாரியக் கோட்பாடுகளைப் பரப்பும் தொண்டனாக மட்டுமே இருப்பேன்.

-01.01.2009 அன்று குவைத் நாட்டில், இஸ்லாமிய வழிகாட்டுப் பேரவை நடத்திய சமூக நீதிக் கருத்தரங்கில் சுப.வீரபாண்டியன்."

Unknown said...

தங்கள் விடைகளுக்கு மிக்க நன்றி. என்னுடைய கருத்தை பதிவு செய்த பிறகு தங்களுடைய மற்ற பதிவுகளையும் மிக்க ஆர்வத்துடன் படித்தேன். மேலும் பல ஆரோக்கியமான வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருப்ப்பதையும் படித்து மகிழ்ச்சி அடைந்தேன். சு.ப. வீ. அவர்கள் தான் ஒரு நாத்திகர் என்பதையே மிக்க சாமர்த்தியமாக கூறி உள்ளார். என்னுடைய கருத்து இது தான் - இந்து மதத்தை இழிவு சேயும் அளவுக்கு மற்ற மதங்களை செய்வதில்லை என்பது உண்மை. எங்கோ எப்போதோ நாளிதழ்களில் மற்ற மதங்களை பற்றி சிலர் எழுதி இருக்கலாம் ஆனால் செயல் அளவில் தாக்க படுவது இந்து மதம் மட்டும் தான். பெரியார் சிலை விவகாரம் இதுக்கு சான்று. தங்களுக்கு தெரிந்து ஏதாவது ஒரு ஊரில் வேறு மத தேவாலயங்கள் முன்பு கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி போன்ற வாசகத்துடன் பெரியார் சிலை நிறுவப்பட்டதை அறிவீர்களானால் தயவு செய்து தெரிவிக்கவும். மீண்டும் கூறிக்கொள்கிறேன், நான் பெரியார் செய்த நற்பணிகளை மறுக்கவோ மறக்கவோ இல்லை.

தமிழ் ஓவியா said...

//செயல் அளவில் தாக்க படுவது இந்து மதம் மட்டும் தான்.//

ஆமாம் அந்த இந்து மதம் தான் என்னை சூத்திரன் என்று இழிவு படுத்துகிறது. இந்த இழிவு தாங்காமல் தான் மற்ற மதத்திற்கு மாறுகின்ரனர். அம்மாவாசை அப்துல்காதர் ஆனது இதனால்தான். ஆண்டியப்பன் ஆரோக்கிய சேசுராஜ் ஆனாது இதனால்தான். அவர்கள் என்ன ஆப்கானிஸ்தானத்திலும், ஜெருஜேலத்திலும் இருந்து வந்து குதித்தவர்களா?

நேற்று வரை எனது மாமனாக அண்னனாக இங்கு வாழ்ந்தவர்கள் தானே.இது குறித்த பதிவு விரைவில் வரும்

நன்றி தமிழ்

Unknown said...

நன்றி தமிழ் ஓவியா அவர்களே. உங்கள் இந்த விடைக்கு காத்திருக்கிறேன். மச்சொதிகள் அல்லது சர்ச்சுகள் முன்னால் பெரியார் சிலை "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" போன்ற வாசகத்துடன் இருப்பதை (முடிந்தால் புகைப்படத்துடன்) கூறுங்கள். மற்றொரு விஷயம், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் எப்படி மதம் மாறினார்கள் என்பது வேறு ஒரு விவாதமாக இருக்கட்டும். எல்லோரும் இந்து மதம் அளித்த இழிவினால் தான் மாறினார்கள் என்பது அபத்தம். பின்னர் விவாதிப்போம். நன்றி