Search This Blog

19.1.09

ஆரியவேதம் ஒரு கற்பனைக்கோர்வை


"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க"5.


என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட

தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.

-------------------------------------------------------------------------------


6. கடவும் - III

மதத்தின் பேரால் (ஏன் - கடவுளின் பேரால் என்றும் சொல்லலாம்) உலகில் உள்ள எல்லா மக்களும், எல்லா நாட்டிலும், மதங்களின் அவ்வக்காலங்களின்போது காட்டுமிராண்டிகளாய், மூடநம்பிக்கைக் காரர்களாய், சிந்தனையற்ற முட்டாள்களாகவே இருந்திருக்கிறார்கள்.


ஆரியவேதம் ஒரு கற்பனைக்கோர்வை

ஆரியர்கள், அவர்கள் இனத்தார்களான மேல்நாட்டார்களை எடுத்துக் கொண்டாலும் கடவுள்-மதம் விஷயமாக இன்று அவர்களும் நாமும் பங்கு கொள்ளும் எந்தக் கருத்தும் சுமார் நாலாயிரம் அல்லது 5 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் அவைகளுக்கென்றே சொல்லும் படியான சொற்கள் இருந்ததாகவும் தெரியவில்லை. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக என்று சொல்லும்படியான காலத்தில் ஏற்பட்ட ஆரிய வேதம் என்னும் கற்பனைக் கோர்வைகளிலும், கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ இன்று குறிப்பிடுவதைப் போன்ற சொற்களைக் காணவும் முடியவில்லை.


வேதம் என்பதில் காணப்படும் ஏதாவது “கடவுள் தத்துவம்” கூட வேதத்துக்கு வியாக்கியானம் செய்தவர்களான சங்கரர், ராமானுஜர், மாத்துவர் முதலிய மதகுருமார் என்பவர்கள் தனித்தனியாக அவரவர்களுக்கென்று செய்துகொண்ட வியாக்கியானங்கள் கூட கடவுளைப்பற்றி ஒன்றுக்கொன்று பொருந்தாத வகையில் உள்ளன. அந்தக் கருத்து வேற்றுமைகள் தான் இன்று சங்கர - ராமானுஜ - மாத்துவ மதங்களாக உருப்பெற்றிருக்கின்றன.

இவர்கள் மூவர் அல்லாத ஒரு பொது மனிதன் வேதத்திற்கு இன்று வியாகக்கியானம் செய்வதானால், வேதத்தில் கடவுளைக் காட்டவோ, காணவோ முடியாது.

பஞ்சப்பூதக் கடவுள்கள்

வேதத்தில் பஞ்சபூதங்களைத்தான் காணலாம். ஆனால், அந்தப் பூதங்களுக்கு அக்கால காட்டுமிராண்டி மவுடிகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு எஜமானர்களை ஏற்படுத்தி, பிறகு அவர்களே அவைகளாக ஆக்கப்பட்டு. அதனால் அவர்கள் தேவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இந்திர தேவன், வாயுதேவன், வருணதேவன், அக்னிதேவன், பூமி தேவன், என்று - இவை முறையே ஆகாயம், வாயு, அம்பு, தேயு, பிருதிவி என்கின்றவையான பஞ்சபூதங்களைக் குறிப்பிடுபவையாகும். இவைகளைச் சேர்த்து வைக்கும் இயற்கைக்கும் பலவாறு பெயரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வைந்தின் கூட்டினால் ஏற்பட்ட உலகைத்தான் பிரபஞ்சம் என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மானமும் போனதே!

ஆகவே, இன்று மதம் - கடவுள் 100க்கு 97பேரான இந்து பாமர, பண்டித பணக்கார மக்களை என்ன செய்திருக்கிறது - எப்படி நடத்துகிறது - என்பதைப்பற்றி எவருக்குமே கவலை இல்லை என்பதுடன், மானமும் இல்லாமல் செய்துவிட்டதைச் சிந்திக்க வேண்டாமா?


-------------------- தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 15 -16

4 comments:

Thamizhan said...

வேதம் ,வேதம் எல்லாமே வேதத்தில் இருக்கிறது என்பதும்,வேதத்தின் காலமும் பொய்யும் புரட்டுந்தான்.
உண்மையான மொழி பெயர்ப்புக்களைப் பார்த்தால் வழி பாட்டு முறைகள்,எதிரிகளை அழித்தல்,பல உளறல்கள் தான் உள்ளன.சில இடங்களில் உள்ள நல்ல கருத்துக்கள் "திராவிட வேதம்" என்று சொல்லப் பட்டுள்ளது.
வேத காலத்தில் இல்லாத சூடம் போன்றவை எப்படி வேதத்தில் வந்தன?.
சமஸ்கிருதம் என்ற திருத்தப்பட்ட மொழியை அறிந்தவர்கள்,அதில் உள்ள வார்த்தைகள் எங்கேயிருந்து வந்தன,கருத்துக்களின் காலம் இவற்றை ஆராய்ந்து ஒட்டு மொத்தமாக அவர்களின் பொய்களையும்,புரட்டுக்களையும் வெளிக்கொணர வேண்டும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா.

கோவி.கண்ணன் said...

//சங்கரர், ராமானுஜர், மாத்துவர் முதலிய மதகுருமார் என்பவர்கள் தனித்தனியாக அவரவர்களுக்கென்று செய்துகொண்ட வியாக்கியானங்கள் கூட கடவுளைப்பற்றி ஒன்றுக்கொன்று பொருந்தாத வகையில் உள்ளன. அந்தக் கருத்து வேற்றுமைகள் தான் இன்று சங்கர - ராமானுஜ - மாத்துவ மதங்களாக உருப்பெற்றிருக்கின்றன.
//

பெரியார் மிகப் பெரியார்!
மிகச் சரியான சொல்.

ஒன்று சரியாக இருந்திருந்தால் இன்னொன்றின் தேவையே இருந்திருக்காது. இப்படியாகவே நீண்டவைதான் அனைத்து தத்துவங்களும். அவை ஒன்றை ஒன்று மறுக்கவும் செய்கின்றன.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோவி.கண்ணன்