Search This Blog

6.1.09

ஒவ்வொரு குழந்தையும் நாத்திகராகவே பிறக்கிறது


ஆந்திர மாநிலம் - விஜயவாடாவில் 7-ஆவது உலக
நாத்திகர் மாநாடு கோலாகலமாக தொடங்கியது!

முதல்நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
தமிழர் தலைவர் எழுச்சியுரை! அடுத்த உலக நாத்திகர்
மாநாடு சென்னையில்தான் என அறிவிப்பு!

கருஞ்சட்டைத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நாத்திக மய்யம் 7-ஆவது உலக நாத்திகர் மாநாட்டினை நடத்துகிறது. ஜனவரி 5, 6 மற்றும் 7 ஆகிய நாள்களில் மாநாடு நடைபெற்று வருகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் (ஜனவரி 5), துவக்க விழாவில் கலந்து கொண்டு தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி எழுச்சியுடன் கூடிய வாழ்த்துரை வழங்கினார்.

பல்வேறு நாடடைச் சார்ந்த

பிரிட்டன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், நார்வே, ஃபின்லாந்து, ஜெர்மனி ஆகிய பல்வேறு நாடுகளிலிருந்து நாத்திக - மனிதநேய அமைப்பைச் சார்ந்த தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பகுத்தறிவாளர் அமைப்பைச் சார்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக 35 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காலை 11.30 மணிக்கு துவங்கிய மாநாட்டினை, சீரிய நாத்திக விஞ்ஞானியும், இந்திய அரசின் தேசிய அறிவுக்குழுவின் (National Knowledge Commission) மேனாள் உதவித் தலைவருமான டாக்டர் பி.எம்.பார்கவா துவக்கி வைத்து உரையாற்றினார். நார்வே நாட்டிலிருந்து வருகை தந்திருந்த, பன்னாட்டு மனித நேயத் தத்துவ ஒன்றியத்தின் (International Humanistic and Ethical Union) மேனாள் தலைவர் லெவி ஃபிராகல் (Levi Fragell) தலைமை தாங்கினார்.

அவர் தமது தலைமை உரையில், இந்தியர்கள் நாத்திகக் கருத்துகளைத் தெரிந்து கொள்வதற்கு வெளிநாட்டினை எதிர்பார்த்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்நாட்டில், குறிப்பாக - தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்த பெரியார் அவர்களின் கொள்கைகளே போதுமானது என எளிமையான ஆங்கிலத்தில் வந்திருந்தோர் அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைத்தார்.

தமிழர் தலைவரின் வாழ்த்துரை

மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் எழுச்சியுடன் கூடிய வாழ்த்துரை வழங்கி வந்திருந்தோர் அனைவரின் கவனத்தையும், கருத்தையும் கவர்ந்தார். மேலும் தமது வாழ்த்துரையில் குறிப்பிட்டதாவது:

தொடர்ந்து உலக நாத்திகர் மாநாட்டை ஏழாவது முறையாக, கொள்கைப் பிடிப்புடன் நடத்தி வரும் ஆந்திர நாத்திகர் மய்யம் பாராட்டுதலுக்குரியது. நாத்திகக் கருத்துகளை வழங்கிய தந்தை பெரியாரும், நாத்திக அறிஞர் கோராவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள்.

எங்கும் நிறைந்திருப்பதாக, சர்வ வல்லமை பொருந்தியதாகக் கூறப்படும் கடவுள் தனது பாதுகாப்பிற்காக பிறரை நம்பி இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. திருப்பதி ஏழுமலையான் வெங்கடேசப் பெருமாளுக்கு ஏகே 47 துப்பாக்கியுடன் கூடிய காவலர்கள்தான் பாதுகாப்பு தருகின்றனர். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் காவலர்கள் தான் பாதுகாப்பினை வழங்கி உறுதி செய்கின்றனர். மக்களைப் பாதுகாக்கத் தவறிக் கொள்ளும் கடவுள் தனது பாதுகாப்பிற்கு காவலர்களை எதிர்பார்த்து இருக்கிறது. (When people thinks than they are at the mercy (protection) of God; the Gods are at the mercy of guads) (அரங்கத்தின் கரவொலி அதிர்ந்தது).

ஒவ்வொரு குழந்தையும் நாத்திகராகவே பிறக்கிறது; வளர்ந்து வரும், பெற்றோர்களின் கருத்துத் திணிப்பு காரணமாகவே கடவுள் நம்பிக்கைக்கு ஆட்படுகின்றன. தந்தை பெரியார் எடுத்துக்கூறிய கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை எனும் கொள்கை முழக்கத்தினைக் கேட்டு, உண்மையாகவே கடவுள் என்பதாக ஒன்றிருந்தால், இதோ இருக்கிறேன் கடவுள் - நான் என வந்திருக்க வேண்டுமே? ஏன் வரவில்லை? ஏனென்றால் கடவுள் என்பது இல்லை. தீவிரவாதிகளுக்கு பயந்து கொண்டிருக்கிறது கடவுள். அது எப்படி சர்வ வல்லமை பொருந்தியதாக இருக்க முடியும்?

நடைபோடும் நாத்திகம்

கல்வியற்ற அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதாக இல்லை. விஞ்ஞானிகள் அனைவரும் அறிவியல் மனப்பான்மை உள்ளவர்களாக இருக்க முனைந்தால் அனைவரும் நாத்திகர்களாகவே இருப்பர். இந்திய அரசமைப்புச் சட்டமும் குடிமகனின் அடிப்படைக் கடமைகளாக அறிவியல் மனப்பான்மையை அறிந்து கொள்ளும் போக்கினை மனித நேயப் போற்றலை வலியுறுத்துகிறது. நாத்திக கொள்கைகளை மனிதனை வாழ வைக்கும், மனித நேயத்தை தழைக்கச் செய்யும் வகையில் நடைபோடும் நாத்திகம் (March of Atheism) எனும் முழக்கத்துடன் நடைபெறவிருக்கும் மூன்று நாள் மாநாடு வெல்லட்டும், நாத்திகக் கருத்துகள் பரவட்டும்! வாழ்த்துகிறோம்.


தமிழர் தலைவர் 15 நிமிட ஆங்கிலப் பேச்சு கருத்துச் செறிவுடன் திகழ்ந்து - பலதரப்பட்ட அமைப்பினரும் உணவு இடைவேளையில் அவரை கைகுலுக்கி பாராட்டும் வகையில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.

---------------------நன்றி:"விடுதலை" 6-1-2009

5 comments:

கோவி.கண்ணன் said...

//ஒவ்வொரு குழந்தையும் நாத்திகராகவே பிறக்கிறது; வளர்ந்து வரும், பெற்றோர்களின் கருத்துத் திணிப்பு காரணமாகவே கடவுள் நம்பிக்கைக்கு ஆட்படுகின்றன. //

சத்தியமான உண்மை

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி.கண்ணன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

////கோவி.கண்ணன் சொன்னது…
//ஒவ்வொரு குழந்தையும் நாத்திகராகவே பிறக்கிறது; வளர்ந்து வரும், பெற்றோர்களின் கருத்துத் திணிப்பு காரணமாகவே கடவுள் நம்பிக்கைக்கு ஆட்படுகின்றன. //

சத்தியமான உண்மை////

repeateyyyyy

Robin said...

பிறக்கும் குழந்தை நாத்திகனும் இல்லை, ஆத்திகனும் இல்லை. நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு. அப்படியிருக்க குழந்தைக்கு கடவுளைப் பற்றி எந்த அறிவும் இல்லையென்றால் நாத்திகன் என்று எப்படி அழகிக்க முடியும். குழந்தைக்கு நாத்திகம், ஆத்திகம் என்ற எந்த கொள்கைகளும் கிடையாது என்பதுதானே உண்மை?

தமிழ் ஓவியா said...

//குழந்தைக்கு நாத்திகம், ஆத்திகம் என்ற எந்த கொள்கைகளும் கிடையாது என்பதுதானே உண்மை?//

அப்ப கடவுள்(ஆத்திகம்) என்பது மோசடி என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

குழந்தை பிறந்து வளர்ந்தவுடன் கடவுள் பற்றிய கருத்து திணிக்கப்படுகிறது என்பது உண்மைதானே!

நாத்திகத்தை யாராலும் அப்படி திணிக்கமுடியாது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?